பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

நாட்டார் கதையின் தாக்கம்தான் தி டார்க் ஹெவன்! இயக்குநர் பேட்டி!

'இந்தப் படம் எனது இளம்வயது கனவு. அம்புலி மாமா, முத்து காமிக்ஸ் படித்து வளர்ந்தவன் நான்.

News image
Updated On :12 ஜூலை 2026, 4:12 am IST

'இந்தப் படம் எனது இளம்வயது கனவு. அம்புலி மாமா, முத்து காமிக்ஸ் படித்து வளர்ந்தவன் நான். அதுவே எழுத்து, இலக்கியம், சினிமா என என் பயணங்களைத் தீர்மானித்து விட்டது. இது நாட்டார் கதைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட திரைக்கதை. நாட்டார் கதைகளின் மேல் எனக்கு எப்போதுமே ஆர்வம். அப்படி என் செவிகளுக்கு வந்த ஒரு பொறிதான் இந்தக் கதை.

சிறுபொறியை வைத்து நான் கண்டு வியந்த அனுபவங்களை கொஞ்சம் பலமாகக் கொண்டு இந்தக் கதையை எழுதி முடித்தேன். சினிமாவுக்கான கற்பனைகள் அதிகம். இப்போதைய சினிமா சூழலில் ஒரு சூப்பர் மேன் கதையை எடுப்பது ரொம்பவே கஷ்டம். ஆனால், அதை வேறு மாதிரி சாத்தியப்படுத்திக் காட்டியிருக்கிறேன். விறுவிறுப்பும் பரபரப்புமாகப் படம் வந்திருக்கிறது'' என்று சொல்லிவிட்டு சிநேகமாகச் சிரிக்கிறார் இயக்குநர் பாலாஜி.

ஏற்கெனவே 'டி 3' படம் மூலம் அறிமுகமானவர். இப்போது 'தி டார்க் ஹெவன்' படம் மூலம் கதை சொல்ல வருகிறார். அவருடன் ஒரு சந்திப்பு:

நாட்டார் கதைகள் மலையாள சினிமாவில் அதிகமாக எடுக்கப்படுகிறதே?

மலையாள நகைச்சுவைத் திரைப்படங்களின் ருசி என்பது பத்தியச் சாப்பாடு மாதிரி. ஒரு வகையான பிரத்யேகச் சுவையில் இருக்கும். முகத்தில் அடிக்கும் மசாலாவோ, வயிற்றைக் கெடுக்கும் காரமோ அதில் இருக்காது. அமுங்கிய குரலில் மெலிதாக வெளிப்படும் இந்த நகைச்சுவையை நுகர்வதற்குத் தனியான ரசனை வேண்டும்.

இந்த வகையான நகைச்சுவைப் படங்கள், டப்பிங் வடிவில் அல்லது ரீமேக் வழியில் தமிழுக்கு நிறைய வந்திருக்கின்றன. காமெடியும் சென்டிமென்ட்டும் கச்சிதமான கலவையில் அமைந்திருக்கும் இவ்வகையான திரைப்படங்களை உருவாக்க இப்போது இயக்குநர்களே இல்லை. அந்தக் குறையைத் தீர்க்க ஒரு கதை எழுதினேன். ஆனால், அது முழுக்க முழுக்க த்ரில்லர் கதை. எல்லோருக்கும் பிடிக்கிற ஒரு கமர்ஷியல் சினிமாவாக நிச்சயமாக இருக்கும்.

கதையை இன்னும் கொஞ்சம் விளக்கலாமே...

வாழ்க்கையின் அதிசயமே அடுத்த நிமிடம் நடக்கும் நாம் எதிர்பாராத ஆச்சர்யங்களும் அதிர்ச்சிகளும்தான். அப்படி ஒரு கிராமத்தில் நடக்கும் சில சம்பவங்கள், அதை எதிர் கொள்கையில் அவர்கள் காணும் பெரும் நிகழ்வுகள் என யூகிக்கவே இயலாத வகையில் கட்டமைக்கப்பட்டிருக்கும் கதை இது. 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிப்பிட்ட நாளில் அந்த ஊரில் மர்மமான முறையில் கொலைகள் நடக்கின்றன. அது ஏன்? அதைச் சுற்றி காவல் துறை விசாரணை என கதை போகும். நாட்டுப்புறக் கதைகளின் சுவாரசியம் ஒளிந்திருக்கும்.

இவற்றைத் தர்க்க ஒழுங்கில் அணுகக் கூடாது. லாஜிக் பார்க்கக் கூடாது. அவை தரும் திகில் உணர்ச்சிதான் நமக்கு முக்கியம். இந்தத் திகில் உணர்ச்சியே ஒரு கட்டத்தில் காமெடியாகி விடும். 'இதற்காகவா இத்தனை பயந்தோம்?' என்று விடிந்த பிறகும் சிரித்துக் கொண்டேயிருப்போம்.

லாஜிக்கை சற்று ஒதுக்கி வைத்துப் பார்த்தால் இதிலுள்ள அபாரமான நகைச்சுவையை ரசிக்க முடியும். 'பேய்ப்பட காமெடி' என்றொரு சுனாமி தமிழ் சினிமாவில் வீச ஆரம்பித்தது. 'முனி'யில் ஆரம்பித்தது இந்த சனி. இடைவிடாமல் பத்து வருடங்களுக்கும் மேலாக நம்மை அடித்துத் துவைத்து இப்போதுதான் சற்று ஓய்ந்திருக்கிறது. இது பேய்க் கதை அல்ல.

நீங்கள் பேசுகிற விதம் சரி... இப்போதுள்ள ட்ரெண்ட் பிடித்து கதை சொல்லுவதுதானே இங்கே முக்கியம்...

ஒரு குற்றமும், அந்தக் குற்றத்தை செய்ய தூண்டக் கூடிய அம்சங்களும்தான் இதன் ஆதாரம். இங்கே குற்றம் என்பது நம்பிக்கை துரோகம். அந்த துரோகத்தின் மூலம் எங்கே ஆரம்பிக்கிறது. அதன் விளைவுகள் என்ன என்பதுதான் இதன் பேசு பொருள். எல்லாவற்றையும் தீர்மானிக்கிற சக்தி உள்ள மனிதனால் எவ்வளவு காசு, பணம் கொடுத்தாலும் சூழ்நிலையை மட்டும் தனக்கு ஏற்றவாறு உருவாக்கி விட முடியாது.

இப்போதுள்ள வாழ்க்கை அனுதினமும் சவால்தான். அதுவும் ஆண், பெண் உறவுகளுக்குள் உள்ள சிக்கல்கள் ஏராளம். குறிப்பாக காதல். எண்ணங்கள் பொருந்திப் போனால்தான் எந்த விஷயமும் ஈடேறும். இது காதலுக்கு அப்படியே பொருந்தும். ஆனால், நாளடைவில் எல்லாவற்றிலும் சலிப்பு, பிரியமானவர்கள் மீது காட்டுகிற அன்பு அவர்களை சந்தோஷப்படுத்த இல்லை.

என்னை நானே சந்தோஷப்படுத்திக் கொள்ளத்தான் என்ற நிலை உருவானால் அந்த வாழ்க்கை என்னவாகும். அப்படியோர் பாதையில்தான் இந்தக் கதை பயணமாகும். சித்து, தர்ஷிகா , ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, சாப்ளின் பாலு இப்படி ஏக கலைஞர்களின் உழைப்பு இருக்கிறது.

அதை விட இதன் படப்பிடிப்புக்காக நாங்கள் சென்ற இடமெல்லாம் அழகு. மேக்கரை, ஏற்காடு, மேகமலை, கேரள வனப்பகுதிகள் என ஒவ்வொன்றும் ஒரு அழகு. அதை நீங்கள் படத்தில் பார்க்கிற போது, ஒரு சுற்றுலா சென்று வந்தது போல் இருக்கும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.