ஆபத்தான பயணங்கள்...

தருமபுரி : சரக்கு வாகனங்களில் பயணம் செய்வதில் உள்ள ஆபத்துகளை உணராமலேயே கூட்டம், கூட்டமாக வாகனங்களில் செல்வது தருமபுரி மாவட்டத்தில் தொடர்கதையாகவே உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் வனப்
ஆபத்தான பயணங்கள்...
Updated on
1 min read

தருமபுரி : சரக்கு வாகனங்களில் பயணம் செய்வதில் உள்ள ஆபத்துகளை உணராமலேயே கூட்டம், கூட்டமாக வாகனங்களில் செல்வது தருமபுரி மாவட்டத்தில் தொடர்கதையாகவே உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் வனப்பகுதிகள் நிறைந்தவையாக உள்ளன. 251 ஊராட்சிகளில் இடம்பெற்றுள்ள மலைப்பகுதி சார்ந்த குக்கிராமங்கள் அனைத்துக்கும் அரசுப் பேருந்தோ, தனியார் பேருந்துகளோ செல்வது சாத்தியமில்லை. பல பகுதிகளில் வாடகைக்குக்கூட தனியார் வாகனங்கள் செல்லாத நிலையுள்ளது.

இந்தப் பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் இல்ல விழாக்களுக்கோ, கோயில் விழாக்களுக்கோ செல்ல வேண்டும் என்றால் பெரும்பாலும் லாரி, சரக்கு ஆட்டோ, மினிடோர் ஆட்டோ, மினி லாரி ஆகியவற்றையே பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு செல்லும் வாகனங்கள் சில சமயங்களில் மலைப் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து கவிழும்போதோ, சாலையில் விபத்துகளை சந்திக்க நேரிடும்போதோ உயிரிழப்புகளும் அதிகரிக்கின்றன.

அரூர் வட்டத்துக்குள்பட்ட மலைக் கிராமங்கள், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் இத்தகைய வாகனங்களிலேயே பயணம் செய்கின்றனர்.

பேருந்துகளில் ஒரே நேரத்தில் அனைவருக்கும் இருக்கை கிடைக்காது என்பதைவிட பேருந்துகளை நம்பினால் குறிப்பிட்ட இடத்துக்கு செல்ல முடியாது என்ற காரணத்துக்காகவும், செலவினம் அதிகமாகும் என்று கருதி, ஆபத்தை உணராமலேயே சரக்கு வாகனங்களில் பயணம் செய்கின்றனர்.

அண்மையில் அரூர் அருகே திருமணத்தை முடித்துவிட்டு மினி லாரியில் ஊருக்கு திரும்பும்போது ஏற்பட்ட விபத்தில், மணவாழ்க்கையில் அடியெடுத்து வைத்த சில மணி நேரத்திலேயே புது மணப்பெண் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். போதிய விழிப்புணர்வும், காவல்துறையின் கண்டிப்பான கட்டுப்பாடும் இல்லாததே ஆபத்தான பயணங்கள் தொடர்வதற்கு காரணமாக உள்ளது. மாவட்டக் காவல்துறை, வட்டாரப் போக்குவரத்து துறையினர் அவ்வப்போது சோதனையிட்டு வழக்குப் பதிவு செய்தாலும் இத்தகைய பயணங்களை முழுமையாக தடுத்து நிறுத்த முடியவில்லை என்பது வேதனைக்குரியது.

இது குறித்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.டி. கணேஷ்மூர்த்தி கூறுகையில்,

"மாவட்டத்தில் சரக்கு வாகனத்தில் பயணம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி பயணம் செய்வோர் குறித்து போலீஸôர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அபராதங்களும் விதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய பயணங்களால் ஏற்படும் ஆபத்து குறித்து காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com