நாவல்கள், திரைப்படங்களாக உருமாறும்போது...

சரித்திர நாவல்களில் மிகவும் பிரபலமானது கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’. சமீபத்தில், சென்னையில் மேடை நாடகமாகவும்

சரித்திர நாவல்களில் மிகவும் பிரபலமானது கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’. சமீபத்தில், சென்னையில் மேடை நாடகமாகவும் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

சின்னத்திரையில் நெடுந்தொடராகத் தயாரித்து ஒளிபரப்பப்போவதாக ஒரு தகவல். அதனுடன், எம்ஜிஆர், கமல், மணிரத்னம் போன்ற திரையுலக ஜாம்பவான்கள்கூட, அந்த நாவலை திரைப்படமாக்க முயன்று கைவிட்ட கொசுறுச் செய்தியும் உண்டு.

ஒரு எழுத்தாளனின் கற்பனையும், வாசகனின் மனத்தில் விரியும் காட்சியும் ஒன்றிப்போகும்போது, அந்த நாவலும், அதில் உலா வரும் கதாபாத்திரங்களும் உயிர்பெற்று எழுகின்றன! அந்தக் காட்சிகளும், உணர்வுகளும், வாசகனின் மனத்தில் ஓர் அழியா ஓவியத்தையும், தாக்கத்தையும் பதித்துவைக்கின்றன!

அந்த நாவல் திரைப்படமாக உருவாக்கம் பெறும்போது, பெருவாரியான வாசகர்களின் மனத்தில் பதிந்திருக்கும் காட்சிப் பிம்பத்துடன் ஒன்றிப் போனால் வெற்றியையும், விலகிப்போனால் தோல்வியையும் தழுவுகிறது.

கவிஞர் வைரமுத்து கூறுவதைப்போல், தூண்டிலுடன் ரசிகன் காத்திருக்கும்போது, திரைப்படத்தில் புலி வேட்டை ஆடினால் என்ன ஆகும்? ஏமாற்றம்தானே மிஞ்சும்.

இனி, சில நாவல்கள் திரைப்படங்களாக உருமாற்றம் அடைந்தபோது...  

கல்கியின் ‘பார்த்திபன் கனவு’ - நல்ல பாடல்கள், ஜெமினி, வைஜயந்தி மாலா, ரங்காராவ், ஜாவர் சீதாராமன் போன்ற சிறந்த நடிகர்கள் இருந்தும், எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

கதையின் மையக் கருத்தான – சஸ்பென்ஸ் – அரசரும், சிவனடியாரும் ஒருவரே என்பது திரையில் பார்வையாளனுக்கு முன்னமேயே தெரிந்துவிடுகிறது! அதனால், கதையின் ஓட்டமும் ஆமை வேகத்துக்கு வந்துவிடுகிறது.

எழுத்தாளர் சுஜாதா, தம் கதைகள் திரைப்படங்கள் ஆகும்போது, ஒட்டுமொத்தமாக சிதைக்கப்படுவதாக வருத்தப்படுவார். (பின்னர், அவரே நேரடியாக திரைக்கதை, வசனம் எழுதி வெளிவந்த படங்கள் வெற்றி பெற்றன!) காயத்ரி, ப்ரியா, கரையெல்லாம் செண்பகப்பூ போன்ற படங்கள் வியாபார நோக்கில் பல மாற்றங்களைத் தழுவி, நாவலிலிருந்து வெகு தூரம் சென்றுவிட்டதால், வெற்றிபெற முடியவில்லை!

மணியனின் ‘இலவு காத்த கிளி’ நாவல், பாலசந்தரால் ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ என்று படமாகி வெற்றிபெற்றது. மற்றொரு நாவல், ‘இதயவீணை’ - எம்ஜிஆருக்கான மாற்றங்களுடன் திரைப்படமாகி வெற்றி பெற்றது. இவை இரண்டும், நாவல் என்ற எல்லையைக் கடந்து, திரையுலக ஆளுமைகளின் தனித் தன்மை மற்றும் திறமையினால் வெற்றிபெற்றன என்பதே உண்மை!

நாவலின் அடிநாதம், அழகு, காட்சிகள், கதைமாந்தர்கள் ஆகியவற்றுடன் பெருவாரியான வாசகர்களின் மனக்காட்சியை பிரதிபலிக்கும் வகையில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படங்களில் சில படங்கள் நினைவுக்கு வருகின்றன!

கொத்தமங்கலம் சுப்புவின் ‘தில்லானா மோகனாம்பாள்’ (1968), காலத்தினால் அழியாத திரைக் காவியமாக மலர்ந்தது! ஏ.பி.நாகராஜன் கைவண்ணத்தில், பாத்திரங்களுக்கேற்ற நடிக, நடிகையர் (கோபுலு, நாகேஷை நினைத்துதான் ‘சவடால் வைத்தியை’ வரைந்திருப்பாரோ? அடடா என்ன ஓர் ஒற்றுமை – பிறவிக் கலைஞன் நாகேஷுக்காக இரண்டு வருடங்கள் ஏபிஎன் காத்திருந்து படம் எடுத்தது யாருக்குப் பெருமை?), திருவாரூர், சிக்கல், நாகப்பட்டினம் என கதை செல்லும் இடங்களுக்கு ரசிகர்களையும் அந்தக் காலச் சூழலுக்கே அழைத்துச் சென்ற அந்தப் படம், நாவலின் முதல் பாதியைத்தான் காண்பித்தது!

இருந்தாலும், முழுமையான நல்லதொரு நாவலின் உயிர்த்துடிப்புடன் வெற்றிவாகை சூடிய படம் ‘தில்லானா மோகனாம்பாள்’. ஷண்முகசுந்தரம், மோகனா, வடிவு, சவடால் வைத்தி, ஒத்து ஊதும் குள்ளமான கடைசீ பாத்திரம் வரை, எல்லாம் நாவலில் இருந்து உயிர்பெற்று வந்ததைப் போன்றதொரு பிரமை! கே.வி.மகாதேவன், நாதஸ்வரம், பாட்டு என மிகச் சிறப்பாக இசையமைத்திருப்பார். நாவலைப் படிப்பதைப் போன்ற அனுபவத்தை, திரைப்படத்தில் தந்த ஏபிஎன் குழுவினர், உண்மையிலேயே பாராட்டுக்குரியவர்கள்!

ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ (1976), லட்சுமி, ஸ்ரீகாந்த், நாகேஷ், சுந்தரிபாய், ஒய்.ஜி.பி. போன்ற திறமையான கலைஞர்களின் நடிப்பில், எம்.எஸ்.வி.யின் தேர்ந்த இசையில், பீம்சிங் இயக்கத்தில் மிகச் சிறப்பாக வெளிவந்தது! கதையின் நாயகி கங்காவாகவே படம் முழுதும் வாழ்ந்திருந்தார் லட்சுமி.

பின்னர் வெளிவந்த புஷ்பா தங்கதுரையின் ‘ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ (1976), மகரிஷியின் ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) போன்ற படங்கள், எஸ்.பி.முத்துராமன் அவர்கள் இயக்கத்தில், நாவலின் நிறம் மாறாமல் வெளிவந்து வெற்றி வாகை சூடின.

தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’ (1994), கும்பகோண கிராமீய மணத்துடன், கர்னாடக இசைத் தென்றலுடன், பாபு, யமுனா, ராஜம், அம்மா, அப்பா, சங்கீத குரு போன்ற கதை மாந்தர்களின் நடை, உடை, பாவனைகள் மாறாமல், கதையுடன் இயைந்த இளையராஜாவின் இசையுடன், ஞான ராஜசேகரனின் இயக்கத்தில் சிறப்பாக வெளிவந்தது.

‘கோமா’, ‘ஒடெஸ்ஸா ஃபைல்’ போன்ற ஆங்கில நாவல்கள் திரைப்படங்களாக வந்தபோதும், எந்த ஒரு மாற்றமும் கதையின் ஜீவனைக் குலைக்காத வகையில் எடுக்கப்பட்டிருந்தன! 

பொன்னியின் செல்வன் – வாசகர்களின் உள் மனத்தில் முன்னமேயே ஏற்படுத்திய கதைக் களங்களும், பாத்திரப் படைப்புகளும், உணர்வுகளும் கொண்ட உயிர்த்துடிப்புள்ள ஒரு நாவல் - திரையில் எதிர்பார்ப்புகளும் அதிக அளவில் இருக்கும்!

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’, பொன்னியின் செல்வனாகவே உலா வந்து வெற்றி பெற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com