வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

தியாகம்

பகல் நேர உறக்கத்துக்குப் பின்னர் விழித்த குருசாமிக்கு திடீரென அந்த நினைப்பு தோன்றிற்று.

News image
Updated On :7 ஜூன் 2026, 4:03 am IST

நெய்வாசல் நெடுஞ்செழியன்

பகல் நேர உறக்கத்துக்குப் பின்னர் விழித்த குருசாமிக்கு திடீரென அந்த நினைப்பு தோன்றிற்று. 'எலவனாசூர் கோட்டையில் வாங்கிய இடத்தை விற்று விட்டால் என்ன?' என்று பலமுறை யோசித்தார்.

35 வருடங்களுக்கு முன்னால் 'உளுந்தூர்பேட்டையில் விமான நிலையம் வரப் போகிறது' என்று செய்தி பரவியபோது ஊரே பீதியில் ஆழ்ந்தது. 'விமான நிலையம் வந்தால் போக்குவரத்து மேம்படும். மக்கள் குடியேற்றம் அதிகமாகி வணிகம் கூடும்' என்பது மறந்து, 'போர் விமானங்கள் வந்திறங்கும். குண்டு மழை பொழியும்' என்ற நினைப்பே தலைதூக்கிற்று.

இதனால் குடும்பத்தினர் பாதுகாப்புக்காகவும், வியாபாரத்துக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், கடை கட்ட எலவனாசூர்கோட்டையில் 20 சென்ட் நிலம் வாங்கிப் போட்டு, 35 ஆண்டுகள் ஆகிவிட்டது. விமான நிலையம் பெயரளவுக்கு வந்ததோடு சரி, அத்திபூத்தாற் போல் எப்போதாவது ஒரு ஹெலிகாப்டர் மட்டுமே வந்து இறங்கும். பெரிய வளர்ச்சி ஏதுமில்லை. ஆகவே, அதை விற்றுவிடுவதுதான் நல்லது. ஏனெனில், அந்த ஒரு சொத்து மட்டுமே இன்றும் தன்னுடைய பெயரில் இருக்கிறது. மற்றதெல்லாம் பேரன்கள் பெயருக்கு மாற்றியாயிற்று.

வயது கூடிக்கொண்டே போகிறது. 'வாழ்க்கையைப் பற்றிய தெளிவும், ஞானமும் வரவர தவறுகளைக் குறைத்து இன்னும் சிறப்பாக வாழ வேண்டும்' என்ற ஆசை மேலோங்கினாலும் இறைவன் அனுமதிக்க வேண்டுமே. ஆகவே, அதை விரைவில் விற்றுவிட முடிவு செய்தார். ஒரே மகளை அழைத்துக் கேட்டார். அப்பா சொல்லே வேதமாய் வாழ்ந்துகொண்டிருந்த அவள் ஒப்புதல் கொடுத்துவிட்டாள். மனைவி போனபின்னர் மகளே தாயாகவும் இருந்து கவனித்துக் கொள்வதால் மகளை கேட்காமல் எதுவும் செய்வதில்லை.

மாலை கடைக்குச் சென்ற முதல் வேலையாக கணக்குப்பிள்ளையை அழைத்து, அது விஷயமாக போய்ப் பார்த்து வருமாறு கூறினார். எள் என்றால் எண்ணெயாக நிற்கும் கணக்குப்பிள்ளை, அதற்குரிய டாக்குமென்ட்களுடன் சென்று பார்த்து, அனைத்தையும் விசாரித்து வந்ததுடன், அதை வாங்குவதற்கு ஒருவரை தயார் செய்தும் வந்திருந்தார்.

அதன் அடிப்படையில் பேசி முடித்து வருவது என்ற முடிவுடன் இன்று புறப்பட்டு வந்தபோது, கணக்குப்பிள்ளை சொன்ன அந்த இடத்தில் வாங்குபவரும் நின்று கொண்டிருந்தார். காரை விட்டு இறங்கிய குருசாமியைப் பார்த்து இடத்தை வாங்கவந்திருந்த ரஹீம் வணங்கி, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, 'மளிகை ஹோல்சேல் பண்றேன். பெரிய கடையா கட்டறேன் முதலாளி. அதுக்கு கடை கட்டலாம்னு வாங்குறேன்'' என்றார்.

திடீரெனத் தனக்கு மரியாதைக் கொடுக்கப்பட்டதை உணர்ந்த குருசாமி, அது காரிய சித்து என்பதைப் புரிந்துகொண்டு, 'கணக்குப் பிள்ளையைப் பாருங்க...'' என்று கூறியவாறு பிளாட்டை நோக்கி நடந்தார். கணக்குப்பிள்ளை, வாங்குபவரிடம் இடத்தின் பத்திரம், மேப்பை காட்டி விலையைச் சொன்னார்.

'சென்ட் ஐம்பதாயிரம், 20 சென்ட்டும் 10 லட்சம் ரூபாய்.''

'இந்த வழியா போக்குவரத்து குறைஞ்சிடுச்சு, முதலாளி.''

'ஆனா, கடைத் தெருவுக்கு வந்தாதானே பொருள் வாங்கமுடியும்.''

'நான் சென்ட்டுக்கு 30-லிருந்து 35-க்குள் எதிர்பார்த்தேன்.''

'கேட்கறது தப்பில்லே... யோசிச்சுச் சொல்றேன்.''

'உடனடியா கேஷ் கொடுத்துடுவேன். சந்தோஷமா கொடுங்க...''

'நீங்க நல்லா இருப்பீங்க... ஆனா, நான் என் பேரங்ககிட்ட கேக்கணும். ரெண்டு நாள் டைம் கொடுங்க.''

அவர் போன பிறகு கணக்குப்பிள்ளையிடம் பேசினார்.

'என்ன இவரு ரொம்ப குறைச்சி கேட்கிறார்?''

'ஊர்ல இந்த ரேட் தான் வழங்குதுங்க.''

அதற்கு மேல் பேச விரும்பாமல், 'சரி, புறப்படலாம்...'' என்றார்.

காரை நோக்கி சற்று தூரம்தான் நடந்திருப்பார். அப்பொழுது தான் அந்தப் பெண்மணி எதிரில் வந்தார். 55 வயதுக்குள் இருக்கும். சிறிது நேர யோசனைக்குப் பிறகு அவரை எப்பவோ பார்த்ததும் பேசியதும் நினைவுக்கு வந்தது.

'வணக்கம் ஐயா... என்னைத் தெரியுதுங்களா? என் பெயர் லட்சுமி.''

'அட... இந்த இடத்தை விற்றவங்கதானே நீங்க?''

'ஆமாங்கய்யா...''

பல இடங்களைப் பார்த்துவிட்டு எதுவும் தோதுபட்டு வராமல் கடைசியாக இந்த இடத்தை ஒரு புரோக்கர் மூலம் வாங்க வந்த சம்பவங்கள் அவருக்கு நினைவுக்கு வந்தது. புரோக்கருடன் அந்த வீட்டுக்குச் சென்றபோது, உள்ளிருந்த மெல்லிய அழுகுரல் கேட்டது. இது என்ன அபசகுணமா என நினைத்தபோது, புரோக்கர் சொன்னார்.

'இது என் ஒண்ணுவிட்ட தம்பி வீடு. ராணுவத்தில் வேலைப் பார்த்தான். எதிரிநாட்டுக்காரனால சுடப்பட்டு வீரமரணமடைஞ்சுட்டதா சொல்லி, உடுப்பு கொண்டு வந்து கொடுத்தாங்க. எதிர்பார்க்கவே இல்லே. 16-ஆம் காரியம் முந்தாநாள் முடிஞ்சுது. ஒரே மகனை காலேஜ்ல சேர்க்கணும். அதுக்குத்தான் இடத்தை விக்க வேண்டியிருக்கு.''

அதைக்கேட்டு கலங்கியவர், எப்படியாவது அந்த இடத்தை வாங்கி, 'பையன் படிக்க உதவ வேண்டும்' என முடிவு செய்தார். பழைய நினைவுகளை ஒதுக்கிவிட்டுப் பேசினார்.

'உங்க பையன் இப்போ என்ன செஞ்சிகிட்டிருக்கான்?''

'படிச்சு அவுங்க அப்பா பார்த்த அதே வேலைக்குப் போய் வீட்டுக்கும் வந்துட்டான்.''

'ஏம்மா புருஷன்... அங்கே தானே செத்தார். அதே வேலைக்கு பையனையும் அனுப்பி ...''

'வீட்டுக்காரர் மட்டுமில்லேங்க. அவங்க அப்பா, அவரோட அப்பான்னு நாலு தலைமுறையா மிலிட்டரியிலே வேலை பார்த்தவங்க. வீட்டுக்கு ஒருத்தர் மிலிட்டரி சர்வீசுக்குப் போகணும்னு நேர்ந்துகிட்டு, அப்படிப் போகலைன்னா அது கெளரவ குறைவுன்னு நினைக்கிற குடும்பம். அப்படிப் போகவேண்டாம்னு ஒரு தலைமுறை நினைச்சா உங்க அப்பாவுக்குப் பிறகு நீ தானே... நீதானேன்னு ஊர்ல உள்ளவங்க உசுப்பி உசுப்பி அனுப்பி வச்சுடுவாங்க.''

'பையனுக்கு குடும்பம், குழந்தைகள் இருக்கா?''

'இருக்கு. மருமக பாம்பு கடிச்சு இறந்துட்டா. இரண்டு பெண் பிள்ளைகள். பெரிசு காலேஜும், சின்னது பதினொன்னாவதும் படிக்குது.''

'கேட்கவே கஷ்டமா இருக்கும்மா.''

'விதியை வெல்ல முடியாதே.''

'என்னை எதுக்குப் பார்க்க வந்தீங்க?''

'நான் கொடுத்த இடத்தை நீங்க விக்கப் போறதா கேள்விப்பட்டேன். அந்த இடத்தை திரும்பவும் எங்களுக்குக் கொடுக்கணும்னு கேட்க வந்திருக்கேன்.''

'ஆமாம்மா... கடை கட்டறதுக்காக வாங்கிப் போட்டேன். இப்ப அந்த ஐடியா இல்லை. அதனால வித்துட்டு ஊரிலேயே ஓர் இடம் வாங்கிப் போடலாம்னு நினைக்கிறேன்.''

'அன்னைக்குக் கொடுக்கும்போது நான் சொன்னது ஞாபகம் இருக்குங்களா... மறுபடியும் வித்தா எங்களுக்கே கொடுங்கன்னு கேட்டிருந்தேன்.''

'ஆமாம்மா... ஆனா இப்போ உள்ள விலை?''

'என்ன நடைமுறையோ அதை ஏத்துக்க வேண்டியதுதானே . அதோ என் பையன் வரான் பாருங்க...''

அவள் காட்டிய பக்கம் திரும்பிய போது முட்டிக்

காலுக்குக் கீழே கால்கள் இல்லாமல் இருபுறமும் கட்டைக்காலுடன் ஒருவன் விந்திவிந்தி நடந்து வந்தான்.

'வணக்கம்ங்க. எப்படி இருக்கீங்க? சரியான நேரத்திலே நீங்க செஞ்ச உதவியாலத்தான் நான் படிச்சு வேலைக்குப் போக முடிஞ்சுது.''

'அது இருக்கட்டும்... காலுக்கு என்னாச்சு?''

'எதிரிநாட்டு வீரன் சுட்டதிலே கால்ல குண்டுபாய்ந்து கட்டாயிடுச்சு...''

அவர் அதிர்ந்தார். வாஞ்சையுடன் அருகே சென்று விகல்பம் பார்க்காமல் கால்களைத் தொட்டுப் பார்த்தார்.

'எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலேப்பா. முதல்லே உங்க வீட்டுக்காரம்மா இல்லைன்னு சொன்னப்ப வருத்தமா இருந்திச்சு. இப்போ காலை இழந்திட்டு வந்திருக்கிற உன்னைப் பார்த்தா அதிர்ச்சியா இருக்கு.''

'அவ தெய்வமா இருந்து வழி நடத்துறா. இது இந்த தேசத்துக்கு நான் கொடுத்த... இல்லையில்லை என் குடும்பம் கொடுத்த காணிக்கை.''

அவன் சொன்னதைக்கேட்டு ஆடிப்போனார். அருகில் சென்று அணைத்து உச்சி முகர்ந்தார்.

'உங்க குடும்பமே கொண்டாடவேண்டிய குடும்பம்தாம்பா.''

'தேவையில்லைய்யா... அது கடமை. எங்க முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்த விதி.''

நெகிழ்ச்சியுடன் சற்று நேரம் அமைதி காத்துவிட்டுப் பின் பேசினார்.

'அந்த இடத்திலே வீடு கட்டப் போறீங்களா?''

'இல்லைய்யா... ஒரு கடமையை நிறைவேற்ற அந்த இடம் தேவைப்படுது. தலைமுறை தலைமுறையா மிலிட்ரி சர்வீஸ் பண்ணின குடும்பத்திலே எனக்குப் பிறகு யாரும் போக முடியாதது கவலையாகவும் வருத்தமாகவும் இருக்குங்க.''

'இப்பதான் ராணுவத்தில் நிறையப் பெண்களை வேலைக்கு எடுக்குறாங்களே...''

'எனக்குச் சம்மதம். ஆனா, கல்யாணம் பண்ணிக்கப் போறவன் சம்மதிக்கணுமே?''

'அதுக்கு மேல ஆண்டவன் வழிகாட்டல நெனச்சிக்க வேண்டியது தான்.''

'நான் அப்படி நினைக்கலை. வருஷத்துக்கு பத்துப் பேரையாவது மிலிட்டரிக்கு அனுப்பும் திட்டத்தோட இருக்கேன்.''

'எப்படி?''

'ஓர் இடத்தை வாங்கி அதுல ஒரு கட்டடம் கட்டி ராணுவ சர்வீஸூக்குப் போக விரும்பும் இளைஞர்களை அங்கே இலவசமா தங்கவச்சி, அவங்களா சமைச்சு சாப்பிட வச்சு, அவங்களுக்குத் தேவையான அனைத்து உடல், அறிவு மனப்பயிற்சிகளைச் சொல்லிக் கொடுத்து, ராணுவத்துக்கு அனுப்பலாம்னு இருக்கேன். அதுக்காகத்தான் அந்த இடத்தைக் கேக்குறாங்களா... எனக்குக் கொடுப்பீங்களா?''

அவன் கேள்விக்கு அவர் உடனடியாக பதில் சொல்ல முடியாதவரானார்.

'கொஞ்சம் டைம் கொடு கணக்கு. இவங்க ரெண்டு பேரோட போன் நம்பர் வாங்கிக்கோங்க. நான் பேசுறேம்பா.''

கை கூப்பி விடைபெற்றார். கார் பைபாஸ் ரோட்டில் ஓடியது.

'கணக்கு... இனிமே பாய்கிட்ட பேச வேண்டாம். நமக்குக் கொடுத்த அந்த அம்மாவுக்கே திருப்பிக் கொடுத்துடுவோம்.''

'அப்ப இன்னும் ரேட்டை கூட கேட்கலாம்.''

இரவு பேரன் சீனுவாசனை அழைத்தார். நடந்ததைச் சொல்லி, 'அந்த இடத்தை அந்த அம்மாவுக்குக் கொடுத்துவிடலாமா?'' என்று கேட்டார்.

'கணக்கு எல்லாத்தையும் சொன்னார். கூடுதலா ரேட் கேட்கலாம்னு சொன்னாரு.''

'அதுக்காகவா கொடுக்கிறேன். உக்காரு... ஒரு விஷயம் சொல்றேன்.''

'ஒரு குடும்பம் தலைமுறை தலைமுறையா ராணுவத்துக்குப் போறதை விடாமல் செஞ்சிட்டு வருதுன்னா அது எத்தனை மேன்மையான குடும்பம். தங்களை நாட்டுக்காக அர்ப்பணிச்சிக்கிற அந்தக் குடும்பத்தை சாதாரணமாக நினைக்க முடியலே. ஆனா, அந்தத் திருப்பணியை செய்ய ஆண் வாரிசு இல்லேங்கறதுக்காக கைப்பொருளை செலவிட்டு ஓர் இடத்தை வாங்கி கட்டடம் கட்டி பத்துப் பேரை இலவசமாக தங்கவெச்சு சமைச்சுச் சாப்பிட்டுக்க வச்சு டிரெயினிங் கொடுத்து அனுப்ப நினைக்கிறது எத்தனை உயர்வான சிந்தனை. அப்படி உருவாக்க நினைக்கறவங்களாலும், அங்கே உருவாகி வருகிறவர்களாலும்தான் இந்த தேசத்துக்குப் பாதுகாப்பும் உண்மையான மதிப்பும் கிடைக்கும். அதனாலே அந்த இடத்தை அவங்க கிட்டேயே கொடுக்கலாம்னு நினைக்கிறேன்.''

'என்ன விலைக்கு வாங்கணுமோ அதே விலைக்குத் திருப்பிக் கொடுத்திடுவோம். அன்னைக்கு அந்த இடத்தை வெறும் இரண்டு லட்ச ரூபாய்க்கு வாங்கினோம். பத்திரப் பதிவு செலவு இருபதாயிரம், இடத்தை அளந்து கம்பி வேலி போட்டது ஐந்தாயிரம், மொத்தம் இரண்டேகால் லட்சம். இன்னைக்கு அந்த இடத்தோட மதிப்பு ஏறி இருக்கலாம். ஆனால், நாம கொடுத்த பணத்தோட மதிப்பு ஏறலேப்பா. மேலும், அந்தப் பணம் வந்து என்ன பண்ணப் போறோம். வருஷத்துக்கு 10 பேர் நம்ம இடத்தில் தயாராகி தேச சேவை செய்யப் போறாங்கன்னா அது எத்தனை பெருமை. லட்சியத்துக்கு முன்னே லட்சங்கள் சாதாரண விஷயமில்லையா?''

'உங்க விருப்பம்போல செய்யலாம், தாத்தா.''

'ஒவ்வொரு வீரரும் நாட்டுப்பற்றுடனும் துணிவுடனும் செயல்படுவதற்குப் பின்னால் அவர்களின் குடும்பத்தினருடைய தியாகம் இருக்கு. அதுதான் அவங்களையும் இந்த தேசத்தையும் முதுகெலும்பாக இருந்து காத்துவருது. இளைஞனா இருக்கும்போது பெத்த தாய், தந்தையையும், கணவனா மாறின பிறகு மனைவியையும், தந்தையான பிறகு மகன் மகளையும் பிரிஞ்சு, எத்தனை வேதனை பட்டுருப்பாங்க. அவங்களப் பிரிஞ்சவங்களும் எத்தனை வேதனைபட்டுருப்பாங்க. அதுக்கு நாம மதிப்பு கொடுக்கணும். காற்று வீசுவதாலத்தான் தேசியக் கொடி பறக்கறதா எல்லோரும் நினைக்கிறாங்க. இல்லப்பா... தன்னுயிரை தியாகம் செய்த ஒவ்வொரு வீரரின் இறுதி மூச்சுக்காற்றில்தான் அது பறந்துகிட்டிருக்கு. அவர்களுக்கு நாம மதிப்பக் கொடுக்கணும்.''

தாத்தா சொல்லி முடிக்கும் போது அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்ததை சீனு பார்த்தான்.

'ஏன் தாத்தா அழுறீங்க?''

'இல்லப்பா... தேச சேவைக்காக குடும்பத்திலிருந்து ஒருத்தவங்க போகணும்னுங்கிற ஒரு எழுதாத விதியா நிர்ணயிச்சுக்கிட்டு, அதனாலே எத்தனை துன்பம் வந்தாலும் பின்வாங்காம தொடர்ந்து கடைப்பிடிக்கிற அந்தக் குடும்பத்தை நினைத்தவுடன் உடம்பு புல்லரிச்சிடுச்சுப்பா. இந்தக் குடும்பத்திலே அப்பா உயிரை விட்டிருக்கார். மகன் காலை பறிகொடுத்துவிட்டு நிக்கிறான். இப்படி ஒரு தியாகத்தை தலைமுறை தலைமுறையே செய்கிற அந்தக் குடும்பத்தை என்னால சாதாரணமா பார்க்க முடியல. நீ அந்தப் பையனுக்கு... இல்லையில்ல அந்த அம்மாவுக்கு ஒரு போன் போடு...''

போன் போட்ட மறுமுனையில் குரல் வர, தாத்தாவிடம் கொடுத்தான்.

'அம்மா அந்த இடத்தை உங்களுக்கே கொடுக்க முடிவு பண்ணிட்டேன். நீங்க கொடுத்த இடம் உங்க கிட்ட திருப்பிக் கொடுக்கறது தான் மரியாதை. உங்க குடும்பத்தோடு நாளை மறுநாள் ரிஜிஸ்ட்ரேஷனுக்கு வந்துடுங்க...''

'ஐயா, நீங்க விலையை சொல்லல...''

'உங்க ஊர்ல சென்ட் நல்ல விலைக்கு போகுது. எனக்கு அவ்வளவு பணம் தேவையில்லை. மேலும் நீங்க ஒரு நல்ல காரியத்துக்காகக் கேட்கிறீங்க. காலகாலத்துக்கு அந்தப் பணி அங்கே நடக்கணும். அதுக்காகவே நான் தரேன். வாங்கும்போது நான் எவ்வளவு கொடுத்தேனோ, அதைத் திருப்பிக் கொடுங்க. உங்களுக்கு சம்மதம் தானே?''

இதை எதிர்பார்த்திராத அந்த அம்மாவிடமிருந்து உடனடியாகப் பதிலில்லை.

'அன்னைக்கு நாங்க சென்ட் 2000 ரூபாய்க்குத்தான் கொடுத்தோம். நாங்க கொடுத்து 35 வருஷம் ஆயிடுச்சு. இன்னைக்கு விலை கூடிவிக்கிது. நீங்க எங்களுக்காகக் குறைச்சு சொல்றீங்கன்னு நினைக்கிறேன். பதற்றமில்லாம விலை சொல்லுங்க. நீங்க என்ன விலை சொன்னாலும் வாங்கத் தயாரா இருக்கோம். பணம் கையில இருக்கு. எடுத்துட்டு வந்துடறோம்.''

'வரும்போது உங்க பேத்திகளை மறந்துடாம கூட்டிட்டு வாங்க . அதுபோதும்.''

போனை வைத்தபிறகு சீனுவாசன் கேட்டான். 'தாத்தா ஒருவேளை அவங்க நிறைய பணம் கொடுத்தா...''

'அவங்க தொடங்குகிற முயற்சிக்கு நன்கொடையா திருப்பிக் கொடுத்திட வேண்டியதுதான். பணம் வாழ்க்கைக்குத் தேவைதான். ஆனா, பணமே வாழ்க்கை இல்லை. அது நம்மிடம் நிறைய இருக்கும்போது நல்ல விஷயங்களுக்கு நம்மால எவ்வளவு கொடுக்க முடியுமோ அதைக் கொடுக்கிறதுதான் முறை. அப்படி நம் முன்னோர் கொடுத்து உருவாக்கியதால்தான் இன்னைக்கும் பல நல்லகாரியங்கள் தடைபடாமல் நடந்துகிட்டுருக்கு. நம் பங்குக்கு நம்மால முடிஞ்சதை தந்து, அதை தடைபடாமல் பார்த்துப்போம்'' என்று பேசி முடித்த தாத்தாவை சீனுவாசன் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.