சாரு நிவேதிதாவின் ‘பழுப்பு நிற பக்கங்கள்’ புத்தக வெளியீட்டு விழா!

நிகழ்ச்சிக்கு அசோகமித்ரன், எஸ் ராமகிருஷ்ணன், இறையன்பு ஐஏஎஸ், சிவகாமி ஐஏஎஸ், டாக்டர் சிவகடாட்சம், நாகூர் ரூமி,
சாரு நிவேதிதாவின் ‘பழுப்பு நிற பக்கங்கள்’ புத்தக வெளியீட்டு விழா!
Updated on
2 min read

சனிக்கிழமை மாலை சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் எழுத்தாளர் சாரு நிவேதிதா தினமணி டாட் காமில் எழுதிக் கொண்டிருக்கும் தொடரின் தொகுப்பான ‘பழுப்பு நிற பக்கங்கள்’ வெளியிடப்பட்டது. கிழக்கு பதிப்பகம் பதிப்பித்த இப்புத்தகத்தை சாரு நிவேதிதா வெளியிட அவரது மனைவி அவந்திகா பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் பழுப்பு நிற பக்கங்களையும் சேர்த்து ஒன்பது நூல்கள் வெளியிடப்பட்டன. வெளியிடப்பட்ட மற்ற நூல்கள் உயிர்மை பதிப்பக வெளியீடான இச்சைகளின் இருள் வெளி, வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள், மனம் கொத்திப் பறவை, கிழக்கு வெளியீடாக எங்கே உன் கடவுள், கடைசிப் பக்கங்கள் மற்றும் அந்தி மழை வெளியீடான அறம் பொருள் இன்பம்.

பழுப்பு நிற பக்கங்கள் புத்தகம் பற்றி திருப்பூர் கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். பழுப்பு நிறப் பக்கங்களில் சாரு நிவேதிதா குறிப்பிடப்பட்டுள்ள எழுத்தாளர்களில் பெரும்பான்மையானவர்களுடன் நேரடிப் பழக்கம் உள்ளவர் என்றும் இளைய தலைமுறைக்கான ஒரு நல்ல அறிமுகம் இது என்றும் பாராட்டிப் பேசினார். அவரை அடுத்து பேசிய சாரு நிவேதிதா தன்னுடைய உரையை தொடர்ந்துப் பேசாமல் நிகழ்ச்சியின் நடுவே அவ்வப்போது பேசியதால் வாசகர்களை மகிழ்ந்தார்கள். நிகழ்ச்சியில் பேசியவர்கள் எடிட்டர் லெனின், மனுஷ்யபுத்திரன், சமஸ், பத்ரி சேஷாத்ரி ஆகியோர் சிறப்பாக பேசினார்கள். நிகழ்ச்சியில் தினமணி டாட் காம் சார்பாக நன்றியைத் தெரிவித்தார் உமா ஷக்தி.

நிகழ்ச்சிக்கு அசோகமித்ரன்,  கவிஞர் வைதீஸ்வரன், எஸ் ராமகிருஷ்ணன், இறையன்பு ஐஏஎஸ், சிவகாமி ஐஏஎஸ், டாக்டர் சிவகடாட்சம், நாகூர் ரூமி, அம்ஷன் குமார், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் என பல சிறப்பு விருந்தினர்கள் வந்திருந்தார்கள். சாருவின் ரசிகர்களாக பல இளைஞர்கள், பெண்கள் வந்திருந்து அரங்கை நிறைத்தார்கள். கைதட்டலும், சிரிப்பொலியும், கரகோஷமுமாக சனிக்கிழமை மாலை மூன்று மணிநேரம் கரைந்தது இலக்கிய வாசகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

நிகழ்ச்சியின் வெற்றி குறித்து சாரு நிவேதிதா, ‘பெரும்பத்திரிகைகளில் எழுதாத, உயிர்மை, அந்திமழை போன்ற சிறுபத்திரிகளிலும் ப்ளாகிலும் எழுதும் ஒரு எழுத்தாளனான அடியேனின் புத்தக வெளியீட்டு விழா பிரம்மாண்டமான காமராஜர் அரங்கிலும் ராஜா அண்ணாமலை மன்றத்திலும் தொடர்ந்து ஏழெட்டு ஆண்டுகளாக நடந்து வருவதற்குக் காரணம் என்னுடைய வாசகர் வட்ட நண்பர்கள்தான்.  வெளியிலிருந்து பார்த்தால் புத்தக வெளியீடா, அரசியல் மாநாடா என்று சந்தேகமாக உள்ளது.  அநேகமாக இப்படிப்பட்ட ஒரு புத்தக வெளியீடு இத்தனை பெரிய அரங்கங்களில் நடப்பது உலக அளவிலேயே நம்முடைய வாசகர் வட்டத்தின் மூலமாக சென்னையில் மட்டுமே நடக்கிறது என்று நினைக்கிறேன்.  ஐரோப்பிய நகரங்களில் கூட புத்தக வெளியீடு என்றால் சிறிய பார்களிலும் நூலக அறைகளிலும் மட்டுமே நடக்கும்.  ஆனால் ஒரு வித்தியாசம்.  அங்கே சிறிய அறைகளில் நடந்தாலும் புத்தகம் லட்சக் கணக்கில் விற்கும்.  இங்கே நேரு ஸ்டேடியத்தில் நடத்தினாலும் கூட 3000 பிரதிகள்தான் விற்கும். ஆனாலும் இப்பேர்ப்பட்ட பிரம்மாண்டமான புத்தக வெளியீட்டு விழாவை சாத்தியப்படுத்திய வாசகர் வட்ட நண்பர்களுக்கு நன்றி.” என்று தன் இணையதளத்தில் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

புகைப்படங்கள் - பிரபு காளிதாஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com