'நட்பும், ப்ரியமும் அது நிகழ்த்தப்படும் கணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மைகளிலேயே வாழும் சில நண்பர்களின் வாழ்க்கைதான் இந்தப் படம். இந்த வரியை இப்போது வாசிக்கிற உங்களைவிட , என்னை விட நம் எல்லோருக்கும் இப்படி ஒரு தருணம் உண்டு.
அப்படி முழுக்க முழுக்க அன்பு, நேசம், பாசம் கொண்டு கட்டப்பட்ட வாழ்க்கையை அவ்வளவு அழகாக, அற்புதமாக வாழ முடியாத நிலை வருகிறபோது, சமானியனாக சிலர் எடுக்கும் முடிவுதான் கதை. உறவையும், பிரிவையும் காலம்தான் தீர்மானிக்கிறது. அது செய்யும் மாயங்கள் எதையும் கலைத்துப் போட்டு விடும். ஆனால், இந்த வாழ்க்கைக்கு நடுவே எப்போதும் அன்பும், பரிவும் நிரந்தரம். பிரச்னை.... நம்மை துரத்திக் கொண்டே வரும். ஓடினாலும் துரத்தும்.... திரும்பி நின்று பார்த்தால் அது ஓடும். இந்தப் பின்னணிதான் முழுக் கதையும்.
இன்னும் எளிமையாகத் சொல்ல வேண்டுமென்றால், படம் பார்க்கிற ஒவ்வொருத்தருக்கும் தன் நெருக்கமான நண்பர்களை நினைத்துக் கொள்வார்கள். ஒவ்வொரு மனிதனுக்குமான அன்பும் வன்மமும் மாறி மாறி கண்ணீரிலும் புன்னகையிலும் போய் முடியும். மகத்தான வாழ்வை, அவஸ்தையை பிரிவை, நினைவை முன் வைக்கிற கதை'' தெளிவாகப் பேசுகிறார் இயக்குநர் சுனில் தேவ். இயக்குநர் ரத்னகுமாரிடம் சினிமா கற்றவர். 'அதோ முகம்' படத்தின் மூலம் பரவலான பாராட்டுதல்களைப் பெற்றவர். இப்போது 'மேரேஜ் ஸ்டோரி' படத்தின் மூலம் கதை சொல்ல வருகிறார்.
கல்லூரி வாழ்க்கைதான் இன்னொரு பரிணாம கதையை...
எல்லாமும்தான். பெண்தான் ஆணுக்கு பெருங்கொடை. பெண்ணின் ஒரு ஸ்பரிஸம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒரு வார்த்தை, உரையாடல் எவ்வளவு நம்பிக்கைகளை அளித்து விடுகின்றன. பள்ளி, கல்லூரி, அதற்குப் பின்னான திருமண வாழ்க்கை என மூன்றாக கதை இருக்கும். இதுதான் லைன். மிக எளிமையாக, சந்தோஷமாக இந்த வாழ்க்கையை அணுகும் மனப்பக்குவம் கொண்டவர்கள் அந்த நண்பர்கள். அவர்களின் திக் திக் நிமிடங்கள்தான் திரைக்கதை.
வெள்ளந்தியான, சந்தோஷமான மன அமைப்பு கொண்டவர்களைப் பார்க்கும் போது, அவர்களைப் போல் நம்மாலும் வாழ முடியாதா என்று தோன்றும். சில விநாடிகள் அந்த வருத்தம் நம்மை தின்று விடும். எல்லாமும் இயந்திரமாகி விட்ட போதிலும், அன்புக்கான தருணங்கள் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கின்றன. கைப்பேசிகள், இணையம் என வந்து விட்ட போதிலும், சொல்லப்படாத சொற்களும், பகிரப்படாத தனிமையும் இன்னும் ஏராளமாக இருந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆனால், அன்பு மட்டுமே பிரதானமாக இருந்த காலங்கள் எங்கே... அப்படி ஒரு நினைப்பை உள்ளுக்குள் கொண்டு வந்து பார்க்கிற படம்தான் இது.
கதைக் களம் எப்படிப் பயணமாகும்?
ஒரு பள்ளியோ கல்லூரியோ... அது ஒரு சமூகம். அதுவே ஒரு தேசம் மாதிரி. அங்கிருக்கும் சூழலையும் சக மாணவர்களையும் அனுசரிக்க முடியாமல் போனதுதான் இங்கே பல பேருக்கான பிரச்னை.
எல்லாக் கல்லூரிகளிலும் யாரோ ஒருவன் வீட்டுக்கு அடங்காமல் வந்து சேருகிறான். யாரோ ஒரு மாணவனுக்கு காதல் பூக்கிறது. ஒருவனுக்கு மரணம் நிகழ்கிறது. யாரோ ஒருவன் கலைஞனாகிறான். கவிதை எழுதுகிறான். அரசியல் கற்று உணர்கிறான். ஒருவன் குற்றவாளியாகிறான். நிறையப்பேர் திருந்துகிறார்கள். யாரோ ஒருவன் தன்னைத் தானே கண்டுபிடித்துக் கொள்கிறான். வெகு நாள்களுக்குப் பிறகு... கல்லூரி என்பது ஒரு வனத்தைக் கடந்த மாதிரி இருக்கிறது எல்லோருக்கும். இதுதான் கதையின் அடிப்படை.
கல்லூரி, கல்லூரி காலகட்டத்துக்குப் பிந்தைய வாழ்க்கையும் இருக்கிறது. தன்னுடன் படித்த காதல் ஜோடிக்கு திருமணம் செய்வதற்காக நண்பர்கள் துணை புரிகிறார்கள். அந்த திருமணத்துக்கு முந்தைய இரவு நடக்கும் பரபர சம்பவங்களே கதை. காதல், பாட்டு, டான்ஸ், ரொமான்ஸ் என ஒரு வாழ்க்கை அங்கே உண்டு. அதன் பின்னணி... அந்த அழகின் உற்சாகத் தருணங்களே கதை.
மீண்டும் 'அதோ முகம்' ஹீரோவைக் கொண்டு வந்திருக்கீங்க போல...?
ஆமாம். 'அதோ முகம்' படத்துக்கு ரசனை மிகுந்த சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு. அதை திரையரங்குகளில் என்னால் சரியாகக் கடத்த முடியவில்லை. இப்போதும் சிலர் பார்த்து விட்டு சிலிர்ப்பாக சில வார்த்தைகளைப் பேசுகிறார்கள். அதுவே இந்தப் படத்துக்கான பெரும் நம்பிக்கை. 'அதோ முகம்' படத்தில் நடித்த ஹீரோ எஸ்.பி. சித்தார்த்தும் நானும் அதே வேட்கையில் இன்னொரு படம் செய்ய வேண்டும் என்ற முடிவில் இருந்தோம்.
அதற்காக இருவருமே ஒன்றாகப் பயணித்தோம். வாய்ப்பு கிடைத்தால் இன்னொரு படத்திலும் அவரை இயக்க காத்திருக்கிறேன். அந்தளவுக்கு சினிமா மீது தீரா காதல் கொண்டவர் அவர். ஷபானா, தீபிகா வெங்கடாச்சலம் என இரு ஹீரோயின்கள். கதையின் மீது இருந்த நம்பிக்கையில் நடிக்க வந்தார்கள். இந்தக் கதையைப் போலவே எல்லோரும் எளிமையானவர்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




