மீண்டும் கடிதம் எழுதலாமா?

ஒருகாலத்தில் அமுதமாக இனித்த இந்தக் குரல் இப்போதெல்லாம் கேட்கமுடிவதே இல்லை. ரொம்பவும் வருத்தமான விஷயம்தான். தூர
மீண்டும் கடிதம் எழுதலாமா?

ஸார் போஸ்ட்!

ஒருகாலத்தில் அமுதமாக இனித்த இந்தக் குரல் இப்போதெல்லாம் கேட்கமுடிவதே இல்லை. ரொம்பவும் வருத்தமான விஷயம்தான். தூர ஊர்களிலிருந்து தபால் வந்துவிட்டால் வீட்டில் இருப்பவர்களுக்கெல்லாம் கொண்டாட்டம்தான். கடிதத்தில் கடிதம் எழுதியவர்களை அல்லவா பார்த்தார்கள்!  ஆமை வேகத்தில் வருவதற்கு நாளானாலும் இந்தக் குரல் நமக்குப் பிடித்தவர்களிடமிருந்து செய்திகளை நமக்குக் கொண்டு வரும். ஆனால், அந்தக் காலம் இப்போது மலையேறிவிட்டது. தொலைப்பேசிக்கும், எழுதி முடித்து ‘அனுப்பு’ பட்டனை அழுத்திய அடுத்த நிமிடம் ‘உங்கள் செய்தி அனுப்பப்பட்டுவிட்டது’ என்று சொல்லி நம்மை கடிதம் எழுத சோம்பல்படும் கும்பலாக மாற்றிய கணினிக்கும் நன்றி!  

என் அம்மாவுக்கு இப்போதும் நாங்கள் கடிதம் எழுத வேண்டும் என்றுதான் ஆசை. ‘தொலைப்பேசியில் என்ன பேச முடிகிறது? அப்புறம் என்ன? வேறென்ன என்று சொல்லிச் சொல்லியே பேச்சை முடித்து விடுகிறோம். பேசியபின் அவை நினைவில் இருப்பதும் இல்லை. ஆனால் கடிதம் என்றால் திருப்பித் திருப்பி படிக்கலாமே?’ என்று சொல்லும் அம்மாவின் கூற்றிலும் உண்மை இருக்கிறது.

சமீபத்தில் அம்மாவிடமிருந்த சில பழைய கடிதங்களைப் படிக்கும் வாய்ப்பு  கிடைத்தது. எங்கள் பாட்டி, எங்கள் மாமா, என் அண்ணா வெளியூரில் வேலை பார்த்தபோது எழுதிய கடிதங்கள் எல்லாம் அம்மாவிடம் இன்றும் பத்திரமாக இருக்கின்றன. படிக்கப் படிக்க அந்தக் காலத்துக்கே போய்விட்டேன். இந்தக் கடிதங்களை மனப்பாடம் ஆகும்வரை திரும்பத் திரும்பப் படித்தது நினைவுக்கு  வந்தது. அதுமட்டுமா? நாங்கள் எல்லோருமே (கடிதங்கள் எங்கள் அம்மாவுக்கு என்று எழுதப்பட்டிருந்தாலும்) எல்லாக் கடிதங்களுக்கும் பதில் எழுதுவோம். எல்லோரும் எங்களையும் விசாரித்துக் கேட்டிருப்பார்களே! கடிதம் எழுதுவது என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயமாக இருந்த காலம் அது. எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதி மதிப்பெண்கள் வந்தவுடன் எல்லோருக்கும் கடிதங்கள் மூலம் தெரிவித்தது; உறவினர்களின் பெண்ணுக்கோ, பிள்ளைக்கோ கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்கிறது என்று கடிதம் மூலம் தெரிந்து சந்தோஷத்துடன் நிச்சயம் கல்யாணத்துக்குக் குடும்பத்துடன் வருகிறோம் என்று பதில் எழுதியது; நாங்கள் போடும் வேலை விண்ணப்பங்களுக்கு நேர்முகத் தேர்வுக்குக் கூப்பிடும் கடிதங்கள் என்று வகைவகையாக கடிதங்கள் எழுதியதும் பெற்றதும் நேற்றுபோல நினைவில் அப்படியே இருக்கிறது. இடையிடையே ஒரு உறவினருக்கு உடல்நலக்குறைவு, நெருங்கியவர்களின் மறைவு என்று வரும் கடிதங்கள் உற்சாகத்தைக் கட்டுப்படுத்தினாலும், கடிதங்கள் நிச்சயம் மகிழ்ச்சியைத் தரக்கூடியவையாகவே இருந்தன.

ஆ! சொல்ல மறந்துவிட்டேனே! கல்கியின் ‘அலைஓசை’ நாவலில் முதல் அத்தியாயம் தபால் சாவடி தானே? அங்கிருக்கும் பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டர் பங்காரு நாயுடுவையோ, தபால்காரர் பாலக்ருஷ்ணனையோ ‘ஜிங் ஜிங் ஜிக ஜிங்’ என்று ஈட்டி சிலம்பை குலுக்கிக் கொண்டு வரும் ரன்னர் தங்கவேலுவையோ மறக்க முடியுமா?

என்னைப்போலவே இதைப் படிக்கும் பலருக்கும் பலவித நினைவுகள் வரக்கூடும். ஆனால் கடிதம் எழுதுவது என்பது ஒரு பழைய விஷயம். அதை புதுப்பிக்க முடியுமா? புதுப்பித்துத்தான் என்ன செய்யப்போகிறோம்? என்றெல்லாம் தோன்றக்கூடும். இந்த டிஜிட்டல் யுகத்தில் இது தேவையா என்றும் நினைக்கலாம். ஆனால் லெட்டர்பார்ம்ஸ் (LetterFarms) குழுவைச் சேர்ந்த திரு ஜூபி ஜான் அப்படி நினைக்கவில்லை.

‘மின்னஞ்சல், குறும்செய்தி என்று இளையதலைமுறையினர் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது நாங்கள் கடிதம் எழுதுதல் என்னும் பழைய கலையை புதுப்பிக்க ஆசைப்படுகிறோம்’ என்கிறார் இந்த அமைப்பின் புரோக்ராம்-டைரக்டர் (தெற்கு மண்டலம்) திரு ஜூபி ஜான். ‘நீங்கள் கடிதம் எழுதுவதன் மூலம் வரலாற்றின் ஒரு மென்மையான பகுதியைத் தொடுகிறீர்கள். பயனுள்ள தகவல்களை அறிவிக்க கடிதம் எழுதுதல் மிகச் சிறந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வழிமுறை’ என்கிறார் அமெரிக்காவில் பல பெருநிறுவனங்களில் வேலை செய்தவர் இவர்.

‘நியூசிலாந்து நாட்டில் ஆராய்ச்சியாளர்கள் உணர்ச்சிகளை கடிதங்கள் மூலம் தெரிவிப்பது நமது மனநிலையை மேம்படுத்துவதுடன், நமது மன உளைச்சல்களையும் பெருமளவில் குறைக்கிறது என்கிறார்கள். கூடவே நமது ஆழ்ந்த மன உணர்வுகளை வெளிப்படுத்துவது நமது உடல்நலத்துக்கும் நன்மை பயக்கும் என்றும் இந்த ஆராய்ச்சியிலிருந்து தெரிய வந்திருக்கிறது’ என்று இவர் மேலும் கூறுகிறார்.

லெட்டர்பார்ம்ஸ் குழுவினர் கொச்சி மற்றும் கோட்டயம் பகுதிகளில் சுமார் மூன்று மாதங்கள் கடிதம் எழுதுவதைப் பற்றிய விழிப்புணர்வு முகாம்களை நடத்தினர். அதில் கலந்துகொண்ட பதின்மவயது சிறுவர் சிறுமியர் 5000 கடிதங்களை எழுதினர். இவர்களில் 82% முதன்முதலாகக் கடிதம் எழுதியவர்கள். பெரும்பாலான கடிதங்கள் பிரதமர் திரு மோடிக்கு எழுதப்பட்டவை!

இந்தியா முழுவதும் – புது தில்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, ஜெய்பூர், புனே, சண்டிகர், கொல்கத்தா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன. 10-லிருந்து 15 வயதுவரை உள்ள சிறுவர் சிறுமியர் சுமார் 50,000 பேர்களுக்குக் கடிதம் எழுதுதலை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதைக் குறிக்கோளாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்தக் குழுவினர்.

கேரளாவில் எடுத்த சமீபத்திய ஆய்வின்படி பதின்ம வயதுக்காரர்களில் 82% இதுவரை தங்கள் வாழ்நாளில் கடிதமே எழுதியது கிடையாதாம். மிகச் சுலபமாகவும், வேகமாகவும் தகவல் தொடர்பு இருக்கும் இந்தக் காலத்தில் இந்த முகாம்களில் கலந்து கொண்டவர்கள் கையால் கடிதம் எழுதுவதில் இருக்கும் ஒரு அண்மை, நெருக்கம் வேறெதிலும் கிடைக்காது என்று  கருத்து தெரிவித்தனராம்.

கடிதம் எழுதும் அமர்வின்போது மாணவர்கள் உள்நாட்டுத் தபால் காகிதத்தில்  எழுதவும் அதை எப்படி மடிப்பது எனவும் பயிற்சி பெற்றனர். கடிதம் எழுதும் பழக்கத்தை மறு ஆலோசனை செய்ய மாணவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். கடிதம் மூலம் தகவல் அனுப்புவது நம்மிடையே மறைந்து வருவது பற்றிய விழிப்புணர்வை இந்த முகாம்கள் ஏற்படுத்தின என்று கொச்சி கேந்திரிய வித்யாலயா முதல்வர் கூறினார்.

இந்த முகாம்களின் தனிச்சிறப்பு என்னவென்றால் இந்த அமைப்பினர்  தொழில்நுட்பத்துக்கு எதிரானவர்கள் இல்லை என்பதுடன் சமூக வலைத் தளங்களையும், இடைவினை வலைத்தளங்களையும் பயன்படுத்தி, பழையமுறையான கடிதம் எழுதுதலை எல்லோருக்கும் கொண்டு செல்வதுதான். கடிதம் எழுதுதலும், நவீன தகவல் தொடர்புகளும் ஒன்றாகச் செயல்பட முடியும் என்று இந்தக் குழுவினர் உறுதியாக நம்புகின்றனர்.

வரலாறு திரும்புகிறது என்பது போல பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டர் பங்காரு நாயுடுவும், தபால்காரர் பாலகிருஷ்ணனும், ரன்னர் தங்கவேலுவும் நம்மிடையே மறுபடியும் தோன்றுவார்களா? தோன்றினாலும் வியப்பில்லைதான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com