பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

கேள்விக்குறியாகும் நிரந்தரம்!

ஒப்பந்த ஊழியர்களை திடீரென வேலையில் இருந்து நீக்குவது மனிதாபிமானமற்ற செயல். நிர்வாகம் என்பது வெறும் கோப்புகளால் ஆனது அல்ல; அது மனித உணர்வுகளால் ஆனது.

News image

கேள்விக்குறியாகும் நிரந்தரம்

Updated On :1 மணி நேரம் முன்பு

எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார். அவரது முகம் சோர்ந்து இருந்தது. வந்து ஐந்து நிமிஷங்கள்வரை அவர் எதுவும் பேசவில்லை. எப்போது வேண்டுமானாலும் உடைந்து அழுதுவிடுவார் போல இருந்தார். நான் காரணம் கேட்ட போது, தன்னை வேலையில் இருந்து நீக்கி விட்டார்கள் என்று கூறினார். அந்த இளைஞர் ஒரு முதுநிலைப் பட்டதாரி. அரசுத் துறையில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வந்தார். அந்த வேலை நிரந்தரமானது அல்ல. அது தற்காலிகம் என்று அவருக்குத் தெரியும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பணி நீட்டிப்பு ஆணை கொடுப்பார்கள்.

தற்போது வெளிப்பணி ஒப்படைப்பில் (அவுட் சோர்ஸிங்) அந்தத் துறையைக் கொடுத்துவிட்டார்கள். அவர்கள் முதல் நாள் அவரை அழைத்து நாளையிலிருந்து நீ வேலைக்கு வர வேண்டாம்' என்று கூறி நிறுத்திவிட்டார்கள். குறைந்தபட்சம் ஒரு மாத அவகாசமாவது கொடுத்திருந்தால் அந்த இளைஞர் வேறு வேலைக்கு முயற்சி செய்யத் தொடங்கி இருப்பார். தினக்கூலி கணக்காக சட்டென்று வெளியே தள்ளுவது மாதிரி ஆகியிருக்கிறது.

இதில் உச்சபட்ச கொடுமை என்னவென்றால், அவரே தன் சுய விருப்பத்துடன் அந்த வேலையை விட்டுப் போவதாக எழுதி வாங்கிக் கொண்டார்கள். வேலை இழப்பு என்பது வெறும் பொருளாதார பிரச்னை மட்டுமல்ல, எதிர்காலம் குறித்த அச்சத்தையும் உருவாக்குகிறது. குறிப்பாக, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு இது பெரும் பிரச்னையாக இருக்கிறது. வேலைவாய்ப்புச் சந்தையில் இன்று வெளிப்பணி ஒப்படைப்பு என்பது தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டது.

செலவுக் குறைப்பு என்ற பெயரில் தற்போது நிறுவனங்கள் எடுக்கும் முடிவுகள் இளைஞர்களை வெளியேற்றுகின்றன. இன்றைய நவீன உலகில், வெளிப்பணி ஒப்படைப்பு என்பது என்பது உலகளாவிய வர்த்தகத்தின் முதுகெலும்பாகக் கருதப்படுகிறது. ஆனால், அந்த முதுகெலும்பில் இன்று ஒரு சிறு விரிசல் ஏற்பட்டுள்ளது. அதன் வழியே கசிவது நம் இளைஞர்களின் எதிர்காலம் குறித்த அச்சம்.

முன்பெல்லாம் ஒரு நிறுவனத்தில் வேலைகிடைத்தால் அது நிரந்தரம் என்று இருந்தது. பணியில் சேர்ந்தது முதல் ஓய்வு பெறும் வரை அந்த ஒரே நிறுவனத்தில் பணிபுரிவார்கள். ஆனால், வெளிப்பணி ஒப்படைப்பு முறையில் இயங்கும் நிறுவனங்கள், உலகப் பொருளாதாரத்தின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப இயங்குகின்றன. அமெரிக்காவிலோ அல்லது ஐரோப்பாவிலோ ஏற்படும் ஒரு சிறு பொருளாதார மாற்றம், இங்கே ஏதோ ஒரு மூலையில் இருக்கும் இளைஞரின் மடிக்கணினியை மூடச் செய்கிறது.

நான் குறிப்பிட்ட இளைஞரின் சம்பவத்துக்கு வருவோம். ஓர் ஏழைத்தாய் அரும் பாடுபட்டு தன் மகனை பட்ட மேற்படிப்பு வரை படிக்க வைத்தார். உலக நடப்பு எதுவும் தெரியாது. அவர் தன் மகன் பெரிய படிப்பு படித்து விட்டதால் நல்ல வேலை கிடைக்கும் என ஆசையுடன் இருந்தார். அப்படி எல்லாம் வேலை கிடைக்காது; அவன் எடுத்த படிப்பு மென்பொறியாளர் படிப்பு அல்ல. போட்டித்தேர்வு எழுத வேண்டும் என்றெல்லாம் புரியவில்லை. அந்த இளைஞர் குறைந்த ஊதியத்தில் ஒரு கடையில் வேலை செய்தார். அதன் பிறகு, அரசுத் துறையில் ஒப்பந்தப் பணியாளராக சேர்ந்தார். அந்த வேலை கிடைத்ததும் அவர் வாழ்வில் உன்னதமான தருணமென அகமகிழ்ந்தார்.

அந்த பேதைத் தாய் அது தற்காலிகம் தான் என்பதை உள்ளுக்குள் ஏற்றிக்கொள்ளவே மறுத்து, தன் மகனுக்கு அரசு வேலை நிரந்தரமாகிவிடும் என்று நம்பி இருந்தார். அந்த இளைஞருக்கு இது தற்காலிகம் என்று தெரிந்திருந்தாலும், அவர் இப்படியே ஒரு கணிசமான ஊதியத்துடன் காலத்தை ஓட்டி விடலாம் என்று எண்ணினார். அடுத்தவர் நிலையில், நம்மை வைத்து யோசிக்க வேண்டும். பல லட்சங்கள் ஊதியம் வாங்கும் தலைமைக்கு இந்த நிலை வந்தால் அவர்களால் சமாளிக்க முடியுமா? ஐ.டி. நிறுவனங்கள் பலரையும் வேலையைவிட்டு அனுப்பி விடுகின்றன. கடன் வாங்கி வீடு, கார் வாங்கியவர்கள் என்ன செய்வார்களோ? அவர்களுக்கே தடுமாற்றம் என்னும்போது வறுமையில் உழலும் இவர்களுக்கு எப்படி இருக்கும்?.

வெளிப்பணி ஒப்படைப்பு ஏன் செய்யப்படுகிறது என்பதற்குப் பல காரணங்களைக் கூறுகிறார்கள். செலவுக் குறைப்பு என்று கூறுகிறார்கள். செலவு குறையலாம், ஆனால், மனித வாழ்க்கை நொறுங்கிப் போகிறது. குறிப்பிட்ட துறையில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்கள் அந்தப் பணியைச் செய்யும்போது தரம் அதிகமாக இருக்கும் என்கிறார்கள். ஒரு பல்கலைக்கழகத்துக்கு தூய்மைப் பணியை வெளிப்பணி ஒப்படைப்பு கொடுத்துவிட்டார்கள்.

அந்தப் பணியாளர்களுக்கும் நிறுவனத் தலைவருக்கும் எந்த நேரடியான தொடர்பும் கிடையாது. பல்கலைக்கழகம் அவர்களுக்கு ஊதியம் கொடுப்பதில்லை. எனவே அவர்களைக் கண்டிக்க முடியாது. அந்த வளாகத்தில் ஒரு மாபெரும் விழா ஏற்பாடானது. மிக உயரிய பதவிகளில் இருப்பவர்கள் எல்லாம் வர இருந்தார்கள். விழா அன்று காலை 8 மணி அளவில் அங்கு சென்றிருந்தபோது எங்கும் காகிதங்கள், குப்பைகள், தேநீர் கோப்பைகள் எல்லாம் கிடந்தன. இரண்டு மணி நேரத்தில் விழா தொடங்க இருந்தது.

ஒப்பந்த ஊழியர்கள் ஓர் இடத்தில் அமர்ந்து நிதானமாக காலை சிற்றுண்டியைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் எந்த அவசரமும் இல்லை. போய் சொல்லிய பிறகு மெதுவாக வந்து சுத்தம் செய்ய ஆரம்பித்தார்கள். இதுவே பல்கலைக்கழக ஊழியர்களாக இருந்தால் அது தங்கள் பல்கலைக்கழகம், தங்கள் விழா என இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ய மாட்டார்களா?. அங்கே உறவும் ஒட்டுதலும் இருக்கும். இங்கே வெறுமனே கூலிக்கு வேலை. ஆகவே, அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வெளிப்பணி ஒப்படைப்புக்கு விடலாம். தேவைப்படாத போது இப்படி விட்டுவிட்டு நிம்மதியாக இருக்கலாம் என்று நினைப்பது சரியா?.

பலருக்கும் வேலை நிரந்தரம் இல்லை. தலைக்கு மேலே சுத்தி தொங்கிக் கொண்டிருப்பதைப் போலொரு பயம் இருந்து கொண்டே இருக்கும். அக்காலத்தில் சொல்லுவார்கள்- அரைக்காசு ஆனாலும் அரண்மனை உத்தியோகமாக இருக்க வேண்டுமென்று. இப்போதும் கடைநிலை ஊழியர் வேலை என்றாலும் அரசு வேலை போதும் என்கிறார்கள். காரணம், பணிப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் உண்டு. அரசு வேலை என்பது போட்டித் தேர்வுகளில் தேறினால் மட்டுமே என்றாகி விட்டது. அந்த முனைப்பும், முயற்சியும் பலரிடம் இல்லை. பட்டம் வாங்குவதற்குள்ளேயே வசதி இல்லாமல் கடன் வாங்கி அதன் வருவாயை நம்பியுள்ள ஏழைக் குடும்பம் அவர்கள் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறும் வரை காத்திருக்குமா?.

ஆகவே, அவர்கள் தற்காலிகத்தை நம்பி ஓடுகிறார்கள். அதன் பிறகு, அதுவே நிரந்தரமாகி விடாதா? என்ற நப்பாசையால் இலவு காத்த கிளி போல காத்திருக்கிறார்கள். இப்படி எண்ணற்ற இளைஞர்கள் திக்குத் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். சில பல்கலைக்கழகங்களில் 40 வயதைக் கடந்தும் இன்னும் ஒப்பந்த அடிப்படையிலேயே பலர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு இவ்வாறு ஒப்பந்த அடிப்படையில் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்தவர்கள் நிரந்தரமாக்கப்பட்டதுபோல தங்களுக்கும் வாய்ப்பு கிட்டலாம் எனக் காத்திருக்கிறார்கள். இவர்கள் வெளியே சென்றால் எப்படி பிழைப்பார்கள்?. இவர்களுக்காக குரல் கொடுக்க எவர் உள்ளனர்?

தற்போது அரசு மற்றும் தனியார் என இருதுறைகளிலும் ஒப்பந்த முறை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. தகவல் தொழில்நுட்பத் துறை, கல்வி நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் ஒப்பந்த ஊழியர்களின் பங்களிப்பு முடிந்தவுடன் பணி நீட்டிக்கப்படுமா என்ற நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. ஒரே வேலை செய்தாலும் நிரந்தர ஊழியர்களைவிட ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறைவாகவே உள்ளது.

சம வேலைக்கு சம ஊதியம் இல்லை; பல நிறுவனங்கள் ஒப்பந்தக்காரர்கள் பலன்களை முறையாக வழங்குவதில்லை. இது அவர்களின் அன்றாடப் பணியில் ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. நிரந்தரப் பணியாளர்களுக்குக் கிடைக்கும் சலுகைகளும் இவர்களுக்கு கிடைப்பதில்லை என்ற எண்ணம் அவர்களை நிறுவனத்தில் இருந்து அன்னியப்படுத்துகிறது. விலை ஏற்றத்துக்கு ஏற்ப ஊதிய உயர்வு இல்லை. எப்போதும் தாங்கள் வெளியேற்றப்படுவோம் என்ற உணர்வு இருந்துகொண்டே இருக்கிறது. ஒரு நாள் பணிவரன்முறை செய்யப்படும் அல்லது இந்த அனுபவத்தை வைத்து ஒரு சிறந்த நிரந்தர வேலைக்குச் செல்லலாம் என்ற நம்பிக்கையில் அவர்கள் வாழ்கிறார்கள்.

ஒப்பந்தம் நீட்டிக்கப்படுமா, இல்லையா என்பதை முன்கூட்டியே தெரிவிப்பது அவர்கள் அடுத்தகட்ட வாழ்வையே திட்டமிட உதவும். மறைமுகமாக வைக்கப்படும் தகவல்கள் தேவையற்ற பயத்தை உருவாக்கும். ஒப்பந்த ஊழியர்களை திடீரென வேலையில் இருந்து நீக்குவது மனிதாபிமானமற்ற செயல். நிர்வாகம் என்பது வெறும் கோப்புகளால் ஆனது அல்ல; அது மனித உணர்வுகளால் ஆனது.

அனைத்துத் துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்கள் அவ்வப்போது முழுவதுமாக நிரப்பப்படும்போது மட்டுமே நிரந்தர வேலை சாத்தியமாகும். அதுவரை நாம் தற்காலிகம்தான் என்ற உண்மையை உள்வாங்கிக் கொண்டு இளைஞர்கள் அதற்கேற்றவாறு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.