/

அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!

மோடி அரசின் வரலாற்றில் முதல்முறையாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்துள்ளது பற்றி...

News image

பிரதமர் மோடியுடன் தர்மேந்திர பிரதான். - கோப்புப்படம்

Updated On :25 ஜூலை 2026, 4:02 pm IST

பாஜக (மோடி) அரசின் 12 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாக அமைச்சர் ஒருவர் (கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்) ராஜிநாமா செய்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

நாட்டில் கடந்த மே 3 ஆம் தேதி மருத்துவப் படிப்புகளுக்கான இளநிலை நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், தேர்வுக்கு முன்னர் வினாத்தாள் கசிந்ததாக தேர்வு ரத்து செய்யப்பட்டது. இது மாணவர்களிடையே கடும் மன உளைச்சலை உண்டாக்கியது.

மிகவும் சாதாரணமாக, ஜூன் 27 ஆம் தேதி நீட் மறுதேர்வு நடத்தப்பட்டது. நாட்டில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவினால் மற்றும் அழுத்தத்தால் இதுவரை 21 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் கூறி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த ஜூன் 20 முதல் தில்லியில் போராட்டத்தைத் தொடங்கினர்.

கடந்த ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்த போராட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தீவிரமடைந்தது.

சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், இவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து சில நாள்களுக்கு முன்பு மத்திய அமைச்சர்களின் எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தையடுத்து உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார்.

தில்லியில் இளைஞர்கள் போராட்டம் ...

தில்லியில் இளைஞர்கள் போராட்டம் ... - ENS

அமைச்சர் ராஜிநாமா

இந்நிலையில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக இன்று பிற்பகல் வரை மத்திய அரசு கால அவகாசம் கோரியிருந்த நிலையில் சிஜேபி கட்சியினரின் வலியுறுத்தலுக்கு ஏற்ப, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று பதவி விலகியுள்ளார். நீட் தேர்வு முறைகேடுக்கு பொறுப்பேற்று பதவி விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

கடந்த 2014ல் முதல்முறையாக மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது. மோடி பிரதமரானார். தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்தியில் பாஜக ஆட்சி இருந்து வருகிறது.

இந்த 12 ஆண்டு காலத்தில் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடந்திருந்தாலும் எந்த அமைச்சரும் அதற்கு பொறுப்பேற்று பதவி விலகிய வரலாறு இல்லை. நாட்டில் இதற்கு முன்னதாக பல சம்பவங்களுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர்கள் பதவி விலகியிருந்தாலும் பாஜக அரசில் ஒருமுறைகூட நடந்ததில்லை.

பாஜக ஆட்சியில், தொடர் ரயில் விபத்துகள், பணமதிப்பிழப்பு, மணிப்பூர் விவகாரம், இந்தியா - பாகிஸ்தான் போரில் அதிபர் டிரம்ப் தலையீடு, சீன எல்லை விவகாரம் என பல பிரச்னைகளுக்கு பிரதமர் மோடியும் துறைசார்ந்த அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வந்தன. பிரதமர் மோடியை எதிர்க்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து 'இந்தியா கூட்டணியை உருவாக்கியதும் வரலாறு.

Dharmendra Pradhan

ஆனால், இப்போது யாரும் எதிர்பாராத வகையில் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள இளைஞர்களின் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி'யின் கோரிக்கைக்கு பாஜக அரசு முதல்முறையாக செவிசாய்த்துள்ளது. இளைஞர்களின் தொடர் போராட்டத்தால் இதுவரை செய்யாததை பாஜக இன்று செய்துள்ளது. இளைஞர்களின் கோரிக்கைக்கு பணிந்துள்ளது.

நாடு முழுவதும் இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்ததாலும் பல்வேறு அரசியல் கட்சிகளின் வலியுறுத்தலினாலும் 12 ஆண்டு கால பாஜக ஆட்சியில் முதல்முறையாக ஒரு அமைச்சர் பதவி விலகியுள்ளார். தர்மேந்திர பிரதானுக்கு வேறு துறை வழங்கப்படலாம் என்றும் அல்லது பாஜகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. தற்போதைய அமைச்சர் ஒருவருக்கு கல்வித் துறை கூடுதலாக ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எப்படியாகினும் தவறுக்குப் பொறுப்பேற்று, ஒரு துறை பொறுப்பில் இருந்து அமைச்சர் விலகியது சிஜேபி கட்சியினருக்கும் நாட்டின் இளைஞர்களுக்கும் மிகப்பெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

எனினும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு, ஜூலை 20 அன்று போராடியவர்கள் மீதான வழக்கை திரும்பப் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளையும் நிறைவேற்றும்வரை போராட்டம் தொடரும் என்று சிஜேபி கூறியுள்ளது. நாம் எதற்கும் அஞ்சாமல் தொடர்ந்து துணிந்து நின்றால் ஜனநாயகம் வெற்றி பெறும் என்றும் இது நமக்கான வெற்றி என்றும் சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக கடந்த 2009 ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று அப்போதைய காங்கிரஸ் அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.

சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் ஏற்பட்ட ஒரு பிரச்னைக்கு, தவறுக்குப் பொறுப்பேற்று அமைச்சர் பதவி விலகியுள்ளது வரலாற்றில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

Summary

Minister Dharmendra Pradhan resigns: A first in the history of the Modi government

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.