தேவைக்காக வாங்கும் பழக்கம் மறைந்து, ஆடம்பரத்துக்காக இணையவழிச் சந்தைகளில் பொருள்களை வாங்கிக் குவிக்கும் நுகர்வுக் கலாசாரம் இன்று சமூகத்தில் எல்லைமீறியுள்ளது. தள்ளுபடி கிடைக்கிறதே என்பதற்காக, ஒரு பொருள் உண்மையிலேயே நமக்கு அவசியம்தானா என்று சிந்திக்காமல் இயந்திரத்தனமாக வாங்குவது அனைத்துத் தலைமுறையினரிடமும் சாதாரணமாகிவிட்டது.
இந்த திட்டமிடப்படாத நுகர்வால், எதிர்காலப் பாதுகாப்புக்கான சேமிப்பு என்ற அடித்தளம் முற்றிலுமாக உடைக்கப்பட்டு வருகிறது. விளம்பர ஈர்ப்பால் தேவையற்ற பொருள்களை வாங்க முடிவு செய்து இஎம்ஐ வலையில் சிக்கி, இறுதியில் ஒவ்வொரு மாதமும் நிம்மதியைத் தொலைக்கும் நிலைக்குப் பலரும் தள்ளப்பட்டு வருகின்றனர்.
முன்பெல்லாம் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால், பல நாள்களாக திட்டமிட்டு, பட்ஜெட் போட்டு, கடைவீதிக்குச் சென்று வாங்குவோம். சந்தை என்பது வீட்டை விட்டு வெளியே சென்று, மனிதர்களைச் சந்தித்து, பொருள்களைப் பார்த்து வாங்கும் ஒரு சமூக அனுபவமாக இருந்தது. ஆனால், இன்று உலகமே நமது உள்ளங்கைக்குள் சுருங்கிவிட்டது. 10 நிமிஷ விநியோகச் செயலிகள், மனிதர்களை முன்கூட்டியே திட்டமிட்டுப் பொருள்களை வாங்கும் பழக்கத்திலிருந்து முற்றிலும் மழுங்கடித்துவிட்டன. தேவையைத் தேடி சந்தைக்குச் சென்ற காலம் மாறிவிட்டது; இன்று சந்தையே நம்மைத் தேடிவந்து தேவைகளை உருவாக்குகிறது.
எண்மச் சந்தையில் கடைசியாக நீங்கள் வாங்கிய பொருள், உண்மையிலேயே அத்தியாவசியத் தேவைக்காக வாங்கப்பட்டதா அல்லது வாங்கத் தூண்டப்பட்டதா என்பதை ஒருமுறை யோசித்தால் தெரியும். ஒரு பொருளைப் பற்றி நாம் சிந்திப்பதற்கு முன்பே, அதை வாங்குவதற்கான காரணங்களை கணினி அல்காரிதம்கள் நம் திரையில் கொண்டுவந்து நிறுத்துகின்றன.
நமக்கே இன்னும் தெளிவாகத் தெரியாத தேவையைக்கூட இணைய வணிக நிறுவனங்கள் விளம்பரங்கள் வழியாக மெல்ல நமது மனதில் விதைத்து, இறுதியில் அதையே நம் முடிவாக மாற்றிவிடுகிறது. இதுதான் எண்மச் சந்தையின் மிகப் பெரிய மாயவலை.
வீட்டைவிட்டு வெளியே செல்லாமல், அத்தியாவசியப் பொருள்களில் இருந்து மின்னணு சாதனங்கள் வரை சில நிமிஷங்களில் வாங்குவதற்கான வசதி, சிறு தொழில்முனைவோருக்கான புதிய சந்தை வாய்ப்புகள் என இணைய வர்த்தகம் பல வசதிகளை நமக்கு வழங்கினாலும், அதன் அல்காரிதங்கள் நமது ஆசைகளைத் தூண்டி, அவசியமற்ற தேவைகளை திணிப்பதிலேயே அதிகம் கவனம் செலுத்துகின்றன.
இதற்கான அல்காரித கட்டமைப்புதான் 'டார்க் பேட்டர்ன்ஸ்' என அழைக்கப்படுகிறது. இந்த சொல்லாடல் தற்போது எண்மச் சந்தையில் அதிகம் விவாதிக்கப்படுகிறது. இவை நுகர்வோரின் சுதந்திரமான முடிவெடுக்கும் திறனைப் பாதித்து, அவர்களை விரும்பாத முடிவுகளுக்குத் தள்ளுகின்றன. டார்க் பேட்டர்ன்ஸை பயன்படுத்தும் வணிக உத்திகளால் இணைய நுகர்வோர் ஆண்டுதோறும் ரூ.25 ஆயிரம் கோடி முதல் ரூ.28 ஆயிரம் கோடி வரை இழப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. தேசிய அளவில் 30.4 கோடி பேர் எண்ம வணிக பயனாளர்களாக உள்ளனர்.
இவர்களில் 88 சதவீதம் பேர் இந்த டார்க் பேட்டர்ன்ஸ் அல்காரிதம் மூலம் இழப்பைச் சந்திக்கின்றனர். அதாவது ஒரு நபர் மாதந்தோறும் ரூ. 78 முதல் ரூ. 88 வரை இந்த வணிக உத்தியால் பணத்தை இழக்கிறார். இணையவழியில் தேர்ந்தெடுத்த பொருளுக்குப் பதிலாக தரம் குறைந்த வேறு பொருள் அனுப்பப்படுவது, பணம் திரும்ப வழங்கப்படாதது, போலி தள்ளுபடிகள், சேவைக் குறைபாடுகள் போன்றவை நாள்தோறும் பொதுமக்கள் அதிகமாகச் சந்தித்துவரும் பிரச்னைகளாகும்.
தேசிய நுகர்வோர் உதவி மையத்தில் கடந்த ஆண்டு மட்டும் 5.11 லட்சத்துக்கும் அதிகமான இ-காமர்ஸ் தொடர்பான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 2025-26 காலகட்டத்தில் ரூ. 52 கோடிக்கும் அதிகமான தொகை நுகர்வோருக்குத் திரும்ப அளிக்கப்பட்டுள்ளது. எண்மச் சந்தையின் வேகமான வளர்ச்சி சிறு வணிகர்களுக்கு புதிய சவால்களை உருவாக்கியுள்ளது. பெரிய நிறுவனங்கள் வழங்கும் மிகப் பெரிய தள்ளுபடி, விரைவு விநியோகம், அல்காரிதம் சார்ந்த முன்னுரிமை ஆகியவற்றால், பல சிறு வணிகர்கள் தரமான பொருள்களை விற்றாலும் போட்டியில் பின்தங்குகின்றனர்.
இணையவழி மூலம் தருவிக்கும் பொருள்களுக்காகப் பயன்படுத்தப்படும் பல அடுக்கு பிளாஸ்டிக் உறைகள், அட்டைப் பெட்டிகள், பாதுகாப்புப் பொருள்கள் அனைத்தும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு குப்பையாக மாறுகின்றன. மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நுகர்வோரின் சுதந்திரமான முடிவெடுக்கும் உரிமையைப் பறிக்கும் டார்க் பேட்டர்ன்ஸ் நடைமுறைகளுக்கு எதிராக வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
ஒரு நாள் காத்திருந்து வாங்கும் பழக்கம், தேவையற்ற செயலி அறிவிப்புகளை நிறுத்துவது, மாதாந்திர நுகர்வுச் செலவுக்கு வரம்பு அமைப்பது மற்றும் இணையவழி வர்த்தகத்தால் ஏமாற்றப்பட்டால் தேசிய நுகர்வோர் உதவி மையம் அல்லது இ-தக்கீல் வழியாக புகார் அளிப்பது போன்ற எளிய நடவடிக்கைகள் மூலம் பெரும் இழப்புகளைத் தவிர்க்கலாம்.
சந்தை நம் கைகளில் இருக்கும் வரை அது பொருளாதாரம்; நம் ஆசைகளுடன் பிணைந்தால் அது மாயவலை. அதை அறுக்க வல்லது புதிய சட்டங்களோ, புதிய செயலிகளோ அல்ல; தேவைக்காகவா, ஆசைக்காகவா என்பதை ஒவ்வொரு வாங்கும் முடிவுக்கும் முன்பாக நம்மை நாமே கேட்டுக்கொள்ளும் விழிப்புணர்வு மனப்பான்மைதான்.
எண்ம (டிஜிட்டல்) வணிக யுகத்தில் நுகர்வோரின் மிகப் பெரிய உரிமை என்பது தரமான பொருள்களாகப் பார்த்து வாங்குவது மட்டுமல்ல; விளம்பரங்கள் நம்மை எவ்வளவு ஈர்த்தாலும், தேவையற்றதை வாங்கமாட்டோம் என்ற மனக் கட்டுப்பாட்டுடன் இருப்பதும் நுகர்வோரின் உரிமையே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






