வல்லமை தாராயோ! சுவாதி, வினுப்ரியா மற்றும்...

ஏன் இவ்ளோ போட்டோஸ் போடறே? எதுக்கு உடனே டெலீட் பண்றே? முகநூல்ல ஏன் பர்சனல்
வல்லமை தாராயோ! சுவாதி, வினுப்ரியா மற்றும்...
Updated on
4 min read

ஏன் இவ்ளோ போட்டோஸ் போடறே? எதுக்கு உடனே டெலீட் பண்றே? முகநூல்ல ஏன் பர்சனல் விஷயங்களை எழுதறே? ஏன் இவ்ளோ ப்ரெண்ட்ஸ் வைச்சிருக்கே? எதுக்கு சேட் பண்றே? ஏன் இதைப்போய் ஷேர் பண்றே?  பேசாம இருக்க வேண்டியது தானே ஏன் அதிகம் துள்ளறே? எல்லாம் கல்யாணம் வரைக்கும் தானே? ஏன்? ஏன் ஏன்?

இது தான் இன்றைய இளம் பெண்களுக்கு எதிரான கேள்விகள். அவர்களுடைய பதில் என்னவாக இருக்கும்?

நான் என்ன தான் செய்வது? எங்கு போய் ஒளிந்து கொள்வது? என் முகத்தை பர்தா போட்டு மறைத்துக் கொள்வதா? அப்படி எனில் என் அறிவை என்ன செய்து பொத்தி வைத்துக் கொள்ள? என் வார்த்தைகளை எங்கு நான் பதுக்கி வைக்க? நான் காணாமல் ஆகிப் போவது தான் இந்தச் சமூகம் எனக்களிக்கும் தண்டனையா? என் உயிர் ஒரு சாதாரணப் பொருளா? அதற்கு மதிப்பே கிடையாதா?

ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண்களுக்கு எதிராக ஏதாவது அநீதி நடந்து கொண்டேயிருக்க வேண்டுமா என்ன? வீட்டுக்குள் பூட்டி வைத்த காலம் முதல் துணிச்சலுடன் வெளி உலகத்தில் ஓரளவேனும் பொருதாளாதார சுதந்திரத்துடன் இருக்க முடிகிற இக்காலகட்டத்தில் ஆசிட்களையும் ஆயுதங்களை எதிர்பாராத நேரத்தில் எங்களை நோக்கி எறியப்பட்டால் என்ன செய்வது? ஆபத்து எந்த ரூபத்தில் வரும் என்று யார் எதிர்ப்பார்த்திருக்க முடியும்? வீட்டில் வெளியில் வேலையில் என சுற்றிலும் பிரச்னைகள் சூழ்ந்திருக்க, சற்று சுயமாக தன் கருத்துக்களை வெளியிடலாம் என்று முக நூலில் எழுதினால் அதற்கும் எத்தனை எதிர்ப்புக்கள்? ஆபாச சித்திரப்புக்கள், வக்கிர அழைப்புக்கள்!

சுவாதி, வினுப்பிரியா ஒரே வாரத்தில் இரண்டு உயிர் இழப்புக்கள். இவர்கள் என்ன தவறு செய்தார்கள்? சராசரி வாழ்க்கைக்கான கனவுகளுடன் இருந்த பெண்கள் தானே இவர்கள். இவர்களின் மரணத்துக்கான நியாயம் என்ன? சுவாதி கொலையுண்ட இடத்தருகே ஐம்பது சொச்சம் மக்கள் வேடிக்கை பார்த்தார்கள் என்று அவர்களை காறி உமிழ்கிறார்கள். இப்படியான ஒரு ஆபத்தில் ஒருவர் சிக்கிக் கொண்டால் என்ன செய்வது என்று யாருக்கும் தெரிவதில்லை. உதவி செய்யப் போய் ஆபத்தில் சிக்கிக் கொள்வோம் என்ற தற்காப்பு மனநிலை ஒரு புறம். பதை பதைப்பும் பதற்றமும் மறு புறம் என்று அவர்கள் மூளை செயல் இழந்து போயிருக்கும். மரண பயம் மனித நேயம் உட்பட எல்லாவற்றையும் விழுங்கி இருக்கும். ஆனால் அங்கிருந்தவர்கள் இரண்டு மணி நேரம் அப்படியிருந்தது தான் தவறு. குற்றவாளியை நோக்கி ஒரு சொல் அல்லது தாக்கி ஒரு கல் கூட எறியப்படவில்லை. கொலைகாரனை துரத்திப் பிடித்து கத்தியை பிடுங்கி சண்டை போடச் சொல்லவில்லை, அதிகபட்சமாக அத்தனை பேரும் சேர்ந்து அவனை அச்சுறுத்தியிருக்கலாம். குரல் கொடுத்திருக்கலாம்.  மனிதாபிமானம் அருகிக் கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் சமயோசித புத்தியுடன் அச்சூழலில் செயல்படுவதற்கு யாரும் இல்லாமல் போனது தான் கொடுமையின் உச்சம். வேடிக்கைப் பார்க்கும் கூட்டமாக நாம் எங்கேயோ மிகப் பெரிய தவறு இழைக்கிறோம் என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. நிச்சயம் ஒவ்வொரு நாளும் செய்தித்தாளைப் பார்க்கும் போது அவர்கள் மனம் குற்றவுணர்வால் அழுத்தப்படும்.

அடுத்தவர்களை குறை கூறுவதும், அரசாங்கத்தைத் தாக்கி கண்டன ஆர்ப்பாட்டம் செய்வது எல்லாம் இத்தகைய மரணங்களுக்குத் தீர்வாகாது. அடிப்படை விஷயங்களில் தான் பிரிக்க இயலாத முடிச்சுக்கள் உள்ளது. ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் இந்த விஷயத்தில் குவிந்திருக்க, அதிகார மையம் துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளிகளை நெருங்கிவிட்டது. ஆனால் ஒரு பாவமும் அறியாத இரண்டு இளம் பெண்களின் மரணத்திற்கான நீதி என்பது குறைந்த பட்சம் இன்னொரு பெண்ணுக்கு இது நிகழக் கூடாது என்பதாகத் தான் இருக்க வேண்டும்.

வீட்டை விட்டு வெளியே வந்து மீண்டும் வீட்டினுள் செல்வதற்குள் பெண்கள் சந்திக்க வேண்டிய எதிர்பார்த்த போராட்டங்களைத் தவிர இது போன்ற எதிர்பாராத சிக்கல்கள் உயிர் பயங்களை எப்படி எதிர்கொள்வது? நகைக்காக, பணத்துக்காக, பழி வாங்குதலுக்காக, இதற்காக, அதற்காக என்று கொலை செய்பவர்களுக்கான தண்டனை அதிகபட்சம் என்ன?பெண்களுக்கு எதிரான வன்முறைக்கான தண்டனைகளை கடினப்படுத்த வேண்டும். அந்த அச்சம் தரும் விளைவில் இது போன்ற நிகழ்வுகளைத் நிச்சயம் தடுக்கலாம். அரபு நாடுகளில் இது போன்ற குற்றங்களுக்கான தண்டனை என்னவென்று அனைவருக்கும் தெரியும். தூக்கு தண்டனை, கருணை மனு தப்பித்தல் என்று இங்கே நடப்பில் இருக்கும் சட்டங்களும் அதன் ஓட்டைகளும் ஒருபோதும் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு தீர்வாகாது.

ஊடகங்கள் நடந்தவற்றைக் காட்சிப்படுத்துவதையும், ஐந்தாறு பிரபலங்களை அழைத்து கலந்துரையாடல் செய்வதையும் நிறுத்திவிட்டு குற்றங்களுக்கான தண்டனைகள் பற்றி விரிவாக விவாதிப்பதுடன் அதற்கான தீர்வையும் கண்டடையவேண்டும். குற்றவாளியைக் கண்டுபிடித்து குற்ற மனோநிலை எப்படி உருவாகிறது என்பதை ஆராய்ச்சி செய்யுங்கள். 24 மணி நேரத்தில் சில மணி நேரத்தையாவது சமூக நலத்தை மேம்படுத்தும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புங்கள்.

இன்றைய பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஊட்டி வளர்க்க வேண்டயது உயிரின் மதிப்பையும் தன்னம்பிக்கையையும் தான். போராட வேண்டிய சூழலில் போராடவும், விட்டு விலக வேண்டிய இடங்களிலிருந்து ஒதுங்கவும் கற்றுத் தர வேண்டும். தற்காப்பு கலைகளை நிச்சயம் அடிப்படை கல்வியுடன் கற்றுக் கொள்ள வேண்டும். யோகா, தியானம் பெண்கள் தினமும் செய்ய வேண்டும். உடலையும் மனத்தையும் உறுதியாக வைத்திருந்தால் நம்மை எதிர்நோக்கி வரும் தீய சக்திகளை ஓரளவு சமாளித்துவிடலாம்.   

ஃபேஸ்புக்கில் சுயமி புகைப்படம் போடுவதும் நம்முடைய கருத்துக்களை ஆழமாக பதிவு செய்வதும் சிலருக்குப் பிடிப்பதில்லை. அவர்கள் ஆணாதிக்கம் கொண்டவர்களோ, வக்கிர மனம் படைத்தவர்களா என்ற ஆராய்ச்சியை எல்லாம் மீறி நாம் இந்த முகமற்ற உலகில் கண்காணிக்கப்படுகிறோம் என்பது தான் உண்மை. ஃபேஸ்புக்கை எந்த அளவு பயன்படுத்தலாம், என்ற தெளிவு இருந்தால் போதும் தவிர வினுப்ரியாவுக்கு ஏற்பட்ட மார்பிங் பிரச்னை ஏற்பட்டால் அதை எப்படி எதிர்கொளவது என்பதை அறிந்திருக்க வேண்டும். பாதகம் செய்வோரைக் கண்டால்  மிதித்து துவைக்கும் துணிவை பெண்கள் பெற வேண்டும். தனக்கு எதிரே நடக்கும் கொடுமைகளை எதிர்த்துப் போராட கூடிய துணிவை பெண் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் எதைவிடவும் முக்கியமாகக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

நம்முடைய தவறு எதுவுமில்லாத போது உயிரை போக்கிக் கொள்ள ஏன் அந்தப் பெண் அவசரப்பட்டாள்? அவமானம், பயம், தன்னை இனி யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்ற தோல்வி மனப்பான்மை, தீவிர மன உளைச்சலால் வேறு வழியே இல்லை என்று முடிவு செய்து தற்கொலை செய்து கொண்டாள். இங்கு இத்தனை பெண்ணிய அமைப்புக்கள், மகளிர் மேம்பாட்டு கழகங்கள் இருந்தும் அவர்களை தொடர்பு கொள்ள முடியும் என்று கூட அவள் தெரியவில்லை. மார்ஃபிங் புகைப்படத்தை விட, அவளது குடும்பத்தாருக்கு சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று இத்தகைய அவசர முடிவை அவள் எடுத்திருக்கக் கூடும். இணையம் பற்றி அறிந்திடாத பெற்றோர்களுக்கு மார்ஃபிங் போட்டோஷாப் பற்றிய அறிதலும் இருக்காது. அதை தோழிகளுடன அல்லது விஷயம் தெரிந்தவர்களுடன் இணைந்து தன் பெற்றோர்களுக்கு எடுத்து புரிய வைத்திருக்கலாம் தற்கொலை என்பது இறுதி தீர்வல்ல. பிரச்சனையில் இருந்து மீண்டெழுந்து வாழ்வதுதான் முக்கியம்.

பெண்ணின் உடல் மீதும், மானத்தின் மீதும் கற்பின் மீதும் கட்டமைக்கப்பட்ட அதிகப்படியான அச்சுறுத்தல்களும் பெண்ணின் உடலை உடைமையாகவே வைத்திருக்கும் சமூக கோளாறுகளும் இத்தகைய மரணங்களுக்கு மறைமுகக் காரணங்களாக உள்ளது. பெண் சுதந்திரம் என்பது இன்னும் முழுவதும் கிடைக்காத ஒன்றாகத் தான் இருக்கின்ற நிலையில் இன்னும் எத்தனை காலம் தான் பழமைவாத வழக்கங்களால் உயிர்பலியை நிகழ்த்திக் கொண்டிருக்க போகிறோம். பெண்ணை நேசிக்கும் பெண்களை மதிக்கும் ஒரு சமூகமாக நாம் மாறத் தவறினால் ஆணவக் கொலைகளும், பாலியல் வன்கொடுமைகளும், கொலைகளும், தற்கொலைகளும் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com