சில்லு - புது முயற்சி! புது நாடகம்!

ஒரு மாலையை அழகாக்கிவிட்டது புத்தம் புதிய நாடகம் ஒன்று. ‘சில்லு’ என்ற தலைப்பைப் பார்த்தும், அதென்ன சில்லு என்ற கேள்வி எழுந்தது,
Updated on
3 min read

ஒரு மாலையை அழகாக்கிவிட்டது புத்தம் புதிய நாடகம் ஒன்று. ‘சில்லு’ என்ற தலைப்பைப் பார்த்தும், அதென்ன சில்லு என்ற கேள்வி எழுந்தது, மேலும் மேடையில் சயின்ஸ் ஃபிக்‌ஷன் எப்படி நிச்சயம் பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.  

முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை ஒண்ணே முக்கால் மணி நேரம் ஒரு அரங்கம் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டது என்றால் அது மிகையில்லை. கண்ணெடுக்க முடியாத அளவிற்குக் ஒளி ஒலி இசை நடிப்பு, அரங்க வடிவமைப்பு, உடை, இசை என நாடகத்தின் அத்தனை கூறுகளையும் மிகச் சிறப்பாக கண் முன் நிறுத்திவிட்டார்கள். எழுத்தாளர் இரா.முருகனின் கதை. எல்லா காலகட்டத்துக்கும் பொருத்தமான கதைதான் என்றாலும் இதன் முக்கியத்துவம் நவீன வாழ்க்கை சிக்கல்கள், உலக மயமாக்குதல் போன்றவற்றை மையமாக வைத்து 2065-ல் நடக்கச் சாத்தியமுள்ள ஒரு பிரச்னையை கருவாகக் கொண்டது உண்மையில் பாராட்டத்தக்கது.

நண்பர்களுடன் அரட்டை அடித்தபடியே இருக்கும் கெளசிக்கு பிரசவ வலி எடுக்க அவளைவிட அதிகம் பதறுகிறான் கணவன். அவர்கள் வீட்டில் ஹ்யூமனாய்ட் என்று சொல்லப்படும் இயந்திர மனிதன் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறான். அவர்களுக்குத் தேவையான உணவு காபி எல்லாவற்றையும் தயார் செய்து தருவதோடு அவர்களின் உரையாடல்களிலும் கலந்து கொள்ளும் அதிபுத்திசாலியான அவனுக்குப் பெயர் ‘அடிப்பொடி’. அடிப்பொடி பிரசவ பேக்கை ரெடியாகத் தயார் படுத்தி வைத்திருக்க கெளசிக்கு பிரசவம் நடக்கிறது. அந்த சமயத்தில் தான் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ‘சில்லு’ பொருத்தப்படும் என்கிற அறிவிப்பு அரசாங்கத்திடமிருந்து உத்தரவாக வரவே சில்லு என்றால் என்னவென்று குழப்பம் ஏற்படுகிறது.   இனி பிறக்கப் போகும் அத்தனை குழந்தைகளுக்கும் அவர்களுடைய அத்தனை விபரங்களையும் பயோடேட்டா போல பதிவு செய்த சிப்பை உடம்பில் பொருத்தி அவர்களை எப்போதும் கண்காணிப்புக்கு உள்ளாக்க முடியும். மக்கள் அரசாங்கத்தின் கட்டுக்குள் அடங்கிவிடுவார்கள் என்ற ஏற்பாடுதான் அது. பிரசவம் முடிந்து ஆண் குழந்தை பிறக்கவே தம்பதிகள் மகிழ்கிறார்கள். ஆரம்பத்தில் சில்லு பற்றிய பயம் இருந்தபோதும் வேறு வழியின்றி குழந்தைக்கு அதை பொருத்த அனுமதிக்கிறார்கள். ஆண் குழந்தையான சாண்டா என்கிற சந்தானகிருஷ்ணனுக்கு தவறுதலாக பெண் குழந்தை என்று சில்லுவில் பதித்துவிட அதைத் தொடர்ந்து அவன் வாழ்க்கை முழுவதும் எதிர்கொள்ளும் பிரச்னைகளை சுவாரயஸ்மாக ஹாஸ்யமாகவும் அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறார்கள். அதிலும் சாண்டா பெண்கள் விடுதியில் தங்க அனுமதி கிடைக்கவும், அங்கு அவனை கலாட்டா செய்யும் தொழியருள் தன் காதலியைக் கண்டு அடையும் காட்சிகள் அசத்தல். சில்லு வேண்டாம் என்று எதிர்க்குரல் கொடுக்கும் வைஷூ முக்கியமான கதாபாத்திரம். தன் தோழர்களோடு கலை நிகழ்வுகள் நடத்தி தன் கலகக் குரலால் அரசாங்கத்தை அச்சுறுத்தும் வல்லமை வைஷூவின் நாடகத்துக்கு உண்டு. அதிரடியாக நாடக மேடையிலிருந்து இறங்கி பார்வையாளர் பகுதிக்கு வந்தது புதிய உத்தி. சாண்டா அரசாங்க வேலை பார்ப்பவன்.  காதலித்த பெண்ணுடன் ஆசை ஆசையாகத் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் அவனது உடலில் பொருத்தப்பட்ட சில்லில் பக் இருப்பதாகவும் திருமண தேதியன்றே உயிர் இழப்பான் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ந்து கலங்குகிறான். அவனைப் போல இருபது பேருக்கு இந்த நிலை என்று சில்லுகளைப் பொருத்திய விஞ்ஞானி உண்மையைச் சொல்லி கோமாவில் விழ, விரைவில் தன் உயிர் பிரிந்துவிடும் என்கிற நிலையில் சாண்டாவுக்கு என்னவாகிறது அதிலிருந்து எப்படி மீண்டான் என்பதைச் சொல்வதே க்ளைமாக்ஸ்.

சாண்டா பிறந்தது முதல் அவன் வளர்ந்து இளைஞனாகும் வரை அவனுடைய பெற்றோர்களை விட அதிக பாசத்துடன் அக்கறையுடன் கவனித்துக் கொண்டிருப்பது அடிப்பொடி தான். சாண்டா தூங்க தாலாட்டுப் பாடுவது முதல் அவனுக்கு கதை சொல்லி வளர்த்து, தாய்க்கு தாயாய் சேய்க்கு சேயாய் வளர்க்கிறது அடிப்பொடி. ஒரு உரையாடலில் சாண்டாவிடம், என்ன தான் தாங்கள் மனிதரைப் போல உருவாக்கப்பட்டு செயற்கை மூளை பதிக்கப்பட்டு அதிக ஆற்றலுடன் விளங்கினாலும், அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்று மனிதப் பிறவியின் மகத்துவத்தை விளக்குகிறது அடிப்பொடி. அடிப்பொடியின் ஒவ்வொரு அசைவும் காண்பவர்களை மகிழ்வித்தது. வசனமாகட்டும், நடை உடை பாவனை மற்றும் அடிப்பொடியின் மனத்தில் இருக்கும் ஈரம் அனைவரையும் கரைந்து நெகிழ வைத்ததுவிட்டது. செடிக்கு நீர் ஊற்றுவதில் ஆரம்பிக்கும் அக்கறை தன் எஜமானர்களுக்கு காபி அல்லது ஆல்கஹால் அதிகம் தராமல் இருப்பது வரை நீள்கிறது. அதிலும் இறுதிக் காட்சியில் தான் வளர்த்த ஒரு மனிதக் குழந்தைக்காக அடிப்பொடி செய்யும் தியாகம் மகத்தானது. மனிதரில் கூட யாரும் செய்ய முன்வராதது.

நாடகம் எப்போதும் சற்று மிகை நடிப்புக் கோரும் கலை. கடைசி வரிசையில் அமர்ந்திருப்பவருக்கும் கேட்கவேண்டும் என்று சத்தமாகவே வசனம் பேச வேண்டியிருக்கும். ஆனால் இவை இரண்டும் இல்லாமல் மென்மையாகவும் அதே சமயம் வலிமையாவும் ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் இயக்குநர் தீபா ராமானுஜம். ஏதோ மாய மந்திரஜாலம் நடப்பது போன்ற முப்பதுக்கும் மேற்பட்ட நடிகர்கள் பங்கேற்று காண்பவரை வெகுவாகக் கவர்ந்துவிட்டார்கள். சில்லுவில் நடித்துள்ள அனைவருமே இளம் வயதினர் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர இவர்களில் சிலர் முதல் முறையாகத் தமிழ் நாடகத்தில் நடிக்கிறார்கள் என்பதும் ஆச்சரியமான விஷயங்கள். இத்தனை பேரின் பங்களிப்பும் ஒத்திசைவாய் அமைந்ததே இந்நாடகத்தின் வெற்றிக்கான காரணம்.

எழுத்தாளர் இரா முருகனின் கதைக்கு உயிர் கொடுத்த ஷ்ரத்தா மற்றும் கிரியா குழுவினர், தயாரிப்பாளர் தேனாண்டாள் பிக்சர்ஸ் மற்றும் அரங்கை நுட்பமான தொழில்நுட்பத்துடன் வடிவமைத்த திரைப்படக் கலை இயக்குநர் வி. செல்வகுமார்,  இசையமைப்பாளர் கவிதா பாளிகா ஆடைகள் வடிவமைத்த ப்ரீதி காந்தன் (2065 –ல் அரசாங்கம் கட்டாயமாகக் கொடுத்த சீருடை அது.. புற ஊதக் கதிர்களின் தாக்குதலிலிருந்து தப்பிக்க  கவசம் போல வடிவமைக்கப்பட்ட சீருடை அது) என பார்த்துப் பார்த்து செதுக்கிய அனைவருக்கும் பாராட்டுக்கள். இது போன்று வித்யாசமான கதைக் களத்தின்  மூலம் நாடகம் தன்னை மீட்டுருவாக்கம் செய்வதைக் கண்கூடாகக் கண்டதில் பெரும்மகிழ்ச்சி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com