தலைமைச் செயலரின் செயலும் தமிழகத்துக்கான தலைகுனிவும்?

தமிழக தலைமைச் செயலராக இருந்த ராம மோகன ராவ் வீடு, அவரது உறவினர்கள் வீடு, தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகம்
தலைமைச் செயலரின் செயலும் தமிழகத்துக்கான தலைகுனிவும்?
Updated on
4 min read

தமிழக தலைமைச் செயலராக இருந்த ராம மோகன ராவ் வீடு, அவரது உறவினர்கள் வீடு, தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் கிட்டத்தட்ட 25 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் 34 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் 18 லட்சம் ரூபாய் பழைய பணம் என்றும், 6 லட்சம் ரூபாய் புதிய நோட்டுகள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இவை தவிர தங்க நகைகள், பரிசுப் பொருட்கள் என விலை உயர்ந்த பொருட்களும் ஏராளமான ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளது வருமான வரித்துறை. கடந்த 6 மாதங்களாக தலைமைச் செயலராகவும், கடந்த 5 ஆண்டுகளாக முதல்வரின் 2-ஆம் நிலைச் செயலராகவும் பணியாற்றியவர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதும், அங்கிருந்து ரூ.7,500 கோடி மதிப்புள்ள சொத்துகள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பது இந்திய வரலாற்றில் முதன் முறையாகவும், தமிழக வரலாற்றிலேயே தலைமைச் செயலர் ஒருவர் ஊழல் புகாரில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதும் இதுவே முதன் முறையாகும். இவை தமிழக ஆட்சி மற்றும் அரசியல் வரலாற்றிலும்  இந்திய அளவில் பெரும் அவமரியாதையும் தலைகுனிவையும் ஏற்படுத்தி விட்டார் ராமமோகன் ராவ். மொத்தத்தில் இந்திய ஆட்சி பணிக்கே பெருத்த அவமரியாதையை ஏற்படுத்தி விட்டார் ராமமோகன ராவ் என்று கூறலாம்.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாகவே என்ன நடக்கிறது என்பதை யூகிக்க முடியாத நிலையிலும், ஒரு சம்பவத்தைப் பற்றி முழுமையாக அறியும் முன்பே அடுத்த அதிரடி சம்பவம் நடந்து விடுகிறது.
75 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் காலமானார்  செய்தி இந்தியாவையே திகைக்கவைத்தது. உலக தமிழர்களும், கோடானகோடி அதிமுக தொண்டர்களும் துக்கத்தில் ஆழந்திருக்க, கடந்த 5 ஆண்டுகாலமாக ஜெயலலிதாவின் முதன்மை செயலாளராக பணியாற்றி, 6 மாதங்களுக்கு முன்பு தலைமை செயலராக பதவியேற்ற ராம மோகன ராவ், தான் பதுக்கி வைத்திருந்த  100 கோடி ரூபாயை எப்படி பாதுகாப்பது என்பது குறித்து பேசிக்கொண்டிருந்தார் என்ற தகவல் அதிமுகவினரை அதிரவைத்துள்ளது. ராவ் தலைமை செயலராக பதவியேற்ற போதே பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இப்போது வருமான வரி சோதனை, இடைநீக்கம் என 6 மாதத்தில் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளது பெரும் வெட்கக்கேடாக உள்ளது.
மணல் குவாரி காண்டிராக்டரான சேகர் ரெட்டியை சமீபத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சுற்றி வளைத்தபோது அவரிடம் இருந்த பல 100 கோடி ரூபாய், தங்கக்கட்டிகள், சொத்து ஆவணங்கள் கிடைத்தன. அப்போதே அதிகாரிகளுக்கு, சேகர் ரெட்டி பல விஐபிக்களுக்கு பினாமியாக இருப்பார் என்ற சந்தேகம் ஏற்பட்டது.
சேகர் ரெட்டியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தங்கள் பாணியில் விசாரணை நடத்தினர், அந்த விசாரணையின் போது தமிழகத்தில் எந்தெந்த முக்கிய புள்ளிகளுக்கு தாம் உதவியாகவும், பினாமியாகவும் இருக்கும் தகவலை தெரிவித்துள்ளார். அப்போதுதான் தலைமை செயலாளராக இருந்த ராம மோகன ராவுக்கும், சேகர் ரெட்டிக்கும் தொடர்பு இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.
சேகர் ரெட்டியிடம் பெறப்பட்ட தகவல்களுக்கான ஆதாரத்தை தேடுவதில் அதிகாரிகள் உறுதியாக இருந்தனர். ஆதாரம் இருந்தால்தான் ராவை நெருங்க முடியும், அவர் வீடுகளில் சோதனை நடத்த முடியும் என்றும் முடிவு செய்யப்பட்டது. வருமான வரித்துறை அதிகாரிகள் ராமமோகன்ராவ் முறைகேடு செய்ததற்கான ஆதாரங்களைத் தேடி அலைந்தனர். நான்கு கோணங்களில், பல துறைகளில் இதற்காக ரகசிய விசாரணையில் அதிரடியாக இறங்கினார்கள் வருமானத் துறை அதிகாரிகள். அப்போதுதான் சேகர்ரெட்டி நடத்தி வரும் மணல் குவாரிகளில் தலைமை செயலாளர் ராவுக்கு தெடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும் தமிழகத்தில் மணல் குவாரிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கும் விவகாரத்தில் சேகர் ரெட்டிக்கு கூடுதல் சலுகைகள் காட்டப்பட்டு இருப்பது அதிரடி விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து மணல் குவாரிகளுக்கு உரிய அனுமதி வழங்கும் மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்தில் தங்களது விசாரணையை நடத்தி உள்ளார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள்.
அப்போது ராமமோகன் ராவுக்கும் - சேகர் ரெட்டிக்கும் உள்ள தொழில் ரீதியான நட்பை சுற்றுச்சூழல் ஆணைய அதிகாரிகள் உறுதியாக உறுதிப்படுத்தியுள்ளனர். அதற்கான ஆவணங்களையும் அவர்கள் வருமான வரித்துறையினரிடம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.
வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய மற்றொரு விசாரணையில் ராமமோகன் ராவும் - சேகர் ரெட்டியும் அலைபேசியில் அலை அலையாக நீண்ட நேரம் அலைந்து அதிகாரிகளின் கழுகுப் பார்வைக்கு தெரியவந்துள்ளது. அதாவது ஆளுமை மிக்க முதல்வர் ஜெயலலிதாவை இழந்துவிட்டமே என்று தமிழர்கள் சோகத்திலும் கண்ணீர் கடலில் மிதப்பதை மறந்துவிட்டு, மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவது மற்றும் கருப்புப் பணத்தை எவ்வாறு பதுக்கிவைப்பது உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து அலைபேசியில் அதிக நேரம் உரையாற்றியத்திற்கான ஆதாரத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
இந்தத் தகவல்களின் அடிப்படையில் ராம்மோகன் ராவ் வீட்டிலும், அவரது மகன், உறவினர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி பல ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
ராமமோகன ராவுக்கு சொந்த மாநிலமான ஆந்திராவை சேர்ந்த சில உயர் அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக பதவிக்கு வரும் முன்பே தகவல்கள் கசிந்தது. இந்தச் சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாட்டிலேயே தலைமைச் செயலராக பதவி வகிக்கும்போதே, வருமான வரித்துறை அதிகாரிகள் புகுந்து அதிரடி சோதனை நடத்துவது இதுதான் முதல்முறை. இந்த சோதனையடுத்து நேற்று முன்தினம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அவர் பதவி எந்த நேரத்திலும் பறிபோகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் ராம்மோகன் ராவ் பணியில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, புதிய தலைமைச் செயலராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.  
மாநில முதல்வருக்கு அடுத்த அதிகாரம் கொண்டவராகவும் பொறுப்புகள் கடமைகள் நிறைந்த அதிகாரிகளே ஊழலின் ஊற்றுக் கண்ணாக திகழ்கின்றனர் என்பதை ராம மோக ராவின் நடவடிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளது. இதுபோன்ற ஊழலில் நடவடிக்கைகளில் அவர் மட்டுமல்ல இன்னும் பல அதிகாரிகள் இதேபோன்ற பல ஊழலில் திளைத்து இருக்கிறார்கள், திளைத்து வருகிறார்கள். அவ்வாறு ஊழலில் திளைத்து வருபவர்கள்தான் அரசியல்வாதிகளை தவறாக வழி நடத்தி, அவர்களை வழக்குகளில் சிக்க வைத்து வேடிக்கைப் பார்க்கின்றனர் என்பது பெரும்பாலனவர்களின் குற்றச்சாட்டு.   
ஒரு மாநில தலைமைச் செயலர் வீட்டில் சோதனை நடத்தப்பட வேண்டும் என்றால், அது குறித்து முன்கூட்டியே முதல்வருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் உரிய தகவலை அளித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது, தேசத்தின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்று சமூக ஆர்வலர்களும், அரசியல் நோக்கர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
எத்தனையோ நேர்மையான. அதிகாரிகள் தமிழகத்தில் தலைமைச் செயலாளர் பொறுப்பில் இருந்து தமிழக மக்களுக்கு நல்ல பல திட்டங்களை வகுத்து தந்துள்ளனர். அமைச்சர்களை நேர்மையாக வழி நடத்திச் சென்றுள்ளனர். இப்போதும் வழி நடத்தி சென்றுள்ளனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பல்வேறு நலத்திட்டங்கள் இன்றைக்கு நாடு முழுவதும் அமல்படுத்துவதற்கு முன் உதாரணமாக உள்ளது. ஆனால், இப்போது தலைமைச்செயலாளர் பதவியில் இருந்த ராம மோகன ராவின் செயல்பாடு மக்கள் விரோத நடவடிக்கையாக இருந்துள்ளது என்பதை எண்ணிப்பார்க்கும்போது உண்மையிலேயே தமிழர்களை வேதனையடைய வைத்துள்ளது.
ஊழலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாத தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, அமைச்சர்கள் ஊழல் செய்தார்கள் என்றாலோ, சரியாக செயல்பட வில்லை என்றாலோ பதவியில் இருந்து தூக்கி எறிய தயக்கம் காட்டாதவர் ஜெயலலிதா. அதற்கு சாட்சியாக அமைச்சர்களாக இருந்த சிலர் கட்சியில் இருந்து அடியோடு நீக்கப்பட்டுள்ளார்கள். ஏன் தோழி சசிகலாவையே வீட்டை விட்டு துரத்தியும் மீண்டும் சேர்த்துக்கொண்டுள்ளார். தமிழகத்தை நாட்டிலேயே முதன்மை மாநிலமாக மாற்றுவதற்கான முத்தான நடவடிக்கைகளை எடுத்தவர் ஜெயலலிதா. அவர் ஆட்சி செய்த மாநிலத்தில் தலைமைச் செயலாளர் ஒருவரே ஊழல் வழக்கில் சிக்கி வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனை என்பதுவரை இன்னும் முடியாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வருமான வரித்துறை சோதனையின் முடிவில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தமிழகம் ஊழலில் சிக்கி தற்போது தலைகுனிவை சந்தித்து உள்ளது.
மாநில முதல்வருக்கு முதன்மை ஆலோசகராகவும், அரசின் நிர்வாக விஷயங்களைச் செயல்படுத்துபவராக. மாநிலத்தின் மேம்பாட்டுப் பணிகள், திட்டங்கள், அரசின் கீழ் செயல்படும் அனைத்துத் துறைகளின் செயலாளர்களையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பராகவும் அவர்களைக் கண்காணிக்கும் அதிகாரமும், ஏன் மாநிலத்தின் முழுக் கட்டுப்பாடும் அவரின் கீழ்தான் இருக்கும். எந்தவொரு நெருக்கடியான, அசாதாரண சூழ்நிலையிலும் அரசின் பக்கம் நின்று, அவசியமாக எடுக்க வேண்டிய முடிவுகளுக்கான ஆலோசனை தர வேண்டியதும் அரசு தொடர்பான டெண்டர்கள், கான்ட்ராக்ட்டுகள், நிலம் கையகப்படுத்துதல் என அனைத்தும் தலைமைச் செயலரின் கீழ்தான் செயல்படும். இவ்வளவு அதிகாரங்கள் அனைத்தையும் கொண்ட தலைமைச் செயலர் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி இருக்கிறார் என்பதை பார்க்கும்போது, சுப்பிரமணிய ராஜூவ் என்ற இளம் கவிஞர் எழுதிய
"வாயிலே அழுக்கு என்று
நீர் எடுத்துக் கொப்பளித்தேன்
கொப்பளிக்க... கொப்பளிக்க...
வாயும் ஓயாமல்... அழுக்கும் போகாமல்...
உற்றுப் பார்க்கையில்
நீரே அழுக்கு!"
என்ற கவிதை வரிகள்தான் ஞாபகத்திற்கு வருகிறது.
எது எப்படியோ ராம மோகன ராவ் இடைநீக்கம் செய்யப்பட்ட பின்பு, அவருக்குப் பதிலாக, பல துறைகளில் பல ஆண்டுகள் அனுபவம்மிக்கவராக தான் கொண்ட கொள்கையில், பணியில் நேர்மையாக செயல்பட்டு வரும் கிரிஜா வைத்தியநாதன் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் மேலும் தனது பொறுப்புகளையும் கடமைகளையும் நேர்மையாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும் வேண்டுகோளும்.  செய்வீர்களா..! வாழ்த்துக்கள்...!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com