முதுமைக் காலத்தில் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதாலும், உடலுறுப்புகள் பலவீனமடைவதாலும் பல்வேறு நோய்கள் முதியவர்களை எளிதில் தாக்குகின்றன. பொதுவாக, முதியவர்கள், மூட்டு மற்றும் எலும்பு தொடர்பான நோய்கள், நரம்பு மண்டலம் மற்றும் மூளை தொடர்புடைய ஞாபக மறதி, சிந்தனைக் குறைபாடு, பக்கவாதம் போன்ற நோய்கள், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, சர்க்கரை நோய் முதலியவற்றால் பாதிப்படைகிறார்கள்.
தற்காலத்தில் முதியவர்களில் பலர் ஞாபக மறதி எனப்படும் ஒருவித நோயால் அவதிப்படுகின்றனர். முதுமைக் காலத்தில், நினைவுகளை மூளையில் சேமிக்க உதவும் "ஹிப்போகாம்பஸ்' சுருங்குவதாலும், ரத்த ஓட்டம் குறைவதாலும், ஊட்டச்சத்துக் குறைபாட்டாலும், தூக்கமின்மை, மன அழுத்தம், அல்சைமர் போன்ற நரம்பியல் நோய்களும் முதியவர்களுக்கு ஞாபக மறதியை ஏற்படுத்துகின்றன.
நினைவாற்றல் இழப்பைக் குறிக்க மருத்துவர்கள் அம்னீசியா, டிமென்ஷியா ஆகிய இரு சொற்களைப் பயன்படுத்துகின்றனர். அம்னீசியா என்பது சிந்தனைத் திறன் அப்படியே இருக்கும் நிலையில் ஏற்படும் ஒரு குறிப்பிட்ட, பெரும்பாலும் தற்காலிகமான நினைவுக் குறைபாடாகும். ஆனால், அதே சமயத்தில் டிமென்ஷியா என்பது மூளையின் பல செயல்பாடுகளில், அதாவது நினைவாற்றல், சிந்தனை மற்றும் பகுத்தறிவுத் திறனில் ஏற்படும் தீவிரமான பாதிப்பைக் குறிக்கும். இதை மருத்துவர்கள், "முதுமைக்கால மறதி நோய்' அல்லது "ஞாபகமறதி கோளாறு' என்று அழைக்கிறார்கள். அதாவது, இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மனதில் நினைத்தது ஒன்று, சொல்வது, செய்வது வேறாகயிருக்கும்.
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை "ஸ்லீப்பி ஜோ' (தூக்கத்திலிருக்கும் ஜோ) எனவும், தற்போதைய அதிபர் டிரம்ப்பை, "டோஸி டான்' (மந்தமான டான்) எனவும் அமெரிக்க அரசியல் விமர்சகர்கள் நகைச்சுவையுடன் குறிப்பிடுகின்றனர்.
கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலையில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி கலந்து கொண்டார். அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஸெலென்ஸ்கியை வரவேற்றுப் பேசினார். அப்போது, அவர் பேசிய வார்த்தைகளும், அவர் குறிப்பிட நினைத்த பெயர்களும் ஒன்றுக்கொன்று பொருத்தமில்லாமலிருந்தன. பின்னர், ஸெலென்ஸ்கியை பேச அழைத்த பைடன் அவரது பெயரை ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் என்று தவறாகக் குறிப்பிட்டார். பின்னர், சுதாரித்துக் கொண்ட பைடன் புதினை விரைவில் வீழ்த்த இருக்கும் ஸெலென்ஸ்கியை பேச அழைப்பதாகக் கூறி சமாளித்தார்.
இதனிடையே மற்றொரு செய்தியாளர் சந்திப்பின் போது, துணை அதிபர் கமலா ஹாரிஸ் என்பதற்குப் பதிலாக, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் என்று தவறுதலாக ஜோ பைடன் குறிப்பிட்டார். கடந்த அமெரிக்கத் தேர்தலின் போது பொது மேடைகளில் பேசும் போது தடுமாறி வந்த பைடன், டிரம்ப் உடனான நேரடி விவாதத்தின் போது தொடர்பில்லாமல் பேசியதும், பேசத் தடுமாறியதும் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியது.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனின் பேச்சில் தடுமாற்றம், 2024-ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் அவரது உடல்நிலை மற்றும் முதிய வயது தொடர்புடைய நரம்பு மண்டல நோய்களை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இதனால், அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து அவர் விலக வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார். போட்டியாளர்களை மனத் திறனற்றவர்கள், தூக்கக் கலக்கமானவர்கள் அல்லது ஆற்றல் குறைந்தவர்கள் என்று கேலி செய்வதையே தனது முழு அரசியல் அடையாளமாக கொண்டவராக அமெரிக்க அதிபர் டிரம்ப், உலக அரசியல் தலைவர்களால் சித்தரிக்கப்படுகிறார்.
"அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவோம்' எனக் கூறிய டொனால்ட் டிரம்ப், தற்போது தனது சொந்த பேச்சுத் தடுமாற்றங்கள் மற்றும் செயலில் சொதப்பல்கள் போன்றவற்றால் மிகவும் பாதிக்கப்பட்டு நாட்டு மக்களால் நகைக்கப்படுகிறார். இவை, அவரது அறிவாற்றலுடன் கூடிய திறனில் ஒரு தொடர்ச்சியான சரிவைக் காட்டுவதாக விமர்சர்கள் சுட்டுகின்றனர்.
"டோஸி டான் க்ரானிக்கிள்ஸ்' என்று அழைக்கப்படும் தொடரின் சமீபத்திய நிகழ்வு, கடந்த 08.07.2026 அன்று துருக்கி தலைநகர் அங்காராவில் நேட்டோ உச்சி மாநாட்டிலும் பளிச்சிட்டது. அந்த மாநாட்டில், டிரம்ப் ஜப்பானை "இஸ்லாமியக் குடியரசு' என்றும், உக்ரைன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கியை, விளாதிமிர் புதின் என்றும் குறிப்பிட்டார்.
"உலகின் மிக அழகான விமானம் தாங்கிய கப்பல்களின் ஒன்றான, ஆபிரகாம் லிங்கன் எங்களிடம் உள்ளது. அது உலகின் மிகப் பெரிய கப்பல்களில் ஒன்றாகும். மேலும், சில மாதங்களுக்கு முன்பு ஜப்பான் இஸ்லாமியக் குடியரசால் எங்கள் மீது 111 ஏவுகணைகள் ஏவப்பட்டன' என்று கூறிய டிரம்ப், ஈரானுக்குப் பதிலாக இஸ்லாமியத் தகுதிகள் இல்லாத ஜப்பானின் பெயரைத் தவறுதலாகக் குறிப்பிட்டார்.
உண்மையில், "இஸ்லாமியக் குடியரசு' என்று அதிகாரபூர்வ பெயரைக் கொண்ட ஈரானுடன் அமெரிக்காவுக்கு அண்மைக்காலமாக மோதல் நிலவிவரும் சூழலில் அதிபர் டிரம்ப் ஈரானுக்குப் பதிலாக ஜப்பானின் பெயரை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவும் ஜப்பானும் மிக நெருங்கிய ராணுவ ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன. மேலும், பரஸ்பர தற்காப்பு ஒப்பந்தத்தின்படி சுமார் 60,000 அமெரிக்க ராணுவ வீரர்கள் ஜப்பானில் நிறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதிபர் டிரம்ப்பின் இந்தத் தவறான பேச்சு சமூக ஊடகங்களில் விவாதப் பொருளானது. பின்னர், அவர் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியை, புதின் என்று குறிப்பிட்டு தர்மசங்கடமாகி தன்னைத் திருத்திக் கொள்ள முயன்றார்.
பெரும்பாலும் அரசியல்வாதிகளைப் பொருத்தவரை இது போன்ற தவறுகள் முதிய வயது மற்றும் சோர்வு தரும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், அது பெரிதாக எடுத்துக்கொள்ளப்படாமல், தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் நிகழ்ந்ததாகக் கருதி புறக்கணிக்கப்படலாம்.
ஆனால், டிரம்ப்புக்கு இப்போது 80 வயதாகி விட்டதாலும், வெள்ளை மாளிகையில் இரண்டாவது முறையாகப் பதவி வகிக்கும் மிக வயதான அமெரிக்கர் இவரே என்பதாலும், இந்தச் சம்பவங்கள் புறக்கணிக்க முடியாத அளவுக்கு அடிக்கடி நிகழ்கின்றன என்று டிரம்ப்பின் விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.
இந்த நகைமுரண் வாஷிங்டனின் கவனத்திலிருந்தும் தப்பவில்லை. அங்கு பல ஆண்டுகளாக டிரம்ப், முன்னாள் அதிபர் ஜோ பைடனை, "மன ரீதியாகத் தளர்ந்தவராகவும், உடல் ரீதியாகச் சோர்வடைந்தவராகவும்' சித்தரித்து, "தூக்கக் கலக்க ஜோ' என்று இரக்கமின்றி கேலி செய்ததை இப்போது பைடன் ஆதரவாளர்கள் விமர்சிக்கின்றனர்.
இருப்பினும், கூட்டங்களின்போது டிரம்ப் தூங்குவது போலவும், பொது நிகழ்ச்சிகளில் வெறித்துப் பார்ப்பது போலவும் அல்லது நீண்ட உரைகளின் போது உரையை விட்டு வேறு பொருண்மையில் விலகிச் செல்வது போலவும் காட்டும் காணொலிகள் அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறி உள்ளன.
டிரம்ப் தனது பிரசார உரைகள், அதிகாரபூர்வ நிகழ்வுகளின்போது, உலகத் தலைவர்கள் மற்றும் நாடுகளின் பெயர்களை அடிக்கடி தவறாகக் கூறுவதுடன் தேதிகள், இடங்கள் மற்றும் வரலாற்று நிகழ்வுகளையும் வியக்கத்தக்க நம்பிக்கையுடன் குழப்புகிறார். பதிவுகளின்படி தனது தந்தை அமெரிக்காவில் பிறந்திருந்தாலும், அவர் ஜெர்மனியில் பிறந்ததாக ஒன்றுக்கும் மேற்பட்ட முறை டிரம்ப் கூறிள்ளார். மேலும், மருந்துகளின் விலையை 600- 700 சதவீதம் குறைத்தது போன்ற அர்த்தமற்ற புள்ளிவிவரங்களால் அவர் குறிப்பிடுவது அதிக விமர்சனத்தை ஈர்த்துள்ளது.
எனினும், அவரது ஆதரவாளர்கள் இதை வயது முதிர்வின் காரணமாக ஏற்படும் தவறுகளாகவும், அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ச்சியாக அரசுப் பணிகளில் ஈடுபடுவதால் உடல் ரீதியாக ஏற்படும் சோர்வின் காரணமாக ஏற்பட்ட பிழைகள் எனவும் வாதிடுகின்றனர். பேரணிகள், கூட்டங்கள் மற்றும் சர்வதேசப் பயணங்கள் என அரசு செயல்பாட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் 80 வயதைக் கடந்த ஒருவருக்கு அவரது ஆற்றல் நிலை குறிப்பிடத்தக்க, ஏற்புடைய நிலையிலேயே உள்ளது என்றும் அவரது ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர். ஏனெனில், ஏறக்குறைய ஒவ்வொரு அதிபருக்கும் இது போன்ற சங்கடமான தவறுகள் நிகழ்ந்துள்ளன என்று அவர்கள் சுட்டிக்காட்டி சமாதானமடைகின்றனர்.
இருப்பினும், அவரால் எப்படி தன் தந்தையின் பிறந்த இடத்தையே மீண்டும் மீண்டும் தவறாகக் குறிப்பிட முடிந்தது என்பது நகைமுரண் என்கின்றனர் டிரம்ப் எதிர்ப்பாளர்கள். ஆனால், ஒரு அதிபரால் தனது பதவிக் கடமைகளை நிறைவேற்ற இயலாதநிலையில், அதிபரின் அதிகாரத்தை மாற்றுவதற்கான ஒரு வழிமுறையை வழங்கும் 25-ஆவது அரசமைப்புத் திருத்தத்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறை எடுத்தியம்பும் வகையில் அவரது விமர்சகர்கள் மற்றும் ஜனநாயகக் கட்சி எதிர்ப்பாளர்களின் குரல்கள் ஆங்காங்கே வலுத்து வருகின்றன.
இருப்பினும், இந்த விவாதமே ஒரு குறிப்பிடத்தக்க தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தும் என அமெரிக்கர்கள் கருதுகின்றனர். எப்படியென்றால், சுமார் கடந்த பத்தாண்டுகளாக வயதாகிவரும் அரசியல் அமைப்புக்கு ஒரு வீரியமான மாற்றாக டிரம்ப் தன்னைச் சித்தரித்து வந்தார். இப்போது 80 வயதில், அவர் பல போர்களில் வெற்றி பெற்றாலும், காலம் வெல்ல முடியாதது என்ற சங்கடமான எதார்த்தத்தை அவர் இப்போது உணர்ந்து வருகிறார். அரசன் என்றாலும் ஆண்டி என்றாலும், மன்னவன் என்றாலும், மாடோட்டும் சின்னவன் என்றாலும் காலத்தின் கோரப் பிடியிலிருந்து யாராலும் தப்ப முடியாது!.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அமெரிக்காவுக்கு ஈரான் இழப்பீடு தரவேண்டும்: டிரம்ப்

தாக்குதல் நடத்தவேண்டாம் என அமெரிக்காவிடம் கேட்கவில்லை: டிரம்ப் பேச்சுக்கு ஈரான் மறுப்பு!
ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்பு
உலகம் யார் பக்கம்?
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK


