உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

நல்ல சினிமாக்களுக்கான கனவு உண்டு!

சினிமாவில் எனக்கென ஒரு வேகம் வைத்து ஓடிக்கொண்டிருக்கிறேன்.

News image
Updated On :19 ஜூலை 2026, 4:08 am IST

'சினிமாவில் எனக்கென ஒரு வேகம் வைத்து ஓடிக்கொண்டிருக்கிறேன். அவ்வப்போது நடிக்கிற படங்கள் பற்றிதான் மனதில் நினைப்பு ஓடிக்கொண்டிருக்கும். அதுவும் சமீபகாலமாக ரொம்பவே ஸ்பெஷல். 'மைடியர் சிஸ்டர்ஸ்', 'டிமாண்டி காலனி 3', 'வேட்டை சாமி', இயக்குநர் வசந்த

பாலன் இயக்கத்தில் ஒரு படம், இதோ இப்போது திரைக்கு வந்திருக்கிற 'அருள்வான்' வரை எல்லாமே ஸ்பெஷல். இது சந்தோஷம் என்றாலும், எனக்கு பொறுப்பு அதிகமாகி இருக்கிறது என்று தோன்றுகிறது. இனி என் படங்களைப் பற்றி நான் பேசாமல், ரசிகர்களைப் பேசவைக்க வேண்டும்...' குறு குறு கண்களுடன் அருள்நிதியிடம் பேசும் போதே நமக்கும் உற்சாகம் ஒட்டிக் கொள்கிறது.

அடுத்தடுத்து படங்களின் வெளியீடுகள்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்போல் இருக்கிறதே?

அருமையான பயணம். பரவசமும் இருக்கிறது. அதே சமயம் பயம். தாத்தாவுக்கு நான் சினிமாவுக்கு வருவேன் என்று தெரியாது. அப்பாவும் அப்படித்தான். படிப்பின் அருமை தெரிந்தவர் அப்பா. அப்போது அவருக்கு அதுதான் முக்கியமாக இருந்தது. பாண்டிராஜ் சாரை சந்தித்த நேரம் மிகப் பெரும் திருப்பு முனை. 'வம்சம்' மாதிரி ஒரு படத்துக்கு தயாராகி வருவேன் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். குறிப்பாக அது மாதிரியான ஒரு எதிர்பார்ப்பை நான் என் ஒவ்வொரு படத்திலும் உணர்கிறேன்.

கடந்து வந்த அத்தனை படங்களிலும் என் அபரிமிதமான உழைப்பு இருக்கிறது. வெற்றி, தோல்வி என்பதெல்லாம் அடுத்த கட்டம். என் வேலையில் திருப்தி அடைந்திருக்கிறேன். அதுவே மன நிறைவு. பிசிக்கல் ட்ரெய்ன், மென்ட்டல் ஸ்ட்ரெஸ் இது இரண்டுமே சேர்ந்ததுதான் ஒரு நடிகனின் வாழ்க்கை. தாத்தா, அப்பா பார்த்து வளர்ந்தவன்.

இதைத்தான் என் சினிமாக்களுக்கான எரிபொருளாக வைத்திருக்கிறேன். ஒரு நடிகன் தன் இமேஜை , இடத்தை தக்க வைத்தே தீரவேண்டும். இருபது, முப்பது வருடங்களாக தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிற ரசிகர்கள் திடீரென்று அவனை வெறுக்க ஆரம்பித்தால், அதற்கு முழுக்காரணமும் அந்த நடிகன்தானே தவிர, ரசிகர்கள் கிடையாது. இந்த உண்மையைத்தான் மனதில் எப்போதும் ஓட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

வசந்தபாலன் வரைக்கு வந்தாகிவிட்டது. பிரம்மாண்டம், முன்னணி ஹீரோயின் எனத் திட்டம் இல்லையா?

ஒவ்வொரு இயக்குநரும் ஒருவிதத்தில் சிறப்பு. ஒருவர் புதுப்புது டெக்னிக்கைக் கொண்டு வருவதில் வித்தை காட்டுவார். சிலர் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பார்கள். இன்னும் சிலர் பி அன்ட் சி சென்டர் வரை இறங்கி அடிக்க வேண்டும் என விரும்புவார்கள். இதில் எல்லாவித இயக்குநர்களுடனும் பயணித்து வந்திருக்கிறேன்.

கதை என்பது தானாக நிகழ்வது. அது எனக்குப் பிடித்தால், அதில் நான் இருப்பேன். இப்போது உங்கள் பார்வைக்கு வந்திருக்கிற 'அருள்வான்' கதை கூட எங்கெங்கோ போய் வந்த கதைதான். இன்னும் சில ஹீரோக்களுக்குக்கூடச் சொல்லப்பட்ட கதை. என்னிடம் வந்தது. பிடித்துக் கொண்டேன். அவ்வளவுதான். படம் பார்த்தவர்களுக்கு இது புது அனுபவம்.

தியேட்டரை விட்டு வெளியே வந்த பின்னும் ஒரு சினிமா மனதில் நிற்க வேண்டும். அதை எங்கள் உழைப்பு ரசிகர்களுக்குக் கொடுத்திருப்பதாக உணர்கிறேன். ஒரு சினிமா பார்வையாளர்களுக்கு எதாவது ஒரு விஷயத்தைக் கடத்த வேண்டும். இந்தப் படம் கடத்தியிருக்கிறது. நல்ல சினிமாக்கள் பற்றி நிறைய கனவு உண்டு. அடுத்தடுத்து அது நிகழும்.

எப்படி இருக்கிறது சினிமாப் பயணம்?

இது ஓர் அழகான பயணம். எல்லா ஹீரோக்களுக்கும் வருடத்துக்கு மூன்று படங்கள் நடிக்க வேண்டும் என்பது ஆசையாக இருக்கும். ஆனால், நடிக்கிற படங்கள் அப்படி சின்ன சின்ன இடைவெளியில் முடியாததாக இருக்கிறது. காடு, மேடெல்லாம் சுற்றி, கிராமத்தில் திரிந்த முதல் படம் முதல்....

மழை, வெயில் பார்க்காமல் அலைந்த 'அருள்வான்' படம் வரை பெரும் உழைப்பு இருக்கிறது. அதை விட ஒவ்வொரு படத்துக்கும் ரிகர்சல் அதிகம் எடுத்துக் கொள்வேன். அரசியல், சினிமா என அடையாளங்கள் முன் நின்றாலும், சினிமாவுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறேன். எந்த இடத்திலும் சறுக்கி விடக்கூடாது என்பதில் நிதானம் வைக்கிறேன்.

அதனாலேயே அடுத்தடுத்து படங்களை உடனடியாக ஒப்புக்கொள்ள முடியவில்லை. இப்போது இன்னும் வேகமாக ஓட வேண்டிய நேரம் வந்து விட்டது. அடுத்து கமர்ஷியல் பேக்கேஜ், நல்ல கதை என நிறைய திட்டங்கள் இருக்கிறது. ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி சினிமாக்கள் கொடுக்க வேண்டும்.

இது மட்டும்தான் இப்போது மன ஓட்டமாக இருக்கிறது. ஒரு நல்ல கதை இருந்தால் ரசிகர்களின் ஆதரவு நிச்சயம் உண்டு என சினிமா மாறி வந்திருப்பதில் சந்தோஷம். எங்கிருந்தோ வருகின்ற ஒரு வாழ்த்து, ஒரு புன்னகை, அழுத்தமான கைக் குலுக்கல் இதெல்லாம் இன்னும் சந்தோஷம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.