அனைவருக்கும் உதவக்கூடிய வகையில் பேலியோவை எப்படிக் கொண்டு செல்வது எனச் சிந்தித்தேன். பேலியோ டயட்டில் பரிந்துரைக்கப்படும் பாதாம், பனீர், இறைச்சி ஆகியவை சராசரி பொதுமக்களுக்குக் கட்டுப்படியாகாத விலையில் விற்கின்றன. இதனால் பேலியோ டயட்டை எல்லோரும் பின்பற்றமுடியாத நிலை உள்ளது. இதுதான் எனக்குப் பெரிய சவாலாகத் தோன்றியது. இந்தச் சூழலில் தனிமடலில் ஒரு நண்பர், ‘நான் அசைவம் சாப்பிடுவேன். ஆனால் தினமும் அதைச் சாப்பிட கட்டுப்படியாகாது. காரணம், மட்டன் விலை - கிலோ நானூறு ரூபாய். இதனால் என் ஆரோக்கியத்துக்கு ஒரு வழி சொல்லுங்கள்’ என்றார். தவிரவும் ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவில் உள்ள மற்றொருவர், ‘என் மாதவருமானம் 10,000 ரூபாய் மட்டுமே. பேலியோ டயட் எடுக்க ஆசை. ஆனால் கட்டுப்படியாகாது. என்ன செய்யலாம்?’ என்று ஒரு மடல் எழுதினார். இப்படிப் பலரும் சொல்லவே பொதுமக்களுக்கு ஏற்ற செலவில் ஒரு பட்ஜெட் டயட்டை உருவாக்கினால் என்ன என்று யோசித்தேன். பேலியோவின் கொள்கைகளை அடிப்படையாக வைத்து, குறைந்த பட்ஜெட் எனும் சித்தாந்தத்தில், ஒரே வேளை அரிசி உணவுடன் கூடிய மக்கள் டயட் எனும் புதிய உணவுமுறையை உருவாக்கினேன்.