

உதகை : மலைகளின் அரசியான உதகைக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த சுற்றுலாப் பயணிகள் பல்வேறு சுற்றுலா மையங்களை கண்டு களிப்பதோடு, மலை ரயிலில் பயணம் செய்வதும் இவர்களுக்கு ஒரு தனிக் கனவாகவே உள்ளது.
நூறாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயில் உதகையிலிருந்து குன்னூருக்கு தினசரி 4 முறையும், குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு ஒரு முறையும் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் செல்வதற்கும், மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு வருவதற்கும் எப்போதுமே பெரும் கூட்டம் காத்துக் கொண்டிருக்கும்.
குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையிலான மலை ரயில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை நிலக்கரியால் இயக்கப்பட்டு வந்தது. ஆனால், தரமில்லாத நிலக்கரியாலும், என்ஜினின் இழுவைத் திறன் குறைவாக இருந்ததாலும் நிலக்கரியால் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டு அதற்குப் பதிலாக பர்னஸ் ஆயிலைக் கொண்டு இயக்கப்பட்டு வருகிறது. உதகை-குன்னூர் வழித்தடத்தில் டீசல் என்ஜினே இயக்கப்படுகிறது.
ஆனால், பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயிலின் இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது. மலைப்பாதையில் அடிக்கடி பழுதடையும் என்ஜினால், ரயில் பாதியில் நிறுத்தப்பட்டு சுற்றுலாப் பயணிகள் மாற்று வாகனங்களின் மூலம் உதகை உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவது தொடர்கதையாகவே உள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 20 முறை மலை ரயில் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே பயன்பாட்டிலிருந்த மலை ரயில் என்ஜின் சுவிட்சர்லாந்து நாட்டினரால் உருவாக்கப்பட்டதாகும். இத்தகைய தொழில்நுட்பம் தற்போது இல்லாவிட்டாலும் நம்மிடமுள்ள திறமையைக் கொண்டே புதிதாக மலை ரயில் என்ஜினை உருவாக்க முடியும் என்பதற்காக திருச்சி பொன்மலையில் ரூ.200 கோடி செலவில் 5 புதிய என்ஜின்களை உருவாக்க திட்டம் தீட்டப்பட்டது. அதன்படி திட்டமிட்ட செலவை விட மிகக் குறைவாகவே பொன்மலையில் புதிய என்ஜின் உருவாக்கப்பட்டு மலை ரயில் இயக்கப்பட்டு வந்தது.
நீலகிரி மலை ரயில் சேவையால் ரயில்வே துறையினருக்கு தொடர்ந்து நட்டமே ஏற்பட்டு வருவதாக கூறினாலும், யுனெஸ்கோ அமைப்பினரால் பாரம்பரிய ரயிலாக அறிவிக்கப்பட்ட நீலகிரி மலை ரயிலை நிறுத்தும் திட்டமில்லை எனவும், இதை மேம்படுத்த பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப் போவதாகவும் ரயில்வே துறை அதிகாரிகளும் அறிவித்து வந்தனர்.
இந்நிலையில் அக்டோபர் மாதம் 5ம் தேதியிலிருந்து நீலகிரி மலை ரயிலுக்கான முன் பதிவு நிறுத்தப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு காரணம் புதிராகவே உள்ளது.
மலை ரயில் பாதையை மேம்படுத்துவதற்காக குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையிலான மலை ரயில் சேவையை நிறுத்துவதாகக் கூறினாலும் கடந்த 10 மாதங்களுக்கு முன்னர்தான் இந்த ரயில் பாதை ரூ.15 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டது. அதனால், இப்பாதையை மீண்டும் புதுப்பிப்பதற்கான தேவையும் இல்லை.
தென்னக ரயில்வேயின் இந்த திடீர் அறிவிப்பால் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி மலை ரயில் ஆர்வலர்களும், சுற்றுலா ஏற்பாட்டாளர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உதகையில் இரண்டாவது மற்றும் குளிர்கால சீசன் தொடங்கும் நேரத்தில் இத்தகைய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மலை ரயில் சேவை தொடர்வது குறித்து ரயில்வே நிர்வாகம் உரிய விளக்கமளிக்க வேண்டுமெனவும் எதிர்பார்க்கின்றனர் இந்த ரயிலில் பயணித்து மகிழும் மக்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.