தேவை 'மரியாதை'க்கு மரியாதை!
அரசு மரியாதைக்கு மரியாதை அளிக்கும் வகையில் அதற்கான தெளிவான வழிகாட்டுதல் நெறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டியது அவசியத்தைப் பற்றி...

அரசு மரியாதை.
அண்மையில் காலமான தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் தேவாவின் இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றன. தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றப் பிறகு இதுவரையில் 6 பிரபலங்களின் இறுதிச் சடங்கின்போது அரசு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.
தேவாவுக்கு முன்பு, திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, இயக்குநரும், நடிகருமான கே. பாக்கியராஜ், சாகித்ய அகாதெமி விருதுபெற்ற கவிஞர் புவியரசு, எழுத்தாளர் பூமணி, மூத்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா ஆகியோரின் இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றன.
இவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் சார்ந்த துறைகளில் சாதனை படைத்து புகழ்பெற்றவர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அரசு முழு மரியாதை என்பது, இறந்தவர் உடல் அல்லது சவப்பெட்டி மீது தேசியக்கொடி போர்த்தப்பட்டு, பலத்த பாதுகாப்போடு கூடிய ஒழுங்குடன் காவல் துறை அணிவகுப்புடன் உடல் எடுத்துச் செல்லப்பட்டு, 72 குண்டுகள் முழங்க துப்பாக்கி மரியாதை அளிக்கப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்படும் கடுமையான விதிமுறைகளுடன் கூடிய ஓர் அரசு நடைமுறையாகும்.
குறிப்பிட்ட நாள்கள் துக்கம் அனுசரிக்கும் வகையில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும். அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும். இறுதிச்சடங்கில் அமைச்சர்கள் மற்றும் உள்ளூரில் உள்ள அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரிகளும் பங்கேற்பர். நாட்டின் அரசமைப்புப் பதவிகளை வகிக்கக்கூடிய குடியரசுத் தலைவர், பிரதமர், முன்னாள் குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள், மாநில ஆளுநர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மக்களவைத் தலைவர், மாநில முதல்வர்கள் மற்றும் நாட்டின் உயரிய குடிமக்களுக்கான பாரத ரத்னா விருது பெற்றவர்கள் காலமானால், அவர்களின் இறுதிச் சடங்கின்போது இந்த முழு அரசு மரியாதை அளிக்கப்படுவது வழக்கமான நடைமுறைகளில் ஒன்று.
தமிழ்நாட்டில், கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கும் அரசு மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரையில் 798 பேர் அந்தப் பட்டியலில் உள்ளனர். ஆனால், அண்மைக் காலமாக இந்த முழு அரசு மரியாதை அளிப்பது என்பது ஆட்சியாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப விரிவுபடுத்தப்பட்டு மரியாதை பெறுவோரின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
மத்திய, மாநில அரசுகளின் விருப்பத்துக்கேற்ப, அரசமைப்புப் பதவிகள் வகிக்காத பல்துறை பிரபலங்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள் மற்றும் சமூக அந்தஸ்தை பெற்றவர்களின் இறுதிச் சடங்குகளுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டு வருவதில் ஆட்சேபம் இல்லை. அவர்களின் சேவைகள் மெச்சக்கூடியதாக இருக்கலாம்.
அவர்கள் மக்களின் மரியாதைக்குரியவர்களாகவும் இருக்கலாம். ஆனால், அனைவரின் இறுதிச் சடங்குக்கும் முழு அரசு மரியாதை அளிப்பது என்பது அதன் மதிப்பைக் குறைத்து வருவது மட்டுமல்லாது 'அரசு மரியாதை'யானது தனித்தன்மையையும் இழந்து வருகிறது என்பதை சுட்டிக்காட்டத் தோன்றுகிறது.
முழு அரசு மரியாதை அளிக்கப்படுவது என்பது மத்திய, மாநில அரசுகளின் விருப்புரிமை அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால் அரசுகள் தங்கள் சுயவிருப்பத்துக்கு ஏற்ப விதிமுறைகளை தளர்த்தி வருவது பெரும்பான்மையினரின் விருப்பத்தை நிறைவு செய்யவும், அதன்மூலம் அவர்களின் ஆதரவை (வாக்குகள்) பெறவும் மேற்கொள்ளப்படும் ஓர் உத்தியாகவே தெரிகிறது. அதனால்தான் விமர்சனங்கள் எழுகின்றன.
மாநில அமைச்சரவை அல்லது முதல்வர் அல்லது அவரது அலுவலகம் எடுக்கும் முடிவு எந்த அடிப்படையில் எடுக்கப்படுகிறது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. மகாராஷ்டிரத்தில் புகழ் பெற்ற கிரிக்கெட் பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேக்கர் 2019-இல் இறந்தபோது அவருக்கு அரசு மரியாதை அளிக்கப்படவில்லை.
முடிவெடுக்க போதிய காலஅவகாசம் இல்லை என்று அரசு பதில் அளித்தது. அவர், பத்ம விருதாளர் என்பதுடன் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு பயிற்சி அளித்தவர். திரைநட்சத்திரங்கள் ஸ்ரீதேவி, திலீப் குமார், நானா படேகர் ஆகியோருக்கு முழு அரசு மரியாதை அளிக்கும் முடிவை மகாராஷ்டிர அரசு உடனடியாக அறிவித்தது.
நடிகை ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதை அளிக்க உடனடியாக வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், பின்னர்தான் அரசு ஆணை வெளியிடப்பட்டதாகவும் அப்போது செய்திகள் வந்தன. கடந்த 2016-இல் காலமான சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதனின் அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கில், அவர் தெரிவித்திருந்த விருப்பத்தின்படி 'பொற்காலம்' தமிழ் திரைப்படத்தில் பாடகர் கிருஷ்ணராஜ் பாடிய 'தஞ்சாவூர் மண்ணு எடுத்து' பாடல் ஒலிக்கப்பட்டது.
பாடகர் கிருஷ்ணராஜ் கடந்த வியாழக்கிழமை காலமானார். வெள்ளிக்கிழமை நடைபெற்ற அவரது இறுதிச்சடங்கில் அரசு மரியாதை அளிக்கப்படவில்லை. அரசு மரியாதை அளிக்கப்படுவதில் சர்ச்சை உருவாவது போலவே அதைப் பெறும் ஆளுமைகளின் சேவை மற்றும் தனிமனித ஒழுக்கம் குறித்தும் சர்ச்சைகள் எழாமல் இல்லை. அதுவும்கூட அரசு மரியாதையின் மதிப்பைக் குறைக்கிறது.
நடிகர் நானா படேகர் இறந்த உடனே அவரது தனிமனித ஒழுக்கம் குறித்து சக நடிகை ஒருவர் புகார்கூறி சர்ச்சையை கிளப்பினார். தமிழ் திரை உலகிலும் இந்த சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. இனி வரும் காலங்களில் அரசு மரியாதைக்கு மரியாதை அளிக்கும் வகையில் அதற்கான தெளிவான வழிகாட்டுதல் நெறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டியது அவசியம். பல்துறை வித்தகர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து, இறந்தவர்களின் சேவை மற்றும் சமூகத்தில் அவருக்கான மரியாதை குறித்து ஆய்ந்தறிந்து அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் முதல்வரோ அல்லது அவரது அலுவலகமோ முடிவு எடுத்தால் சர்ச்சையை தவிர்ப்பதுடன் அரசு மரியாதைக்கும் மரியாதை ஏற்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

