
மரம் போல்வர் மக்கட்பண்பு இல்லாதவர்
பெங்களூரு மாநகரத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரைச் சுத்திகரிக்கும் மையங்கள் மற்றும் அதன் அவசியம் பற்றி....

பெங்களூரு
இந்தியாவில் உள்ள மிகப் பெரிய நகரங்களில் கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரும் ஒன்றாகும். இந்த நகரத்தில் உள்ள மக்கள் குளிப்பதற்கும் மற்றும் இதர பயன்பாட்டுகளுக்கும் உபயோகிக்கும் நீர் கழிவுநீராக வீடுகளிலிருந்து வெளியேறி பல்வேறு கால்வாய்களின் வழியாகச் சென்று எங்கேயோ ஓரிடத்தில் தேங்கும். இந்தக் கழிவுநீரைச் சுத்திகரிப்பு மையங்கள் மூலம் சுத்திகரித்து வெளியே விட வேண்டும்.
அதை விவசாயப் பயன்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏனெனில், அந்த நீரில் நுண்ணிய நோய் கிருமிகள் கலந்திருக்கும். அவற்றை மக்கள் பருகினால் பல்வேறு நோய்களுக்கு உள்ளாவார்கள்.
எனவே, இந்தியாவிலும் உலகெங்கும் உள்ள பெரிய நகரங்களிலும் சிறிய நகரங்களிலும் கழிவுநீர் தூய்மைப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்படவேண்டியது சட்டப்படி கட்டாயமாகும். இதை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கென இந்திய அரசு பசுமைத் தீர்ப்பாயத்தை அமைத்துள்ளது.
ஆனால், இவை எதையும் மதிக்காமல் கர்நாடக அரசு பெங்களூரு மாநகரில் உற்பத்தியாகும் கழிவு நீரில் சுமார் 50 சதவீத கழிவுநீரைச் சுத்திகரிப்பு செய்யாமல் காவிரி, தென்பெண்ணை ஆறுகளில் கலக்கவிடுகிறது.
இந்த நீர் அப்படியே தமிழகத்துக்கு வருகிறது. சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை இவ்வாறு ஆறுகளில் கலக்கவிடுவது பெரும் குற்றமாகும். பலவிதமான தொற்றுநோய்கள் தமிழ்நாட்டு மக்களிடையே பரவி பல லட்சக்கணக்கான உயிர்களைக் காவுகொள்ளும்.
ஏற்கெனவே கர்நாடக அரசு நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் ஆணைக்கிணங்க நமக்குத் தரவேண்டிய காவிரி நீரைத் தருவதற்கு மறுக்கிறது. தாங்க முடியாத பெருவெள்ளம் வரும்போது மட்டுமே தனது அணைகளைத் திறந்துவிட்டு அந்த வெள்ளத்தை தமிழகத்தில் பாயவிடுகிறது. ஆக, தமிழ்நாட்டை தனது வடிகாலாக மட்டுமே கர்நாடகம் பயன்படுத்தி வருகிறது.
அதைவிட, கொடிய குற்றம் ஒன்றையும் கர்நாடகம் புரிந்து வருகிறது. நமக்கு காவிரி மேலாண்மைக் குழுவின் ஆணைப்படி அளிக்கவேண்டிய நீரில் பெங்களூரின் கழிவு நீரையும் கலந்துவிட்டு மொத்தக் கணக்கில் இவ்வளவு நீரைத் தமிழகத்துக்கு அளித்திருக்கிறோம் எனக் கணக்கு காட்டுகிறது.
தமிழ்நாட்டில் எளிய ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் சிற்றூர் ஒன்றின் மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டியில் ஜாதி வெறியர்கள் சிலர் மலத்தைக் கலந்த செய்தி தமிழ்நாடெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆனால், ஓர் அரசே இத்தகைய இழிவான செயலில் ஈடுபட்டால் என் செய்வது? இதைவிட கொடுங்குற்றம் வேறு இருக்க முடியாது.
ஓர் அரசை நடத்தும் அமைச்சர்கள், கற்றறிந்தவர்கள், மிகக் கூர்மையான அறிவு படைத்தவர்கள், அத்தகையவர்கள் ஒழுக்கக்கேடான செயலைத் திட்டமிட்டுப் புரிவார்களானால், அத்தகையவர்களைக் குறித்து வள்ளுவப் பெருந்தகை பின்வருமாறு கூறியிருக்கிறார்:
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.
மக்களுக்கே உரிய உயரிய ஒழுக்கப் பண்பு இல்லாதவர்கள், அரத்தின் கூர்மையைப் போல மிக்க அறிவுக்கூர்மை உடையவர்களாக இருந்த போதிலும், அவர்கள் ஓரறிவு உயிரான மரத்துக்கு ஒப்பானவர்களே ஆவார்கள்.
மேட்டூர் அணை நீரில் ஒரு பகுதி முழுவதும் பச்சை வண்ணத்தில் காட்சியளித்தது. அதில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன என்ற செய்தி சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. அப்போது இதற்கான காரணம் என்னவென்று புரியாமல் தமிழக அரசும், மக்களும் திகைத்தனர். அந்த உண்மை இப்போது அம்பலமாகியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரிய ஆணைப்படி, தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய காவிரி நீரில் பெங்களூரு மாநகரில் வெளியேற்றப்படும் கழிவுநீரின் பெரும் பகுதியை காவிரியிலும், தென்பெண்ணையாற்றிலும் கலக்கவிட்டுத் தமிழகத்துக்கு அனுப்புவதை எதிர்த்து பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழக அரசு வழக்குத் தொடுத்துள்ளது. அடுத்த வாரம், இந்த வழக்கு விசாரணைக்கு வரப்போகிறது.
இந்நிலையில், கர்நாடக மாநில சுற்றுச் சூழல் துறை அமைச்சரான ராமலிங்க ரெட்டி பின்வருமாறு அறிவித்துள்ளார்:-
"பெங்களூர் மாநகரில் நாள்தோறும் 2,825 எம்.எல்.டி. கழிவுநீர் வெளியேறுகிறது. இதில் 1,364.5 எம்.எல்.டி. கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு கோலார் மற்றும் கர்நாடகத்தில் உள்ள அண்டை மாவட்டங்களின் விவசாயத் தேவைகளுக்காகக் கொண்டு செல்லப்படுகிறது. மீதமுள்ள 46 சதவீத சுத்திகரிப்பு செய்யப்படாத கழிவுநீர் ரிஷபாவதி ஆற்றில் கலந்து கனகபுரா அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது. அதேபோல், சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் தென்பெண்ணையாற்றில் கலந்து தமிழகத்துக்கு அனுப்பப்படுகிறது. இவ்வாறு தமிழகத்துக்குச் செல்லும் கழிவுநீரைச் சுத்திகரிக்க 43 சுத்திகரிப்பு மையங்களை புதிதாக உருவாக்கவிருக்கிறோம். அதன்மூலம் 1,174 எம்.எல்.டி. நீரைச் சுத்திகரிக்க இயலும்' எனக் கூறியுள்ளார்.
இந்த சுத்திகரிப்பு நிலையங்களைப் புதிதாக அமைக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் செல்லுமோ?, யாருக்கும் தெரியாது. அதுவரை சுத்திகரிக்கப்படாத கழிவு நீரைத் தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் அனுப்பும். பொறுப்பு வாய்ந்த கர்நாடக அமைச்சர் ஒருவரே ஒப்புக்கொண்ட உண்மை இது.
இந்தியாவின் ஐந்தாவது பெரிய நகரம் பெங்களூரு. தக்காண பீடபூமியின் தெற்கு மூலையில் கடல் மட்டத்துக்கு மேலே 3,000 அடி உயரத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. எனவே, இதிலிருந்து வெளியேறும் கழிவுநீர் வெகு விரைவாக ஓடி காவிரியிலும் தென்பெண்ணையிலும் கலக்கிறது.
பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழகம் முறையிட்டதன் காரணமாகவே இந்த உண்மையை கர்நாடகம் ஒப்புக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பல்லாண்டு காலமாக தமிழக மக்களின் உடல்நலனுக்குப் பெருங்கேடு விளைவிக்கக் கூடிய செயலை கர்நாடக அரசு பழிபாவங்களுக்கு அஞ்சாமல் செய்து வருகிறது.
சிவப்பிரகாச சுவாமிகள் பாடிய
நன்னெறி என்ற நூலில்
அறிவுடையார் அன்றி அது பெறார் தம்பால்
செறிபழியை அஞ்சார் சிறிதும் - பிறைநுதால்
வண்ணம் செய்வாள் விழியே அன்றி
மறை குருட்டுக்
கண் அஞ்சுமோ இருளைக் கண்டு.
என்ற பாடலை இயற்றியுள்ளார். இந்தப் பாடலின் சுருக்கமான கருத்து "கண்ணின் ஒளியை இழந்தவர்கள் இருட்டைப் பார்த்து பயப்படமாட்டார்கள். ஏனெனில், வெளிச்சத்துக்கும் இருட்டுக்குமிடையே எந்த வேறுபாடும் அவர்களுக்குத் தெரியாது. அதுபோல, சிந்தித்து எதையும் பகுத்தறிவுடன் ஆராய்ந்து பார்த்து செயல்படாத மூடர்கள், எதைச் செய்தாலும் பழி பாவத்துக்குச் சிறிதும் அஞ்சாமல் எத்தகைய கொடுங்குற்றத்தையும் செய்வதற்கு ஒருபோதும் அஞ்சமாட்டார்கள்' என்று கூறியுள்ளார். சிவப்பிரகாசர் கூறியுள்ள இந்த உண்மைக்கு கர்நாடக அரசே சான்றாகும்.
அறம் சார்ந்த அரசியல் அமைப்பாக காங்கிரஸ் கட்சியை மகாத்மா காந்தி உருவாக்கினார். அவருடைய அறப்போராட்டங்களும் சரி, காங்கிரஸ் கட்சியை வழிநடத்திய முறையிலும் சரி அத்தனையும் எத்தகைய பழிப்புக்கும் ஆளாகாமல் எச்சரிக்கையாகவும் அறவழியிலும் வெற்றிகரமாக நடத்தினார்.
எடுத்துக்காட்டாக, 1921-ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி நடத்திய சைமன் ஆணையம் எதிர்ப்புப் போராட்டத்தில் உத்தர பிரதேச மாநிலத்தில் செüரி சாரா என்ற இடத்தில் ஊர்வலமாகச் சென்ற மக்களை காவல் துறையினர் தாக்கினர். வெகுண்டெழுந்த மக்கள் விரட்டியபோது அந்தக் காவலர்கள் ஓடி தங்களின் காவல் நிலையத்துக்குள் புகுந்து கதவை உள்தாழிட்டுக் கொண்டனர். ஆனால், மக்கள் காவல் நிலையத்துக்கு தீ வைத்தனர். அதன் விளைவாக பல காவலர்கள் தீயில் எரிந்து சாம்பலாயினர்.
இதைக் கண்ட காந்தியடிகள் அறப்போராட்டத்தை உடனடியாக நிறுத்துவதாகவும், தன்னுடைய மக்கள் அறப்போராட்டத்தின் அடிப்படையை இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்று சொல்லி மக்கள் புரிந்த கொடுங்குற்றத்துக்காக தன்னைத்தானே வருத்திக்கொண்டு உண்ணாவிரதம் இருந்தார்.
பண்டித நேரு, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற அப்போதைய இளம் தலைவர்கள் மகாத்மா காந்தியின் இந்தச் செயலை ஆதரிக்கவில்லை. அவரைக் கண்டித்தனர். ஆனாலும், அவர் தன்னுடைய நிலையில் உறுதியாக இருந்து மக்களைப் பக்குவப்படுத்தினார்.
அதுமட்டுமல்ல, 1942-ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தில் ஆந்திர காங்கிரஸ் தலைவர் பிரகாசம் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைத் தண்டனை அடைந்து விடுவிக்கப்பட்டபோது, அவரைப் பாராட்டும் வகையில் மக்கள் நடத்திய கூட்டத்தில் அவருக்கு ரூ. 5,000 நிதியாக அளித்தனர். ஆனால், அவர் அதை கட்சியிடம் ஒப்படைக்காமல் தனது சொந்தத்துக்குப் பயன்படுத்திக் கொண்டார் என்பதை மகாத்மா காந்தி ஏற்கவில்லை. அதன் காரணமாக, அவருக்கு அமைச்சர் பதவி கொடுப்பதை அவர் கடுமையாக எதிர்த்து நிறுத்தினார்.
அதனால்தான் உலகிலேயே அறவழியில் போராடி விடுதலை பெற்ற நாடாக நம் நாடு போற்றப்படுகிறது. உலகில் பல்வேறு நாட்டு மக்களும் இன்றைக்கும் மகாத்மா காந்தி காட்டிய அற வழியில் தங்களது கோரிக்கைகளுக்காகப் போராடுவதைப் பார்க்கிறோம்.
அவரது அறநெறியில் வளர்த்த காங்கிரஸ் கட்சிக்கு என்றும் அழியாத பழியை கர்நாடக காங்கிரஸ் அரசு தேடிக் கொடுத்துள்ளது. மகாத்மா காந்தியின் உயிரை கோட்சேயின் குண்டுகள் குடித்தன. ஆனால், அவரது ஆன்மாவையே கர்நாடக காங்கிரஸ் அரசின் செயல் குடித்துள்ளது.
கட்டுரையாளர்:
தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






