நவ. 18, 19-ல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை92,000 விவசாயிகள், ஆசிரியா்கள் மீதான வழக்குகள் ரத்துகோவா சா்வதேச திரைப்பட விழாவில் பாரதிராஜா, பாக்யராஜ் திரைப்படங்கள்உணவுப் பொருள் விலை அதிகரிப்பு எதிரொலி: கேரளத்தில் ஹோட்டல் தொழில் பாதிப்பு

அறிவுத் தேடலுக்கான புகலிடம்!

நூலக வளர்ச்சியில்தான் ஒரு நாட்டின் கல்வி வளர்ச்சியும், அறிவு வளர்ச்சியும் அடங்கியிருக்கிறது.

Library

நூலகம் - பிரதிப் படம்

Updated On :

மனித இனத்தின் வரலாற்றைப் போலவே மொழியின் வரலாறும் மிக நீண்டது. மொழியின் வரலாற்றைப் போலவே புத்தகங்களின் வரலாறும், புத்தகங்களின் சேமிப்பான நூலகங்களின் வரலாறும் மிகவும் நீண்டது. புத்தகங்களும் மனித வரலாற்றை எடுத்துக் கூறும் கருவிகளாகும். புத்தகங்களைப் பாதுகாத்து வைப்பது என்பது அடுத்தத் தலைமுறைக்கு அறிவையும், அனுபவத்தையும் பாதுகாத்து வைப்பதாகும்.

மனிதன் தன் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கு மொழியை உருவாக்கிக் கொண்டான். அவன் தன் எண்ணங்களையும், கருத்துகளையும் நிலையாக்கிக் கொள்வதற்கு புத்தகங்கள் தேவைப்பட்டன. கற்பாறைகளில் கல்வெட்டுகளாக பதிவு செய்து கொண்டான். இரும்பு, தாமிரப் பட்டயங்களில் எழுதினான். காலம் செல்லச் செல்ல களிமண் பலகைகளில் எழுதினான். அதன் தொடர்ச்சியாக ஓலைச் சுவடிகளில் எழுத்தாணி கொண்டு எழுதினான்.

நாகரிகம் வளர்ச்சியடையவே அச்சு இயந்திரங்களும், காகிதங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. புத்தகங்களும் பிறந்தன. 'ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்' என்ற ஒüவையின் நீதிமொழி, பள்ளிப் பிள்ளைகளுக்கு மட்டும் சொல்லப்பட்டதல்ல. மனித இனத்துக்கே சொல்லப்பட்டதாகும். அறிவு தேவைப்படும் அனைவருக்கும் சொல்லப்பட்டதாகும். ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனியின் வருகை, டச்சு-பிரெஞ்சு ஆதிக்கம் இவற்றுடன் கூடவே அச்சு இயந்திரமும், பத்திரிகைகளும் வந்தன. இன்று காணப்படும் பல நவீன நூல் நிலையங்களை ஆங்கிலேயரும், பிற நாட்டவரும் இங்கு உருவாக்கினர். தங்கள் ஆட்சி அதிகாரத்துக்காகவும், தங்கள் சொந்த பயன்பாட்டுக்காகவும் இவற்றை உருவாக்கினர். ஆயினும், இன்றளவும் அவை நமக்கும் பயன்படுகின்றன.

தமிழ்நாட்டு நூலக வரலாற்றில் எஸ்.ஆர்.ரங்கநாதன் மறக்க முடியாதவர்; அவர் சாதித்தவை ஏராளம். அவர் நூலகப் பொறுப்பேற்ற பிறகு 1928-ஆம் ஆண்டு ஜனவரியில் 'மெட்ராஸ் நூலகச் சங்கம்' உருவாக்கப்பட்டது. இந்தச் சங்கத்தின் முயற்சியால்தான் 1929-ஆம் ஆண்டு இந்தியாவில் முதல்முறையாக சென்னைப் பல்கலைக்கழகத்தில் நூலக அறிவியல் தொழில்நுட்பம் குறித்த கோடைகால பயிற்சிப் பள்ளி தொடங்கியது.

அன்றைய மாநகர வழக்குரைஞர்களுக்கான பார் கவுன்சில் நூலகம், குழந்தைகளுக்காகத் தனி நூலகம், நடமாடும் நூலகங்களின் மூலம் வீடு வீடாகப் புத்தகம் தந்து பெறுவது, மருத்துவமனைகளுக்கு சென்று புத்தகங்களை வழங்கித் திரும்பப் பெறுவது போன்ற புதிய முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தது.

சென்னை மாகாண பொதுநூலகச் சட்டம்தான் இந்தியாவில் இத்துறையில் முதல்முதலாக இயற்றப்பட்ட சட்டமாகும். நூலகர் என்பவர் எப்படி இருக்க வேண்டும்? 'நூலகப் பணிக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொள்வது, ஒவ்வொரு வாசகரையும் புன்னகையுடன் வரவேற்பது, வாசகர் விரும்பிக் கேட்கும் புத்தகத்தை குறைந்த கால அளவுக்குள் தேடித் தருவது' என்று நூலகத் தந்தை டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன் கூறியுள்ளார்.

இந்தியாவில் தேசிய நூலக வாரம் ஆண்டுதோறும் நவம்பர் 14-ஆம் தேதி முதல் நவம்பர் 20-ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்திய நூலகச் சங்கம் மூலம் 1968-ஆம் ஆண்டு முதல் இது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நூலகங்களின் முக்கியத்துவம், வாசிப்புப் பழக்கம் மற்றும் நூலக சேவைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.

இந்தக் கொண்டாட்டத்தின் போது பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது நூலகங்களில் புத்தகக் காட்சிகள், வாசிப்புத் திறனாய்வுகள், பேச்சுப் போட்டிகள் மற்றும் விவாதங்கள் நடத்தப்படுகின்றன. இந்திய நூலகவியலின் தந்தை என அழைக்கப்படும் டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன் மற்றும் முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் பிறந்த நாளையொட்டி (நவம்பர் 14) தேசிய நூலக வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

'நல்ல புத்தகங்கள் நல்ல கனவுகளை வளர்க்கும், நல்ல கனவுகள் நல்ல எண்ணங்களை உண்டாக்கும், நல்ல எண்ணங்கள் நல்ல செயல்களை உருவாக்கும்' என்றார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். 1948-இல் நூலகச் சட்டம் கொண்டு வரப்பட்டு 1950-இல் நடைமுறைக்கு வந்தது. 1972-இல் பொது நூலக இயக்ககம் உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 1936-ஆம் ஆண்டில் தங்கள் விருப்பமான நூல்களைத் தேடி எடுத்துப் படிக்கவும், வீட்டுக்கு எடுத்துச் சென்று படித்து முடித்து திரும்பவும் ஒப்படைக்கும் முறை அமல்படுத்தப்பட்டது. இதை 'தமிழ்நாடு புத்தகப் பிரசார சங்கம்' முன்னெடுத்தது. இதுவே பொது நூலகத்தின் முதல் படியாகும்.

தேசிய நூலக வார விழாவின் போது, பள்ளி, கல்லூரி, மாணவர்களுக்கு நூலகம் சார்ந்த பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு இப்போது பள்ளி, கல்லூரி நூலகங்களும், பொது நூலகங்களும் அறிவுத் தேடலுக்கு விருந்து படைக்கின்றன.

இந்தியா போன்ற ஒரு பெரும் நாட்டில் பெரும்பாலான மக்கள் கிராமப்புறங்களில் வசிக்கும் சூழலில் கல்வியறிவு பரவுவதற்கு நூலக இயக்ககம் ஆற்றும் பங்கு மிகவும் இன்றியமையாததாகும். வெறும் எழுத்தறிவுக் கல்வி மட்டுமின்றி, கிராம அளவிலான அந்தந்த சமுதாய மக்களின் பண்பாடு, அரசியல் உள்பட பல துறைகளிலும் நூலகம் பங்களிக்க முடியும்.

தமிழ்நாட்டில் நூலகத் துறைக்காகவே ஒரு மாத இதழை ஏற்படுத்தி நடத்தியவர் குயிலன். 'நூலகம்' என்பது அவர் நடத்திய இதழாகும். இந்த இதழ் ஐந்தாண்டுகள் கழித்து பொருளாதாரக் காரணங்களால் நிறுத்தும் நிலை ஏற்பட்ட போது, 'வாசகர் வட்டம்' லட்சுமி கிருஷ்ணமூர்த்தி மேலும் இரண்டாண்டுகள் தொடர்ந்து வெளியிட்டார்.

தமிழில் ஆண்டுதோறும் பதிப்பகங்கள் வெளியிடும் நூல்களின் விவரங்கள் அடங்கிய நூல் தொகுப்புகளை சென்னை கன்னிமாரா நூலகம் வெளியிட்டு வந்தது. இந்த 20 ஆண்டுகளாக இந்தத் தொகுப்புப் பணி தடைபட்டுள்ளது. 1980-ஆம் ஆண்டுக்குப் பிறகு வெளியான நூல்களின் விவரங்களை அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் நூல் தொகுப்பு வெளியிடப்பட்டால் ஆய்வாளர்கள், மாணவர்கள், வாசகர்கள் என அனைத்துத் தரப்பினரும் பயன்படக்கூடிய வகையில் அமையும். பெரிய மற்றும் சிறிய நகரத்திலிருந்தும், கிராமத்திலிருந்தும் தமிழில் வெளியான புத்தகங்கள் குறித்து முழுமையான விவரங்களை ஒரு வாசகரால் பெற முடியும்.

தமிழில் வெளியாகும் புதுப் புத்தகங்களின் பிரதிகளை கொல்கத்தா தேசிய நூலகத்துக்கும், சென்னை கன்னிமாரா நூலகத்துக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என்பது கட்டாயமாக பின்பற்ற வேண்டிய நடைமுறையாகும். அவ்வாறு அனுப்பப்பட்டதற்கான சான்றுகளையும் இணைத்துத்தான் நூலக ஆணைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ஆனால், இந்த நடைமுறை சரிவர பின்பற்றப்படுவதில்லை என்றே தெரிகிறது. கன்னிமாரா நூலகத்துக்குப் புத்தகம் பிரதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதா என்று விண்ணப்பத்தில் கேட்கப்படும் கேள்விக்கு, 'ஆம்' என்று பதில் அளித்தால் போதுமானது. அதற்கான சான்றுகள் இணைக்கப்பட்டுள்ளனவா என்று சரிபார்க்கப்பட வேண்டும்.

கன்னிமாரா நூலகத்திலும் சரி, கொல்கத்தா தேசிய நூலகத்திலும் சரி, அவ்வாறு அனுப்பப்படுகிற நூல்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்படுவதும் இல்லை என்று தெரிகிறது. நூலக ஆணை வழங்கும் போது மட்டுமல்ல, தமிழக அரசு சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் போதுகூட, பரிசுக்குரிய நூல் கன்னிமாரா மற்றும் தேசிய நூலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கப்பட வேண்டும்.

இல்லையானால் தமிழக அரசின் பரிசு பெற்ற புத்தகங்களும்கூட நூலகங்களில் ஒரு பிரதிகூட இல்லாமல் போகும் நிலை ஏற்படும். இது நூலகத் துறைக்கு மாபெரும் இழப்பாகும். இந்த இழப்பை எதிர்காலத்தில் ஈடுகட்ட இயலாது என்று நூலக ஞானி பேராசிரியர் பா.பெருமாள் கருதுகிறார்.

ஆண்டுதோறும் தமிழ்மொழியில் ஒவ்வொரு துறை சார்ந்தும் வெளியிடப்பட்டுள்ள புத்தகங்கள் குறித்தும், அவற்றின் தலைப்பு, ஆசிரியர் மற்றும் புத்தக விவரங்கள் என அனைத்தையும் நூலகத் துறையால் எளிதாகத் திரட்ட முடியும். இந்த விவரங்கள் ஆண்டுதோறும் தவறாமல் தொகுக்கப்பட்டு தமிழகத்தில் உள்ள அரசு நூலகங்களுக்கு அனுப்பப்பட வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அரசு நூலகங்கள் மட்டும் இல்லாமல் பள்ளி, கல்லூரி மற்றும் ஆய்வு நூலகங்கள் அனைத்துக்கும் அனுப்பப்பட வேண்டும். தமிழில் புத்தக விற்பனையைப் பொருத்தவரை சராசரியாக ஆயிரம் பிரதிகளே அச்சடிக்கப்படும் நிலையில் கால ஓட்டத்தில் பல புத்தகங்கள் வந்த சுவடு தெரியாமல் மறைந்து போவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன.

உலகமெங்கும் அறிவுலகம் நூலகங்களைத் தேடியே அலைகிறது. இந்தத் தேடுதல் பள்ளியிலிருந்து தொடங்க வேண்டும். தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி நூலகங்கள் கவனிக்கப்படாமல் கிடக்கின்றன. ஓய்வுபெற்ற நூலகர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. உலகப் புகழ்பெற்ற கன்னிமாரா தேசிய நூலகத்திலேயே நூலகர் பணியிடம் காலியாகவே இருக்கிறது.

ஞானக் கருவூலங்களான புதிய நூலகங்கள் கட்டப்படுவது வரவேற்கத்தக்கது. அதே நேரம் தொன்றுதொட்டு இருந்து வரும் பள்ளி, கல்லூரி நூலகங்களையும் புதுப்பித்து, புதிய நூலகர்களையும் நியமிக்க வேண்டும். நூலக வளர்ச்சியில்தான் ஒரு நாட்டின் கல்வி வளர்ச்சியும், அறிவு வளர்ச்சியும் அடங்கியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.