

இந்தியாவைப் பொருத்தவரை 70 சதவிகித பெண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பெண்ணிய இயக்கங்களும், சமூக ஆர்வலர்களும் போராடிய பின்னர் தான் 2005-ம் ஆண்டு குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டு 2006-ம் ஆண்டு இது சிவில் சட்டமாக அமலுக்கு வந்தது. ஆனால் இந்தச் சட்டம் ஆண்களுக்கு எதிரானது அல்ல. தவறு செய்யும் ஆண்களுக்கும், மனைவியை துன்புறுத்தும் வன்முறையாளர்களுக்கு மட்டுமே எதிரான சட்டம் இது. வீட்டுப் பிரச்னைகள் கோபதாபங்களை வெளிக்காட்டவோ வாழ்க்கைத் துணையை பழிவாங்கவோ பெண்கள் இந்தச் சட்டத்தை துஷ்ப்ரயோகம் செய்யக் கூடாது என்று பெண்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சமீபத்தில், 80-களில் பிரபலமாக இருந்த நடிகை ரதி அக்னிஹோத்ரி தனது 30 வருட காலத் திருமண உறவில் மிஞ்சியது வன்முறை மட்டுமே என்று கணவரின் கொடுமை தாளாமல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கிராமி அவார்ட் வாங்கிய அமெரிக்கப் பாடகி ப்ரூக் ஆக்ஸ்டெல் விருது பெற்ற தினத்தில் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் உலகப்பெண்கள் அத்தனை பேருக்கும் பொருத்தமானது.
பெண்கள் எவ்வளவுதான் படித்து பொருளாதார ரீதியாக முன்னேறி விட்டாலும், இன்றளவும் குடும்பம் என்ற அமைப்பின் கீழ் ஆக்கிரமிக்கப்பட்டு வெளியில் சொல்ல முடியாத வேதனைகளை மெளனமானச் சகித்துக் கொண்டு தான் வாழ்கிறார்கள். காரணம் குடும்ப மானம், கெளரவம், வாழ்வாதார நெருக்கடிகள் எனப் பலவற்றைச் சொல்லலாம். முந்தைய தலைமுறையினர் “நாங்க எல்லாம் கல்யாணம் பண்ணிக்கலையா, புருஷன்கிட்ட அடி உதை வாங்கலையா, இதெல்லாம் ஒரு விஷயமா? நல்லாதானே வாழ்ந்தோம், என்ன மோசம்? விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போனா கடைசி வரைக்கும் சந்தோஷமா இருக்கலாம். பொறுமையும் சகிப்புத்தன்மையும் தான் பெண்களின் குணம்” என்பார்கள். அன்பும் பரஸ்பர புரிதலும் எந்த உறவையும் பலப்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் தன்னைப் போல சகல விதத்திலும் சரிசமமான ஒரு உயிரை வதைப்பதும், பலம் அதிகமிருப்பதால் கொடுமைப்படுத்துவதும் எவ்விதத்தில் நியாயம்? பெண்கள் தான் அனுசரித்துப் போகவேண்டும், விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை போன்ற அறிவுரைகள் எதைச் சொல்ல முன்வருகிறது? எதை விட்டுக் கொடுப்பது? தன்மானத்தையா? அல்லது உயிரையா? இனி விட்டுக் கொடுக்க எதுவுமில்லை என்ற நிலை வந்தபிறகே பெரும்பாலான பெண்கள் மெளனம் உடைக்கிறார்கள்.
இன்று கிட்டத்தட்டச் சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பும் முன்னேற்றமும் அசுர வேகத்தில் உள்ளது. கல்வி, மேலாண்மை, சட்டம், நீதி, காவல், அரசியல் மற்றும் அறிவுத் தளங்களில் தம் பங்கேற்பின் மூலம் பல மாற்றங்களை பெண்கள் நிகழ்த்தி சாதித்து வருகிறார்கள். பத்தாம், பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகளில் தொடர்ந்து சில வருடங்களாகப் பெண்களே முதல் நிலையில் மதிப்பெண்கள் வாங்கிவருகிறார்கள். ஆனால் அவர்கள் வாழ்க்கையை திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின் என்று பிரித்தால் முன்னால் பெற்ற வெற்றிகளையும் சந்தோஷங்களையும் புறந்தள்ளிவிட்டு பிந்தைய வாழ்க்கையின் இறுக்கம் அவர்களை முடக்கிவிடுகின்றது என்பது கண்கூடு. அதற்காக திருமணமே தேவையில்லை பெண்கள் துணையின்றி தனியாக வாழுங்கள் என்று சொல்லும் கட்டுரை இதுவல்ல. ஒரு பெண்ணின் வெற்றியும் சமூகப் பங்களிப்பும் அவளது கணவன் அல்லது புகுந்த வீட்டின் கட்டுப்பாட்டில் இருப்பது சமூக அடுக்குகளில் நம் நாடு எந்த அளவிற்கு பின் தங்கியுள்ளது என்பதைப் புலப்படுத்துகிறது.
ஒரு பக்கம் பெண்களை தெய்வமாக உயர்த்தியும் இன்னொரு பக்கம் தொடர்ந்து இழிவுபடுத்தியும் வருவது நகரம் கிராமம் என்று வேறுபாடின்றி எங்கும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. பொதுவெளியில் ஆகட்டும் சொந்த வீட்டிலாகட்டும் வன்முறையில் வாழ்க்கையில் எதிர்கொள்ளாத எந்த ஒரு பெண்ணும் இருக்க முடியாது. அது உடல்ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ இருக்கலாம். அவர்கள் ஒருநாளும் தான் அனுபவித்த வேதனைகளை பகிர்ந்து கொள்ளாமலும் இருக்கலாம். ஆனால் இது அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக இல்லாமல் மனைவியை அவமதிப்பது தர்மப்படி மட்டுமல்லாது சட்டப்படியும் குற்றம் என்று ஆண்கள் உணரவேண்டும்.
பிரவீண் தனியார் கம்பெனியில் உயர் பதவியில் இருப்பவன். அவன் மனைவி அமுதா மல்டி நேஷனல் கம்பெனி ஒன்றில் கஸ்டமர் கேர் பிரிவில் வேலை செய்பவர். சில சமயம் இரவு வீடு திரும்ப லேட்டாகிவிடும். இதையெல்லாம் திருமணத்திற்கு முன்பு அமுதா தெரியப்படுத்தி அதற்குப் பிரவீண் சம்மதித்திருந்தாலும், அமுதா தாமதமாக வீடு திரும்பியதால் அவர்கள் திருமண உறவு பாதிக்க ஆரம்பித்தது. `ஊர் சுத்திட்டு வர்றியா, உன் ப்ரெண்ட்சைப் பார்த்துட்டு வரியா, அம்மா வீட்டுக்குப் போனியா, ஏன் ஃபோனை எடுக்கலை?’ என்பதில் ஆரம்பித்து அவன் அவளை பலவாறு கேள்விகள் கேட்டு எந்த பதிலிலும் திருப்தியடையாமல் அடிக்கவும் செய்வான். பொறுத்துப் பார்த்த அமுதா ஒரு கட்டத்தில் அவனைத் திருப்பி அடிக்க, அது அவனது ஈகோவை வெகுவாகக் காயப்படுத்திவிட்டது.
புருஷனை கை நீட்டி அடிக்கற பொம்பளை நல்லவளாவே இருக்க முடியாது என்று அடிக்கடி சொல்லி வந்தவன் ஒரு தடவை அவளை சேரில் கட்டிப் போட்டு திருப்பி அடிக்கமுடியாத அளவுக்கு செய்த பின் பலமாக அடித்துள்ளான். முகம் எல்லாம் வீங்கி, அழுது, அவமானத்தில் துடித்த அமுதா அடுத்த நாள் செய்த முடிவு குடும்ப வன்முறைச் சட்டத்தை கையில் எடுத்தது தான். செக்ஷன் 495 ஏ வில் தனக்கான தீர்வைக் கண்டு அடைந்து வெற்றியும் பெற்றாள். அவள் அடிப்பட்ட நிலையில் புகைப்படங்கள் எடுத்தும் பிரவீண் அவளை கண்டபடி திட்டி அனுப்பிய மெசேஜ்களை அழிக்காமல் இருந்ததால் நியாயமாக தனக்குக் கிடைக்க வேண்டிய தீர்ப்பைப் பெற்றாள் அமுதா.
எம் பி ஏ படித்து பெரிய கம்பெனியில் அதிக சம்பளம் வாங்கும் அமுதாக்களுக்கே இந்த நிலை என்றால், அதிகம் படிக்காத கணவனையே தன் தேவைகள் அனைத்திற்கும் சார்ந்திருக்கும் பெண்களின் நிலை என்னவாக இருக்கும்? அவர்கள் அத்தனை எளிதில் கணவருக்கு எதிராக புகார் கொடுக்க முன் வர மாட்டார்கள். முதல் காரணம் பயம். புகார் கொடுத்துவிட்டு அதே வீட்டில் தொடர்ந்து இருக்க முடியுமா, மேலும் மேலும் துன்புறுத்தல்களுக்கு ஆளாக நேருடுமே என்று வெளியில் சொல்லாமல் பிரச்னையில் உழன்று தங்களையே உருக்குலைத்துக் கொள்வார்கள்.
புகார் அளிப்பதற்கு முன்னரோ அதற்குப் பின்னாலோ கணவர் மனைவியை வீட்டு விட்டு வெளியேற்ற முடியாது. கணவன் வீட்டில் வாழ்கினற உரிமை எல்லாப் பெண்களுக்கும் உள்ளது என்கிறது குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம். கணவனானவன் தன் மனைவியின் செலவுகளுக்குத் தேவையான பணம் தராமல் இருப்பதும் (பொருளாதார வன்முறை), தகாத வார்த்தைகளால் திட்டுவதும், அவதூறு செய்வதும், வரதட்சணைக் கேட்டு துன்புறுத்துவதும் (வார்த்தைகளால் வன்முறை) மற்றும் தன்னைப் போன்ற சக மனித உயிராய் மதிக்காமல் புறக்கணிப்பதும் (உணர்வு ரீதியான வன்முறை) குடும்ப வன்முறைக்கு உட்பட்டது. தாலி கட்டிய ஒரே காரணத்திற்காக மனைவியிடம் இது போன்ற வன்முறைச் செயல்களால் துன்புறத்த முடியாது.
இப்படிப்பட்ட வன்முறை சூழல்களில் தொடர்ந்து வாழும் பெண் மனரீதியாக பாதிக்கப்படைகிறாள். ஆனால் தங்கள் உரிமையை விட்டுக்கொடுக்காமல் அதே சமயம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் சட்டத்தில் வழி உள்ளது என்ற விழிப்புணர்வு இல்லாததால் அநேகப் பெண்கள் அவதிக்கு ஆளாகிறார்கள். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண், அருகிலுள்ள மாவட்ட சமூக நல அதிகாரியிடம் நேரிலோ, கடிதம் அல்லது இமெயில் மூலமாகவோ முதல் கட்ட புகாரினை அளிக்கலாம். அல்லது 1098 என்ற தொலைபேசி எண்ணில் குடும்ப வன்முறை தொடர்பான புகாரை அளிக்கலாம். வன்முறையாளரும், வன்முறையில் பாதிக்கப்பட்டவரும் கணவன் மனைவியாகவோ அல்லது லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் ஒரே வீட்டில் வாழ்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது தான் இதில் முக்கியம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்காக பாதுகாப்பு அதிகாரிகளும், சேவை மையங்களும் உள்ளன. சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகாரி உள்ளார். மாவட்டம்தோறும் உள்ள பாதுகாப்பு அதிகாரி ஒருவரிடம் முறையிடலாம். பெரும்பாலும் பெண்கள்தான் அந்தப் பொறுப்பில் இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரை அழைத்து கவுன்சிலிங் செய்வதுதான் அவர்களின் முதல் கட்ட நடவடிக்கை. இந்தச் சட்டத்தின் கீழ் கணவர் மீது வழக்கு தொடுக்கலாம். வழக்கறிஞர் வைத்து வாதாட வசதியற்ற பெண்களுக்கு இலவச வழக்கறிஞர் சேவை யும் அளிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் அளித்தபின்னர், பாதுகாப்பு அதிகாரி குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரிப்பார். விசாரணையில், குற்றம் நடந்திருக்கலாம் என்று அவர் முடிவெடுத்தால், நீதித்துறை நடுவரிடம் மனு செய்து குடும்ப வன்முறை தடுப்பு உத்தரவை அவர் பெற வேண்டும். கணவர் அடிக்கக் கூடாது, துன்புறுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை இவ்வாறு பெற முடியும். அதன் பிறகும், குற்றம்சாட்டப்பட்டவர் அதே செயலில் ஈடுபட்டால் அவர் குற்றம் புரிந்தவர் என நிரூபணம் ஆகி, சிவில் சட்டமாக இதுவரை இருந்தத விஷயம், கிரிமினல் சட்டமாக மாறிவிடும். அதையும்மீறி வன்முறை புரியும் நபருக்கு சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.
மேற்படிப்பு முடித்து, நல்ல வேலை பெரிய சம்பளம், தானே தேர்ந்தெடுத்த அல்லது பெற்றோர்கள் அவளுக்கு ஏற்ற மாப்பிள்ளைப் பார்த்து மணமுடித்த பின்னர் பெண்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா என்றால் இல்லை என்று தான் குடும்ப நீதிமன்றங்களில் வாயிற்புறங்கள் சொல்கின்றன. கணவர் தன்னை மதிக்கவில்லை, அதிகம் எதிர்ப்பார்க்கிறார், சந்தேகப்படுகிறார், தினமும் குடித்துவிட்டு அடிக்கிறார், வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என்பதுதான் பெரும்பாலான வழக்குகளின் காரணங்கள். செக்ஷன் 12 பி மூலம் விவாகரத்துப் பெற்று பிரிந்துவிடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகம்.
பெண்கள் ஆண்களிடம் அடங்கியே போக வேண்டும் என்ற மனோபாவம் பெரும்பாலான இந்திய ஆண்களிடம் இருக்கவே செய்கின்றது, பலர் பெண்களை சொத்தாகவே கருதுகின்றார்கள் .. திருமணம் என்பது பெண் மீது ஆண் பெறும் உரிமை என்றக் கருத்தியலும் இருக்கின்றது. கணவனை விட்டு விலகிவிட முடிவு செய்தாலும் முரண்பட்ட ஒத்துவராத திருமண உறவில் நீடித்திருக்கும்படி பெற்றோர்கள் தங்கள் பெண்களுக்கு இப்போதும் கூட வலியுறுத்துகிறார்கள். பெண்கள் சுயமானவர்கள், அவர்களுக்கும் தனிப்பட்ட ஆசைகள், சுய விருப்பங்கள், தேர்வுகள், உணர்வுகள், சுயமரியாதை உள்ளது என்பதை ஆண்கள் உணர வேண்டும். கணவன் மனைவியராய் இருந்தால் கூட இருவருக்கும் இடையே தனித்தன்மை இருக்கும், அதை மதித்து நடக்கவேண்டும். ஒரு கூரையின் கீழ் வாழும் போது அன்பும் நேசமும் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் நான் பெரியவன் நீ தகுதியற்றவள் போன்ற குற்றச்சாட்டுகள் இருக்குமானால் வாழ்க்கை பின்னடையத் தொடங்கிவிடும். குழந்தைகளை வளர்க்கும் போது பெண் குழந்தைகளுக்கும் தங்கள் சுயத்தை தன்னம்பிக்கையை உணரச் சொல்லித் தர வேண்டும். ஆண் குழந்தைகளுக்கு பெண்களை மதிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவன் வளர்ந்த பின் தன் மனைவியை சஹ்ருதயராய் மதித்து நிறைவான ஒரு வாழ்க்கையை வாழ்வான். நாளைய தலைமுறையினராவது வன்முறையைக் கைவிட்டு அன்பினால் மலரட்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.