எதிர்காலத்துக்கான புது நம்பிக்கை
இலங்கையில் உள்ளாட்சிகள் பற்றிய நடுப்பக்கக் கட்டுரை....

இலங்கை - கோப்புப்படம்.
அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் அழைப்பின் பேரில், கடந்த ஆகஸ்ட் 7 யாழ்ப்பாணத்துக்குச் சென்றேன். அங்கு முதல் நிகழ்வாக மூன்று பிரதேச சபைகளின் (உள்ளாட்சி) உறுப்பினர்கள் மத்தியில் உரையாட அழைத்தனர். அது கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி நடைபெற்றது.
அதற்கு ஒரு பிரதேச சபையின் தலைவர் தலைமை வகித்து இலங்கையில் உள்ளாட்சிகள் எப்படி செயல்படுகின்றன; அவற்றிலுள்ள சிக்கல்கள் என்னென்ன என்பதை தன் தலைமை உரையில் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து என்னைக் கருத்துரையாற்ற அழைத்தனர். பொதுவாக எந்தச் செயலுக்கும் ஒரு முறைமை உண்டு. அந்த வகையில், ஒரு செயலைச் செய்ய அதன் ஒட்டுமொத்த புரிதலை ஏற்படுத்திக் கொண்டு, முறைமையுடன், நேர்மையாக ஒவ்வொருவரும் செயல்பட்டால், அந்தச் செயலின் ஒட்டுமொத்த விளைவை நாம் ஏற்படுத்த முடியும்.
பொதுத்தளத்தில் மக்களின் பிரதிநிதிகளாக செயல்படும்போது, புதிய தலைமைத்துவம் கொண்டு செயல்பட வேண்டும். அது யாரோ ஆணையிட்டு அதை நிறைவேற்றுவது அல்ல. அப்படி உத்தரவை நிறைவேற்றினால் அவர்கள் பணியாளர்கள் ஊதியத்துக்குச் செயல்படுபவர்கள். தலைவர்களாக இருக்க முதலில் நமக்கு ஒரு கனவும், கண்ணோட்டமும், கடப்பாடும், நேர்மையும், மக்களின் மீது நம்பிக்கையும் மதிப்பும் இருக்க வேண்டும். இதேபோல், மக்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நாம் எங்கு இருந்தாலும் தவிர்க்க இயலாத மனிதர்கள்.
அனைத்துத் தரப்பு மக்களும் கண்ணியமான வாழ்க்கையை நடத்தத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதை அடிப்படையாக வைத்துத்தான் 80 நாடுகளில் உள்ளாட்சியை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற முன்னெடுப்பைச் செய்தனர். இந்த புதிய உள்ளாட்சி இயக்கங்கள் மக்களை அதிகாரப்படுத்தி, அவர்களை தங்கள் மேம்பாட்டுப் பணிகளில் பங்கேற்க வைத்து ஒதுக்கப்பட்டவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும், விளிம்புநிலை மக்களுக்கும் மேம்பாட்டைக் கொண்டுவர வேண்டும் என்பதை மையப்படுத்தித்தான் வந்தன.
இந்த புதிய உள்ளாட்சிகள் மக்களை, குறிப்பாக விளிம்புநிலை மக்களை ஆளுகைக்கும், மேம்பாட்டுச் செயல்பாடுகளில் பங்காளிகளாக பங்கேற்க வைக்க மக்கள் தயாரிப்பு பணியைத்தான் செய்ய வேண்டும். அதிகாரங்களை பொறுப்பாக எடுத்துச் செயலாற்றத் தேவையான தெளிவையும் புரிதலையும் ஏற்படுத்திக் கொண்டு மக்கள் தயாரிப்புப் பணியைச் செய்ய வேண்டும். மக்களை மேம்பாட்டுச் செயல்பாடுகளுக்கு அரசுடன் கைகோத்துச் செயல்படத் தயார் செய்வதற்கான புரிதலை நாம் முதலில் ஏற்படுத்திக்கொண்டு செயல்பட வேண்டும் என்று கூறி என் உரையை நிறைவு செய்தேன்.
மறுநாள் காலை அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்தில் நிறைவுரையாற்ற அழைத்திருந்தனர். எனது உரையை, மகாத்மா காந்தி இலங்கைத் தமிழர்களுக்கு கூறிய மூன்று முக்கிய கருத்துக்களை வைத்து ஆரம்பித்தேன். மகாத்மா காந்தி, இன்று வாழ்ந்திருந்தால் இன்றைய சூழலில் கருத்துகளில் எவ்வளவு வளர்ந்திருப்பார், அந்த இடத்துக்கு மகாத்மா காந்தியைக் கொண்டு வந்து அந்த புதுமைக் காந்தியத்தை இளைஞர்கள் கையில் ஒப்படையுங்கள். காந்தியை இலங்கைக்கு அழைத்தது இளைஞர்கள். அவர்கள்தான் அவர் இட்ட சவாலான பணியாகிய நன்கொடை ஒரு லட்சத்தைத் திரட்டி கதர் வேலைக்குத் தந்தனர். இலங்கைவாழ் மக்களுக்கு மூன்று செயல் திட்டங்களை மகாத்மா காந்தி தந்தார்.
இன ஒற்றுமை, மத ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு என்ற மூன்று பணிகளைத் தந்து இலங்கை மக்களிடம் ஒற்றுமை பேணுங்கள் எனக் கூறினார். அந்தக் கருத்துகளுக்கு நாம் செவி மடுத்தோமா என்பதுதான் கேள்வி. அப்படி நம் மக்கள் தலைவர்கள் செவி மடுத்து இருந்தால் இன்று சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும்தான் மேம்பாட்டில் போட்டியாக இருந்திருக்கும்.
இன்று நாம் ஒரு தடுமாற்றத்தில் இருக்கிறோம். முப்பது ஆண்டுகால நிலையற்ற தன்மையில் வாழ்ந்த மக்களின் உளவியலில் ஒரு புது நம்பிக்கை தரவேண்டும். அதற்கு மிக முக்கியமானது அமைதிக்கான, மேம்பாட்டுக்கான செயல்பாடுகள். காந்தியம் எப்போதும் அடுத்த எதிர்காலத்துக்கு அழைத்துச் செல்லும் தன்மை கொண்டது. காந்தியம் எல்லோருக்குமானது, எளிமையானது, எதிர்காலத்திற்கானது, மக்களை இணைப்பது. ஆனால், நம் அரசியல் மக்களைப் பிரிப்பது. இங்குதான் காந்தியர்கள் அரசியல்வாதிகளை தோற்கடிக்க வேண்டும். அதைச் செய்ய காந்தியர்களால் இயலவில்லை.
காந்தியர்கள் தோற்கலாம், தோற்றிருக்கலாம், காந்தியம் ஒருபோதும் தோற்காது.
காந்தியத்தை பின்பற்ற, செயல்பட வைக்க அரசின் உத்தரவு தேவை இல்லை, புதிய கட்டடங்கள் தேவை இல்லை. நாம் ஒவ்வொருவரும் காந்தியின் வாழ்வியல் நெறிகளைக் கடைப்பிடித்து வாழ்வதன் மூலம் நாம் அத்தனை அடிமைத்தனத்திலிருந்தும் விடுதலை பெற்று மக்களுக்கு வழிகாட்டலாம்.
காந்தியத்தை நவீனப்படுத்தும்போது, அதன் அடிப்படைகளை பின்புலத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். இதை சமூக கண்ணோட்டம் கொண்ட இளைஞர்களால் மிக எளிதாக செய்ய முடியும். காந்திய நிறுவனங்கள், அமைப்புகள் அனைத்தும் பல கனவுகளுடன் தேங்கி நிற்கின்றன. அதைப் போக்க புதுமைக் காந்தியர்களை உருவாக்க வேண்டும் என்று கூறி என் உரையை நிறைவு செய்தேன்.
அன்று மாலை நடைபெற்ற அடுத்த கலந்துரையாடலில், புதிய மக்களாட்சி எழுவது குறித்தும், அதன் தன்மைகள் குறித்தும் எடுத்துக் கூறி இன்றைய மக்களாட்சியின் தேக்க நிலைக்கு மாற்று கண்டுபிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினேன். மக்களாட்சி என்பது ஒரு ஆட்சி முறைதான். ஆனால், அது அத்துடன் நின்று விடுவதில்லை. அது மக்களை இணைந்து வாழும் பண்புள்ளவர்களாக, கண்ணியவான்களாக, மேம்பட்டவர்களாக மாற்றும் சக்தி கொண்ட அமைப்பு முறை. அப்படி அதைச் செயல்பட வைக்க மக்களாட்சிக்கான பண்புகள் மக்களிடம் வளர்த்தெடுக்கப்படல் வேண்டும். ஆனால், மாறாக அது ஓர் ஆட்சியாக மட்டுமே இருக்கிறது. அதுவும் அந்த ஆட்சியில் மக்களாட்சிக்கான விழுமியங்களை இழந்து தேர்தல் என்பதை மட்டும் வைத்து நடத்தும் ஒரு சூதாட்டமாக இருக்கிறது.
அதிகாரத்தைப் பிடிக்க எதையும் செய்து, அதிகாரத்தைப் பிடித்து அதிகாரத்திலும் சட்டப்படி ஆட்சி என்பதை ஆளும் வர்க்கம் கூறுவது ஆட்சி என்ற நிலைக்குக் கொண்டு வந்து ஒட்டுமொத்த மக்களாட்சியை சிதிலமடைய வைத்து விட்டன அரசியல் கட்சிகள். அதன் விளைவு இந்த தாராளமய மக்களாட்சி தோல்வியைத் தழுவுகிறது.
இன்றைய சூழலில் உலகம் முழுவதும் அரசின் மீதும், பொது அமைப்புகள் மீதும் மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர் என்பதை ஸ்வீடனில் இயங்கி வரும் ஓர் ஆய்வு நிறுவனமான வி.டெம். என்ற அமைப்பு தெரிவிக்கிறது. அது மட்டுமல்ல, நாடாளுமன்றங்கள், சட்டப்பேரவைகள் அனைத்தும் மக்கள் நம்பிக்கையை இழந்து நிற்கின்றன. இந்தச் சூழலை மாற்றியமைக்க மக்கள் அமைப்புகளைக் கட்ட வேண்டும் என்று கூறி அந்த நிகழ்வில் என் உரையை முடித்தேன்.
அடுத்து, ஆகஸ்ட் 11-ஆம் தேதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வில் "பல்கலைக்கழகமும் சமுதாயமும்: காந்திய தத்துவார்த்த அடிப்படையிலான நோக்கு' என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையில் உயர் கல்வி சமுதாயம் உருவாக்கிக் கொள்ள வேண்டிய ஒன்று என்பதை தெளிவாக விளக்கியவர் மகாத்மா காந்தி. உயர் கல்வி நிறுவனங்கள் தன்னை நான்கு சுவர்களுக்குள் அடைத்துக் கொள்வதல்ல.
கல்வியில் மகாத்மா காந்தி ஒரு புரட்சியைச் செய்தார். இன்று கல்வி சந்தைக்கானதாக பிழைப்புத் தேட, பணம் சம்பாதிக்க தேவைப்படும் ஒரு கருவியாக மட்டுமே பார்க்கப்படுகிறது. உயர் கல்வி நிலையங்களில் பணியாற்றுவோர், கற்போர் அனைவருக்கும் ஒரு சமூகக் கடமை இருக்கிறது. தன்னை மேம்படுத்தி சமூகத்தையும் மேம்படுத்துவது. அந்தப் பணியை அரசாணை பெற்று செய்ய வேண்டும் என்று இல்லாமல் "என் சமூகம்' என் பொறுப்பு' என சமூகப் பணிகளில் நாம் ஈடுபட வேண்டும்.
நாம் வாழும் காலம் தியாக காலம் அல்ல, சந்தைக் காலம். அது சுயநலமாகத்தான் நம்மைச் சிந்திக்க வைக்கும்; புலன்களைக் கட்டுக்கடங்காமல் தூண்டிவிடும். அதிலிருந்து வெளியேற மகாத்மா காந்தி நமக்கு வழி காட்டுகிறார்.
நாம் நம் கல்வி நிறுவனங்களிலிருந்து நாம் பெற்ற புத்தக அறிவை, ஆற்றலை, நம்மிடம் இருக்கும் சக்தி கொண்டு சமூகத்துக்குக் கடத்த வேண்டும். அப்போது, மக்களிடமும் அறிவு இருக்கிறது, அது பட்டறிவு; அதைப் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் சமூகத்துக்குள் சென்று பணியாற்ற வேண்டும். சமூகத்தின் மேம்பாட்டுக்கு எந்த வகையில் செயல்பட முடியுமோ, அந்த வகைகளிலெல்லாம் சமூகத்துடன் கைகோத்துச் செயல்பட வேண்டும் எனக் கூறி உரையை நிறைவு செய்தேன்.
ஒட்டுமொத்தமாக இன்றைய இலங்கையில் புதிய அரசு புதிய சிந்தனைச் சூழலை உருவாக்கி இன ஒற்றுமையை மத ஒற்றுமையை வளர்க்க முனைகிறது. அதை முன்னெடுத்துச் செல்ல மக்களைத் தயார் செய்ய வேண்டிய பணி கற்போரிடமும், சமூகக் கண்ணோட்டம் கொண்ட மனிதர்களிடமும் உள்ளது. எனவே, புதிய சிந்தனைச் சூழலை உருவாக்கி, புதிய பாதைக்கு மக்களை அழைத்துச் செல்ல மக்கள் தயாரிப்பு தேவைப்படுகிறது. அதைத்தான் எல்லா இடங்களிலும் விதைத்து விட்டு புது நம்பிக்கையுடன் திரும்பினேன்.
கட்டுரையாளர்:
பேராசிரியர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

