அந்த வெயில் வேளையிலும் வியர்க்காது பணி செய்துகொண்டிருந்த என்னுடைய இரு சக்கர வாகனத்துக்கு, வங்கிக் கட்டடத்தின் நிழலில் ஓய்வு கொடுத்தேன். மரத்தின் அடியில் அது இளைப்பாறத் தொடங்கியது. நான் மாடியில் இருந்த வங்கிக்கு படி ஏறிச் செல்லலானேன்.
மதிய வேளை. அதுவும் மாதக் கடைசி என்பதால் வங்கியில் கூட்டம் இல்லை. கவுன்ட்டரில் இருந்த இளம்பெண்மணியிடம் நான் கொண்டு சென்றிருந்த விவரங்களை நீட்ட, அதை வாங்கிக் கொண்டாள்.
'ஐயையோ... என்ன சார் இது?' என்று அந்தப் பெண்ணின் அலறல் திடீரென்று கேட்டது.
திடுக்கிட்டு நான் அவளைப் பார்க்க, அவள் முகத்தில் அதிர்ச்சி இருந்ததைக் கண்ட எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை.
'என்ன சார் இது... அப்பா போயிட்டாரா?'
'அப்பாவா?'
என்ன சொல்கின்றாள் இவள். எனக்கு ஆச்சரியமாகவும் குழப்பமாகவும் இருந்தது.
'நீங்க அப்பாவுக்கு என்ன வேணும்?' கேட்டாள் பத்மா.
'அவரோட பையன்' என்று கலங்கிய கண்களுடன் சொன்னேன்.
அதற்குள் பத்மாவின் இருக்கையைச் சுற்றி கிட்டத்தட்ட எல்லாப் பணியாளர்களும் வந்து நின்றிருக்க, அனைவரும் என் அப்பாவின் இறப்புச் சான்றிதழைப் பார்த்து அதிர்ந்து நின்றிருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
'வெங்கட்ராமன் அப்பா இந்த உலகத்துல இல்லையா? அந்த மாதிரி அன்பான ஒரு மனுஷனைப் பார்க்க முடியுமா?'
பத்மாவின் கண்களில் கண்ணீர்த் திவலைகள் வளர்ந்து கொண்டே இருக்க, அவளைச் சுற்றி நின்றிருந்தவர்கள் முகங்களிலும் சோகம் படர்ந்திருந்ததை என்னால் காண முடிந்தது.
திடுமென எழுந்தாள் பத்மா. என்னை நோக்கி வந்தாள். என்னை வங்கி மேலாளரின் அறைக்கு அழைத்துச் சென்று நாற்காலியில் அமர வைத்தாள்.
'சொல்லுங்க சார்... என்ன விஷயம்?' என்று மேலாளர் கேட்டதுதான் தாமதம், என் அப்பாவின் இறப்புச் சான்றிதழை அவரிடம் காட்ட, அதிர்ச்சியில் திடுக்கிட்டவர், பட்டென்று தன் இருக்கையில் இருந்து எழுந்து நின்றுவிட்டார்.
'சாரி சார், இப்பதானே பத்துப் பன்னிரண்டு நாள்களுக்கு முன்னாடி வந்து பேசிட்டுப் போனார். எப்ப வந்தாலும் பார்க்காமல் போக மாட்டார். நான் இந்த பிராஞ்சுக்கு வந்து ஒரு வருஷம்தான் ஆறது. இவங்க எல்லாம் இங்கே ரொம்ப வருஷமா இருக்காங்க. ரொம்ப அன்பாயிட்டாங்க. நீங்க சொல்றது... ரொம்ப ஷாக்கிங்கா இருக்கே. நீங்க அவரோட பையனா?' என்று கேட்டவர், 'பத்மா... சாருக்கு உடனே ஒரு காபி கொடுக்கச் சொல்லு...' என்று கூறிவிட்டு தன் நாற்காலியில் அமர்ந்தார்.
'சார்... நீங்க வேலையைப் பாருங்க. நான் வெளியே வெயிட் பண்ணறேன்' என்று சொல்லி விட்டு எழுந்தேன். வெளியே வந்தவனை அமர வைத்து உடனே என் கையில் சூடான காபியைக் கொடுத்தார்கள். அதிர்ச்சியில் வார்த்தைகளே வராமல் அமர்ந்து காபியைக் குடித்து முடித்தேன். பத்மாவும் வேறு ஊழியர்களும் என் அருகில் வந்தனர்.
'என்ன ஆச்சு சார்... திடீர்னு?' கேட்டனர்.
'ஒருநாள் இரவு ஒன்பது மணி இருக்கும். சாப்பிட்டுட்டு உட்கார்ந்திருந்தவர் திடீர்னு ஏதோ அன்ஈஸியா இருக்கு...ஒரு டம்பளர் தண்ணி கொண்டு வான்னு சொன்னார். ஓடிப் போய் தண்ணி கொண்டு வந்து கொடுக்கப் போனா அப்படியே தலை சாய்ஞ்சு இருந்தது. அப்பா போயிட்டார்...' என்று சொன்ன என் கண்களில் மறுபடியும் கண்ணீரை வரவழைத்தார் அப்பா.
'எங்களுக்குத் தெரியப்படுத்தக் கூடாதா சார். கடைசியா அவருக்கு மரியாதை பண்ணி இருக்கலாமே. ரொம்ப அன்பான மனுஷர். எங்களுக்கு எல்லாம் என்ன சொல்றது. ஒரு கைடு, ஃப்ரண்டு. இதெல்லாம் ஏன்... எங்களுக்கும் அவர் அப்பாதான் சார். ரொம்ப ரொம்ப பழகிட்டோம் அவரோட. வங்கிக்கு அவர் வரும்போதுதான் எங்க உறவு. வீட்டுக்கு வந்ததில்லை. எவ்வளவோ தடவை வீட்டுக்கு வாங்க, வாங்கன்னு சொல்லிக்கிட்டே இருப்பார். ஒரு தடவை கூட வர முடிஞ்சதில்லை. இந்த வருஷம் பேரன் கொஞ்சம் வளர்ந்துட்டான். அவன் பர்த்டே க்ராண்டா கொண்டாடணும்னு சொல்றான். அப்ப எல்லாரும் வீட்டுக்குக் கட்டாயம் வரணும்னு சொன்னார். கண்டிப்பா வரோம்னு சொன்னோம். அதுக்குள்ள இப்படி... அவர் இல்லைங்கறதை நம்பவே முடியலை...' என்று கண்கலங்கினார் இன்னொரு ஊழியர்.
'நீங்களும் அவரை அப்பான்னு சொல்வேள்னு நான் எதிர்பார்க்கலை. ஒரு வயசான கஸ்டமருக்கு பாங்க்ல இவ்வளவு மரியாதை, அவர் மேல இவ்வளவு பாசமா? எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. இந்த சோகத்திலும் எனக்கு பெரிய இன்ப அதிர்ச்சி. நான் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கேன்' என்று சொன்ன நான் உணர்ச்சியின் பிடியில் கை கூப்பி அனைவரையும் வணங்கினேன்.
'ஒரு நாள் பியூன் பூபதி தன் கஷ்டத்தைப் பற்றிச் சொல்லிட்டு இருந்ததைக் கேட்டுட்டு அப்பா தானா முன் வந்து உதவி செஞ்சதைப் பார்த்து அவர் மேல எங்களுக்கு மதிப்பு, மரியாதை வந்திடுச்சு சார். நாங்க எல்லாரும் அவரை அப்பான்னே கூப்பிட ஆரம்பிச்சுட்டோம். அதுக்குப்புறம் அவர் எங்களுக்குப் பலவிதத்துல உதவினது எதுவும் மறக்க முடியாது. அவர் எங்களுக்குப் பண்ணின உதவிகளுக்கு நாங்கதான் அவருக்கு நன்றிக் கடன்பட்டிருக்கோம். எங்களை அவரோட குடும்ப உறுப்பினர்களா நினைச்சார்...' என்று சொன்னாள் இன்னொரு ஊழியை.
பிறகு, அப்பா அவர்களுக்கு பல நேரங்களில் செய்த நிதி உதவி, தன் அனுபவத்தால் அறிவுரை சொல்லி, அவர்கள் வாழ்க்கையில் கஷ்ட நேரங்களில் அவர்களுக்கு சரியாக வழி காட்டியது, எல்லாவற்றையும் சொல்லினர். 'அவர் ரயில்வேயில இருந்து ரிடையர் ஆனதுனால எங்க எல்லாருக்குமே பல தடவை எமர்ஜன்ஸி கோட்டாவுல டிக்கெட் கிடைக்க ஏற்பாடு பண்ணியிருக்கார். ஒரு தடவை இதோ இருக்காரே சங்கர்... இவருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் பணம் தேவைப்பட்டது. அப்ப அப்பா பேங்குக்கு வந்திருந்தார். சொன்னதுதான் தாமதம். அடுத்த நொடி பணம் ட்ராப் பண்ணி இவர் கையில் கொடுத்துட்டார்.
இவர் அப்படியே இன்ப அதிர்ச்சியில் ஷாக் ஆயிட்டார். ஆபத்துல உதவின தெய்வமா நினைச்சு, ஒரு மாசத்துல பணம் ரெடி பண்ணி திருப்பிக் கொடுத்துட்டார். தனிக்குடித்தனம் போயே தீருவேன், மாமியார் தொல்லைன்னு வெறியோடு இருந்த எனக்கு பொறுமையா இருன்னு அப்பா அறிவுரை சொல்ல, அவர் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து நான் பொறுமை காக்க, இப்ப என் மாமியார் என் மேலே அன்பா இருக்காங்க. இன்னும் எவ்வளவோ ஹெல்ப். சொல்லிண்டே போகலாம் சார்...' என்று சொன்னாள் பத்மா.
'எனக்கு இப்பத்தாம்மா எல்லாம் தெரியறது...' என்று நான் சொன்னேன்.
'எங்க பிராஞ்சுல எவ்வளவோ பேர் அக்கெளண்ட் வைச்சிருக்காங்க. ஆனா, அப்பா மாதிரி ஒருத்தரை நான் என் சர்வீஸ்ல பார்த்ததில்லை' என்று கண்கள் கலங்கச் சொன்னார் சங்கர். நான் என் கண்கள் கலங்க கை கூப்பி வணங்கினேன்.
'சொல்லுங்க சார். இப்ப நான் என்ன பண்ணனும்? அவர் அக்கெளண்ட்ல கேஷ் இருக்கு. அவர் அக்கெளண்டை க்ளோஸ் பண்ணனும் இல்லையா? உங்களுக்கு இங்கே அக்கெளண்ட் இருக்கா?' என்று கேட்டாள் பத்மா.
'இருக்கும்மா.'
'சார், உங்க பாஸ் புக் கொடுங்க. அப்பாவோட அக்கெளண்ட்ல இருக்கற பணத்தை உங்க அக்கெளண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடறேன். அம்மா இதுக்கு முன்னாடியே இறந்துட்டாங்க இல்லையா?' என்று கேட்டாள் பத்மா.
'அம்மா போய் எட்டு வருஷம் ஆறது' என்று சொன்னவன் அம்மாவை நினைத்துக் கொண்டேன். 'நான் கிளம்பறேன். உங்களை வேலை செய்ய விடாம நான் தடுக்கறேன். அடுத்த வாரம் வரேன்...' சொல்லி விட்டு உடனே கிளம்பினேன்.
'மனசைத் தேத்திக்குங்க சார். அப்பா ஆன்மா சாந்தி அடைய வேண்டிக்கறோம்...' என்று கோரஸôக எல்லாரும் சொல்லினர். பத்மா நான் டூ வீலரைக் கிளப்பும் வரை வந்து என்னை வழி அனுப்பினாள்.
அடுத்த வாரம் நான் ஒரு நாள் அலுவலக விடுமுறை எடுத்துக் கொண்டேன் வங்கி செல்ல வேண்டும் என்பதற்காகவே. அன்று வங்கியில் நான் நுழைந்தவுடன் பத்மா தன் இருக்கையில் இருந்து எழுந்து என்னை வரவேற்றது நான் ஏதோ ஒரு உறவினர் வீட்டுக்குள் நுழைவது போன்ற உணர்வை எனக்குத் தந்தது.
'வாங்க சார்' என்று என்னை வரவேற்றவள், என்னை அலுவலகப் பகுதிக்கே அழைத்துச் சென்று அமர வைத்தாள். உடனே எல்லா ஊழியர்களும் என்னை வரவேற்றனர். 'பூபதி, உடனே சாருக்கு ஒரு காபி கொண்டு வாப்பா' என்று சீனியர் ஊழியர் சொல்ல, ஐந்தாவது நிமிடத்தில் என் கையில் ஆவி பறக்கும் மணமான காபிக் கோப்பை இருந்தது. குடிக்க, மனதுக்கு இதமாக இருந்தது. அவர்கள் காட்டும் அன்பில் கலந்த சுவையான காபி.
நான் காபியைக் குடித்து முடித்த அடுத்த நொடி பத்மா என் முன்னால் என்னுடைய பாஸ் புக்கை நீட்ட, வாங்கினேன், 'சார் அப்பா அக்கெளண்டில் இருந்த பணத்தை உங்க அக்கெளண்ட்டுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணி இருக்கேன்' சொன்னாள்.
பாஸ் புத்தகத்தைப் பிரித்து அந்த 'என்ட்ரி'யைப் பார்த்தவன் அடுத்த விநாடி என்னைக் கட்டுப்படுத்த முடியாமல் வங்கி என்றும் பாராமல் 'அப்பா.. .. போயிட்டியா?' என ஓவெனக் கதறி அழ ஆரம்பித்து விட்டேன்.
பத்மா உட்பட இரண்டு ஊழியர்கள் என்னை ஆதரவாகத் தாங்கிக் கொண்டனர்.
'ரொம்ப சாரி... அப்பாவோட அக்கெளண்டில் இருந்து பணம் என் அக்கெளண்ட்டுக்கு வந்திருக்கறதைப் பார்த்த என்னால தாங்க முடியலை. அதுதான் அழுதுட்டேன்...' என்று சொல்லியபடி கண்களைத் துடைத்துக் கொண்டேன்.
'மேனேஜர் இருக்காரா?' கேட்டேன்.
'பிஸியா இருக்கார். இருங்கப் பார்க்கறேன்' சொல்லி விட்டு மேனேஜர் அறையை நோக்கிச் சென்றவள் ஒரு நிமிடம் கழித்துத் திரும்பி வந்தாள். 'சார் உங்களை வரச் சொல்றார்' என்றாள். அவர் அறைக்குச் செல்ல எழுந்தேன்.
'சார் உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்... சொல்லணும்' ஆரம்பித்தாள் இன்னொரு பெண் ஊழியை.
'சொல்லும்மா. என்ன விஷயம்?' என்று நான் கேட்டேன். அவள் பதில் சொல்ல வாய் திறப்பதற்குள் ஒரு ஊழியர் அவளைப் பார்த்து பார்வையால் சைகை செய்வதைக் கவனித்தேன். உடனே அந்தப் பெண் ஊழியை பேசுவதை நிறுத்தி விட்டாள். 'ஒண்ணும் இல்ல சார்...' என்று சொன்னாள். நான் மேனேஜர் அறையை அடைந்தேன்.
'வாங்க சார். வாங்க' என்று மேனேஜர் என்னை வரவேற்றார்.
'சார், உங்க நேரத்தை நான் ரொம்ப செலவு செய்ய விரும்பலை. ஒரே ஒரு விஷயம் சொல்லணும். பத்மாவையும் கூப்பிடறீங்களா?' கேட்டேன். மேனேஜர் உடனே பத்மாவை வரவழைத்தார்.
'சொல்லுங்க சார். என்ன செய்யணும்?' கேட்டார்?
'சார் என் அப்பா அக்கெளண்ட்ல இருந்த பணம் என் அக்கெளண்ட்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகியிருக்கறதைப் பார்த்து தாங்க முடியாம கதறி அழுதுட்டேன். அவர் பணத்தை அவர் போனப்புறம் எடுத்துச் செலவு செய்ய எனக்கு மனசு வரலை. அவரோட வீடு என் பெயருக்கு வரும்தான். ஆனா அவரோட அக்கெளண்ட்ல இருந்த பணம்... அதைச் செலவு செய்யணும்னா மனசுக்கு ஏதோ ரொம்ப சங்கடமா இருக்கு. அவர் இதுக்கு முன்னாடியே இந்த பாங்க்ல சிலருக்கு பண உதவி கூட செஞ்சிருக்கறதா கேள்விப்படறேன். அதனால ஒரு சின்ன உதவி செய்யுங்க சார். அவர் அக்கெளண்ட்லேயிருந்து எனக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகியிருக்கற ஒரு லட்ச ரூபாய் பணத்தை அப்படியே உங்ககிட்ட ஒப்படைக்கறேன். அவர் அன்பு காட்டின, அவர் மேல அன்பு காட்டுற இந்த வங்கி ஊழியர்கள் யாருக்குத் தேவை இருக்கோ அதை உபயோகப்படுத்திக்குங்க. மறுக்காதீங்க. என் மனசுக்கு ஆறுதலா இருக்கும். ப்ளீஸ்...' என்று கை கூப்பி வேண்டிக் கொண்டவன், மேனேஜரின் பதிலுக்குக்காகக் காத்திருந்தேன்.
தன் இருக்கையிலிருந்து எழுந்த மேனேஜர் என் அருகில் வந்தார். என் கைகள் இரண்டையும் பற்றிக் கொண்ட அவர் கண்கள் கலங்கி இருந்தன. 'யூ ஆர் கிரேட் சார்...' சொன்னவர் என்னை அப்படியே கட்டிக் கொண்டார். 'உங்க விருப்பப் படியே ஆகட்டும்' சொன்னவர், தன் இருக்கையில் மீண்டும் அமர்ந்து கொண்டார்.
'அந்த லேடி ஸ்டாஃப் என் கிட்ட ஏதோ சொல்லணும்னாங்க. அப்புறம் ஒண்ணும் இல்லைன்னுட்டாங்களே. என்னவா இருக்கும் பத்மா?' என்று நான் கேட்டேன்.
'சுமதிதானே, அவ எதுவும் கேட்க அவசியமே இல்லாம பண்ணிட்டீங்களே சார்'
'ஏன்?'
'பியூன் பூபதியோட பசங்க ஸ்கூல் ஃபீஸ் கட்ட பணம் தர்றதா அப்பா சொல்லியிருந்தார். அதோட ஆயிஷாவோட அம்மா ட்ரீட்மெண்டுக்கு பணம் தர்றதாவும் சொல்லி இருந்தார். கடனாதான் கேட்டா. நீங்க தானமாவே கொடுத்துட்டீங்களே...' என்று சொன்னவளின் கண்கள் கலங்கின.
'நீங்க அப்பா பணத்தை ஏத்துக்கறதுக்கு ரொம்ப நன்றி மேனேஜர் சார்... நான் வரேன்' என்று கூறி நான் கிளம்பினேன்.
'நாங்க உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியாம இருக்கோம். நீங்க எங்களுக்கு நன்றி சொல்றதாவது... ரொம்ப ரொம்ப உணர்ச்சிவசப்பட வைச்சுட்டீங்க சார்!' எழுந்து நின்று சொன்னார்.
அவர் அறையை விட்டு வெளியே வந்தேன். 'நான் வரேன் பத்மா. பணத்தை வித்ட்ரா பண்ணி இப்பவே கொடுத்துடறேன்' என்று சொன்னேன். பாஸ் புத்தகத்தை வெளியே எடுத்து பத்மாவிடம் கொடுத்தேன். அதற்குள் பூபதியும், ஆயிஷாவாகத்தான் இருக்க வேண்டும் என் அருகில் வந்து நின்றனர்.
'ரொம்ப தாங்க்ஸ் சார். உங்க அப்பா இன்னும் உங்க ரூபத்தில் எங்க முன்னாடி இருக்கார்' சொன்னாள் ஆயிஷா.
'சார், நீங்க பணம் எடுத்து வையுங்க. உங்க வீட்டுக்கு வந்து அப்பா படத்துக்கு நமஸ்காரம் பண்ணிட்டு வாங்கிக்கறோம். அவரோட ஆசிர்வாதத்தோட பணத்தை ஏத்துக்கறோம்' சொன்னாள் பத்மா.
'நான் அப்பாவிடம் கடனாத்தான் கேட்டிருந்தேன். திருப்பித் தந்துடறேன்' என்று சொன்னாள் ஆயிஷா.
'இல்லம்மா. அப்பாவோட பணத்தை நீங்களே எடுத்துக்குங்க..' என்று சொன்னேன்.
'அப்ப ஆயிஷா திருப்பித் தரும்போது அந்தப் பணத்தை வேற ஏதாவது நல்ல காரியத்துக்கு உபயோகப்படுத்திக்கலாம். சரியா சார்?' என்றாள் பத்மா.
'என்னைக் கேட்க வேண்டிய அவசியமே இல்லை' என்றேன்.
'எங்க பேங்க்ல அக்கெளண்ட் வைச்சிருக்கற ஏதாவது ஏழைக்குக் கொடுக்கலாம் சார் உங்க கையால...' என்று சொன்னாள் பத்மா.
'நான் வரேன். எல்லாருக்கும் ரொம்ப நன்றி' என்று கைகூப்பியபடி கிளம்பினேன். அனைத்து ஊழியர்களும் என்னை வழி அனுப்பி வைத்தனர். பத்மாவும், பூபதியும் ஆயிஷாவும் என்னை டூ வீலர் வரை வந்து வழி அனுப்பி வைத்தனர்.
உணர்ச்சிவசப்பட்ட மனநிலையோடு இரு சக்கர வாகனத்தைக் கிளப்பி ஓட்டிக் கொண்டு வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தவன் மனம் முழுவதும் அப்பா நிறைந்திருந்தார் கம்பீரமான தோற்றத்தோடு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






