சுதா இப்போது என்ன செய்ய வேண்டும்?

சுதாவின் கணவன் ஏற்கனவே இருமுறை போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று திரும்பியவன். அப்படி இருக்கும் போது சுதாவின் கனவு நிறைவேறுமா?
சுதா இப்போது என்ன செய்ய வேண்டும்?

சுதாவுக்குத் திருமணம் ஆன போது வயது 17. காதல் மற்றும் கலப்புத் திருமணம். இரு தரப்பு வீட்டினரும் இவர்களது திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும் சுதாவின் கணவன் தன் மனைவியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று வாழத் தொடங்குகிறார். மூன்று வருட புகுந்த வீட்டு வாழ்வில் சுதாவுக்கு ஆணொன்றும், பெண்ணொன்றுமாக இரண்டு குழந்தைகள் ஆனது. மாமியார் வீட்டில் சுதா ஒரு வேலைக்காரியாகத் தான் நடத்தப்பட்டதாக கூறினார்.

அங்கே சமையல் இரவு மட்டும் தானாம். அப்படி சமைப்பதையும் முதலில் ஆண்கள் தான் சாப்பிட வேண்டுமாம். ஆண்கள் உண்டு முடிந்து பிறகு குழந்தைகளுக்கு சாப்பாடு போடப்படும். அவர்களுக்குப் பின் வயலில் வேலை செய்து விட்டு வரும் வீட்டுப் பெண்கள் சாப்பிடுவார்கள்... அவர்களுக்கும் பிறகு மிச்சம் மீதி இருக்கும் உணவை தான் சுதா உண்ண வேண்டும். சுதா கர்ப்பிணியாக இருந்த போதும் இதே நிலை தானாம்! மேலோட்டமாகப் பார்த்தால் இதில் குறைபடுவதற்கு ஒன்றுமில்லாமல் இருக்கலாம். இதென்ன எல்லா வீடுகளிலும் இப்படித்தானே செய்கிறார்கள். முதலில் வீட்டு ஆண்களும், குழந்தைகளும் சாப்பிட்ட பிறகு தான் பெண்கள் சாப்பிடுவார்கள் இது வழக்கம் தானே! என்று தான் நினைக்கத் தோன்றும்.

அதெல்லாம் சுமூகமாக பேசிப் பழகக் கூடிய குடும்ப உறுப்பினர்களுக்குள் கடைபிடிக்கப் படும் போது பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையற்ற விசயம் தான். ஆனால் சுதாவின் நிலை அப்படியல்ல என்று அவர் கூறுகிறார். 

வீட்டில் யாரும் தன்னிடம் சுமுகமாகப் பேசுவதில்லை. அங்கிருந்த மூன்று வருடங்களும் தனக்கு நிராகரிக்கப்பட்ட உணர்வே மிகுதியாக இருந்தது எனவும். கூடவே நன்றாக உழைத்து சலித்து பசித்து வரும் வீட்டு ஆண்கள், வளரும் பிள்ளைகள், அலுப்போடு வரும் ஓரகத்தி, நாத்தனார், மாமியார் இவர்கள் உண்ட பிறகு தனக்கு ருசிக்கு மட்டுமல்ல பசிக்கு உண்ணக் கூட பெரிதாக எதுவும் மிஞ்சியதே இல்லை எனவும் சுதா வருத்தப்பட்டார். பல நாட்கள் பசித்த வயிற்றுடனும், இயலாமையால் பொங்கும் கோபத்துடனும் தான் சுதாவால் உறங்க முடிந்திருக்கிறது.

அதன் விளைவு நான்காம் வருடம் புகுந்த வீட்டிலிருந்து கணவனை அழைத்துக் கொண்டு சென்னைக்கு பிழைப்பைத் தேடி புறப்பட்டார் சுதா...

சுதாவுக்கும் சரி, கணவருக்கும் சரி பெரிதாக படிப்பறிவில்லை. சென்னைக்கு வந்து என்ன வேலை செய்து விட முடியும்? கணவர் ஒரு மேஸ்திரியின் கீழ் கொத்தனாராகவும், சுதா தெரிந்தவர் மூலமாக சில வீடுகளில் பணிப்பெண்ணாகவும் வேலை தேடிக் கொண்டார்கள். ஆரம்பத்தில் சென்னை வாழ்க்கை கஷ்ட நஷ்டங்களுடன் இருந்தாலும் வாழ்வின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துவதாகத் தான் இருந்திருக்கிறது. இரண்டு பேரின் சம்பாத்தியத்தில் குடும்ப வண்டி ஓரளவுக்கு இழுத்துப் பறித்துக் கொண்டு ஓடினாலும் சுதா சின்னச் சின்ன சந்தோசங்களுடனும், கொஞ்சம் சஞ்சலங்களுடனும் ஏதோ ஒருவகையில் நிம்மதியாகவே இருந்தார்.

குழந்தைகள் வளர, வளர பிரச்சினைகளும் வளரத் தொடங்கின. முதலில் பையன், தன் வயதொத்த பிள்ளைகளுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்து புதிது, புதிதாய் எதையாவது கேட்டு அடம் பிடிக்கத் தொடங்கினான். அடுத்து பெண்குழந்தை பகட்டான நல்ல உடைகளில் மிகுந்த ஆர்வம் அவளுக்கு... மாதா, மாதம் வருமானம் போதாது எனும் நிலை வர, வர சுதா தான் வேலை செய்யும் வீடுகளின் எண்ணிக்கையைப் பெருக்கத் தொடங்கினார்.

சுதாவின் கணவருக்கும் வருமானம் பெருக வேண்டும் என இதே எண்ணம் வந்திருந்தால் ஒரு வேளை சுதா இப்போதைய நெருக்கடிக்க ஆளாகியிருக்க வாய்ப்பில்லாமல் போயிருந்திருக்கலாம். அவருக்கு வருமானத்தை கரைக்கும் எண்ணம் தான் வந்தது போல; உடன் வேலை செய்வோரில் சிலரது தவறான சகவாசத்தால் அவருக்கு குடிப் பழக்கம் தொற்றிக் கொண்டது. தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வரத் தொடங்கினார். கையிருப்புகள் என ஏதும் இல்லாத நிலையில் சுதாவின் காது, மூக்கு, கழுத்தில் கிடந்த துக்கினியூண்டு தங்கமெல்லாம் ஷேட்டுக் கடையில் ஹிந்தி படிக்கப் போய் பிறகு அங்கேயே ஐக்கியமாகி விட்டன. நாளாக, நாளாக சுதாவின் கணவர் குடித்து விட்டு வீட்டுக்கு வருவதோடல்லாமல் தினமும் சுதாவிடம் குடிக்கப் பணம் கேட்டு மிரட்டவும் ஆரம்பித்தார்.

வீட்டு வேலை செய்து தனது சொற்ப சம்பாத்தியத்தில் தன் குழந்தைகளின் படிப்புச் செலவுகளோடு, வீட்டுச் செலவுகளையும் சமாளித்து ஓரளவுக்கு குடும்பக் கஷ்டத்தை சுதா கவனமாகக் கையாண்டு கொண்டிருந்த போது தான் தனது கணவரின் நண்பர் என்ற பெயரில் சுதா, மாணிக்கத்தை சந்திக்க நேர்ந்தது. ஒருமுறை சுதாவின் கணவர் குடித்து விட்டு எழ முடியாமல் போதையில் சாக்கடையோரம் விழுந்து காயத்துடன் எழ முடியாமல் கிடக்கையில் மாணிக்கம் காப்பாற்றி அழைத்து வந்து வீடு சேர்த்த வகையில் அந்தக் குடும்பத்துடன் நெருக்கமானார்.

இந்த மாணிக்கம் ஒரு ஆட்டோ டிரைவர். மனைவிக்கு நாள்பட்ட தீவிர ஆஸ்த்துமா. திருமண வயதில் பிள்ளைகள் இருக்கிறார்கள். முதலில் சாதாரணமாக நட்பாகவே பழகத் தொடங்கினார். சுதாவின் கணவர் குடித்து விட்டு மாநகரத்தின் தெருக்களில், சாலையோரங்களில் என எங்காவது விழுந்து கிடந்தால் சுதாவோடு சென்று அவரை அழைத்து வந்து வீடு சேர்க்கும் கடமை மாணிக்கத்துக்கும் வந்து விட்டிருந்தது. மாணிக்கம் அந்தக் கடமை உணர்வை சுதாவுக்காக வலிய ஏற்படுத்திக் கொண்டார் என்பது சுதாவுக்கு சில நாட்களில் புரிய ஆரம்பித்தது. பிள்ளைகள் மாணிக்கத்தை மாமா என்று அழைக்கத் தொடங்கின. சுதாவின் கணவருக்கோ தன்மனைவிக்காகத் தான் மாணிக்கம் இத்தனை உதவிகள் செய்கிறார் என்று தெர்ந்தே இருந்த போதும் அதை தட்டிக் கேட்டு மாணிக்கத்தின் உறவைத் துண்டிக்கும் அளவுக்கு ரோஷம் வந்திருக்கவில்லை.

என்ன இருந்தாலும் 17 வயதில் வீட்டை எதிர்த்து தன்னை மணம் புரிந்து கொண்ட காதல் மனைவி! அவளை இன்னொரு ஆடவன் தவறான கண்ணோட்டத்தில் அணுகுகிறான் என்று தெரிய வந்த போது அத்தோடு அவன் உறவைத் துண்டித்து அனுப்பும் உத்வேகமோ, மன முதிர்ச்சியோ எது ஒன்றும் சுதாவின் கணவருக்கு  வராமலே போனது. நண்பனுக்குத் தான் தண்டனை இல்லையே தவிர மனைவிக்கு ஏக காலத்துக்கும் தண்டனை போதும் போதுமென்ற அளவுக்கு கிடைத்தது. கணவனின் சந்தேகத்தால் சுதாவுக்கு தினமும் அடி, உதை, மட்டுமல்ல அசிங்கமான வார்த்தைப் பிரயோகங்களில் வசவுகள் வேறு!

சுதாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மாணிக்கம் சுதாவின் கணவரின் குடிச் செலவுகளுக்கு ஸ்பான்ஸர் ஆனார். பிள்ளைகளுக்கு அவ்வப்போது தேவையானவற்றை வாங்கிக் கொடுத்து பழக்கினார். இப்போது குழந்தைகளும் கூட சுதாவிடம் பணமில்லையென்றால் மாணிக்கத்திடம் கேட்க ஆரம்பித்தனர். இதென்ன விவஸ்தை கெட்ட பழக்கம் என்று சுதாவுக்கு எரிச்சலாக இருந்தது. ஆனால் சுதாவின் கணவர் தனது குடிச் செலவுகளுக்காக மாணிக்கம் அந்த வீட்டுக்கு வந்து போவதை நிறுத்தத் தயாராக இல்லை. இந்த மனிதன் பூனைக்கும் காவல், பாலுக்கும் காவல் எனும்படியான ஒரு இரண்டும் கெட்டான் கொள்கையை கடைபிடிக்க ஆரமித்தார். மாணிக்கத்தோடு சேர்ந்து குடிப்பதும், சுதாவை அடித்து துவைப்பதுமாக அந்த மனிதனின் வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது. //இது வரை மரியாதையோடு குறிப்பிட்டது போல இனியும் சுதாவின் கணவனை மரியாதையோடு குறிப்பிடத் தேவையில்லை என்பதால் இனி அவன் என்றே குறிக்கலாம்//  அவனைப் பொறுத்தவரை குடித்தால் மட்டும் போதும். குடல் செத்து இறந்தாலும் பரவாயில்லை மனைவியை கவுரமாக வாழ வைப்பது எப்படி என்று மட்டும் ஒரு போதும் யோசிக்கவே தேவையில்லை என்பது தான் அவனது குண விசேஷம். 

’இப்படி ஒரு கணவன் தேவையா? பேசாமல் அவனை விட்டுப் பிரிந்து விட்டால் என்ன? ’என்ற கேள்விக்கு சுதாவின் பதில்;

”அக்கா இந்த மனிதன் கணவன் என்ற பெயரில் என்னோடு இருப்பதால் தான் மாணிக்கம் கூட இன்னும் அத்துமீறவில்லை. பயந்து பயந்து செத்து செத்து வாழ்ந்தாலும் ஏதோ ஒரு வித பாதுகாப்பு உணர்வு எனக்குள் இருக்கிறது. கணவனுடன் வாழும் போதே எனக்கு இந்த நிலை. அவனையும் வேண்டாம் என்று விட்டு விட்டால் நான் என் வாழ்நாளில் எத்தனை மாணிக்கங்களை தான் எதிர் கொள்ள முடியும்? நீங்களே சொல்லுங்கள்!’என்கிறாள்.

’ஏன் இந்த உலகில் தன்னம்பிக்கையோடும், சுயமரியாதையோடும் மோசமான கணவனைப் பிரிந்து தனித்து வாழும் பெண்கள் இல்லையா என்ன? என்றால்;

’அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் என்னால் இந்த மனிதனை விட்டு விட்டு தனியாக குழந்தைகளோடு இந்த உலகில் வாழ முடியுமென்று தோன்றவில்லை’என்கிறாள்.

ஒன்று சுதாவின் கணவன் குடிப்பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும் அல்லது மாணிக்கம் தனது தவறான எண்ணத்தை விட்டொழிக்க வேண்டும். இது இரண்டும் நடக்க வாய்ப்பிருப்பதாக சுதாவே நம்பவில்லை.

எனக்குத் தெரிந்து சுதா அவளது குடிகாரக் கணவனை விலக்கி விட்டு தனது தாயையோ, விதவைத் தமக்கையையோ துணைக்கு வைத்துக் கொண்டு தன் குழந்தைகளுக்கு மட்டுமான புது வாழ்வை தொடங்கலாம். என்பது தான் சரியான பதிலாக இருந்தது.

ஆனால் சுதா தன் கணவனை குடிப் பழக்கத்தில் இருந்து மீட்டுக் கொண்டு வந்து எல்லோரையும் போல் சுமுகமான, இயல்பானதொரு வாழ்க்கை வாழவே விரும்புகிறாள். 

சுதாவின் கணவன் ஏற்கனவே இருமுறை போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று திரும்பியவன். அப்படி இருக்கும் போது சுதாவின் கனவு நிறைவேறுமா?

சுதா எனது ஸ்நேகிதியின் வீட்டில் தான் வேலை பார்த்து வருகிறார்.

சரி இனி  நீங்கள் சொல்லுங்கள் சுதா இப்போது என்ன செய்ய வேண்டும்?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com