

சென்னை: சென்னை பெருநகர காவல்துறை சார்பில் துறைமுகத்தில் இயங்கும் தென்னிந்தியாவின் முதல் மிதக்கும் காவல் நிலையம் பெயரளவில் மட்டும் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் கடல் பாதுகாப்பில் காவல்துறை தடுமாற்றம் அடைந்து வருகிறது.
சென்னை துறைமுக காவல் நிலையம் கடந்த 2009-ம் ஆண்டு முதல் முதல் மிதக்கும் காவல் நிலையம் என்ற பெயரோடு செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலையத்துக்கு அதிவிரைவு ரோந்துப் படகு அப்போது வழங்கப்பட்டது. ஜி.பி.எஸ்., ரேடார் என பல அதிநவீன வசதிகள் இந்த படகில் உள்ளன.
சென்னை பெருநகர காவல்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த காவல் நிலையத்துக்கு ஒரு உதவி ஆணையர், ஒரு இன்ஸ்பெக்டர், 4 சப்-இன்ஸ்பெக்டர்கள்,
26 போலீஸார் என 31 பேர் பணியமர்த்தப்பட்டனர். படகில் 27 போலீஸார் 3 ஷிப்டுகளில் பணிபுரிவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
துறைமுக பாதுகாப்புக்கும், சென்னைக்கு கடல் வழியாக வரும் ஆபத்தை தவிர்க்கவும், கடத்தலை தடுக்கவும், மீனவர்களை பாதுகாக்கும் வகையிலும் இந்த அதிவிரைவு ரோந்து படகு செயல்படும் என அப்போது அறிவிக்கப்பட்டது.
இதை உறுதிப்படுத்தும் வகையில் காலை, மாலை, இரவு என 3 வேளைகளில் கடலில் வடக்கே எண்ணூரில் இருந்து தெற்கு திருவான்மியூர் ரோந்து பணியில் படகு ஈடுபட்டது.
ஆனால் இப்போது மிதக்கும் காவல் நிலையம் பெயரளவிலேயே செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக அதிவிரைவு ரோந்து படகு மூலம் ரோந்து செல்வதே கிடையாது என விஷயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தினமும் ஒருமுறை கூட ரோந்து செல்வதில்லை என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபடுவதில்லை என பரவலான குற்றச்சாட்டு உள்ளது.
சுதந்திரம் தினம், குடியரசு தினம் என ஆண்டில் சில நாள்களில் மட்டும் முழுமையாக ரோந்து செல்வதாக கூறப்படுகிறது.
துறைமுகத்தின் கடல் நுழைவாயிலில் மட்டும் காலையில் சிறிது நேரம் படகில் இருந்தப்படி கண்காணிப்பு பணியில் ஈடுபடும் போலீஸார், அதோடு திருப்தியடைந்து கரைக்கு திரும்பிவிடுவதாக கூறப்படுகிறது. கடந்த பல மாதங்களாக இதே நிலைமைதான் நீடிப்பதாக அப் பகுதியில் மீனவர்கள் கூறுகின்றனர்.
இங்கு போதுமான காவலர்களை நியமிக்காத காரணத்தினால்தான், ரோந்து செல்வதிலும், கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதிலும் இடர்பாடு ஏற்படுவதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இப்போது 31 பணியிடங்களுக்கு 18 பேரே பணிபுரிவதாகவும், அதிலும் பலர் பிற பணிக்கு சென்றுவிடுவதாகவும் காவல்துறை சார்பில் கூறப்படுகிறது.
எனவே மூழ்கும் நிலையில் இருக்கும் மிதக்கும் காவல் நிலையத்தை மீண்டும் முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டு வர, போதுமான காவலர்களை நியமிக்க வேண்டும், மிதக்கும் காவல் நிலையம் செயல்படுவதை காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் அப்போதுதான் அது தொடங்கப்பட்டதின் நோக்கம் நிறைவேறும், கடல் வழியாக சென்னைக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களும், கடத்தல்களும் தடுக்கப்படும் என நடுநிலையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
டீசல் எங்கே? அதிவிரைவு ரோந்து படக்கு எரிபொருளாக சென்னை பொறுப்பு கழகம் இலவசமாக மாதத்துக்கு 1,500 லிட்டரில் இருந்து 2 ஆயிரம் லிட்டர் வரை டீசல் வழங்குகிறது. இதை போலீஸார் வாரத்துக்கு ஒருமுறை சிறிது, சிறிதாக வாங்கிச் செல்கின்றனர்.
இந்நிலையில் அதிநவீன ரோந்து படகு ரோந்து செல்வதே அரிதாகிவிட்ட நிலையில், அந்த டீசல் என்ன செய்யப்படுகிறது என துறைமுக ஊழியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.