நாளைய நாயகிகள்! இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் அசத்தும் பெண்கள்! 

இன்ஸ்டாகிராமில் நடனத்தின் மூலம் கவனம் ஈர்க்கும் 10 பெண்கள் குறித்த அறிமுகம்... 
நாளைய நாயகிகள்! இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் அசத்தும் பெண்கள்! 

சீனாவின் டிக் டாக் செயலி இந்தியாவில் 2022-ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டப் பிறகு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் என்ற புதிய ஆப்ஷன் சேர்க்கப்பட்டது. அதுவரை இன்ஸ்டாகிராமை குறைவான பொதுமக்களே உபயோகித்து வந்தனர். புகைப்படங்கள் பகிர்வுகளுக்கே பிரபலங்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுத்துவந்தனர்.

எந்த செயலியும் சாதாரண மக்களை ஆதாரமாகக் கொண்டிருந்தால் உடனடியாக அதன் மதிப்பு சந்தையில் உயர்வதை காணலாம். 

ஒழிக்க வேண்டுமென நினைக்கும் பல விஷயங்கள் மக்கள் மத்தியில் ஒழியாமலிருக்க காரணம் அது மக்களுக்கு பிடித்திருக்கிறது என்பது மட்டுமே. வெள்ளத்தனைய மலர் நீட்டம்!

நிச்சயமாக வருங்கால சினிமாவில் இவர்களது ஈடுபாடு, பங்களிப்பு அதிகமிருக்கும் எனபதில் மாற்றுக் கருத்தில்லை. 

நடிகர்கள் சித்தார்த், ராகவா லாரன்ஸ், அசோக் செல்வன் உள்பட பல நடிகர்கள் இந்த இன்ஸ்டாகிராம் இன்புளூயன்சர்களுடன் (செல்வாக்கு செலுத்துவர்கள்) இணைந்து புரமோஷன் விடியோக்களை செய்திருப்பது கவனிக்கத்தக்கது. 

அமலா ஷாஜி (41 லட்சம்) 

இந்தப் பட்டியலில் ஒரேயொரு விதிவிலக்கு அமலா ஷாஜி. 4.1 மில்லியன் (41 இலட்சம்) பேர் பின்தொடர்ந்தாலும் இன்னமும் உருவ கேலிக்கு ஆளாகி வருகிறார். 

கேரளாவை சேர்ந்த அமலா ஷாஜிக்கு தமிழ்நாட்டில்தான் ரசிகர்கள் அதிகம். 2கே கிட்ஸ்களின் ஃபேவரிட். உடல்வாகு சரியில்லை என்று மிகவும் மோசமான மீம்ஸ்கள் மூலம் கிண்டலுக்குள்ளாகி பின்னர் பிரபலமானவர். தற்போது, எதிர்மறையான எல்லா விமர்சனங்களை தவிடுபொடியாக்கி முன்னேறி இருக்கிறார். 

மிகவும் இளம் வயது என்றாலும் பக்குவம் அதிகம். இவரிடம் ஒருமுறை கேள்வி கேட்கப்பட்டது. அதில் பொறாமைப்படுவது இயல்பானதா? 

இதற்கு அமலா ஷாஜியின் பதில் - சிறந்த கேள்வி. நிச்சயமாக பொறாமை சாதாரணமானதுதான். விருப்பத்தின் முன்னோடிதான் பொறாமை. நீங்கள் விருப்பப்பட்ட ஒன்று உங்களுக்கு வேண்டும்; ஆனால் அது உங்களுக்கு கிடைக்குமென நம்பிக்கையில்லை. அதனால் பொறாமை உருவாகிறது. நம்பிக்கையுடன் இது என்னாலும் முடியுமென நீங்கள் உழைத்தால் பொறாமை தானாக கரைந்துவிடும். மீதியிருப்பது விருப்பம் மட்டுமே. அதுவே உங்களை இலக்கை நோக்கினை கொண்டு செல்லும்; உங்களது கவனம், குவியத்தையும் அதுவே முடிவு செய்யும்; அதற்கான முடிவுகளையும் எடுக்கச்சொல்லும்.

ஷெல்பி ஷாலு (4.03 லட்சம்)

ஷெல்பி ஷாலு எனும் ஷாலினி செல்வமணி. அமெரிக்காவில் வாழும் ஒரு தமிழ்ப் பெண். மென்பொருள் துறையில் வேலைசெய்து கொண்டு ஓய்வு நேரங்களில் தனக்கு பிடித்த நடனத்தை பேரார்வத்துடன் செய்து வருகின்றார். 

இந்த நூற்றாண்டிலும் தமிழ்க் கலாசாரத்தினை பிரதிபலிக்கும் சேலைகளை உடுத்தி 1980,90-களில் வெளிவந்த பாடல்களுக்கு ரீல்ஸ் பதிவிடுவதில்  தனித்துவமானவர். சேலை மட்டுமல்ல ஆபாசமல்லாத வகையில் மாடர்ன் உடையிலும் அசத்துபவர். 

இன்ஸ்டாகிராமில் உடலின் பாகங்களை கவர்ச்சியாக காட்டாமல் தனது திறமையை மட்டுமே முன்னிருத்தி விடியோக்களை பதிவிடுவதுதான் இவரது இரண்டாவது தனித்துவம். 

எல்லோரும் டிரெண்டிங் என்று ஒரு பாதையில் பயணிக்க தனிக்குப் பிடித்த பழைய (வின்டேஜ்) பாடல்களுக்கு அதே மாதிரி உடையணிந்து கிட்டத்தட்ட அதே மாதிரியான நிலப்பரப்பினை தேர்வு செய்து அதே போல நடனமாடுவார். ரசிகர்கள் இவரை மறு உருவாக்கத்தின் அரசி (Recreation Queen) என்கிறார்கள். 

பெரும்பாலான ஜோதிகா ரீல்ஸ்களில் ஜோதிகாவாகவே மாறிவிடும் திறமைசாலி. மினி ஜோதிகா என்றும் ரசிகர்கள் அழைக்கிறார்கள். 

சிம்ரன் பாடலுக்காக இளைப்பதும் ஜோதிகா பாடலுக்காக உடல் எடையை கூட்டுவதும் அசாதாரணமாக செய்து வருகிறார். பொழுதுபோக்கைத் தாண்டிய ஆர்வம் இருந்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம். 

நடிகைகள் முக்தா, சிம்ரன், மாளவிகா இவரது நடனத்தை மெச்சி கமெண்ட் செய்திருந்ததும் மறக்க முடியாது. 

பிரியங்கா மஸ்தானி (6.16 லட்சம்)

சேலம் ஓமலூரை சேர்ந்த பட்டதாரி பெண். இவரது தனித்துவம் கிராமம்தான். ஒருமுறை நீல வண்ண நைட்டி அணிந்து இவர் ஆடிய நடனம்தான் அனைவரையும் கவர்ந்தது. 

ஊரில் உள்ள சுட்டிக் குழந்தைகளுடன் இவர் செய்யும் விடியோக்களும் குறும்புத்தனங்களும் நமது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு பெண் என்ற நினைப்பைத் தந்துவிடுகிறது. 

இவரையும் மூக்கு பெரிதாக இருக்கிறதாக உருவ கேலி செய்திருக்கிறார்கள். இவர் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். சேலம் ஓமலூரின் அடையாளமாகவே மாறி வருகிறார்.

சித்தார்த், ரித்திகா சிங் உடன் படத்தின் புரமோஷன்களில் ஈடுபட்டுள்ளார். 

டாக்டர். புனிதா ஷாலினி (1.31 லட்சம்)  

சித்த மருத்துவம் படித்து தற்போது திருநெல்வேலியில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

நடனத்தின் மீதான காதலால் கல்லூரி படிக்கும் போதிருந்தே விடியோக்களை பதிவிட்டு வருகிறார். ஜீன்ஸ் பேண்ட் சர்ட்டுகள், சேலைகள் அணிந்து குத்து பாடலுக்கு நடனம் ஆடுவது இவரது தனித்துவம்.‌ 

ப்ரக்யா (3.15 லட்சம்) 

ஹாய் நண்பர்களே என்பதுதான் இவர்களது துவக்கம். அண்ணன் தங்கையாக விடியோ பதிவிட்டு வைரலானவர்கள். பின்னர் தனது நடனத்திறமையால் கவனம் பெறுகிறார். 

கல்லூரி படிக்கும் ப்ரக்யாவின் தனித்துவம் பால் பேதமின்றி நாயகர்கள் நாயகிகளை போலவே உடையணிந்து அதேபோல் நடனமாடுபவர். நல்ல திறமைசாலி என்பதற்கு அவரது விடியோக்களே சாட்சி. 

கண்ணன் ஐஸ்வர்யா (6.20லட்சம்)

நிறத்தை வைத்தும் உடல் பருமனை வைத்தும் இன்றும் கிண்டல் செய்துவரும் நிலையில் அதையெல்லாம் உடைத்தெறியும் வகையில் தனது திறமையினால் அறியப்படுகிறார் கண்ணன் ஐஸ்வர்யா. 

ஃபிட்ன்ஸ் குறித்து தனது அறிவுரைகளையும் பார்வையாளர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். 

சேலையை மிகவும் கவர்ச்சியான ஆடை எனலாம். அதைப் புரிந்து சரியாக பயன்படுத்துபவர்களில் இவரும் ஒருவர். இவரும் நடிகர் சித்தார்த்தின் பட புரமோஷனுக்காக நடனம் ஆடியுள்ளார். 

சிப்பு சிப்பி (3.94 லட்சம்) 

கேரளத்தை சேர்ந்த தமிழ்ப்பெண். சிப்பு சிப்பி என்ற பெயரில் இருக்கும் கிருஷ்ண சில்பா. தெற்றுப் பல்லுடன் தனது க்யூட்டான துருதுருவென நடனம் ஆடுவதுதான் இவரது சிறப்பு.

நடிகர் ராகவா லாரன்ஸுடன் சேர்ந்து படத்தின் புரமோஷனுக்காக நடனம் ஆடியுள்ளார். 

பிரியா துரைசாமி, திவ்யதர்ஷினி (4.61 லட்சம், 3.90 லட்சம்) 

அக்கா, தங்கையான பிரியா, திவ்யதர்ஷினி மிகவும் வேகமாக வளர்ந்துவரும் பிரபலங்கள்.

நடிகை சில்க்கிடம் இருக்கும் ஒரு வகையான கவர்ச்சியை தங்கள் உடல் மொழியில் எளிதாக கொண்டு வருவதுதான் இவர்களது தனித்துவம்.

நடனத்தில் பட்டையைக் கிளப்பும் இவர்கள் நடிகர்கள் கௌதம் கார்த்தி, ராகவா லாரன்ஸ், அசோக் செல்வனுடன் இணைந்து பட புரமோஷனுக்காக நடனம் ஆடியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

ஜெகா வைஷு (4.26 லட்சம்)

தேனியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரி எனும் பெண் தனது மகள் வைஷ்ணவியின் பெயருடன் இணைத்து ஜெகா வைஷு என வைத்துள்ளார்.

டெய்லரிங் செய்து ரீல்ஸ் செய்து வந்த இவர் தற்போது ரீல்ஸ், யூடியூப், புரமோஷன் என முழு நேரத் தொழிலாக கலக்கி வருகிறார். கணவரை பிரிந்து தனியாளாக தனது மகளை வளர்த்துவரும் இவர் விழிப்புணர்வு கொண்ட குறும்படங்களில் 
நடித்துள்ளார்.

பல தனியார் விருதுகளை வென்றுள்ள இவர் பல Single Parent (குழந்தையுடன் கணவர் இல்லாமல் வாழும் பெண்) ஆக  இருக்கும் பெண்களுக்கு உத்வேகம் அளிப்பவராக இருக்கிறார்.

யார்? எப்போது? சாதனைப் புர்வார்களென கணிக்க முடியாது. இந்த நவீன ஊடகமான இன்ஸ்டாகிராமில் நடனத்தின் மூலம் மட்டுமே எந்தப் பின்னணியும் இல்லாமல் தன்னை லட்சக்கணக்கான மக்கள் பின் தொடரச் செய்வது சாதாரண விஷயமல்ல. இந்தப் பெண்கள் வருங்காலத்தில் சின்னத்திரை- வெள்ளித்திரை என எதில் வேண்டுமானாலும் பங்களிப்பார்கள். இவர்களைப் போன்ற இன்னும் பல பெண்கள் இந்தச் சாதனைகளை தொடர்வார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com