'சில நேரங்களில் வாழ்க்கையை ஆச்சரியமும், அச்சமும் கலந்து பார்க்க நேர்ந்து விடுகிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு வரலாறு இருக்கிறது. பிறக்கும் போது அவனோடு பிறக்கிற வரலாறு, அவன் இறந்த பின்னாலும் அவனது உறவுகள் மூலம் சுற்றிக் கொண்டே இருக்கின்றது. என் கடவுள், என் மதம், என் ஜாதி, என் பயம், என் பணம்... இப்படி எத்தனை எத்தனை விஷயங்கள் மனிதனை ஆட்டிப் பார்க்கின்றன.
இந்த எல்லாவற்றையும் கடந்தவர்கள் மரணத்தை அடையத் துடிக்கிறார்கள். ஒரு சிலர்தான், சில நல்ல நிமிடங்களைத் தவிர வேறு எதையும் விட்டுவிட்டுப் போகக் கூடாது என நினைக்கிறார்கள். இந்த மாய மந்திரம் இந்தக் கதைக்கும் பொருந்தும். வாழ்க்கையின் அனுமானம்தான் இந்தக் கதை.
'உங்க வாழ்க்கைக்கு நீங்களே பெரிய சாட்சி' என்கிற அழகான கருத்தை புத்தர் சொல்லியிருக்கிறார். நம் வாழ்க்கையில் நாமே பெரிய சூழ்நிலையில் சிக்கிக் கொண்டு இருக்கும் போது, நாமே அதற்குச் சாட்சியாக இருப்போம் என்று தோன்றியது. அப்படி உருவானதுதான் இந்தப் படம்' கதையின் முடிச்சை அவிழ்த்துப் பேசத் தொடங்குகிறார் ஆண்ட்ரூ லூயிஸ். அமேசான் ப்ரைமில்
பரபரப்பை உண்டாக்கிய 'வதந்தி' வெப் சீரிஸþக்குப் பின் 'வதந்தி 2' வெப் சீரிúஸாடு வருகிறார்.
ஒரு ஹிட் தொடரின் நீட்சியாக கதை சொல்லும் போது, இன்னும் எதிர்பார்ப்பு நீளுமே?
அது இல்லாமல் எப்படி... சமுதாயம் மாதிரி, அரசியல் மாதிரி, இந்த மக்கள் மாதிரிதான் சினிமாவும் இருக்கும். மக்கள் எப்படியோ, அப்படியே அரசனும் என்பார்கள். அது போல்தான் சினிமாவும். ஒரு தலைவனைப் போல் கலைஞனுக்கும் பங்கு இருப்பதாக நினைக்கிறேன்.
சினிமாவில் லாஜிக் எதற்கு என்று தப்பிப்பவர்கள், தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறார்கள், அவ்வளவுதான். ஒரு கதையை அதன் எதார்த்த தன்மையோடு சொல்லுகிற இயல்பை ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
அப்படி ரசிக மனப்பான்மையில் இருந்து கதை சொல்ல வந்திருக்கிறேன். நல்ல படங்கள் இங்கே தோற்காது என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. அதை என் கதை செய்யும். நம் ஒவ்வொருத்தருக்குள்ளும் ஓர் ஆறாத வலி இருந்துகொண்டே இருக்கும்.
அந்த வலி ஏற்படுத்தும் பாதிப்புகள் நமக்குள் கோபத்தை சாம்பல் மூடின தணல் மாதிரி பத்திரமாக வைத்திருக்கும். அந்தக் கோபத்தின் தணல் ஏற்படுத்தும் பாதிப்புகள்தான் கதை. ஒன்லைன் ரொம்பவே சிம்பிள்தான். ஆனால், மிஸ்டரி, த்ரில்லரில் திரைக்கதை ரொம்பவே முக்கியம். கதையைப் படமாக்கிய மேக்கிங் இன்னும் பலம்.
கதையின் உள்ளடக்கம் பற்றி பேசலாமே?
ஒரு குற்றமும், அந்தக் குற்றத்தைச் செய்யத் தூண்டக்கூடிய அம்சங்களும்தான் இதன் ஆதாரம். ஒரு குற்றத்தின் மூலம் எங்கே ஆரம்பிக்கிறது, அது அந்த மனிதனை எங்கே நிறுத்துகிறது, அதன் விளைவுகள் என்ன என்பதுதான் இதன் பேசு பொருள்.
அதை ஒரு கமர்ஷியல் அம்சங்களுக்கு உட்பட்டு செய்து முடித்திருக்கிறேன். அது நல்லதோ, கெட்டதோ... சில நிமிடங்கள் சில விநாடிகளில் நாம் அதுவரைக்கும் வடிவமைத்து வைத்த மொத்த வாழ்க்கைப் போக்கும் மாறிவிடும். அப்படித்தான் இங்கே ஒரு சூழல். ஒவ்வொரு கணமும் ஓர் அனுபவம். 'அனுபவமே கடவுள்' என்று உணர்கிற போதுதான் எல்லாமே தெரிகிறது.
ஆசையே துன்பத்துக்குக் காரணம் என புத்தர் உணர்ந்தது சிறு விநாடிதான். அதேசமயம், அவர் கடந்து வந்த தூரம் ஒரு வனத்தைக் கடந்த மாதிரி. இதுதான் இந்தக் கதையின் அடிப்படை. காமெடி, ஆக்ஷன், த்ரில்லர் என இந்தக் கதை வழக்கமான பார்வைதான்.
ஆனால், அதைத் தாண்டிய சுவாரஸ்யங்கள் ஒளிந்துகிடக்கின்றன. அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளைக் கடந்து விடுகிற மனசு, எதாவது ஒரு பிரச்னையில் நின்று மிரட்சி காட்டி அதிர்ச்சிக் கொள்ளும். வேதனையில் துக்கப்படும். சங்கடம் கொள்ளும். அப்படி எனக்குள் இருந்த மன அழுத்தம்தான் கதை. அதே சமயம் சமூக அக்கறையும் கலந்திருக்கும்.
போலீஸாக சசிகுமார்... என்ன விசேஷம்?
அவரே எதிர்பார்க்காத இடம் அவருக்கு. எப்போதும் மதுரை பின்னணியில் அவருக்கு அடி தடி, ரகளை என்றுதான் கேரக்டர்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும். இது அப்படி இல்லை. கதைக்கு நியாயம் செய்கிற கேரக்டர். பொதுவாக சராசரி மனிதர்களுக்கு அனுபவம் குறைவுதான். மிஞ்சி மிஞ்சிப் போனால் தினமும் ஏழெட்டுப் பேரை புதிதாகச் சந்தித்துப் பேசினாலே அதிகம்.
ஆனால், போலீஸ் வாழ்க்கை அப்படியில்லை. ஒரு வழக்கோடு ஆறு மாதம் கூட புழங்க வேண்டியிருக்கும். அப்படிப் பார்த்தால் அவர்கள் சந்திக்கிற மனிதர்கள், அவர்களின் சூழ்நிலை எல்லாமே வித்தியாசமாக இருக்கும். சில வழக்குகள் ரொம்பவும் விசித்திரமாக, சிக்கலாக, அவிழ்க்க முடியாத புதிராக இருக்கும். அதற்கேற்ப இயங்குவதே சிரமமானது. இது ஒரு போலீஸ் அதிகாரியின் கதை கிடையாது. நான் பார்த்த, கேட்ட, படித்த நிறைய விஷயங்களின் தொகுப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நம்பகத்தன்மையே சொத்து!
நல்ல சினிமாக்களுக்கான கனவு உண்டு!
நாட்டார் கதையின் தாக்கம்தான் தி டார்க் ஹெவன்! இயக்குநர் பேட்டி!
அன்பும் பரிவும் நிரந்தரம்!
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK


