பூனையைக் காப்பாற்ற வக்கில்லாத மனிதாபிமானிகள்!

ஆனால் நெஞ்சில் ஒரு நெருஞ்சி முள்ளாய் பூனைக்கு என்ன ஆனதோ? என்பதான குற்ற உணர்ச்சி மட்டும் அப்படியே இருக்கிறது. அதற்கு ஆயுள் எத்தனை நாளோ!
பூனையைக் காப்பாற்ற வக்கில்லாத மனிதாபிமானிகள்!

இன்று காலை குழந்தைக்குத் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக குழந்தைகள் நல மருத்துவமனைக்குச் சென்றிருந்தோம். மருத்துவமனை திருவேற்காடு பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கிறது. மருத்துவமனையின் எதிர்புறம் கொஞ்சம் காலியிடம், இது தனியாருக்குச் சொந்தமான இடமா? அல்லது நகராட்சிக்குச் சொந்தமான இடமா எனச் சரியாகத் தெரியவில்லை. ஆனால் அந்த இடம் சுத்தப்படுத்தப் படாமல் குப்பைக் கூளங்கள் நிறைந்து சுகாதாரமற்று காட்சியளிக்கிறது. பலமுறை கடந்து வரும் போதெல்லாம் கண்ணில் படும் இடம் தான். ஆனால் இன்று மனதில் பதிந்து போக ஒரு வலுவான காரணம் கிடைத்து விட்டது.

அந்த குப்பை கூளத்தில் ஒரு காயம் பட்ட பூனையின் தீனமான அலறல் கேட்டுக் கொண்டே இருந்தது. கூடவே அந்தப் பூனையை சீண்டிக் கொண்டிருந்த ஒரு நாயின் குரைப்புச் சத்தம் வேறு!  அந்நேரம் மருத்துவமனையில் இருந்தோர் அத்தனை பேருக்கும் அந்த கத்தல் செவியில் விழாமல் இல்லை. சிலர் நாயிடமிருந்து பூனையைக் காப்பாற்ற முயற்சித்தார்கள். எப்படித் தெரியுமா? கைக்குச் சிக்கிய கல்லெடுத்து வீசி அதை விரட்டினார்கள். கல்லுக்கு நாய் பயந்தாலும், அதற்கு கிடைத்த இரையை விட மனமின்றி தொடர்ந்த இடைவெளிகளில் மீண்டும், மீண்டும் அந்த நாய் பூனையைத் தேடி வந்து கொண்டே தான் இருந்தது.
 
பூனையின் உடலில் கொஞ்சமே, கொஞ்சம் வலுவிருந்தாலும் நிச்சயம் அது எழுந்து ஒரே தாவாகத் தாவி தப்பி ஓடியிருக்கும். அதுவோ கடுமையாகக் காயம் பட்ட பூனை. மெல்லிய அசைவு மட்டுமே அதன் உடலில் இருந்தது. அதனால் எழ முடியவில்லை. உடனே புளூ கிராஸ் அமைப்பிற்கு தகவல் தரலாம் என செல்பேசியை எடுத்தால், இரவில் சிறிது நேரம் கேண்டி கிரஸ் விளையாடி விட்டு, அதிலிருந்து வெளியேறாமல் அப்படியே செல்ஃபோனை அணைத்து வைத்ததில் மொத்த சார்ஜூம் உறிஞ்சப்பட்டு அதிலும் ஆத்திர, அவசரத்திற்கு உயிரில்லை.

மொத்தத்தில் அந்தப் பூனையைக் காப்பாற்ற வேண்டுமென்று அப்போது மருத்துவமனையில் இருந்த அத்தனை பேருமே விரும்பினோம். ஆனால் உடனே அந்தப் பூனையின் அருகில் சென்று அதை கையில் எடுத்து வந்து வேறு ஏதாவது ஒரு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய அங்கிருந்த எல்லோருக்குமே மனதோரம் ஒரு எண்ணமிருந்தும் செய்ய விடாமல் தடுத்தது எது? 

நாங்கள் காத்திருந்த இடமோ குழந்தைகள் நல மருத்துவமனை... பூனையோ காயங்களுடன் பார்க்க பரிதாபமாக இருந்தது. அதோடு அது இருந்த இடமும் சுத்தமான, சுகாதாரமான இடமுமில்லை. அந்த இடத்திற்குள் நுழைந்து பூனையைத் தூக்கி வந்து பிறகு அதை யாரிடம் ஒப்படைப்பது? என்ற குழப்பம் வேறு! அதோடு பூனையைக் காப்பாற்றி விட்டு, வீட்டுக்குப் போய் மீண்டும் ஒரு முறை குளித்து விட்டு மறுபடியும் அலுவலகம் வர நேரம் ஒத்துழைக்குமா என்ற சஞ்சலம் வேறு! அதையெல்லாம் தாண்டி ஆஃப்டர் ஆல் பூனை தானே! அதைப் போய் தொட்டு தூக்கி பிறகு, நம் குழந்தைகளுக்கு ஏதாவது இன்ஃபெக்சன் ஆகி விட்டால் என்ன செய்வது என்ற சுயநலம் வேறு! 

இத்தனை குழப்பங்களோடும் காத்திருக்கையில் மருத்துவரிடமிருந்து உள்ளே வரச் சொல்லி அழைப்பு மணி ஒலித்தது. 

பிறகென்ன நடந்திருக்கும்?

அவரவர்க்கு அவரவர் குழந்தைகள் தான் பிரதானமாகி விட்டார்கள்.

ஆனால் நெஞ்சில் ஒரு நெருஞ்சி முள்ளாய் பூனைக்கு என்ன ஆனதோ? என்பதான குற்ற உணர்ச்சி மட்டும் அப்படியே இருக்கிறது. அதற்கு ஆயுள் எத்தனை நாளோ!

ஆனால் மருத்துவமனையின் உள்ளே கிட்டத்தட்ட 10, 15 பேர் இருந்தோம், பூனையின் கத்தலை கேட்டவாறு சாலையில் பயணித்துக் கொண்டிருந்தவர்கள் எத்தனை பேரோ நினைவில்லை. மேலும் அது சுற்றிலும் ஆட்கள் நடமாட்டம் இருந்து கொண்டிருந்த இடம். இத்தனை சாதகமான அம்சங்கள் இருந்தும் பூனை உயிருடன் மீண்டதா என்று தெரியாமலே தான் வீடு திரும்ப வேண்டியதாயிற்று.

முடிவில் தெளிவாக மனதில் உரைத்த விசயம் ஒன்றுண்டு. 

நான் உட்பட அங்கிருந்த எல்லோருக்குள்ளும் இருந்தது ‘கால் காசுக்குப் பிரயோஜனமில்லாத மனிதாபிமானம்!’ என்பதே!

ஆமாம், கடைசியில் ஒரு பூனையைக் காப்பாற்ற வக்கற்ற மனிதாபிமானிகளாகத் தான் எங்களை எங்களால் அடையாளப் படுத்திக் கொள்ள முடிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com