அன்பில் மகேஸுக்கு நவ. 6 வரை நீதிமன்றக் காவல்‘அா்னாப் புயல்’ நாளை (அக். 28) கரையைக் கடக்கிறது!3-ஆவது டி20: இந்தியா - நியூஸி. இன்று மோதல்டிச. 20-இல் சிறப்பு டெட் தோ்வு!அயோடின் கலக்காத உப்பை உணவுப் பயன்பாட்டுக்கு விற்கக் கூடாது: அமைச்சா் அருண்ராஜ்

மாற்றம் தருமா வட்டி விகித உயர்வு?

ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்து விட்டது என்ற செய்தியைக் கேட்ட உடனேயே பதற்றம் தொற்றிக் கொள்கிறது...

பிரதிப் படம்

Updated On :

ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்து விட்டது என்ற செய்தியைக் கேட்ட உடனேயே பதற்றம் தொற்றிக் கொள்கிறது. வீட்டுக் கடன், கார் கடன் வட்டி விகிதம் அதிகரிக்குமா, தனி நபர் சுமை அதிகரிக்குமா, வங்கியில் பணம் வைத்திருப்பவர்களுக்கு என்ன பலன், வியாபாரிகளுக்கு என்ன பாதிப்பு, வீட்டு விலை என்னாகும், பண வீக்கம் குறையுமா, வேலைவாய்ப்பில் பாதிப்பு வருமா- இந்தக் கேள்விகள்தான் எல்லோர் மனதிலும் எழுந்திருக்கிறது.

இந்திய ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு குறுகிய கால நிதியை வழங்கும் போது பயன்படுத்தும் மிக முக்கியக் கொள்கை வட்டி விகிதம் ரெப்போ வட்டி ஆகும். ஆர்.பி.ஐ. ரெப்போ விகிதத்தை உயர்த்தும்போது பணத்தின் செலவு அதிகரிக்கும். அதன் தாக்கம் படிப்படியாக உயரும்.

ஆர்.பி.ஐ., வங்கிகள், கடன் வட்டி, மாதக் கடன் தவணைகள், மக்கள் செலவு, நிறுவன முதலீடு, பொருளாதாரம்- இப்படித்தான் அதன் பாதை செல்கிறது. ஆர்.பி.ஐ. மானிட்டரி பாலிசி ட்ரான்ஸ்மிஷன் மூலம் பாலிசி ரேட் மாற்றங்கள், வங்கிகளின் டெபாசிட் மற்றும் லெண்டிங் ரேட்ஸ் பாதிப்பு, குடும்பங்கள் மற்றும் நிறுவனங்களின் செலவு மற்றும் முதலீட்டு முடிவுகளை மாற்றும் என்று விளக்குகிறது.

சந்தையில் பணப்புழக்கம் அதிகமாகி பொருள்கள் மற்றும் சேவைகளின் விலை வேகமாக உயரும்போது மத்திய வங்கி பொருளாதாரத்தில் தேவை அதிகமாக சூடுபிடிப்பதைக் கட்டுப்படுத்த முயற்சி செய்கிறது. அப்போது வட்டி விகிதத்தை உயர்த்துவது ஒரு கருவியாகிறது. இவற்றை எளிய உதாரணத்தின்மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு குடும்பம் மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் செலவு செய்கிறது. அதே குடும்பத்துக்கு வட்டி குறைவாக இருக்கும்போது கடன் வாங்குவது எளிதாக இருக்கும். கடன் அதிகமாகக் கிடைத்தால் வீடு வாங்கலாம், கார் வாங்கலாம், தொழில் தொடங்கலாம், புதிய பொருள் வாங்கலாம். இதனால், சந்தையின் தேவை அதிகரிக்கிறது. ஆனால், வட்டி உயர்ந்தால் கடன் வாங்கும் ஆர்வம் குறையலாம். அதன்மூலம் பொருளாதாரத்தில் அதிகப்படியான தேவையை ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.

ரெப்போ வட்டி உயர்வின் தாக்கத்தை பொதுமக்கள் உணரக்கூடிய இடங்களில் ஒன்று வீட்டுக்கடன். எடுத்துக்காட்டாக, ஒருவர் ரூ. 40 லட்சம் வீட்டுக் கடன் வாங்கியிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். வட்டி விகிதம் உயரும்போது மாறும் வட்டி விகிதக் கடன் என்றால் இஎம்ஐ அதிகரிக்கலாம் அல்லது கடன் காலம் நீளலாம்.

இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், வட்டி 0.50 சதவீதம் உயர்ந்தால் இஎம்ஐ வெறும் சில நூறு ரூபாய் மட்டுமே உயரும் என்று நினைப்பது தவறு. கடன்தொகை பெரிதாகவும், காலம் நீண்டதாகவும் இருந்தால் மொத்த வட்டி சுமை கணிசமாக அதிகரிக்கலாம். இதனால், நடுத்தர வர்க்கத்து குடும்பத்தின் மாத பட்ஜெட் பாதிக்கப்படும். வட்டி உயர்ந்தவுடன் வங்கிகள் பொதுவாக கடன் பெறுபவர்களுக்கு இரண்டு விதமான தாக்கங்களை ஏற்படுத்தலாம். ஒன்று இஎம்ஐ அதிகரிக்கலாம், இரண்டு, இஎம்ஐ மாறாமல் கடன் கால அளவு நீளலாம். இரண்டுமே குடும்பத்துக்கு ஒரு சுமையாகத்தான் அமையும்.

அடுத்ததாக, ஆட்டோமொபைல் துறை கார் வாங்குவதற்குக் கடன் தேவை, வட்டி அதிகரித்தால் மாதத் தவணை அதிகரிக்கும். ஒருவர் இந்த மாதம் ரூ. 25,000 இஎம்ஐ செலுத்த முடியும் என்று நினைத்திருந்தால், வட்டி விகிதம் உயர்ந்தால் அது ரூ. 28,000-ஆக மாறினால் அவர் கார் வாங்கும் முடிவைத் தள்ளிப் போடலாம். இதனால், வட்டி உயர்வு- கடன் செலவு அதிகரிப்பு-வாங்கும் முடிவு தாமதம் என்ற சங்கிலித் தொடர் உருவாகலாம்.

தனிப்பட்ட கடன் என்பது பலருக்கு அவசர தேவைக்குப் பயன்படுகிறது. திருமணம், கல்வி, மருத்துவச் செலவு, வீடு பழுது பார்த்தல், வணிகத் தேவைகள் என்று பல காரணங்களுக்காக மக்கள் கடன் வாங்குகின்றனர். ரெப்போ உயர்வு நேரடியாக எல்லா தனிநபர் கடன்களையும் ஒரே அளவில் பாதிக்காது. ஆனால், ப்ளோட்டிங் அல்லது பென்ஞ் மார்க் லிங்க்டு கடன்களில் கடன் பெறுவதற்கான செலவு உயரலாம். இதனால், ஏற்கெனவே கடன் சுமையால் இருப்பவர்களுக்கு கூடுதல் அழுத்தம் ஏற்படலாம்.

இதன்மூலம் சிறு தொழில்கள் என்னவாகும்? என்று யோசித்துப் பார்த்தால், சிறு தொழில்களுக்கு சிரமங்கள் ஏற்படும். ஒரு பெரிய நிறுவனம் அதிக வட்டியைச் சமாளிக்கக் கூடும். ஆனால், ஒரு சிறு தொழிலதிபர், ஒரு பேக்கரி நடத்துபவர், ஒரு துணிக்கடை நடத்துபவர், தயாரிப்பு யூனிட், ஒரு ஒர்க்ஷாப், ஒரு டிரான்ஸ்போர்ட் பிசினஸ் இவர் ஒர்க்கிங் கேபிடல் லோன் எடுத்திருப்பார்கள். வட்டி அதிகரித்தால் வட்டிச் செலவு அதிகரிக்கும்; அதனால், லாபம் குறையலாம். லாபம் குறைந்தால் முதலீடு குறையலாம். முதலீடு குறைந்தால் விரிவாக்கம் தாமதமாகலாம். இதன் தாக்கம் வேலைவாய்ப்பிலும் ஏற்படலாம்.

பெரிய நிறுவனங்கள் கோடிக்கணக்கில் கடன் வாங்குகின்றன. புதிய தொழிற்சாலை அமைக்க வேண்டும். புதிய இயந்திரம் வாங்க வேண்டும். புதிய கிளைகள் தொடங்க வேண்டும். அதற்கெல்லாம் பணம் தேவை. வட்டி அதிகமாக இருந்தால் இப்போது முதலீடு செய்வதா?, சில மாதங்கள் காத்திருக்கலாமா? என்ற கேள்வி நிறுவனத்துக்கு வரும். இதனால், தனிநபர் முதலீடுகள் வேகம் குறையும். ஆர்பிஐ ஆய்வுகளில் பணவியல் இறுக்கம் வளர்ச்சியைத் தணிக்கும் தாக்கம் இருக்கக் கூடும் என்பதற்கான அனுபவ ரீதியான சான்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், வட்டி உயர்வுக்கு ஒரு நல்ல மாற்றமும் இருக்கிறது என்பதை நாம் மறக்கக் கூடாது.

ரெப்போ வட்டி உயர்வின் முக்கிய நோக்கங்களில் ஒன்று விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது. விலைவாசி கட்டுக்கடங்காமல் போனால் என்னவாகும்? ரூ.100-க்கு கிடைத்த பொருள் ரூ.120-க்கு கிடைக்கும். ரூ.1,000 செலவுகள் ரூ.1,200 ஆகிவிடும். ஆனால், ஊதியம் அதே வேகத்தில் உயரவில்லை என்றால், மக்களின் வாங்கும் சக்தி குறைந்து விடும். அதனால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது பொருளாதாரத்தின் முக்கியமான நோக்கம் என்ற அளவில் பார்த்தாலும் எளியவர்களின் வாழ்வையும் கருத்தில் கொள்ள வேண்டியது ரிசர்வ் வங்கியின் தலையாய கடமையாகும்.

பணவீக்கம் குறைந்தால் என்ன மாதிரியான பலன் கிடைக்கும்? என்பதை அலசிப் பார்த்தால், நிலையான வருமானம் பெறுபவர்களுக்குக் கிடைக்கும். ஓய்வூதியம் பெறுபவர், சம்பள ஊழியர், சிறிய சேமிப்பாளர், மாத வருமானத்தில் குடும்பத்தை நடத்துபவர் இவர்களின் வருமானம் வேகமாக உயரவில்லை என்றாலும், விலை கட்டுப்பாட்டில் இருந்தால் வாழ்க்கைச் செலவைத் திட்டமிடுவது எளிதாகும். வங்கியில் வைப்பீடு வைத்திருப்பவர்களுக்கு வட்டி விகித சூழல் உயரும்போது அதிக வட்டி கிடைக்கும். கடன் வாங்குபவர்களுக்கு அதிக வட்டி ஆகிவிடும். இதனால், இரு முகங்கள் உருவாகின்றன.

வீடு வாங்குபவர்களுக்கு இரண்டு விஷயங்கள் முக்கியம். வீட்டின் விலை, கடன் வட்டி. வட்டி அதிகரித்தால் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறையலாம். சில பேர் காத்திருக்கலாம். ஆகவே, சந்தைகளில் வீடு வாங்கும் வியாபாரம் மந்தமாகும். வீட்டின் விலை ஒரே காரணத்தால் தீர்மானிக்கப்படுவதில்லை. நிலத்தின் விலை, கட்டுமானச் செலவு, நகரத்தின் வளர்ச்சி, அரசு விதிமுறைகள், தேவையைப் பொருத்து விதிமுறைகள் மற்றும் தனி நபர்களின் தேவையைப் பொருத்து முடிவுகள் மாறும்.

ஒரு குடும்பம் இஎம்ஐக்கு கூடுதலாக ரூ. 3,000 செலுத்துகிறது என்று வைத்துக் கொண்டால், அந்த ரூ. 3,000 எங்கிருந்து வரும். உணவகச் செலவில் இருந்து வரலாம். ஷாப்பிங் செய்வது குறையலாம், பொழுதுபோக்கு குறையலாம், சேமிப்பில் இருந்து வரலாம். ஆகவே, குடும்பங்களில் சில மாற்றங்கள் ஏற்படுவது உண்டு. அதனால் சந்தை சேவையில் மாற்றங்கள் ஏற்படலாம். ஜிடிபி வளர்ச்சி வேகம் சில காலம் குறையக்கூடும்.

வட்டி விகித மாற்றங்கள், வெளிநாட்டு முதலீடுகள் நாணயச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். ரெப்கோ வங்கியின் மிகப் பெரிய கேள்வி, ஒரு பொருளாதார சமநிலை இருக்கிறது; வட்டி உயர்ந்தால் பணவீக்கம் கட்டுப்பட உதவலாம். ஆனால், மிக அதிகமாக உயர்த்தினால் கடன், நுகர்வு, முதலீடு, வளர்ச்சி ஆகியவற்றில் அழுத்தம் வரலாம்.

எனவே, மத்திய வங்கிக்கு முன்னிருக்கும் பெரும் சவால்கள் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதையே பிரதானமாக எடுத்துக் கொள்ளாமல், பொருளாதார வளர்ச்சி தேவையில்லாமல் பாதிப்புக்கு உள்ளாக்கக் கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதுதான் மிக சாமர்த்தியமான பொருளாதார சமநிலையாகும்.

விலைவாசியைக் கட்டுப்படுத்த வட்டி விகித உயர்வு என்ற கொள்கை மட்டும் போதாது. உற்பத்தி அதிகரிக்க வேண்டும். விநியோகச் சங்கிலி சீராக வேண்டும். வேளாண் உற்பத்தி மேம்பட வேண்டும். எரிபொருள் விலையின்தாக்கம் கவனிக்கப்பட வேண்டும். பொருள்களின் விநியோகத் தடை குறைக்கப்பட வேண்டும். அப்போதுதான் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சி முழுமையாகப் பலன் தரும். பணவீக்கம் அதிகமாக இருக்கும் போது வட்டி உயர்வு தேவையாக இருக்கலாம். ஆனால், பொருளாதாரம் ஏற்கெனவே பலவீனமாக இருக்கும் சூழலில், கடன் மற்றும் முதலீட்டில் அதிக வட்டி அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.