திரையில் விரியும் உலகம்
அறிவியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசாரம், அரசியல் எனப் பல்வேறு துறைகளில் தொலைக்காட்சி ஏற்படுத்தியுள்ள தாக்கம் அளப்பரியது.

தொலைக்காட்சி - கோப்புப்படம்
- முனைவர் இளங்கோ கட்டிமுத்து
அறிவியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசாரம், அரசியல் எனப் பல்வேறு துறைகளில் தொலைக்காட்சி ஏற்படுத்தியுள்ள தாக்கம் அளப்பரியது.
தொலைக்காட்சியின் இந்தப் பன்முகப் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 21-ஆம் தேதி உலகத் தொலைக்காட்சி தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. தொலைக்காட்சியின் வளர்ச்சியில் இரு விஞ்ஞானிகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் லோகி பெயர்ட் இயந்திரவியல் தொலைக்காட்சியின் முன்னோடி ஆவார்.
1925-ஆம் ஆண்டு நகரும் உருவங்களை ஒளிபரப்பிக் காட்டினார். தொடர்ந்து 26.01.1926 அன்று லண்டனில் செயல்படும் தொலைக்காட்சி அமைப்பின் முதல் பொது செயல்விளக்கத்தை அளித்தார்; இதனால், அவர் 'தொலைக்காட்சியின் தந்தை' என்று அழைக்கப்படுகிறார்.
அமெரிக்காவைச் சேர்ந்த பைலோ டெய்லர் ஃபார்ன்ஸ்வொர்த் மின்னணுத் தொலைக்காட்சியின் முன்னோடிகளில் முக்கியமானவர். 07.09.1927 அன்று தனது மின்னணுத் தொலைக்காட்சி அமைப்பின் மூலம் படங்களை வெற்றிகரமாக ஒளிபரப்பிக் காட்டினார்.
தொடக்கத்தில் கருப்பு வெள்ளைத் திரையில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகள், தொழில்நுட்ப வளர்ச்சியால் வண்ணத் திரைகளாக மாறின. பின்னர் பெரிய திரைகள், துல்லியமான படங்கள், ஒலி அமைப்புகள், எண்மத் தொழில்நுட்பம் எனப் பல பரிணாமங்களை அடைந்தன. இன்று இணையத்துடன் இணைந்த ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் வரை அதன் வளர்ச்சி தொடர்கிறது. 1.07.1941 அன்று அமெரிக்காவின் நியூயார்க்கில் தொலைக்காட்சியில் முதல் விளம்பரம் ஒளிபரப்பப்பட்டது.
இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு 15.09.1959 அன்று தில்லியில் சோதனை முறையில் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் கல்வி மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
1975-76-ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பின் ஏடிஎஸ்-6 செயற்கைக்கோளின் உதவியுடன் நடத்திய செயற்கைக்கோள் பயிற்றுவிப்புத் தொலைக்காட்சிச் சோதனை இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும்.
ஓராண்டு காலம் நடைபெற்ற இந்தத் திட்டம், ஆறு மாநிலங்களில் உள்ள 20 மாவட்டங்களைச் சேர்ந்த 2,400-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சென்றடைந்தது. விவசாயம், சுகாதாரம், கல்வி, குடும்ப நலம் போன்ற பயனுள்ள தகவல்கள் கிராம மக்களுக்குத் தொலைக்காட்சி மூலம் வழங்கப்பட்டன.
செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தொலைதூரக் கிராமங்களுக்குக் கல்வி மற்றும் விழிப்புணர்வுத் தகவல்களைக் கொண்டு சேர்க்க முடியும் என்பதை இந்தியா உலகுக்கு எடுத்துக்காட்டியது.
1976-ஆம் ஆண்டு தொலைக்காட்சி, அகில இந்திய வானொலியிலிருந்து பிரிக்கப்பட்டு தனி நிறுவனமாகச் செயல்படத் தொடங்கியது. தொடர்ந்து செயற்கைக்கோள் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஒளிபரப்புகள் விரிவடைந்தன. வண்ண ஒளிபரப்பு, தேசிய ஒளிபரப்பு, இரண்டாவது அலைவரிசை எனப் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. 1990-களுக்குப் பிறகு தனியார் தொலைக்காட்சி சேனல்கள் அறிமுகமாகின.
நிலவில் மனிதன் முதன்முதலில் காலடி வைத்த நிகழ்வை 1969-ஆம் ஆண்டு உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தொலைக்காட்சியில் கண்டுகளித்தனர். இன்று விண்வெளி ஆராய்ச்சிகள், சந்திரயான், செவ்வாய் ஆய்வு, ககன்யான் போன்ற அறிவியல் திட்டங்கள் குறித்த தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் தொலைக்காட்சி முக்கியப் பங்காற்றுகிறது.
ஒலிம்பிக், உலகக் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் போன்ற சர்வதேச நிகழ்வுகளை வீட்டிலிருந்தே நேரலையில் காண முடிகிறது.
இயற்கைப் பேரிடர்கள், புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற நெருக்கடியான சூழல்களில் மக்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகக் கொண்டுசேர்ப்பதில் தொலைக்காட்சி முக்கியப் பங்கு வகிக்கிறது. வானிலை எச்சரிக்கைகள், பாதுகாப்பு அறிவுரைகள், மீட்புப் பணிகள், நிவாரண உதவிகள் பற்றிய தகவல்கள் மூலம் மக்களுக்கு வழிகாட்டுகிறது.
எந்தவொரு அறிவியல் கண்டுபிடிப்புக்கும் நன்மைகளும் சவால்களும் இருப்பது இயல்பு. தொலைக்காட்சியும் அதற்கு விதிவிலக்கல்ல. வணிக நோக்கத்துக்காக நிகழ்ச்சிகளின் தரம் குறைவது, தேவையற்ற விளம்பரங்கள், உண்மைக்குப் புறம்பான செய்திகள், சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கும் விவாதங்கள் போன்றவை கவலைக்குரியவை.
தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு எவ்வளவு பொறுப்பு இருக்கிறதோ, அதே அளவுக்கு பார்வையாளர்களுக்கும் பொறுப்பு இருக்கிறது. குழந்தைகள் பார்க்கும் நிகழ்ச்சிகளில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் பொழுதுபோக்குக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், அறிவையும் திறமையையும் வளர்க்கும் நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஒரு சிறிய கருப்பு-வெள்ளைத் திரையில் தொடங்கிய தொலைக்காட்சியின் பயணம், இன்று உலகையே நம் உள்ளங்கைக்குக் கொண்டுவரும் அளவுக்கு வளர்ந்துள்ளது. ஒலியை மட்டும் வானொலி வழங்கியது; தொலைக்காட்சி ஒலியுடன் காட்சியையும் வழங்கியது. இன்று இணையத் தொழில்நுட்பத்துடன் இணைந்து உலகின் பல்வேறு நிகழ்வுகளை உடனுக்குடன் நம்மிடம் கொண்டுசேர்க்கிறது.
அறிவியலின் இந்த அற்புதப் படைப்பை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம்? என்பதில்தான் அதன் உண்மையான பலன் அடங்கியுள்ளது. தொலைக்காட்சி ஒரு சாதனம்; அதன் பயன்பாட்டைத் தீர்மானிப்பது நமது சிந்தனை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

