கலாம் யார் என்கிற கேள்வியின் நாயகி!

‘ஹு இஸ் கலாம்?’ என்கிற புத்தகத்தின் தலைப்பு என்னவோ உள்நோக்கம் கொண்ட தலைப்பு போல தோன்றினாலும், அதற்கு பின்னால் நெஞ்சை இளக்கும் ஒரு கதகதப்பான நிகழ்வு உள்ளது. அந்த கேள்வியை கேட்டது ஒரு பதினான்கு
கலாம் யார் என்கிற கேள்வியின் நாயகி!
Updated on
2 min read

‘ஹு இஸ் கலாம்?’ என்கிற புத்தகத்தின் தலைப்பு என்னவோ உள்நோக்கம் கொண்ட தலைப்பு போல தோன்றினாலும், அதற்கு பின்னால் நெஞ்சை இளக வைக்கும் ஒரு கதகதப்பான நிகழ்வு உள்ளது. அந்த கேள்வியை கேட்டது ஒரு பதினான்கு வயதுச் சிறுமி. அந்த கேள்விக்கு கலாம் தந்த பதிலின் விளைவாக, அந்தச் சிறுமி அவரின் எண்ணங்களில் ஈர்க்கப்பட்டு, உந்தப்பட்டு, இன்று அவரைப் போலவே ஒரு சிறந்த விஞ்ஞானியாக உருவெடுத்திருக்கிறார்.

அவள் பெயர் சுடர்கொடி சுகுமார். மேற்சொன்ன சம்பவம் நடந்தது 2001-ல். அப்போது அந்தச் சிறுமிக்கு வயது 14. தமிழ்நாட்டில் உள்ள வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். குழந்தைகளுக்கான ஒரு தமிழ் மாத இதழில் அவர் டாக்டர் கலாமுக்கு ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார். அப்படி அந்த கேள்வியை எழுப்பிய தருணத்தில், அந்த சிறுமி தன்னுடைய கேள்வி அணு விஞ்ஞானியும், மனிதநேயவாதியும், கல்வியாளரும், அப்போதைய ஜனாதிபதியுமான  டாக்டர் அப்துல் கலாம் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப ்போகிறது என்றும், அதன் விளைவாக கலாம் தன்னுடைய ஒரு புத்தகத்திற்கு அவள் எழுப்பிய அந்த கேள்வியின் தாக்கத்தால் மேற்படி தலைப்பை கலாம் கண்டடையப் போகிறார் என்று அவளுக்கு நிச்சயமாக தெரியாது.

கேள்வி இது தான். தங்களின் பல பரிமாணங்களான விஞ்ஞானி, மனிதாபிமானி, தமிழன், இந்தியன் என்கிற அடையாளங்களை தயவுசெய்து வரிசைப்படுத்தவும் என்பதே சுடர்கொடி கேட்டிருந்த கேள்வி. அதற்கு கலாம் அளித்திருந்த பதில் இதோ. ஒரு நல்ல மனிதனிற்குள்/மனுசிக்குள் இந்த மூன்று பரிமாணங்களையும் காண முடியும்.

வருடம் 2003. குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே. அப்துல் கலாம் அவர்களின் ‘ஹு இஸ் கலாம்?’ என்கிற புத்தக வெளியீட்டு வைபவம். எழுதியவர் கலாமின் அந்தரங்க காரியதரிசி ஆர். ராமநாதன். அதில் கலாம் என்கிற விஞ்ஞானியின் அந்தரங்க மனவுலகின் வண்ணங்களை எழுத்தோவியாக்கி இருந்தார். புத்தகத்தை வெளியிட்டவர் அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய். அப்துல் கலாம் அந்த புத்தகத்தை யாருக்கு சமர்ப்பணம் செய்திருந்தார் தெரியுமா? சுடர்கொடி! அவரை பல விதமாக சிந்திக்க வைத்த அதே சிறுமி.

இந்த தலைப்பை புத்தகத்திற்கு பரிந்துரைத்தவரும் கலாம்தான். இந்தத் தகவலை இந்த நூலின் பதிப்பாளரான கோனார்க் பதிப்பக உரிமையாளர் கே.பி.ஆர். நாயர் அவர்களே பதிவு செய்திருக்கிறார். தான் இந்த நூலுக்கு பல தலைப்புகளை பரிந்துரைத்ததாகவும், டாக்டர் கலாம் அவர்கள் அதையெல்லாம் விடுத்து, சுடர்கொடி கேட்ட கேள்வியின் உந்துதலில் உதயமான ‘ஹு இஸ் கலாம்?’ என்கிற தலைப்பையே உறுதி செய்ததாகவும் குறிப்பிடுகிறார். இந்த நூல் இதுவரை 12 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெற்றிகரமாக பிரசுரமாகியிருக்கிறது.

இதற்கிடையில் சுடர்கொடி டாக்டர் கலாமின் பதிலில் உந்தப்பட்டு, அவரைப் போல ஒரு சமூக அக்கறை கொண்ட மனிதநேய விஞ்ஞானியாக மாறுவதென தன் இலக்கை தீர்மானித்து, அதன்படி சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் பி.டெக் எஞ்ஜினியரிங் முடித்து, பின் சிங்கப்பூர் சென்று பி.ஹெச்.டி என்கிற முனைவர் பட்டமும் பெற்று, தற்சமயம் ஐஐடி சென்னையில் விஞ்ஞானியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

அவருடைய குறிக்கோள் என்னவென்று கேட்டால், தன்னுடைய ஆய்வுகள் அனைத்தும் மக்களுக்கு பயன் தரக்கூடியதாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே என்கிறார். மேலும் டாக்டர் கலாமை தான் சந்தித்த அந்தத் தருணம், தன் வாழ்நாள் முழுவதும் தனக்குள்ளான பரவசத்தையும், உத்வேகத்தையும் தக்க வைக்கும் சக்தி கொண்டது என்று நெகிழ்ச்சியாக கூறினார்.

டாக்டர் கலாம், சுடர்கொடியைப் போல எத்தனையோ மாணவர்கள் மனத்தில் கல்விச்சுடர் ஏற்றி வைத்திருக்கிறார். இனியும் ஏற்றி வைத்துக் கொண்டேயிருப்பார்.

அவரின் அந்த நூலை தொடர்ந்து கோனார்க் பதிப்பகம் ‘சில்ரன் ஆஸ்க்’ என்கிற நூலை வெற்றிகரமாக 2006-ல் வெளியிட்டிருப்பதையும், அதில் கலாமும் மாணவமாணவியர்களும் அப்போது ஏற்பட்ட பல பயனுள்ள அனுபவங்களையும், அதன் உரிமையாளரான நாயர் நெகிழ்வோடு ஐஏஎன்எஸ்-க்கு அளித்த பேட்டியில் நினைவு கூறுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com