வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

இதயத்தில் இருந்து... கதைகள் சொல்லும் திரைத் துறையின் ஜாலியான அம்மா!

நீங்கள் உங்கள் இதயத்திலிருந்து கதை சொல்ல ஆரம்பித்தால், அது பல இதயங்களைச் சென்று சேரும்' என்கிறார் ஜானகி சபேஷ்.

News image
Updated On :14 ஜூன் 2026, 4:00 am IST

நீங்கள் உங்கள் இதயத்திலிருந்து கதை சொல்ல ஆரம்பித்தால், அது பல இதயங்களைச் சென்று சேரும்' என்கிறார் ஜானகி சபேஷ்.

நடிகை, கதை சொல்லி, எழுத்தாளர் என்று பன்முகத் தன்மைகளில் இயங்கும் அவர், பல்வேறு திரைப்படங்களில் முன்னணி நட்சத்திரங்களுக்கு அம்மாவாக தன்னுடைய இயல்பான, நகைச்சுவையான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தவர்.

'திரைத்துறையின் ஜாலியான அம்மா' என்று அழைக்கப்படும் அவரிடம் பேசியபோது:

'நான் பெங்களூரில் பிறந்து, பத்தாம் வயது வரை கொல்கத்தாவில் இருந்தேன். அங்கு நான் கற்றது, ரசித்தது, உணவுகள், சந்தித்த மனிதர்கள், அனுபவங்கள் போன்றவை எனக்குள் இருந்த கதை சொல்லியைத் தட்டி எழுப்பின. என் தந்தை புத்தகப் பதிப்பாளர். பள்ளிப் போட்டிகளில் நான் பங்கேற்கும்போதெல்லாம் அதற்கான தகவல்களை திரட்டித் தருவார். எப்படிப் பேச வேண்டும் என்றும் சொல்லித் தருவார். அந்தப் பயிற்சிகள்தான் கதை சொல்லியாக நான் இயங்க உதவுகிறது. கொல்கத்தாவிலிருந்து தில்லிக்கு எங்கள் குடும்பம் குடிபெயர்ந்தது. ஜவாஹர்லால்நேரு பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டம் பெற்றேன்.

கதை சொல்வதில் எனக்கு இருந்த ஆர்வத்தால், இதையே தொழிலாக மாற்றிக் கொண்டேன். பள்ளிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் பயிற்சி முகாம்களில் பங்கேற்று மாணவர்களுக்கு கதைகள் கூறுவதை முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொண்டுவருகிறேன். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என பல மொழிகளில் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், பெரியவர்களுக்கும், மென்பொருள் நிறுவன ஊழியர்களுக்கும் கதைகளைச் சொல்கிறேன். கதைகளால் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும்.

எதைப் பற்றிக் கதை சொல்கிறேனோ அதற்குப் பொருத்தமான பாடல்களைப் பாடுவது என் வழக்கம். ஆங்கிலம், ஹிந்தி மொழி பாடல்களை நானே எழுதிவிடுவேன். எதுகை மோனையுடன் எளிமையான வரிகளில் அழகான தமிழ்ப் பாடல்களை என்னுடைய அண்ணி சித்ரா பால்ராஜ் எழுதித் தருவார். பாடல்களுக்கான ட்யூனை என் கணவர் சபேஷ் போட்டுத் தருவார்.

Story image

மழை நீரைப் பொழியுது

மழை நீரைப் பொழியுது

துளித்துளியாய் துளித்துளியாய்

சாரல் அடிக்குது

சலசலசலவென்று படபடபடவென்று

மழை பொழியுது

மழை நீரைப் பொழியுது

ஜலம் ஜலம் ஜலம்

ஜலம் ஜலம் ஜலம்

இவ்வாறு இருக்கும் எனது பாடல்கள்.

கதைகள் எப்படி?

சில கதைகளை நானே எழுதுவேன். பிரபல எழுத்தாளர்களின் கதைகளையும் சொல்கிறேன். கதைப் புத்தகங்களை பதிப்பாளர்களின் அனுமதியுடன் பெற்று, அந்தக் கதைகளை படித்து உள்வாங்கிக் கொண்டு, குழந்தைகள் ரசிக்கும் வகையில் சொல்கிறேன்.

கதை சொல்வதற்கு முன் குழந்தைகளின் மனம் ஒன்றிக் கேட்கும்வகையில் அவர்களைத் தயார் செய்ய வேண்டும். பேச்சு கொடுத்தோ, பாடல்கள் பாடியோ அவர்களை நம் பக்கம் ஈர்க்க வேண்டும். 3-10 வயது வரையிலான சிறார்கள், 5-7 வயதுக் குழந்தைகள், 8-10 வயதுள்ள மாணவர்கள் எனப் பல பிரிவுகளாக மாணவர்களைப் பிரித்து கதை சொல்லும்படி பள்ளி நிர்வாகத்தினர் கேட்பார்கள். அதற்கேற்ப கதைகளைத் தேர்ந்தெடுத்துச் சொல்கிறேன். ஆசிரியர்களுக்கும் கதை சொல்லப் பயிற்சி அளிக்கிறேன். குழந்தைகள் வளர்ப்பில் கதை சொல்வது முக்கியப் பங்கு வகிக்கவேண்டும் என்பது பற்றியெல்லாம் பெற்றோர்களுக்கு எடுத்துரைக்கிறேன்.

கதை சொல்லும்போது அந்தக் கதைக்கான காட்சிகள் என் கண் முன்னால் விரிவதைப்போல கற்பனை செய்துகொண்டு கதை சொல்கிறேன். அந்த உணர்வு குழந்தைகளுக்கும் பரவுகிறது. கதை சொல்லிவிட்டு, 'இந்தக் கதை வெளியாகியிருக்கும் புத்தகத்தைப் பார்க்க விரும்புகிறீர்களா?' என்று கேட்பேன். குழந்தைகள் தலையசைப்பார்கள். உடனே ஒரு பையிலிருந்து அந்தப் புத்தகத்தை எடுத்துக் காண்பிப்பேன். குழந்தைகள் 'ஹோ' என்று மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பார்கள். தாங்கள் கேட்ட கதையின் அடிப்படையில் தங்களுக்குள் சிருஷ்டித்துக் கொண்ட கற்பனையுடன், அந்தப் புத்தகத்தில் இருக்கும் கதையின் சித்திரங்களை ஒப்பிட்டுப் பார்த்து ஆனந்தப்படுவார்கள். இதெல்லாம் குழந்தைகளின் மனதில் குதூகலத்தை ஏற்படுத்தும்.

மென்பொருள் நிறுவனப் பணியாளர்களிடம் சில கதைகளைச் சொல்லும்போது பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் ஏதாவது பிரச்னை வரும்போது எப்படிச் சமாளிப்பது, சக பணியாளர்களுடன் இணக்கமாகப் போவது எப்படி எனப் பல குணாதிசயங்களை கதைகள் மூலம் அவர்கள் கற்றுச் செயல்படுத்த முடியும். இதனால் மன அழுத்தம் குறையும். உற்சாகத்துடன் பணியாற்றவும் முடியும்.

திரைப்பட அனுபவம்

இயக்குநர் ராஜீவ் மேனனிடம் நிறைய விளம்பரப் படங்களில் பணியாற்றியதால், அவரது 'மின்சாரக் கனவு' திரைப்படத்தில் கன்னியாஸ்திரி வேடத்தில் நடிக்க வாய்ப்பை அளித்தார். நடிக்கும் உணர்வே இல்லாமல் உதகைக்குப் போய் ஜாலியாக நடித்தேன். 'ஜீன்ஸ்' திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு அம்மாவாக நடிக்க வைத்து, என்னால் நகைச்சுவையாக நடிக்க முடியும் என்பதை உணர வைத்தவர் இயக்குநர் சங்கர். 32 திரைப்

படங்களில் நடித்துள்ளேன். அதில், ஒரு மலையாளத் திரைப்படமும், இரண்டு தெலுங்குத் திரைப்படங்களும் அடங்கும். பெரும்பாலும் அம்மா கேரக்டர்தான்.

'கில்லி' திரைப்படத்தில் நடிக்கும்போது, பிரபலமானேன். அதில் கபடி வீரர் வேலுவின் (முதல்வர்

சி.ஜோசப் விஜய் நடித்தது) அம்மாவாக நடித்தேன். சூட்டிங்கில் விஜய் சார், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். தனக்கான காட்சியில் நடித்து முடித்ததும், அந்த இடத்திலேயே இருக்கமாட்டார். அதிகம் பேச மாட்டார். அவரைப் பற்றியும், அவரது குடும்பத்தினரைப் பற்றியும் அடிக்கடி விசாரிப்பேன். விஜய்யின் குடும்பத்தினருடன் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்துக்குப் பயணம் செய்தது மறக்க முடியாத அனுபவம். 22 ஆண்டுகளுக்குப் பின்னர், 2024-இல் 'கில்லி' திரைப்படம் ரீரிலீலானபோது, புதிய தலைமுறையைச் சேர்ந்தோர் ரசித்தனர். என்னை சிறப்புற நடிக்க வைத்த இயக்குநர் தரணிக்கு நன்றி.

'பூவெல்லாம் உன் வாசம்', 'வேட்டையாடு விளையாடு', 'குஷி' போன்ற திரைப்படங்களில் ஜோதிகாவுடன் நடித்திருக்கிறேன். அவர் மிகவும் மென்மையாகப் பேசுவார். எங்கு பார்த்தாலும் ஓடி வந்து அன்பாகப் பேசுவார். சூர்யா-ஜோதிகா இருவருமே மிகவும் அன்பாகப் பழகக்கூடியவர்கள்.

ஒருமுறை நான் எனது குடும்பத்தினருடன் ஒரு ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டபோது, அங்கு நடிகர் அஜித் வந்திருந்தார். அவரே என் இடத்துக்கு வந்து நலம் விசாரித்தார்.

நேர நிர்வாகம்

என் கணவர், மாமியார், மகள் என எல்லோருமே என் பணிகளுக்கு மிகுந்த ஆதரவை அளித்து, குடும்ப விவகாரங்கள், சமையலை பகிர்ந்துகொள்கிறார்கள். எந்த வேலையைச் செய்தாலும் அதை அர்ப்பணிப்புடன் செய்கிறேன். நிறைய விஷயங்களைச் செய்வேன். ஒரு நாள் கதை சொல்லப் போகிறேன் என்றால், மறுநாள் விளம்பரங்களில் நடிக்கப் போகிறேன். அதற்கு அடுத்தநாள் வாய்ஸ் ஓவர் செய்யப் போகிறேன். இப்படி என் வேலைகளை ஒழுங்குபடுத்திக் கொள்கிறேன். ஒரு வேலையைச் செய்யும்போது மற்ற வேலையைப் பற்றிச் சிந்திப்பதில்லை.

2008-இல் துளிகா புத்தக நிறுவனத்துக்காக, படக்கதை புத்தகத்தை எழுதியிருக்கிறேன். 9 மொழிகளில் அது பதிப்பிக்கப்பட்டது. தமிழில் 'காற்றின் கதை திருவிழா' என்ற பெயரில் வெளியானது. 'பாட்டியின் ரசம்' என்ற புத்தகத்தை 'கரடி டேல்ஸ்'க்காக நானும் என் மகளும் சேர்ந்து எழுதினோம். 'முகி அண்ட் த ரெயின்போ', 'அப்பு அன்ட் த தர்ட்டி க்ரோ' என்ற இரண்டு புத்தகங்களையும் எழுதியிருக்கிறேன். ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்கள் சார்பில் 'சிறார் கதை சிற்பி' என்ற விருதும், ஸ்ரத்தா மனு பவுண்டேஷன் சார்பில் 'சோஷியல் இம்பாக்ட் அவார்ட்'டும் பெற்றுள்ளேன்' என்கிறார் ஜானகி சபேஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.