மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

வாசிப்பில் இருந்து வாழ்க்கைக்கு...

ஆயிரம் வருஷத்துக்கு முன் உள்ள கம்பர் கையாண்ட பாஷையோ, இப்பொழுதும் வழக்கிலிருக்கிறது.

News image

கம்பர் - சித்திரிப்பு

Updated On :18 ஆகஸ்ட் 2026, 2:09 am IST

நன்றாகத் தமிழ் தெரிந்த என் நண்பர் ஒருவர் பணி ஓய்வுக்குப் பிறகு, முழுமையாய் படிக்கக் கம்ப ராமாயண நூலைக் கேட்டார். கம்பன் விழாக்களைப் பார்த்துக் கேட்டு, ரசித்த அனுபவத்தில் எழுந்த ஆர்வம் அவருக்கு.

அப்போது என் கைவசம் இருந்த நூலைக் கொடுத்தேன். சில வாரங்கள் கழித்து, தற்செயலாக அவரைச் சந்திக்க நேர்ந்தபோது, 'கம்ப ராமாயண வாசிப்பு எந்த அளவில் இருக்கிறது?' என்று கேட்டேன்.

தயங்கியபடி சொன்னார்- 'தமிழில்தான் இருக்கிறது. ஆனால், தெரிந்த பாடல்களைக் கூடப் புத்தகத்தில் பார்த்துப் படிக்க முடியவில்லை' என்றார்.

'ஏன்?' என்றேன்.

'சுந்தர காண்டத்தை முதலில் படித்தால் நல்லது என்று என் மனைவி சொன்னார். இருவருமாகப் படிக்கத் தொடங்கினோம். முதல் படலம், கடறாவு படலம். அப்படி என்றால் என்னவென்று தெரியவில்லை. அடுத்தடுத்து, இரண்டு மூன்று பாடல்களைப் படித்ததுமே தலைவலிக்க ஆரம்பித்துவிட்டது. படலம் தெரிகிறது.

கடறாவு என்றால்?'

'அது கடல் தாவு படலம்- சேர்த்து எழுதினால் கடறாவு படலம். அதாவது அனுமன் கடலைத் தாவிக் கடந்த கதையைச் சொல்லும் படலம்' என்று நான் சொல்லிக் கேட்டவுடன் அவர் முகம் மலர்ந்தது.

மெல்ல மெல்ல, அதில் சில பாடல்களைச் சொல்லிக் காட்டினேன்; ரசித்தார். 'நீங்கள் சொல்கிறபோது, புரிகிறது. நாங்கள் படித்தால் புரியவில்லையே'- சந்தி பிரிக்காமல், சொல் தொடர்கள் சேர்த்துச் செய்யுள் நடையில் எழுதப்பட்டிருப்பதுதான் அவரைச் சிரமப்படுத்தியிருக்கிறது.

அகர முதல வெழுத்தெல்லா மாதி

பகவன் முதற்றே யுலகு

என்று சந்தி பிரிக்காமல் எழுதப்பட்ட முதல் திருக்குறளை முதன்முதலாக எடுத்துப் படித்தவர்கள் எத்தனை சிரமப்பட்டார்களோ, அத்தனை சிரமத்தையும் அவர் பட்டிருப்பார் என்று புரிந்தது.

இதைவிடவும் கடுமையாக இந்தப் பாடல்களுக்கு உரை தந்தவர்களின் உரைநடைத் தமிழ் இருந்தது. 'ஆறுகாண்டங்கட்குமுரிய செய்யுட்டொகை' என்பதாக வரும் தொடரை, 'ஆறு காண்டங்களுக்கும் உரிய செய்யுள் தொகை' என்று பிரித்து எடுத்துச் சொல்ல வேண்டியிருந்தது. உரைக்கே உரையும் விளக்கமும் பெறத் தமிழறிந்த புலவர் துணை வேண்டி இருந்தது.

இந்த நிலை, 1950-கள் வரை தமிழகத்தில் நீடித்தது. அப்போதுதான் தமிழகத்தில் ஒருவர் வந்தார், யார் உதவியும் இன்றி, தானே படித்துப் புரிந்துகொள்ளும் வகையில் கம்பன் பாடல்களையும், தமிழ்ப் பாடல்களையும் எடுத்துச் சொன்னார்.

முதல்முறை சொன்னபோது, ஓசை நயம் தெரிந்தது. அதை, நிறுத்தி அப்படியே மறுமுறை சொல்லப் பொருள் நயம் புரிந்தது. மூன்றாம் முறை சொல்லியபோது கவிநயம் மிளிர்ந்தது. அடுத்த முறை சொல்லியபோது, மனப்பாடமே ஆகிவிட்டது.

அப்படி நிறுத்தி, எடுத்து முழக்கி, திருப்பிச் சொல்லி, பாமரரும் உணர்ந்துகொள்ளும்படி அவர் விளக்கியதை அனைவரும் ரசித்தனர். இப்படி ரசிக்க, ரசிக்கச் சொல்லிய அவரை 'ரசிகமணி' என்றே கொண்டாடினர். டி.கே.சிதம்பர முதலியார் என்ற அவர் இயற்பெயரைவிடவும் அவருக்கு இந்தப் பெயரே நிலைத்துவிட்டது.

இப்படி ஓசை நயத்துடன் மணியின் நாதமாய் கவிகளை ஒலித்த அவருக்கு நாத முதலியார் என்று பட்டம் சூட்டி மகிழ்ந்தார் கவியோகி சுத்தானந்த பாரதி.

சொல்லிய வண்ணமே ரசிகமணி எழுதியும் காட்டினார். பாட்டின் பொருளை, நடைமுறைத் தமிழில், நடப்பு நிகழ்வுகளை எடுத்துக் காட்டி விளக்கினார். பண்டிதர்கள் உதவியின்றிப் பாமரரும் புரிந்துகொள்ளும் நிலை வந்தது. தமிழ்நாட்டில் பட்டிதொட்டி எங்கும் பட்டிமண்டபங்களால் கம்பன் பாடல்கள் பரவத் தொடங்கின. அது நடைமுறைக்கு வந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன.

உறங்குகிற கும்பகர்ணனை எழுப்ப, உலக்கை கொண்டு குத்துவதை, வல்லோசை கொண்டு பாடியும், மயங்கவைக்கும் அழகுடன் கொலுசு ஒலி இசைக்க சூர்ப்பணகை, காமவல்லியாய் வரும்போது மெல்லோசை ஒலிக்கப் பாடியும் விளக்குகிற முறைகள் நடைமுறைக்கு வந்தன.

பள்ளித் தமிழாசிரியர்கள் இவற்றைச் சொல்லக் கேட்டவர்கள், பின்னர் வேறு எந்தத் துறையில் வேலைக்குப் போனாலும் இந்தக் கவிதைச் சுவையை, தமிழின் இலக்கியச் சுவையை மறக்கவே இல்லை. குறைந்தது, பத்துப் பாடல்களையாவது அவர்கள் அப்படியே சொல்லவும் கேட்க முடிந்தது.

இன்றைய தலைமுறையினருக்கு சொந்தமாய், பத்துச் சொற்களைக்கூடத் தமிழில் சொல்லத் தெரியாத நிலை. எல்லாமும் எழுதும் முறைத் தேர்வு வந்தபிறகு, பேச்சுத் தமிழுக்கோ, வாசிப்பு முறைக்கோ வாய்ப்பு இல்லாமல் குறைந்தது.

கவிதைக்கு உரிய ஓசையுடன் உச்சரித்துப் பாடுகிற பாவனையில் சொல்லத் தொடங்கிவிட்டால், அதன் இனிமை புரியும்; எளிமை தெரியும்; அதன் பெருமை அறியவரும்.

நான்கு வரிப் பாடல்களுக்கு ஒரு வரியில், ஐந்து வரிகளில், ஒரு பக்க அளவில் விடை எழுதச் சொல்லி வினாக்களை மட்டுமே வைத்துச் சொல்லிக் கொடுக்கும் பாடங்களில், இவை எப்படி விளங்கும்?

''ஆயிரம் வருஷங்களுக்கு முன்பிருந்த ஆங்கில நூல் எதையும் தற்காலத்து ஆங்கிலேயர்களால் வாசிக்க முடியாது. அப்படியேதான் இத்தாலியர் லத்தீன் பாஷையை தாய் பாஷையாகக் கருதி வாசிக்க முடியாது. கிரேக்கர்களுக்கும் இதே சங்கடந்தான். வடமொழியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

மேலே சொல்லிய பூர்வமான பாஷைகளிலுள்ள நூல்களை சாமானிய மக்கள் அறியமுடியாது. அந்த பாஷைகளைப் பல வருஷங்களாக, இருபது முப்பது வருஷங்களாகவே, கஷ்டப்பட்டுக் கற்றிருந்தால் ஒழிய அனுபவிக்க முடியாது. சாமானியப் பயிற்சியுள்ளவர்கள் அனுபவிக்கிறதெல்லாம், ஒரு புஸ்தகத்தைத் தலைகீழாக வைத்து வாசித்து அனுபவிக்கிற கணக்குத்தான்.

ஆயிரம் வருஷத்துக்கு முன் உள்ள கம்பர் கையாண்ட பாஷையோ, இப்பொழுதும் வழக்கிலிருக்கிறது.

நம்முடைய பாக்கியமல்லவா அது?'' என்று ரசிகமணி டி.கே.சி. சொல்லும் நிலை, தமிழகத்தில் இருந்தது. ஆங்கிலக் கல்வி வந்த பிறகு, ஆங்கில முறையிலேயே அனைத்தும் திரிந்தபிறகு, தாய்மொழியாகிய தமிழே அந்நியமொழி ஆகிவிட்டது.

தமிழைக்கூட ஆங்கிலத்தில் எழுதி வாசிக்கும் நிலை வந்துவிட்டது. ஆங்கிலச் சொற்களைப் பிழையாக உச்சரித்தால் முகம் சுழிக்கிற பலருக்கும் தமிழின் சொற்களைச் சொல்லவே தெரியவில்லை. அது குறித்து எந்த வெட்கமும் இல்லை.

உரைநடையைப் போலவே, செய்யுளையும் படித்து, பின்னர் செய்யுளோ, உரைநடையோ வினாவிடையாய் மனப்பாடம் செய்து, விடைத்தாளில் எழுதுவதுடன் தமிழ்ப்பாடம் முடிந்து போய்விடுகிறது.

இத்தனைக்கும் நடுவில், இன்னமும் முத்தமிழ் என்று பெருமையுற முழங்குகிறோம்.

எல்லா மொழிகளிலும் இயல், இசை, நாடகம் எனும் முப்பிரிவுகள் உண்டு. ஆனால், அந்தந்த மொழிகளுக்கு முன்னால், மூன்று என்று பொருள் தரும் முன் ஒட்டு இல்லை. தமிழுக்குத்தான் முத்தமிழ் என்று பெயர். அது விரிக்கும் மூன்று வடிவங்களும் தனித்தனியே இல்லை. ஒன்றிய நிலையில் அது வரும். ஒரு சொல்லோ, சொல் தொடரோ, சொல்லப்படும்போதே அதில் நாடகத் தன்மை தோன்றும். அதற்குள் ஓசை நயம் வந்து இசையாய் ஒன்றும். அது இயலாகவும் இருக்கும். அனைத்தும் இணைந்து அறம் போதிக்கும்.

சான்றுக்கு ஒன்று, இலங்கையில் சீதையைக் கண்ட அனுமன், திரும்பி வந்து இராமனிடம் சொல்லுகிறான்.

'கண்டனென் கற்பினுக்கு அணியினைக் கண்களால்'- இது கவிதை,

அனுமன் சொல்கிற முறையில், நிறுத்தி, எடுத்து ஒலிக்கிறபோது, நாடகம்.

முதல் எழுத்து ஒன்ற மோனை நயம் தெரிய ஓசை நயம் துலங்கப் பாடினால், இசை.

கற்பினுக்கு அணியைக் கண்களால் கண்டேன் என்று பொருள் உணர, அக்கவிதை வரியைச் சொல்லிப் பார்த்தால் இயல்.

கண்டவன் அனுமன்; கற்பினள் சீதை; அணி என்கிற அழகுச் சொல், இந்தத் தொடரைக் கவிதையாக்குகிறது.

கண்களால் என்பதில்தான் கருத்து சிறக்கிறது. கண்டனென் என்பதில் அனுமனின் கண்கள் இருப்பது தெரிகிறது. கண்களால் என்பதில் யாருடைய என்கிற கேள்வி தொனிக்கிறது.

ரசிகமணி மரபில் வந்த சா.கணேசன் சொல்கிறார். 'அது சீதையின் கண்கள்'. சீதையின் கண்கள் அவற்றைச் சொல்லிக் காட்டினவாம்.

எப்படி?, திருவள்ளுவர் சாட்சிக்கு வருகிறார்.

பகைமையும் கேண்மையும் கண்உரைக்கும் கண்ணின்

வகைமை உணர்வார்ப் பெறின். (709)

உணர வல்லவர்களுக்கு, கண்ணின் பார்வையிலேயே பகையா? நட்பா என்பது தெரிந்துவிடுமாம்.

பிறருடைய கருத்துகளை அறிய விரும்புபவர்களுக்கு அவர்கள் அறிய விரும்பும் பிறரது கண்களே அளக்கும் கோல் என்று மற்றொரு திருக்குறள் (710) சொல்லுகிறது.

இந்த மரபு தெரிந்து இப்பாடலைப் புரிந்துகொண்டால், சீதையின் கண்களில் அவளது கற்பு களிநடம் புரிவதை என் கண்களால் கண்டேன் என்று அனுமன் சொல்வது புரிபடும்.

இப்படியெல்லாம் எடுத்துச் சொல்லி, நாங்கள் நடைப்பயிற்சியை முடித்தபோது அவர் கேட்டார். 'இந்த வாசிப்புப் பயிற்சியை எப்படி வளர்ப்பது?'

வாரத்தில் அல்லது மாதத்தில் ஒரு நாள் வீட்டில் இருப்பவர்கள் கூடி அமர்ந்து இப்படிப் பாடி, படித்துப் பழகினால் போதும்; அது வாசிப்பில் இருந்து வாழ்க்கைக்கு வந்து உதவும்' என்றேன்.

ஞாயிறு வட்டமாய் அது நடைமுறைக்கு வந்திருக்கிறது. நீங்களும் அப்படி முயற்சி செய்யலாமே.

இன்று (ஆக.18) ரசிகமணி டி.கே.சி.யின் 145-ஆவது பிறந்த நாள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.