சீனு ராமசாமி
'சென்னைக்கு வந்தபோது, ஆரம்ப நாள்கள் சோதனையான காலம். என் வாழ்வின் தொடக்ககால நண்பன், சிறு வயதில் ஒன்றாகக் கிரிக்கெட் விளையாடிப் பழகிய சங்கரன் ஒருநாள் என்னிடம், 'நீ நீம் கரோலி பாபாவைச் சந்தித்துப் பார். உனக்கு நல்லதொரு தரிசனம் கிடைக்கும்.
அங்கே சென்று வந்தால், உனக்கு வெளிநாட்டுப் பயணங்கள் வாய்க்கும், அழைப்புகள் வரும்' என்றார். எனக்கு சிரிப்புதான் வந்தது. எங்கோ ஒரு மலைப் பிரதேசத்தில் இருக்கும் பாபாவுக்கும், என் போன்ற ஒரு சாதாரண மனிதனின் வெளிநாட்டுப் பயணத்துக்கும் என்ன தொடர்பு என்றுதான் தோன்றியது.
இருப்பினும், நான் என் மனைவி, இரண்டு குழந்தைகளுடன் தில்லிக்குப் பயணமானேன். அங்கே தங்கி, யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள பிருந்தாவனம் சென்று, கிருஷ்ணர் பிறந்த மண்ணைத் தரிசித்த அந்த ஆன்மிகப் பயணம் என் மனதை லேசாக்கியது. பின்னர், 'பாபாவைத் தரிசிக்க வேண்டும்' என்ற எண்ணத்துடன், நைனிடால் அருகே உள்ள கைஞ்சி தாமுக்கு காரில் சென்றேன். அது இமயமலையின் உச்சியில் அல்ல; நைனிடால் என்ற அமைதியான மலைப்பிரதேசத்தில் அமைந்திருந்தது.
அங்கே சென்றபோது, பாபாவின் ஆசிரமத்தில் நான் கண்ட காட்சிகள் என் வாழ்வின் எல்லாத் துயரங்களையும் அர்த்தப்படுத்திவிட்டன. மக்கள் போர்வைகளை பாபாவின் பாதத்தில் காணிக்கையாகச் சமர்ப்பித்துக் கொண்டிருந்தனர்.
நிபந்தனையற்ற அன்பு: சென்னை வீதிகளில், காகிதங்களைப் போர்த்திக் கொண்டு குளிர் வாட்டும் இரவுகளில் படுத்திருந்த எனக்கும், நைனிடால் மலைப் பிரதேசத்தில் அமர்ந்திருக்கும் இந்த மகானுக்கும் என்ன தொடர்பு? ஏதோ ஒரு 'தொடர்பற்ற தொடர்பு' என்னை அங்கிருந்து இங்குக் கொண்டு வந்திருக்கிறது என்று தோன்றியது. அனுமாரின் அவதாரமாகவே பக்தர்களால் 'நீம் கரோலி பாபா' பார்க்கப்படுகிறார். அவர் போதித்தது 'நிபந்தனையற்ற அன்பு'.
சங்கரன் சொன்னது போலவே, அந்தப் பயணத்தை மேற்கொண்டவுடன் என் வாழ்க்கை வேறொரு திசையில் நகரத் தொடங்கியது. அதுவரை கனவிலும் நினைக்காத அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் என்னைத் தேடி வந்தன. வெளிநாட்டுத் திரைப்பட விழாக்கள், அங்கே நான் பெற்ற வரவேற்பு, தமிழ்த் தொலைக்காட்சிகளில் என்னுடைய உரையாடல்கள் என, வாழ்க்கை ஒரு புதிய தளத்துக்கு மாறியது.
இப்போது என் வாழ்வு முழுமையடைந்திருக்கிறது. போன வருடம் இலங்கைக்கு 450 கிலோ எடையுள்ள நூல்களை அனுப்பி வைத்தேன். என் புத்தகங்களோடு சேர்த்து மற்றவர் புத்தகங்களும் போய்ச் சேரும்பொழுது உண்டாகும் அந்த மனநிறைவுக்கு ஈடான ஒரு விஷயம் இந்த உலகில் இல்லை. அந்தப் பெட்டிகளைப் பூட்டி, அனுப்பி வைத்த அந்த நிமிஷம் பாபாவுக்கு நன்றி சொன்னேன்.
புத்தகங்கள் போய்ச் சேரும்போது, ஒரு மீன் துள்ளுவது போல என் மனம் துள்ளுகிறது. அறிவு என்பது வெறும் தகவல்கள் அல்ல; அது மற்றவர்களுக்குப் பகிரும் வெளிச்சம். செய்தித்தாள்களைப் போர்த்திய அந்த அநாதையான இரவுகள், இன்று உலக நாடுகளுக்குச் சென்று வரும் இந்தப் பயணம், பிறகு ஏழை எளியவர்களுக்குச் சேரும் இந்தப் புத்தகங்கள்... இவை எல்லாவற்றையும் இணைக்கும் அந்த மெல்லிய நூல் எது?
நாம் எதையாவது அடைய வேண்டும் என்று ஓடுகிறோம். ஆனால், உண்மையில் நாம் அடைய வேண்டியது, அந்தப் பயணத்தின் வழியே நாம் பெறுகிற 'மெளனம்'. அறிவு தர்க்கம் செய்யும்; தெய்வம் சிரிக்கும். அந்தச் சிரிப்பின் மடியில், ஒரு போர்வையைப் போர்த்திக் கொள்வது போல, நான் என் வாழ்வை ஒப்படைத்திருக்கிறேன்.
பகுத்தறிவாளர்கள் இதைத் தற்செயல் என்று சொல்லிக் கடந்துபோகட்டும். ஆனால், அந்தத் தற்செயல்களுக்குப் பின்னால், ஒரு மென்மையான அன்பின் கரம் ஒளிந்திருப்பதை, பாபாவின் பாதத்தில் கண்ட அந்தச் சிறுவன் இப்போதும் உணர்ந்துகொண்டிருக்கிறான். அது போதும். வாழ்வின் தாமதங்கள் எல்லாமே, உண்மையில் அழகாகத் திட்டமிடப்பட்ட கால அட்டவணைகள்தான்.
நினைத்ததைச் சுட்டிக்காட்டியவர்! நீம் கரோலி பாபாவின் சீடராக மாறிய ஹார்வெர்ட் பல்கலைக்கழக உளவியல் துறையில் பேராசிரியர் ரிச்சர்ட் ஆல்பெர்ட் என்பவரின் கதைதான் மிக முக்கியமானது. தர்க்கத்தின் உச்சத்தில் இருந்த அவர் பாபாவைச் சந்திக்கச் சென்றபோது, முழுக்க முழுக்க அவநம்பிக்கையுடனும், ஒருவிதமான ஆணவத்துடனும்தான் சென்றார்.
ஆனால், பாபா யாருடனும் பகிராத அந்த ரகசியத்தை அறிந்தார். அவரிடம் பாபா, 'நீ நேற்று இரவு ஆகாயத்தில் இருக்கும் நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாயே... உன் தாய் மறைந்ததைப் பற்றி நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தாயே... கவலைப்படாதே, அவர் என் அருகில் இருக்கிறார்' என்று சொன்னார். அந்த ஒரு விநாடியில், தர்க்கத்தின் கோட்டைகள் சரிந்தன.
அந்த அனுபவத்தைப் பற்றி ரிச்சர்ட் ஆல்பெர்ட் காணொலியில் மிகவும் உருக்கமாக, 'நான் மிகுந்த கோபத்துடனும், யாரையும் நேசிக்க முடியாத ஒரு கடினமான மனநிலையிலுமே பாபாவைச் சந்திக்கச் சென்றேன். என்னால் எப்படி ஒரு மனிதனை நேசிக்க முடியும் என்று தவித்தேன். ஆனால், பாபா என்னைச் சந்தித்து, 'எல்லோரையும் நேசி. உண்மையை மட்டும் பேசு' என்று சொன்னார். அந்த எளிய வார்த்தைகள் என் வாழ்வின் மொத்த ஆணவத்தையும் உடைத்துவிட்டன. பின்னாளில், நான் இந்த மடத்தையே நிர்வகிக்கும் அளவுக்கு அவருடைய அன்பால் மாற்றப்படுவேன் என்று நான் கற்பனை கூட செய்திருக்கவில்லை' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







