பெண்கள் திருமணத்திற்கு தயங்குவது ஏன்?

திருமணம் பெண்ணின் வாழ்வில் முக்கியமான வைபவம். பெண் திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் சென்றுவிட்டால் தன் கடமை முடிந்தது என்று நினைக்கும் பெற்றோர்கள்தான் நம் நாட்டில் அதிகம் உள்ளனர். ஆனால் படிப்பும், வேலையும்
பெண்கள் திருமணத்திற்கு தயங்குவது ஏன்?
Updated on
4 min read

திருமணம் பெண்ணின் வாழ்வில் முக்கியமான வைபவம். பெண் திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் சென்றுவிட்டால் தன் கடமை முடிந்தது என்று நினைக்கும் பெற்றோர்கள்தான் நம் நாட்டில் அதிகம் உள்ளனர். ஆனால் படிப்பும், வேலையும் பொருளாதார சுதந்திரமும் பெண்களின் மனநிலையை கொஞ்சம் மாற்றியுள்ளது. திருமணத்திற்கு என்ன அவசரம், மேற்படிப்புக்கு அல்லது வேலை உயர்விற்காக திருமணத்தை தள்ளிப்போடுகிறார்கள். திருமணம் என்பது அவரவர் சொந்த முடிவு, இதில் சரி தவறு என்று சொல்ல முடியாது ஆனால் இத்தகைய போக்குகளின் பாதிப்புக்கள் பற்றி கீதம் மேட்ரிமோனியல் நிறுவனர் கீதா தெய்வசிகாமணி அவர்களிடமும், மனநல மருத்துவர் அபிலாஷாவிடமும் விரிவாகப் பேசினோம்.

கீதா தெய்வசிகாமணி, நிறுவனர். கீதம் மேட்ரிமோனியல்

கீதம் மேட்ரிமோனியல் தொடங்கி பதினெட்டு வருடங்கள் ஆகிறது முன்பு 100 வரன்களில் 50 50 என்ற விகிதத்தில் ஆண் பெண் ஜாதகங்கள் எங்களிடம் வரும். ஆனால் தற்போதைய நிலை 100 ஆண்களின் ஜாதகம்  வருகிறது என்றால் 15 பெண்களின் ஜாதகம்தான் கையில் இருக்கும் நிலை. பல பெண்கள் திருமணம் இப்போது வேண்டாம் என்று சொல்கிறார்கள். இது சற்று அதிர்ச்சியான விஷயம். இதற்கு காரணங்கள்:

* பெண்களுக்குக் கிடைத்துள்ள பொருளாதாரச் சுதந்திரம் ஒரு முக்கியமான காரணமாகச் சொல்லலாம். அந்தக் காலத்தில் படித்த பெண்கள் தங்கள் வீட்டின் பண விஷயங்களை நிர்வகிக்கவும், குழந்தைகள் வளர்ப்பிலும் மட்டும் படிப்பறிவை பயன்படுத்தினார்கள். ஆனால் தற்போதைய நிலை அப்படி இல்லை, பெண்கள் தங்களின் படிப்பு வீணாகிவிடக் கூடாது என்பதில் அதிக கவனத்துடன் இருக்கிறார்கள்.

விலைவாசி ஏற்றங்களால் குடும்பத்தில் கணவன் மனைவி என இருவரும்  சம்பாதித்து ஆக வேண்டிய சூழலில் நல்ல சம்பளம் நல்ல வாய்ப்புக்கள் கிடைப்பதால் தங்களை அறியாமேலேயே பெண்களுக்கு அதிக ஈகோ வந்துவிடுகிறது. சிலருக்கு இந்தக் கர்வம் வந்துவிடுவதால் நிதானம் இருப்பதில்லை. இளம் வயதில் சரியான வகையில் மனத்தெளிவு வருவதற்கு முன்னரே, கை நிறைய பணம் சம்பாதிப்பதால் அவர்களுக்கு ஈகோ அதிமாக வந்துவிடுகிறது. பெற்றோர்களை மட்டுமல்ல யாரையும் மதிக்காத வண்ணம் அது தலைக்கேறிவிடுகிறது. சம்பாதித்த பணத்தை தங்களின் சந்தோஷத்திற்கு செலவு செய்வதில் நாட்டம் அதிகரித்துவிடுகிறது. பெற்றோர்களும் தங்களுக்கு ஓய்வூதியமாகக் கிடைத்த தொகையை தங்கள் மகள் ஒரே மாத சம்பளத்தில் பெற்றுவிடுவதால் பிரமிப்பு ஏற்பட்டு, அவர்களை எதிர்த்து எதுவும் கேட்பதில்லை

ஒரு அறையில் கதவை அடைத்துக் கொண்டு பிஸி என்பதும், இரவு நேரம் கழித்து வீட்டுக்கு வருவதும், நீண்ட நேரம் இணையத்தில் அல்லது ஃபோனில் பேசுவதுமாக இருக்கும் புதுயுக பெண்களிடம் மனம்விட்டுப் பேச பெற்றோர்கள் கூட பேசத் தயங்குகிறார்கள்.

வேலையில் டென்ஷன் எரிச்சல் இருப்பதால் வீட்டிலாவது நிம்மதியாக இருக்கட்டும் என்று நினைக்கும் பெற்றோர்கள் அவர்களை அதிகம் கேள்விகள் கேட்பதில்லை.

பெண்களுக்கு தன்னம்பிக்கை மிகவும் நல்லது ஆனால் அது தலைக்கனமாகிவிடக் கூடாது. இரண்டிற்கும் நூலிழை வித்யாசம் தான் உள்ளது. இக்கால பெண்கள் எதிர்மறை எண்ணங்கள் நிறைய வளர்த்துக் கொள்வது சோகம். பெரும்பால பெண்களுக்கு திருமண உறவில் நம்பிக்கை இருப்பதில்லை. காரணம் ஆண்கள் மேல் தவறான அபிப்ராயம். தவிர தோழிகளின் தேவையில்லாத அறிவுரைகள், கல்யாணமா இப்பவேவா? வேண்டாம் சிக்கிப்பே அவ்ளோ தான் இனி ஹோம் மேக்கர் குக்கர் என்று கேலி செய்தும், நண்பர்கள் கொடுக்கும் முன் எச்சரிக்கை என்று பல விஷயங்களால் குழப்பம் அடைகிறார்கள்.

பெற்றோர்கள் மகள்  புது அப்பார்ட்மெண்ட் வாங்கி இருக்கிறாள் அவளை விட அதிகமான பண வசதியும் படிப்பும் உள்ள மாப்பிள்ளைதான் வேண்டும் அப்படித்தான் தங்கள் மகள் எதிர்ப்பார்க்கிறாள் என்று சொல்லி வரன்களைத் தட்டிக் கழிக்க ஆரம்பித்துள்ளார்கள். பொருளாதார சுதந்திரம் போதும் என்று பெற்றோர்கள் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள் என்பது வருந்தத்தக்கது.

டாக்டர் அபிலாஷா, மனநல மருத்துவர்

இதற்கு முந்தைய தலைமுறை ஆண்களுக்கு பெண்களுடன் பழகும் வாய்ப்புக்கள் மிகவும் குறைவு. நமக்கு என்று ஒரு ஆண் அல்லது பெண் வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் இப்போது நம் சமூகம் ஆண்கள் பெண்கள் கலந்து பழகும் நிலை அதிகமாகிவிட்டதால், ஆண் பெண் நட்பு என்பது சமூகம் ஏற்றுக் கொண்ட ஒரு விஷயமாகிவிட்டது.  மனைவியின் ஆண் நண்பர்களைக் கணவனும், கணவரின் நட்புகளை மனைவியும் புரிதலுடன் அணுகும் காலகட்டமிது.  பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகத்தில் ஆண்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்துவிட்டதால், ஒரு ஆணுடைய தேவை அதற்கு மேல் எதற்கு என்று பல பெண்கள் நினைக்கத் தொடங்கிவிட்டார்கள். எப்போ அந்தத் தேவையை உணர்வார்கள் என்றால், சமூக அங்கீகாரத்துக்கும் குழந்தை பெற்றுக் கொள்வதற்கும் மட்டும்தான். மற்றபடி ஷாப்பிங், ஹோட்டல், தியேட்டர் என்று எங்கு செல்ல வேண்டுமென்றாலும் முன்பெல்லாம் தந்தை, சகோதரர்கள் அல்லது கணவனுடன் மட்டும் சென்று கொண்டிருந்த பெண்கள் இப்போது நண்பர்களுடன் அலுவலக சகாக்களுடன் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அல்லது தனியே போகும் அளவிற்கு துணிவு பெற்றுள்ளார்கள்.  இந்த மாற்றங்கள் ஒரு ஆணின் தேவையைப் பற்றிய கேள்வியை அவர்கள் மனதில் எழுப்புகின்றது.

பெண்கள் திருமணத்திற்கு தயங்க சில காரணங்கள்

* திருமணமான நண்பர்கள் உறவினர்கள் சந்திக்கும் பிரச்னைகளை பிரிவுகளைப் பார்த்து  தனக்கும் இது போல் நேர்ந்துவிடுமோ என்ற பயத்தில் முன்முடிவுடன் இப்போது வேண்டாம் அல்லது வேண்டவே வேண்டாம் என்று தவறான முடிவை எடுப்பது.

* வீட்டில் அதிக செல்லம் சலுகைகளுடன் வளரும் பெண்கள் என்னை அடக்கி ஆள நினைக்கும் ஒருவனிடம் போய் சிக்கிவிடக் கூடாது சுதந்திரம் பறி போய் விடும் என்று நினைப்பது.

* ஒரு குழந்தைக்குத் தாயாகி விடுகையில் குடும்பச் சுமை அழுத்தம் தரும். அதன் பின் சந்தோஷம் கிடைக்காது என்று தேவையற்ற பயங்களை உருவாகிக் கொள்வது.

* என்னுடைய சந்தோஷம் ஒரு திருமண உறவில் மட்டுமில்லை நான் தனியாகவே சந்தோஷமாக இருந்து கொள்ள முடியும் என்று தீர்மானமான முடிவை ஆரம்பத்திலேயே எடுப்பது.

* பெற்றோர்கள் தங்கள் கடமை என்று நினைத்த ஒரு விஷயம்  மெல்ல மாறிவருகிறது. அடிப்படையான திருமண அமைப்பு மெல்ல மாறி வருவது.

* திருமண வாழ்க்கையின் ஏமாற்றங்கள் ஏற்பட்டால் என்ன செய்வது என்று யோசிப்பது.

கடந்த தலைமுறையில் பெற்றோர்கள் எப்படியாவது கெஞ்சியோ கட்டாயப்படுத்தியோ தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லியே பெண்களுக்கு திருமணம் செய்து விடுவார்கள். ஆனால் சமீப காலமாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் அதிகம் பேசும் வாய்ப்பே அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அப்படியே எதாவது சந்தர்ப்பத்தில் சொன்னாலும் அதைக் கேட்கும் மனநிலையில் இன்றைய பிள்ளைகள் இல்லை.

இப்படி சில காரணங்களால் திருமணத்தைத் தள்ளிப் போட்டு பின் கடைசியில் தங்களுக்கு வயதாகிவிட்டது என்ற எண்ணம் திடீரென்று வந்துவிட்டால் மிகவும் பதற்றமாகி விடுகிறார்கள். தங்களின் நட்பு வட்டத்தில் பெரும்பாலானோர் திருமணமாகி குழந்தைகள் பெற்று அவர்கள் வளர்ந்துகொண்டிருக்க தாங்கள் தனிமைப்பட்டுப் போனது போல் விரக்தி அடைகிறார்கள். தவிர அலுவலக வேலைகளில் கடுமையான சூழல்களால் மன அழுத்தம் அதிகரிக்கையில் தேவையற்ற வியாதிகளை இவர்களே வரவழைத்துக் கொள்வார்கள். அதற்குப் பின் திருமணம் நடந்தாலும் அவர்கள் பெற்றோர்களுக்கு அதிக வயதாகிவிட , பிறக்கும் குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வது என்ற பிரச்னையையும் யோசிக்க வேண்டியுள்ளது. குழந்தைகள் காப்பகத்தில் விட்டு விட்டு வேலைக்குச் செல்கையில் இன்னும் மனம் அழுத்தம் அதிகரித்து ஏன் தான் திருமணம் செய்து கொண்டோமோ என்று தங்களையே குறை கூறுவார்கள். எனவே இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க சரியான வயதில் திருமணம் செய்துகொள்வதே நல்லது. அப்படியே தவிர்க்க முடியாமல் தாமதம் ஏற்பட்டாலும் நன்கு யோசித்தே வாழ்நாள் முழுவதும் தொடரப்போகும் இந்த் உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com