ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்றம் அனுமதி!
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வின் முடிவுகளை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...

சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப்படம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வின் முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கிய சென்னை உயர்நீதிமன்றம், முடிவுகளை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், கடந்த ஜூலை மாதம் சிறப்பு தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது.
தங்களின் ஒவ்வொரு ஆண்டு அனுபவத்துக்கும் ஒரு கருணை மதிப்பெண் வழங்கும்படி ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிடக் கோரி தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பி. நடராஜன், என். செல்வன் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆசிரியர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்க வேண்டியுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்ற உயர்நீதிமன்றம், சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து, கடந்த ஜூலை மாதம் 8 ஆம் தேதி உத்தரவிட்டது.
மனுதாரர்கள் இடைக்கால கோரிக்கை ஏதும் வைக்காத நிலையில், ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதான வழக்கில் இறுதி விசாரணைக்கு தயாராக இருப்பதால், தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி மும்மினேனி சுதீர் குமார், அரசுத்தரப்பு கோரிக்கையை ஏற்று, ஆசிரியர்களுக்கான சிறப்புத் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கியும், முடிவுகளை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுமதியளித்தும் உத்தரவிட்டார்.
மேலும், பணி அனுபவத்துக்கான ஒவ்வொரு ஆண்டுக்கும் தலா ஒரு கருணை மதிப்பெண் வழங்கக் கோரி ஆசிரியர்கள் தாக்கல் செய்த பிரதான வழக்கை அக்டோபர் 7 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
Summary
Madras High Court permits the release of the Teacher Special Eligibility Test results
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






