ஈரோடு, செப்.4: ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் இடம் இல்லாததால் பல நூற்றாண்டுகள் பழமையான சிலைகள், சிற்பங்கள் பாதுகாப்பின்றி சாலை ஓரத்தில் வைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு அரசு அருங்காட்சியகம் 7.10.1987-ல் அன்றைய ஈரோடு நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டது. ஈரோடு நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டவுடன் புதிய மாநகராட்சி அலுவலகம் கட்டும் பணி தொடங்கப்பட்டதால், 1.12.2009 முதல் வ.உ.சி. பூங்கா வளாகத்துக்கு அருங்காட்சியகம் மாற்றப்பட்டது.
இங்கு தொல்லியல், மானுடவியல், விலங்கியல், தாவரவியல், புவியியல், ஓவியங்கள், நாணயங்கள், தபால் தலைகள் தொடர்பான பழங்காலப் பொக்கிஷங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கி.பி. 2-ம் நூற்றாண்டு முதல் 19-ம் நூற்றாண்டு வரை உள்ள பழமையான சிலைகள், சிற்பங்கள், ஓவியங்கள், இசைக்கருவிகள், முதுமக்கள் தாழி, கல்வெட்டுகள் என சுமார் 1,500 பொக்கிஷங்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.
ஓவியங்கள், இசைக்கருவிகள், முதுமக்கள் தாழி, பழங்கால காசுகள், மரச்சிற்பங்கள், சில கற்சிற்பங்கள் தவிர பிற கற்சிலைகள், கற்சிற்பங்கள் அருங்காட்சியகத்துக்கு வெளியே சாலையோர மரத்தடியில் வைக்கப்பட்டுள்ளன.
மழையும், வெயிலும்படும் வகையிலும், எளிதில் யாரும் தூக்கிச்செல்லும் வகையிலும் பாதுகாப்பின்றி இவை வைக்கப்பட்டுள்ளது வரலாற்று ஆய்வாளர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.
2-ம் நூற்றாண்டு கல்வெட்டு, 1517-ல் உருவாக்கப்பட்ட சிங்கம் போன்ற தோற்றம் உடைய கல் தூண், 11-ம் நூற்றாண்டு காளியம்மன் சிலை உள்ளிட்டவை அருங்காட்சியகத்துக்கு முன்பகுதியில் உள்ள சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இவைதவிர கன்னட கல்வெட்டுகள், கருடாழ்வார் சிலை, அகோரவீரமித்திரர் சிலை, கருப்பண்ண சாமி சிலை, நினைவுக்கல் சிற்பங்கள், வீரமாத்தி அம்மன் சிலை, அரசன்-அரசி சிற்பம், பத்ரகாளி சிலை, அய்யனார் சிலை உள்ளிட்ட பல்வேறு சிலைகள் மரத்தடியிலும், சாலையோரத்திலும் வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, அருங்காட்சியக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அருங்காட்சியகத்துக்கு சொந்தக் கட்டடம் கட்டுவதற்காக இடம் தேடி வருகிறோம். இடம் கிடைத்துவிட்டால் இவற்றைப் பாதுகாப்பாக வைத்துவிடுவோம்.
பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் எளிதில் வந்து செல்லும் வகையிலான இடத்தை தேர்வு செய்வதால் காலதாமதம் ஆகிறது என்றார்.
"கம்பி வேலி, இரும்புக்கூண்டு அமைத்தாவது பாதுகாக்கலாம்'
கல்வெட்டு ஆய்வாளர் புலவர் செ.ராசு கூறியது:
பழங்காலப் பொக்கிஷங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வமும், விழிப்புணர்வும் நம் நாட்டில் குறைவாக உள்ளது. பிற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் பழங்காலப் பொருள்கள் கிடைக்கின்றன. ஆனால், அவற்றை ஆவணப்படுத்துவதிலும், பாதுகாப்பதிலும் நாம் பின்தங்கியிருக்கிறோம்.
பண்டைய வரலாற்றைப் பறைசாற்றும் மிகவும் பழமையான கல்வெட்டுகள் காலப்போக்கில் காணாமல் போகின்றன. இதுகுறித்து தொல்லியல் துறைக்கும், அருங்காட்சியகத் துறைக்கும் எவ்வித அக்கறையும் இல்லை. ஈரோடு அருங்காட்சியகத்தில் சிலைகள் சாலையோரத்தில் கிடக்கின்றன எனப் பலமுறை உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதிவிட்டோம். இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சொந்தக் கட்டடம் கிடைக்கவில்லையெனில் குறைந்தபட்சம் இரும்புக்கூண்டு, கம்பி வலைகள் அமைத்தாவது பாதுகாக்கலாம்.
கோவில்களில் திருப்பணி செய்யும்போது பழைய சிலைகளை ஆறு, கிணறு, குளத்தில் போடும் பழக்கம் உள்ளது; இது தவறான நடைமுறை. அதற்குப் பதிலாக பழைய சிலைகளை தனியாக மேடை அமைத்துப் பாதுகாக்கலாம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.