சூப்பர் சிங்கர்: பூனைக்கு யார் மணி கட்டுவது?

அன்புள்ள ஜேம்ஸ் வசந்தன் அவர்களுக்கு,வணக்கம். உங்களைப் பலவருடங்களாக தொடர்ந்து தொலைக்காட்சியில்

 

ன்புள்ள ஜேம்ஸ் வசந்தன் அவர்களுக்கு,

வணக்கம். உங்களைப் பலவருடங்களாக தொடர்ந்து தொலைக்காட்சியில் (சன் தொலைக்காட்சியில் நீங்கள் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றிய காலத்திலிருந்தே) பல பரிமாணங்களில் பார்த்து வருபவள் நான். தற்போது இசையமைப்பாளர் ஆக உங்களது இன்னொரு பரிமாணத்தையும் பார்த்து பெருமை அடைகிறேன். மனமார்ந்த நல்வாழ்த்துகள்.


தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளை ரசிக்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவள். எனது கணவரும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகரே. தினமும் இரவில் பார்ப்பதுடன் அதன் மறுஒளிபரப்பையும் மாலை வேளைகளில் கேட்டு மகிழ்வோம்.

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக வந்து நீங்கள் ஒவ்வொருவரையும் உற்சாகப்படுத்துவதும், அவர்களைப் பற்றி நேர்மையான, நேர்மறையான விமரிசனங்கள் கொடுப்பதும், மற்ற நடுவர்களைப் போலில்லாமல் நறுக்கென்று விமரிசனம் செய்வது (ஒரு குடும்பத்தில் அம்மா சரியில்லை என்றால்....ஸ்ருதி மாதா இல்லையா? – ஷிவானி என்ற சிறுமி ஸ்ருதி சரியில்லாமல் பாடியபோது நீங்கள் கொடுத்த மிகவும் நறுக்கென்ற விமரிசனம்) உங்களது தனிப்பாணியாக இருப்பதும் எனக்குப் பிடித்த விஷயம். மற்றவர்கள் சொல்லத் தயங்குவதை நீங்கள் வெளிப்படையாக சொல்கிறீர்கள். அனுஷ்யாவிடம் – பறையடிப்பவரின் உள்ளக் குமுறலைப் பாடியபோது அழுத இந்தச் சிறுமி அடுத்தப் பாடலுக்கும் அழுதபோது - ‘ஒவ்வொரு பாடலுக்கும் நீ அழக்கூடாது. அந்தப் பாடலுக்கு நீ அழுதது இயற்கையாக இருந்தது. பாராட்டினார்கள். ஆனால், நீ ஒவ்வொரு பாடலுக்கும் அழுதால் அது உன் பலவீனத்தைக் காட்டும். தேவைப்பட்ட போது மட்டுமே அழ வேண்டும்’ என்று எல்லோர் முன்னிலையிலும் அழுத்தம் திருத்தமாகக் கூறியது இதற்கு ஒரு நல்ல உதாரணம். மாளவிகா ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன?’ பாடலில் ஜதியையும் சேர்த்துப் பாடி பாடலை சரியாகப் பாடமுடியாமல் போனபோது கூறிய அறிவுரை, அனல் ஆகாஷுக்குப் பாட வாய்ப்புக் கொடுப்பதாகச் சொல்லி – ஆனால் உன் படிப்பு முடிந்தபின் என்றது, என்று சூப்பர் சிங்கரில் உங்களது பங்களிப்பு மிகச் சிறப்பாக இருக்கிறது. பாராட்டுக்கள்.

வெறும் பாராட்டுக்கு மட்டுமே அல்ல இந்த மடல் என்பதை உங்கள் உள்ளுணர்வு நிச்சயம் சொல்லியிருக்கும். பாராட்டுக்களைத் தாண்டி சில விஷயங்களை உங்களிடம் சொல்ல வேண்டும். நான் நினைப்பதை பெரும்பாலானோரும் நினைத்திருப்பார்கள். பூனைக்கு யார் மணி கட்டுவது? இதோ நான் அந்த வேலையைச் செய்கிறேன். இப்போது நடக்கும் சூப்பர் சிங்கர் டி20 போட்டிகளில் ஒரு வாரம் ராஜேஷ் வைத்யா வந்திருந்தார். அவருடன் கூட இன்னும் சில கலைஞர்கள்.

ராஜேஷ் வைத்யா


பின்னணி இசையை இவர்கள் அளிக்க, போட்டியாளர்கள் பாடினார்கள். இங்குதான் எனக்கு ஒரு மனத்தாங்கல். பின்னணி இசைப்பவர்கள் பாடகர்களின் இசையை ஒட்டி வாசிக்காமல் தங்களது மேதமையைக் காண்பிக்க வாசித்தனர். முக்கியமாக சோனியா பாடிய ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்?’ பாட்டுக்குப் பின்னணி இசை முன்னணிக்கு வந்துவிட்டது. இசை என்பதை விட இரைச்சல் என்று சொல்லலாம்!

மனதை வருடும் இசை. சிந்தனையைத் தூண்டும் பாடல்வரிகள். சோனியாவின் குரலில் மனத்துக்கு இதமாக இருக்க வேண்டிய பாடல், இந்தப் பின்னணிக் கலைஞர்களின் கைவரிசையில் இரைச்சலாகி மறைந்தே போனது. நீங்கள் நிச்சயம் இதைச் சுட்டிக் காட்டுவீர்கள் என்று நினைத்தேன். நீங்களோ ‘ம்யூசிக் ஷோ அல்ல இது; மாஜிக் ஷோ’ என்று புகழ்ந்து தள்ளிவிட்டீர்கள்.

ராஜேஷ் வைத்யாவின் மேதாவித்தனம் உலகறிந்த விஷயம். அவர் தன்னை ஒவ்வொரு முறையும் நிரூபித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதுவும் பின்னணி இசைக்கென்று வந்துவிட்டு பாடுபவரின் குரலை மறைக்கும் அளவுக்கு வாசிக்கலாமா?

சூப்பர் சிங்கர் ஜூனியர் 4 போட்டியின் போதும் இதேபோல விக்கு விநாயக்ராம் அவர்களின் புதல்வர் கார்த்திக், ராஜேஷ் வைத்யா ஆகிய இருவரும் வந்திருந்தனர். சில குழந்தைகளால் மட்டுமே இவர்களது பேரிரைச்சலை மீறிப் பாட முடிந்தது. பாவம் அனல் ஆகாஷ்! அந்தச் சிறுவனின் குரலை இவர்களது இசை மூழ்கடித்துவிட்டது. இவர்கள் எல்லோருமே முன்னணிக் கலைஞர்கள். இவர்களால் பின்னணி இசை இசைக்க முடியாது. பின் எதற்கு இவர்களைக் கூப்பிட வேண்டும்? இதே போட்டியில் ஒரு சிதார் கலைஞர் வந்திருந்தார். மிகஅமைதியாக இந்தக் குழந்தைகளின் கவனம் கலையாமல், அவர்களுக்கு அனுசரணையாக  வாசித்தார். உங்களுக்கும் இது தெரிந்திருக்கும். இந்த விஷயத்தை உங்களால் மட்டுமே ராஜேஷ் வைத்யாவின் கவனத்துக்குக் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன்.

இன்னொரு விஷயம்: மிகவும் முக்கியமான விஷயம்.

ஜூனியர் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளை மீண்டும் மீண்டும் கூப்பிட்டு புகழ் போதையில் நிற்க விடவேண்டாம் என்று ஒரு அம்மாவாக, ஒரு பாட்டியாக, ஒரு சக மனுஷியாக, அந்தக் குழந்தைகளின் எதிர்காலத்தில் அக்கறை உள்ள ஒரு பெண்மணியாக உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். இந்த விஷயத்தை விஜய் தொலைக்காட்சி சானலிடம் சொல்ல இயலாது. அவர்கள் பணம் பண்ணுவதே இந்தச் சிறுவர்களை வைத்துத்தான். நீங்கள் ஒவ்வொரு குழந்தையும் பாடி முடித்தவுடன் ஒரு விஷயம் சொல்வீர்கள்: ‘இந்தப் புகழ், கைத்தட்டல் எல்லாம் உங்கள் தலைக்கு ஏறக்கூடாது. நீங்கள் எப்போதும்போல இருக்க வேண்டும்’ என்று. ரொம்பவும் தேவையான அறிவுரை. ஆனால் திரும்பத்திரும்ப அவர்களைக் கூப்பிட்டு, கைத்தட்டலுடன் பணமும் கிடைக்கும்படி செய்தால் உங்கள் அறிவுரையின் கதி என்ன?

குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் அவர்களின் பெற்றோர்கள்? அவர்களும் விஜய் தொலைக்காட்சி சானலுடன் சேர்ந்து தங்கள் குழந்தைகளின் திறமையை விலை பேச ஆரம்பித்துவிடும் அபாயம் இருக்கிறது, இல்லையா? ஸ்பூர்த்தி இரண்டு வயதுக் குழந்தையாக இருக்கும்போதே ஒரு இசைப் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறாள். மைக் முன்னால் உட்கார்ந்துகொண்டு ‘சத்யம், சிவம், சுந்தரம்’ பாடலைப் பாடும் காணொளி ஒன்றை யூடியுபில் பார்த்தபோது எனக்கு சந்தோஷம் ஏற்படவில்லை. அந்த இரண்டு வயதுக் குழந்தையின் திறமையை போஷித்து வளர்க்காமல் இப்படி போட்டியில் பாட விடுகிறார்களே என்ற ஆதங்கம்தான் ஏற்பட்டது.

விஜய் தொலைக்காட்சி வெற்றி பெற்றவர்களையும், போட்டியில் பங்கு பெற்றவர்களையும் கைவிடாது. திரும்பத் திரும்பக் கூப்பிட்டு அவர்களின் வளர்ச்சிக்கு உதவும் என்ற பெயர் இருக்கிறது. இது சீனியர்களுக்குப் பொருந்தும். நிச்சயம் ஸ்பூர்த்திக்கோ, அனுஷ்யாவுக்கோ பொருந்தாது. அவர்கள் இருவரும் 9 வயதுக் குழந்தைகள். பிறவி மேதைகள் என்று இவர்களைப் புகழலாம். தப்பே இல்லை. ஆனால், இருவரும் நல்ல மிமிக்ரி செய்யும் கலைஞர்கள் என்பது என் அபிப்பிராயம். காதால் கேட்பதை அப்படியே பாடிவிடுகிறார்கள். ஸ்பூர்த்திக்கு இப்போதே குரல் மிகவும் பழகிவிட்டது. அவளால் மென்மையான பாடல்களைப் பாட முடியுமா என்பது சந்தேகமே. ஸ்பூர்த்தியை விட இன்னும் ஒருபடி கீழே இருப்பவள் அனுஷ்யா.

இந்த இரு சிறுமிகளும் இன்னும் ஒரு பத்து வருடங்களுக்கு சங்கீதம் பயிலவேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும். அப்போதுதான் தங்களுக்கென்று சங்கீத வானில் ஒரு இடத்தைப் பிடிக்க முடியும். இருவருக்கும் இந்தப் பயிற்சி, உழைப்பு இரண்டுமே முக்கியம். இதை அவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள், ப்ளீஸ்!

எனக்குக் குழந்தை மேதைகள் என்னும்போது நினைவுக்கு வரும் இருவர், மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மற்றும் மகாநதி ஷோபனா. வெவ்வேறு துருவத்தில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள். சிறு குழந்தையிலிருந்தே ஸ்ரீநிவாஸ் வாசிக்க ஆரம்பித்துவிட்டார். அடுத்தடுத்து கச்சேரிகள்; புகழ் மாலைகள். வெளிநாடு, உள்நாடு என்று உலகம் முழுவதும் அவர் புகழ் பரவியது. இசை விமரிசகர் சுப்புடு பலமுறை பத்திரிகைகளில் அந்தக் காலத்தில் எழுதுவார்: ‘இந்தச் சிறுவன் இன்னும் இசையைப் பயிலவேண்டும். இவனது திறமையைக் காப்பாற்றி வளர்க்க வேண்டியது பெற்றோரின் பொறுப்பு’ என்று. அவரது அறிவுரையை யாராவது கேட்டார்களா என்பது சந்தேகமே.

கைத்தட்டலுக்காகவும், பிறரது அங்கீகாரத்துக்காகவும் வாசித்த ஸ்ரீநிவாஸ் என்றாவது ஒருநாள் தனக்கென அந்த இசையை இசைத்திருப்பாரா? தனது மனஅமைதிக்கென வாசித்து மகிழ்ந்திருப்பாரா? மேலே மேலே வந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு சொந்த வாழ்க்கையை இழந்துவிட்டார். புகழ், பணம் இருந்தும் ஆயுள் இல்லாமல் போய்விட்டதே!

கேட்பவர்களுக்கெல்லாம் அமைதியைக் கொடுக்கக்கூடிய இசை அதை அவருக்குக் கொடுக்கவில்லை. அவரது இசையைக் கேட்டு எல்லோரும் மகிழ்ந்தார்கள். ஆனால் அவருக்கு அந்த மகிழ்ச்சியோ, அமைதியோ கிடைக்கவில்லை. புகழ் போதையில் இருந்தவரால் நிஜத்தை சந்திக்க இயலாமல் போய்விட்டது!

மகாநதி ஷோபனா சிறு வயதிலேயே கமலஹாசனுடன் பாடி நடித்து பிரபலமானார். அவரது நல்ல காலம், அவரது பெற்றோர்களின் நல்வழிகாட்டல் இவற்றால் அவர் இந்த மாதிரியான புகழ் போதைக்கு அடிமையாகவில்லை, பல வாய்ப்புகள் வந்தும் சங்கீதம் பயின்றார். திரைப்படப் பாடல்களைப் பாடாமல், கர்நாடக சங்கீதம் மட்டுமே பாட ஆரம்பித்தார். அழகான குடும்பம் அமைந்தது. வெளிநாட்டில் இருந்தாலும் அவ்வப்போது இந்தியா வந்து கச்சேரிகள் செய்துவிட்டுப் போகிறார். சங்கீதத்தை தனது சொந்த வாழ்க்கையுடன் இணைத்துக்கொண்டு இரண்டையும் திறம்பட நிர்வகித்து வருகிறார். பெரிதும் பாராட்டப்பட வேண்டிய பெண் அவர்.

கலை என்பது வாழ்க்கையை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். அழிப்பதாக இருக்கக்கூடாது. திறமை அதுவும் இசையில் திறமை என்பது கடவுளால் கொடுக்கப்பட்ட வரம். எல்லோருக்கும் கிடைக்காத அந்த அரிய வரம் ஸ்பூர்த்தி, அனுஷ்யா ஆகிய இருவருக்கும் வாய்த்திருக்கிறது. அந்த அரிய வரத்தை இந்தக் குழந்தைகளும், அவர்களது பெற்றோர்களும் பாதுகாத்து, இறைவனுக்கு நன்றி கூறி வளர்த்து வரவேண்டும். இப்போது கிடைக்கும் இந்த நிலையில்லாத புகழில் மனதை இழந்துவிடக் கூடாது. இருவருமே மகாநதி ஷோபனாவை தங்கள் மானசீக குருவாக, ரோல் மாடலாக நினைத்து உடனே விஜய் தொலைக்காட்சியின் இந்த மாயவலையிலிருந்து வெளியே வர வேண்டும்.

உண்மையில் இந்தப் போட்டியில் பங்கு பெரும் சிறுவர் சிறுமியர் அனைவருக்குமே – ஸ்பூர்த்தி, அனுஷ்யா என்ற இருவரை மட்டுமே நான் குறிப்பிட்டு இருந்தாலும் - நான் மேலே கூறியது பொருந்தும். எல்லாக் குழந்தைகளுமே, இசையின் எல்லாப் பரிமாணங்களையும் கற்றுத் தேர்ந்து, தங்கள் வாழ்க்கையையும் நன்றாக அமைத்துக் கொண்டு இசையரசிகளாக, இசையரசர்களாக முழுமையான ஒரு வாழ்க்கை வாழவேண்டும் என்பது எனது பிரார்த்தனை. இதை உங்களுக்கு எழுதக் காரணம், நீங்கள் பிரபலமானவர்; இந்தக் குழந்தைகளின் நலனில் அக்கறை உள்ளவர்; எனது வேண்டுகோளில் இருக்கும் நியாயம் நிச்சயம் உங்களுக்குப் புலப்படும் என்று காரணங்களால்.

இப்படிச் செய்வதால் தற்காலிகமாக இந்தக் குழந்தைகளுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் வருத்தம் ஏற்படலாம். ஆனால், பிற்காலத்தில் அவர்கள் இசையுலகில் வெற்றி பெற்று இசையரசிகளாக வலம் வரும்போது நிச்சயம் உங்களுக்கு நன்றி கூறுவார்கள்.

அன்புடன்,

ரஞ்சனி நாராயணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com