
முகவரியில்லா மண்டபத்தில் முதல்வர்கள்!
திராவிட கட்டடக் கலையின் மேன்மையைப் பறைசாற்றும் விதத்தில் நவீன தலைமைச் செயலகமும் சட்டப்பேரவையும் அமைக்கப்படுவது காலத்தின் கட்டாயம்...
தமிழ்நாடு சட்டப்பேரவை.
நான் சட்டப்பேரவை உறுப்பினராக 1998-இல் சட்டப்பேரவையில் 'முகவரியில்லா மண்டபத்தின் முதல்வர் அவர்களே' என்று அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியை நோக்கிக் கூறினேன். அவை முன்னவர் க.அன்பழகன் 'என்ன சொல்ல வருகிறீர்கள், புரியவில்லையே' என்பதுபோல் புருவம் உயர்த்தினார்.
அரசமைப்புச் சட்டத்தில் மூன்று பிரிவுகள் உள்ளன. சட்டத் துறை, நீதித் துறை, நிர்வாகத் துறை. இவற்றுக்கென்று ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனி தலைமையகங்கள், பெயர்ப் பலகை உண்டு. உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது என்றால், அந்த உயர்நீதிமன்ற கட்டடத்தையும், பெயர்ப் பலகையையும் காட்டுவார்கள். அதுபோல், அரசு அறிவிப்பு என்றால் தலைமைச் செயலகம், தமிழ்நாடு அல்லது அந்த மாநிலத்தின் பெயர் உள்ள படத்தைக் காட்டுவார்கள். சட்டப்பேரவை செய்தி என்றால்,தமிழ்நாட்டில் எதைக் காட்டுவது?
பிற மாநிலங்களில் விதான சௌதா கர்நாடகம், விதான் சபா குஜராத், நியாமா சபா கேரளம் என்ற பெயர்ப் பலகையுடன் கட்டடத்தையும் காட்டுவார்கள். தமிழ்நாட்டில் சட்டப்பேரவை செய்திகளுக்கும், தமிழ்நாடு தலைமைச் செயலகம் என்ற பெயர்ப் பலகைதான் 1935-லிருந்து ஊடகங்களில் காட்டப்பட்டு வருகிறது. தமிழக சட்டப்பேரவைக்கு என்று தனியாக ஒரு கட்டடத்தின் தேவை இன்றுவரை தொடர்கிறது.
435 ஆண்டுகளுக்கு முன்பு, ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட வணிகத் தளமான புனித ஜார்ஜ் கோட்டை, பிற்காலத்தில் மதராஸ் மாகாணத்தினுடைய தலைமை நிர்வாக இடமாக மாறியது. 107 ஏக்கர் கொண்ட புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் தலைமைச் செயலகத்துக்கு என்று வெறும் 4 ஏக்கர் மட்டுமே ஒதுக்கப்பட்டது. மீதி 103 ஏக்கர் இடம் ராணுவத்துக்கும், தொல்லியல் துறைக்கும் ஒதுக்கப்பட்டது.
தலைமைச் செயலகத்துக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை என்ற கட்டடத்தின் ஒரு சிறு பகுதியில் தான் தமிழ்நாடு சட்டப்பேரவை அமைந்துள்ளது. அதற்கான பெயர்ப் பலகை, கோட்டையின் உள்பகுதியில் பேரவையின் நுழைவு வாயிலில் மட்டுமே உள்ளது.
ஒதுக்கப்பட்ட 4 ஏக்கரிலேயே, சுதந்திரம் பெற்று நாம் 80 ஆண்டுகளைக் கழித்துவிட்டோம். அந்த சிறிய இடத்தில் சட்டப்பேரவை, முதல்வர் அறை, தலைமைச் செயலாளர் அறை, குழு கூடும் அறை, அமைச்சர்கள் அறை, கூட்டரங்கு, தமிழ்நாட்டினுடைய 43 துறைகளின் செயலாளர்கள் மற்றும் அதன் சார்பு அலுவலர்கள் அறை, உணவகம், ஓய்வறை, வாகன நிறுத்துமிடம், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்துமே அமைந்துள்ளன.
2001-இல் ஜெ.ஜெயலலிதா இரண்டாவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றபோது, ராணுவ பிரிவுக்கும், தலைமைச் செயலகத்துக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக, புனித ஜார்ஜ் கோட்டைக்கு எதிரே உள்ள சாலையோர பூங்காவில், வாகன நிறுத்துமிடம் அனுமதிக்கப்பட்டது. அதனால்தான், அப்போதைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா புதிய தலைமைச் செயலகத்தை கட்டவேண்டும் என்று முடிவு செய்து மாமல்லபுரத்தைத் தேர்வு செய்தார்.
அது மிகவும் தொலைவு என்று பல்வேறு தரப்பினர் சொன்ன காரணத்தால், அதை மாற்றி 2003-இல் மெரீனா வளாகத்தில் அமைந்துள்ள, 17 ஏக்கர் பரப்பளவு கொண்ட ராணி மேரி கல்லூரியைத் தேர்வு செய்தார். அதை திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பிற இயக்கங்கள் கடுமையாக எதிர்த்த காரணத்தால், கோட்டூர்புரம் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டது. அதற்கும் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பிற இயக்கங்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன. திட்டமிடலின்போதே பதவிக்காலம் முடிந்ததால், அதுவும் கைவிடப்பட்டது.
அதன்பிறகு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தது, அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் வளாகத்தில் ஒரு பகுதியில் தலைமைச் செயலகமும், சட்டப்பேரவையும் கட்ட முற்பட்டது 2006-இல் கருணாநிதி தலைமையில் அமைந்த திமுக ஆட்சி. ஆட்சி முடியும் தருவாயில், பணிகள் முழுமையாக முடியாத நிலையிலும், கட்டடத்தைத் திறந்து வைத்தார் முதல்வர் கருணாநிதி. சில நாள்கள், அங்கு தலைமைச் செயலகமும், சட்டப்பேரவையும் நடைபெற்றன. சட்டப்பேரவைக்காக பெயர்ப் பலகையும் வைக்கப்பட்டது.
2011-இல் ஆட்சி மாறியது, மீண்டும் ஜெயலலிதா முதல்வர் ஆனார். ஓமந்தூரார் வளாகத்திலுள்ள புதிய சட்டப்பேரவை - தலைமைச் செயலக கட்டடத்தை தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை என விரிவாக்கி மிகப் பெரிய மருத்துவமனையை உருவாக்கிவிட்டார். 4 மாதங்களே இருந்த தமிழக சட்டப்பேரவை என்ற பெயர்ப் பலகையும் போய்விட்டது.
அதன்பிறகு, 10 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுக, புதிய தலைமைச் செயலகம் கட்ட எந்த முயற்சியும் எடுக்கவில்லை. 2021-லிருந்து 2026 வரை ஆட்சி செய்த திமுகவும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தற்போது பொறுப்பேற்றிருக்கும் த.வெ.க. அரசு, பட்டினப்பாக்கத்தை தேர்வு செய்து புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என அறிவித்துள்ளது. கட்டடம் கட்டுவதற்கு முன்பான, ஒன்றுக்கு பலமுறை ஆய்வு செய்ய வேண்டும். அதற்காக, தாமதப்படுத்திவிடக்கூடாது. புதிய தலைமைச் செயலகமும், சட்டப்பேரவையும் அவசியம். ஒரு மாநிலத்தின் அல்லது ஒரு நாட்டின் தலைமையகத்தை வைத்துத்தான் அந்த நாட்டுக்கும், அல்லது அந்த மாநிலத்துக்கும் கெüரவம் ஏற்படும்.
இந்தியாவின் நிர்வாக அடையாளமாக பழைய நாடாளுமன்ற கட்டடம் இருந்து வந்த நிலையில், தற்போது புதிய நாடாளுமன்ற வளாகம் பெருமை சேர்க்கிறது. தமிழகத்துக்கும் அதுபோல திராவிட கட்டடக் கலையின் மேன்மையைப் பறைசாற்றும் விதத்தில் நவீன தலைமைச் செயலகமும் சட்டப்பேரவையும் அமைக்கப்படுவது காலத்தின் கட்டாயம். காலம் கடந்து தவெக ஆட்சியின் பெருமையை அது பறைசாற்றும்.
இடத்தைப் பொருத்தவரை ராணி மேரி கல்லூரியும் சிறந்த தேர்வுதான்; பட்டினப்பாக்கமும் சிறந்த தேர்வுதான். இதைவிட, இந்திய அரசிடம் புனித ஜார்ஜ் கோட்டையில் கூடுதலாக 20 ஏக்கரை கேட்டுப் பெற முடியும். நிலப் பரிமாற்ற கொள்கை (லேன்ட் டிரான்ஸ்ஃபர் பாலிஸி) அல்லது சம மதிப்புள்ள நிலப்பரிமாற்றம் (ஈக்வல் வேல்யூ லேண்ட் எக்ஸ்சேஞ்ச்), சந்தை விலை செலுத்துதல் (பேமன்ட் ஆஃப் மார்க்கெட் வேல்யூ) ஆகிய முறையில் கூடுதல் நிலத்தை தமிழக அரசு கேட்டுப்பெற முடியும்.
தமிழ்நாடு அரசின் புனித ஜார்ஜ் கோட்டை மிகப் பெரியது; அது 107 ஏக்கரைக் கொண்டது. இதில் கோட்டை சுவருக்கு உட்பட்ட பகுதி 42 ஏக்கரை மட்டுமே கொண்டது. எஞ்சிய பகுதிகள் கோட்டைக்கு வெளியில் உள்ளன; அதில் 30 ஏக்கரில், கல்லரங்கு, ஃபிளாக் ஸ்டாஃப் சாலை போன்ற இணைப்புச் சாலைகள் மற்றும் தொல்லியல் துறை பராமரிக்கும் வரலாற்றுச் சுவர்கள் உள்ளன.
மீதமுள்ள சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் கட்டடங்கள் ஏதுமில்லை. புல்வெளிகளாகவும், திறந்த வெளிகளாகவும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அந்த புல்வெளியைப் பாதுகாக்க 10 ஏக்கரை ஒதுக்கிவிட்டு, புனித ஜார்ஜ் கோட்டைக்கு தென்புறமும், பின்புறமுமாக 20 ஏக்கர் நிலத்தை தலைமைச் செயலகத்துக்கு கேட்டுப்பெறுவது மிகச் சிறப்பாக இருக்கும்.
அது மட்டுமின்றி, புனித ஜார்ஜ் கோட்டை மொத்த வளாகத்துக்கு தெற்கிலிருந்து போர் நினைவகம் வரை, ராஜாஜி சாலை - காமராஜ் சாலைக்கு மேற்கு பகுதியில் சாலை முகப்பாக சுமார் முக்கால் கி.மீ. நீளத்துக்கு ராணுவத்துக்குச் சொந்தமான இடம் உள்ளது; அந்த இடத்தின் பரப்பளவு நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர்கள் இருக்கலாம்.
அந்த இடத்தில் நேவல் ஆபீஸர்ஸ் மெஸ், ராணுவ ஸ்டேஷன் ஹெட்குவார்ட்டர்ஸ் ஆகிய சிறிய கட்டடங்கள் உள்ளன. அந்த இடத்தைக் கேட்டுப் பெறலாம். தீவுத் திடல் 135 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. அது ராணுவத்துக்குச் சொந்தமானது. தற்போது ராணுவப் பயன்பாடு இல்லாத காரணத்தால் தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ராணுவத்துக்கு சுமார் 3,000 ஏக்கருக்கும் அதிகமாக இடம் உள்ளது. இதில், 50 சதவீத இடத்தை மட்டும் ராணுவம் பயன்படுத்துகிறது. ஆகவே, மத்திய அரசு நினைத்தால் அந்த இடங்களை வழங்க முடியும். அங்கு கட்டினால் யாரும் எதிர்க்கவும் மாட்டார்கள், ஏனெனில், பாரிமுனையிலிருந்து கலங்கரை விளக்கம் வரை உள்ள மெரீனா சாலை 6.8 கி.மீ. நீளமுடையது. இங்கு மக்கள் குடியிருப்பே கிடையாது.
கோட்டையின் வெளி புல்வெளி மண்டலம் அல்லது அந்த எல்லையிலிருந்து போர் மெமோரியல் வரை உள்ள முக்கால் கி.மீ. பகுதியில் 30 ஏக்கரை மத்திய அரசின் மூலம் தமிழக அரசு பெற்று தமிழக தலைமைச் செயலக - சட்டப்பேரவை கட்டடங்களைக் கட்டினால் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
கட்டுரையாளர்: முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





