பிச்சை எடுக்கும் யானையின் கண்களில் அசைகிறது பிறந்த பெருவனம்' என்பது மலையாளக் கவிஞர் அய்யப்பனின் கவிதை. இதுதான் இந்தக் கதைக்கான முதல் உத்வேகம்' கதைக்காக கவிதையை மேற்கோள் காட்டிப் பேசத் தொடங்குகிறார், சங்கிலி சி.பி.ஏ. வட மஞ்சுவிரட்டு' படத்தின் இயக்குநர். சினிமாவில் ஆபிஸ் பையனாக வேலைக்குச் சேர்ந்து படம் இயக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். அவருடன் ஒரு சந்திப்பு.
காளை வளர்ப்பு, பந்தயம் அதைச் சுற்றிய மாந்தர்கள் பின்னணியில் ஒரு கதை. இது எங்கிருந்து தொடங்கியது?
சாப்பாடு, சம்பளம், துயரம், சந்தோஷம் எனக் கிடைக்கும் வாழ்வு எல்லோருக்கும் அமைவது இல்லை. கனவு, லட்சியம், வேட்கை எனத் துரத்தும் வாழ்வில் எங்கேயோ போய் நிற்கிறோம். எல்லாம் இருந்தும் மனசு, அன்புக்கு ஏங்குகிறது. வன்மம் இல்லாத உலகுக்குத் தவிக்கிறது. எப்போதும் பரிசுத்தமான காதலுக்குத் தவிக்கிறது.
இப்படியான ஒரு பயணத்தில் கிராமப்புறங்களில் சுற்றிக் கொண்டிருந்தேன். ஐந்து மாதங்கள் வரையான தனிமைப் பயணம் அது. சாப்பாடு, தண்ணீர் என எதுவும் பிடிக்காது. கிடைத்ததைச் சாப்பிட்டு வாழ்கிற அளவுக்கு ஏக்கம் சுற்றும். அப்போது ஒரு கிராமத்தில் கேள்விப்பட்ட விஷயத்தை நோக்கிப் பயணமானேன்.
காளை வளர்ப்பு, அது தொடர்பான சம்பவங்கள் வைத்து நூல் பிடித்தேன். அதற்காகவே ஒரு காளையை வாங்கி, வளர்த்து, பயிற்சிகள் அளித்து... இப்படித்தான் கதை உருவானது. அந்தக் காளையின் மன நிலைப்பாட்டை சாமானிய வாழ்க்கையில் ஒருங்கிணைத்துப் பார்த்தேன்.
ஒரு காளை நம் கிராமத்து மனிதர்களோடு நேசமாக வாழ்ந்தால் எப்படியிருக்கும்? அங்கேயிருந்துதான் இந்தக் கதைக்கான புள்ளி தொடங்கியது. ஒரு காளை, அதை வளர்ப்பவன், அவனுக்குள் மண் நேசம், காதல் என இந்தக் கதை சுற்றி வரும். தன் ஊரைத் தாண்டாத ஒரு கிராமத்தானுக்கு காளையின் அன்பு கிடைத்தால்... இதுதான் இதன் புள்ளி.
கதையின் உள்ளடக்கமாக என்ன இருக்கும்?
வாலை ஆட்டும் ஒரு நாய்க்குள், பெயர் சிணுங்கும் ஒரு கிளிக்குள், கூட உறங்கும் முயலுக்குள்... ஒரு காதலை, பிரிவை மீட்டெடுக்கிறான் மனிதன். காலம் முழுக்க ஜல்லிக்கட்டு காளைகளைத் தயார் செய்வதிலேயே வாழ்க்கையைத் தொலைத்தவர்கள், பறவைகளுக்கான ஆராய்ச்சிக்காகவே தன்னை அர்ப்பணித்தவர்கள், பாம்புகளின் புதிர்களைத் தெரிந்து கொள்வதையே பயணமாக்கிக் கொண்டவர்கள்.... இப்படி ஏக மனிதர்கள் ஓர் அதிசயம் போல நம்மைக் கடந்துகொண்டே இருக்கிறார்கள்.
எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்தான் மனிதர்களின் பெரும் பிரச்னை. நம்பிக்கை, அன்பு எல்லாம் பொய்யாகும் போதுதான் எல்லாம் கசந்து போகிறது. விலங்குகளிடம் அது எதுவும் இல்லை. அதன் அன்பில் அப்பழுக்கு இல்லை. இந்த மன நிலையை விலங்குகளோடு வாழும் பலரிடமும் நான் பார்த்திருக்கிறேன்.
நம்பிக்கையின்மை நிறைந்த மனித உறவுகளை மனதளவில் துரத்தியவர்கள், பிராணிகளின் பேசா அன்பை நிழலாக்கிக் கொள்கிறார்கள். இங்கே நிகழ்வதும் அப்படித்தான். இந்த பூமியோடும், மனித வாழ்க்கையோடும் பிற உயிர்களுக்கு இருக்கும் தொடர்பு என்பது மிக முக்கியமானது.
நமக்குத் தெரிந்ததெல்லாம் அழித்து அடையும் நன்மைகள்தான். ஆனால், மறைமுகமாக நாம் உயிர் வாழவே இந்த உயிரினங்கள் மிகவும் அவசியமாக இருப்பதை நாம் அறிந்திருக்கிறோமா? எறும்பில் இருந்து யானை வரை நாம் வாழும் இந்தப் பூமியின் சுற்றுச் சூழலுக்கும், நம் உயிருக்கும் பல வகையில் அதன் வழக்கமான நடவடிக்கைகள் மூலம் உதவுகின்றன.
காளை வளர்ப்பு தொடங்கி படப்பிடிப்பு வரைக்குமான பயணம் சவாலாக இருந்திருக்குமே?
காளையை நடிக்க வைப்பதில் எந்தச் சிரமமும் இல்லை. அதைப் பழக்குவதில்தான் அதிக நேரம் போனது. கதை முடிவானதுமே காளையை வாங்கி வளர்க்கத் தொடங்கி விட்டோம். அதற்குப் பெயர் வைத்து, அதைச் சொல்லி அழைத்தால் அது திரும்பிப் பார்ப்பது வரை பழக்கி விட்டோம். அதோடு அதைப் புரிந்துகொண்டு நடிக்கிற நடிகர்கள் தேவை. அதற்கு அசோக் மாதிரியான அனுபவ நடிகர்கள் அவ்வளவு ஒத்துழைப்பு தந்தார்கள்.
மதுரை பக்கம் உள்ள கிராமங்களில் படப்பிடிப்பு முடித்து வந்திருக்கிறேன். சர்வதேச விருது மேடைகளுக்கு படம் செல்லவிருக்கிறது. அதன் பின் உங்கள் பார்வைக்கு வரும். எந்தக் கதைக்கும் மனித வாழ்வுதான் அடிப்படை. இதில் நான் சொல்ல வருவதும் அதுதான். இலக்குகள், லட்சியவாதங்கள், அரசியல், பண வேட்கை எதுவும் இல்லாத எளியவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்? அதைத்தான் இதில் படம் பிடித்திருக்கிறேன்.
பிறந்து வளர்ந்த திண்டுக்கல் தொடங்கி, சென்னை பெரு நகரம் வரை நான் பயணித்த ஒவ்வொரு நாளும் ஓர் அனுபவம். அப்போது நான் பார்த்த, ரசித்த, வியந்த, தரிசித்த உலகங்களின் ஒரு சில காட்சிகள்தான் இந்தப் படம். வாய்ப்பு தந்த தயாரிப்பாளர் பழனிச்சாமி அய்யாவுக்கு நன்றி. இப்போது எல்லாமே மன நிறைவு.




