வ.உ.சி. சிறையில் இருந்தபோது எழுதிய நூல் "மெய்யறம்"

வ.உ.சி. கண்ணனூர் சிறையில் இருக்கும் பொழுது எழுதிய நூலே "மெய்யறம்" ஆகும். அவர் விடுதலை பெற்ற பின்னர் அந்த நூல் வெளியிடப்பட்டது.  வ.உ.சி. காலத்திலேயே இந்நூல் மூன்று பதிப்புகள் கண்டுள்ளது.
வ.உ.சி. சிறையில் இருந்தபோது எழுதிய நூல் "மெய்யறம்"

மெய்யறம் - முன்னுரை

வ.உ.சி. கண்ணனூர் சிறையில் இருக்கும் பொழுது எழுதிய நூலே "மெய்யறம்" ஆகும். அவர் விடுதலை பெற்ற பின்னர் அந்த நூல் வெளியிடப்பட்டது.  
வ.உ.சி. காலத்திலேயே இந்நூல் மூன்று பதிப்புகள் கண்டுள்ளது.

மெய்யறம், திருக்குறள் விளக்கும் நீதிக்கருத்துக்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நூலாகும். தமிழ் இலக்கியங்களுக்குள் வ.உ.சி. யின் மனதை மிகவும் ஈர்த்தது திருக்குறளே ஆகும். மாக்களைப்போல் மனம் போனபடி வாழ்க்கை நடத்தும் மக்கள் மனந்திருந்தி நல்வாழ்வு வாழத் துணைபுரிவது திருக்குறளே என்பது வ. உ. சி. யின் அசைக்க முடியாத நம்பிக்கை. மக்கள் மன நலம் பேணி நல்வாழ்வு பெற வேண்டும் என்பதற்காகக் குறளின் அடிப்படையில் மெய்யறம் என்னும் இந்நூலை இயற்றியுள்ளார். இதனைத் திருக்குறளின் வழிநூல் என்றே வ. உ. சி. குறிப்பிடுகின்றார்.

"இதனை வாசிக்கும் ஒவ்வொருவரும் தத்தம் நிலைக்கு உயர்ந்ததாயுள்ள நிலைக்குரிய ஒழுக்கங்களைக் கைக்கொண்டு அவ்வுயர்ந்தநிலையை அடைந்து அவ்வாறே ஒவ்வோர் உயர்ந்தநிலையையும் அடைந்து மேம்படுவார்களாக." என்று கூறுவதன் மூலம் வ. உ.சி. தனிமனித ஒழுக்க மேம்பாட்டிற்காகவே எழுதப்பட்டதே இந்நூல் என்பதை உணர்த்துகிறார்.

ஒரு நாடு முன்னேற வேண்டும் என்றால், அந்நாட்டின் அங்கங்களாகிய மாணவர், இல்வாழ்வார், அரசர், அந்தணர் ஆகியோர் அவரவர் கடமைகளைச் செவ்வனே செய்ய வேண்டும். ஆகவேதான் முதலில் இந்நால்வருடைய கடமைகளைப் பற்றிக் கூறிப் பின்னர் அனைத்து மக்களுக்கும் பொதுவானதாகிய மெய்ப்பொருள் பற்றிக் கூறியுள்ளார்.     

"மெய்யறம்" என்ற சொல்லில் இரு பகுதிகள் உள்ளன. முதல் பகுதி "மெய்". இரண்டாம் பகுதி "அறம்". "மெய்" என்றால் உண்மை என்று பொருள். "அறம்" என்பது தர்ம நெறி ஆகும். வ.உ.சி. இந்நூலில் உண்மையான அறத்தைப் பற்றி இளம் வயதினரும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கி உள்ளார். இந்நூல் மிக எளிய, சிறிய வரிகளின் தொகுப்பு ஆகும். இது அனைத்து வயதினருக்கும் ஏற்றது ஆகும். இந்நூல் தெளிந்த சிந்தனை, வாழ்க்கையைப் பற்றிய அறிவு, ஞானம் இவற்றை அளிக்கக் கூடியது ஆகும். இந்நூலில் இருந்து ஒழுக்கம், கலாச்சாரம், வாழும் முறை இவை குறித்து நாம் அறியலாம். இளைஞர்கள் நல்வாழ்க்கை வாழ நன்னடத்தையைக் கற்பிக்கிறது.

மெய்யறம் என்னும் இந்நூலில் 5 பகுதிகள் உள்ளன. அவை மாணவரியல், இல்வாழ்வியல், அரசியல், அந்தணா¢யல், மெய்யியல் ஆகியவை. மொத்தம் 125 அதிகாரங்கள் உள்ளன. ஒரு அதிகாரத்தில் பத்து வரிகள்ள் உள்ளன. மொத்தம் 1250 வரிகள் உள்ளன. ஒவ்வொரு வரியும் ஓர் அறிவுரை கூறுகிறது.

முதல் பகுதியான "மாணவரியல்" மாணவர்களுக்கானது. இது 30 அதிகாரங்கள் கொண்டது. மாணவர் கடமையாக இன்னது, இன்னது என்று விளக்கப் புகுமுன்னே மாணவர் கடமையை ஆணும் பெண்ணும் செய்வதற்கு உரியவர்கள் என்று கூறுகிறார்.இதனால் பெண்ணினத்தையும் சமப்படுத்தியே எழுத முனைவது அவரின் உயர் நோக்குக் கொள்கைக்குச் சான்றெனலாம். மாணவப் பருவம்  என்பது கற்கும் பருவமே. அது வாழ்வின் முடிவு வரை தொடரத்தக்கது என்பதிலோ- முதியோர் கல்வி தேவை என்பதிலோ மாற்றுக் கருத்து அற்றவர் வ.உ.சி. அதனை நிறுவும் வண்ணமே அவர் இளமைப்பருவம் இயைந்தது என்று கூறுகின்றார்.

இளமைப்பருவமே என்று திட்டவட்டமாகக் கூறாதது அவரின் காலம் தாண்டிய பார்வையைக் காட்டுகிறது. இளமைப்பருவமே சிக்கலற்ற பருவம். கற்பது நினைவில் பதியவும்- எழுச்சி கொண்டு செயலாற்றவும் உடலும் மனமும் அதிகம் உறுதுணை செய்யும் பருவம். இப்பருவத்தில் கற்க வேண்டியவற்றைக் கற்க வேண்டும், அறியக் கூடாதவற்றைத் தவிர்த்து விடவேண்டும் என்றும் கூறுகிறார். மேலும் கடமை, அடக்கம், கல்வி, உடல் நலம் இவற்றின் முக்கியத்துவம் குறித்தும் விளக்குகிறார். அவர் நமது உடல், ஆன்மா, மனம் இவை குறித்தும் கூறியுள்ளார். நமது மனமே நமது செயல்களுக்குக் காரணமாகும். நமது உடலை, அதாவது ஐம்புலன்களைக் கட்டுப்படுத்துவது நமது மனமே ஆகும். ஆன்மா நமது மனத்தை வழி நடத்துகிறது. நமது விதியைத் தீர்மானிப்பது கடவுளல்ல, நாம்தான்.  ஏனெனில் நமது செயல்களின் பயனே நமது விதியாகும் என்று உறுதிபடக் கூறுகிறார். நமது நன்மைக்கும் தீமைக்கும் நமது செயல்களே காரணம். அதனால் நல்விதியை விரும்பினால் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும்.

மாணவர்கள் இறைச்சி, மது, திருட்டு, புறம் கூறுதல், பொய், இரத்தல், பொறாமை, போதை பொருட்கள், பயனில் சொல் போன்றவற்றை விலக்கும்படி வ.உ.சி. கூறுகிறார். மேலும் நட்பு, நன்றி மறவாமை, நடுநிலைமை, அடக்கம், ஒழுக்கம், முயற்சி, ஊக்கம் போன்றவற்றின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைக்கிறார்.

இரண்டாவது பகுதி "இல்வாழ்வியல்" ஆகும். இதில் 30 அதிகாரங்கள் உள்ளன. இதில் வ.உ.சி. இல்லறம் குறித்து விளக்குகிறார். வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது குறித்து விளக்குகிறார். பின்னர் வாழ்க்கையை நல்ல முறையில் நடத்திச் செல்வதற்கும் அறிவுரைகள் கூறுகிறார். மறதி, காலம் தாழ்த்துதல், மடி, பேதைமை, வெண்மை போன்றவற்றை நீக்க வேண்டும் என்றும் அதிக துயில், அச்சம், அதிக ஆசை, செருக்கு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றும் வ.உ.சி. கூறுகிறார். பெற்றோர், குழந்தைகள், விருந்தினர், முன்னோர் ஆகியோரைப் பேணிப் பாதுகாப்பது நமது கடமை என்று அறிவுறுத்துகிறார். சமுதாய வாழ்க்கை, அன்பு, பொறுமை, ஈகை ஆகியவை எவ்வளவு முக்கியம் என்று கூறுகிறார்.

மூன்றாவது பகுதி "அரசியல்" ஆகும். இதில் 50 அதிகாரங்கள் உள்ளன. இதில் ஒரு மன்னர் எப்படி அரசாள வேண்டும் என்று விளக்குகிறார். நல்ல அரசாங்கத்தின் முக்கியத்துவம், அதற்கு இருக்க வேண்டிய இயல்புகள் பற்றிக் கூறுகிறார். ஓர் அரசன் பா¢வுடன் இருக்கவேண்டும், எதையும் ஆலோசித்துச் செய்ய வேண்டும் என்று சொல்கிறார். ஒற்றர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் முக்கியத்துவம், ஒரு நாட்டின் சிறப்புகள் எவை, நாட்டிற்குப் பாதுகாப்பு எப்படி அளிக்க வேண்டும், தொழில்களின் சிறப்பு, படை எவ்வளவு அவசியம், ஓர் அரசன் மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் எவை என்று இந்தப் பகுதியில் தெளிவாகக் கூறுகிறார்.  

10 அதிகாரங்கள் கொண்ட நான்காவது பகுதி "அந்தணரியல்" ஆகும். இது துறவறம் பற்றிக் கூறும் பகுதி ஆகும். இதில் துறவிகளின் இயல்பு, அவர்களுக்கு ஒழுக்கம் எவ்வளவு முக்கியம், அவர்களுக்கு இருக்கக் கூடாத குணங்கள் (வெஃகாமை, வெகுளாமை, இன்னா செய்யாமை போன்றவை), அவர்கள் செய்ய வேண்டியவை (தவம், துறவு) ஆகியவற்றை விளக்குகிறார்.  

கடைசிப் பகுதி "மெய்யியல்" ஆகும். இதில் 5 அதிகாரங்கள் உள்ளன. இது மிகவும் நுட்பமானது. ஏனெனில் இது கடவுளைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும் அத்தியாயம் ஆகும். இதில் உண்மை நிலையை (கடவுளை) அடைவதற்கான வழிமுறைகளை எடுத்துரைக்கிறார். கடவுள் தான் உண்மை, மற்றவை எல்லாம் உண்மை அல்ல என்பதால் வ.உ.சி. கடவுளை "மெய்" என்றே அழைக்கிறார். கடவுள் என்பது என்ன, கடவுளைப் புரிந்து கொள்வது எப்படி, உணர்வது எப்படி, அந்த நிலைமையை அடைவது எப்படி என்று படிப்படியாக விளக்குகிறார். இந்தப் பகுதி ஆழ்ந்து படிக்க வேண்டிய பகுதி ஆகும்.

வ.உ.சி. வெளித் தோற்றத்திற்கு ஓர் அரசியல் வாழ்க்கை மேற்கொண்டிருந்தாலும், அவரது அகநிலை வாழ்க்கை மெய்நிலைப்பட்டதே.  அவரது அடிநிலை மனம் இந்த மெய்நிலையையே சதாகாலமும் நாடியும் தேடியும் அடைந்தும் இருத்தல் காணக்கிடக்கின்றது. வாழ்வின் போதே மெய்ந்நிலை அடைதல் என்ற சித்தாந்தத்தில் வாழ்ந்தவர் வ.உ.சி. எனவே, அதற்குரிய சாதனங்களாகத் தன்னையறிதல், உடம்பைப் பேணல் என்று அடுக்கிய பல முறைகளும் மக்கள் தொ¢ந்து, தெளிந்து கடந்து வர வேண்டும் என எண்ணினார். அருள் கொண்டு மெய்யறம் ஆற்றி மெய்ப்பொருளை அடைதல் வேண்டும் என்று 'மெய்யறம்' நூலை முடிக்கின்றார்.

அருள், தயவு, கருணை போன்ற மெல்லிய ஆறறிவிற்குரித்தான உணர்வுகளை மேம்படச் செய்தல் அவசியம் என்பது வ.உ.சி. யின் கருத்தாக இருக்கின்றது. இந்த மேம்பட்ட உணர்வுகளே அறவழி வாழ நம்மை அனுமதிக்கும் என்பது உண்மை. அடுத்து இங்குச் சிந்திக்க வேண்டிய ஒன்றை மிக மிகச் சூட்சுமமாக பொதிந்து வைத்துள்ளார். மெய்யறம் ஆற்றுதல் என்பது வெறும் உலக வழக்கன்று. அது மன மெய் வாக்கு கடந்த நிலைக்கு செல்ல முயற்சித்தல் ஆகும். இத்தகைய ஓர் உள்முகப் பயிற்சியை, அற அழி நின்ற மனத்தொடு, அறவழி நின்ற உடலொடு, அறவழி நின்ற அறிவொடு கைகொள்ளும் போதே மெய்யான சூட்சுமத்தை அடைதல் கூடும். அந்த மெய்யை அடையும்போது தானும் மெய்யாகும் சூட்சுமம் வெளிப்படும். இதனை அருள் நிறைந்த அருளாளர்கள் பின்பற்றிச் செயல்படுத்திப் பெற்ற பேறாகக் கொண்டு மெய்ப் பொருளில் ஒன்றி, அருட்பெருஞ்ஜோதியாக ஒளிவிட்டனர் என்பது மெய்யே.

ஒவ்வொரு அதிகாரமும் ஒரு குறிப்பிடத்தக்க ஒழுங்குடன் உள்ளது. ஒவ்வொரு அதிகாரத்தின் முதல் வரியில் அதன் தலைப்பை விளக்குகிறார். அடுத்து வரும் வரிகளில் அதன் நன்மை, தீமைகளை எடுத்துச் சொல்கிறார். கடைசி வரியில் அதைப் பின்பற்ற வேண்டுமா அல்லது தவிர்க்க வேண்டுமா என்று ஆலோசனை கூறுகிறார்.

எடுத்துக்காட்டாக 29- ஆவது அதிகாரமான "ஊக்கமுடைமை" என்ற அதிகாரத்தை எடுத்துக் கொள்ளலாம். முதல் வரியில் ஊக்கம் என்பது என்னவென்று கூறுகிறார்: உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற மன உறுதியே ஊக்கம் ஆகும். இரண்டாவது வரி ஊக்கமுடைமையின் அவசியத்தையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் கூறுகிறது. மூன்றாவது வரி ஊக்கமில்லாதவர்களின் நிலையை விளக்குகிறது. நான்காவது, ஐந்தாவது வரிகள் ஊக்கமுடையவர்கள், ஊக்கமில்லாதவர்கள் இவர்களிடையே உள்ள வேற்றுமையை எடுத்துரைக்கின்றன. தொடர்ந்து வரும் வரிகளில் ஊக்கமுடைமையை மேற்கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்குகிறார். இவ்வாறு ஒவ்வொரு அதிகாரமும் முழுமையாகவும் ஓர் ஒழுங்குடனும் உள்ளது.

ஒவ்வொரு வரியும் எளிமையாகவும் உறுதியான கருத்துடனும் உள்ளது. அது தெளிவாகவும் அழுத்தமாகவும் உள்ளது. எடுத்துக்காட்டாக நாம் 12- ஆவது வரியை எடுத்துக் கொள்வோம். ஒரு வரியில் நான்கு சொற்கள் உள்ளன. "விதிசெய் கர்த்தா வினைசெய் யுயிரே". இவ்வரியின் பொருள் செயல்களைச் செய்பவனே அவனது விதியைத் தீர்மானிக்கிறான் என்பது ஆகும். இச்சொற்கள் எளிமையாகவும் படித்தவுடன் பொருள் புரிந்து கொள்ளும்படியும் உள்ளன. வ.உ.சி. செயல்களைச் செய்பவனால் மட்டுமே அவனது விதியைத் தீர்மானிக்க முடியும் என்றும் வேறு யாராலும் அதைச் செய்ய முடியாது என்றும் உறுதியாகக் கூறுகிறார்.

வ.உ.சி. இந்நூலில் புரட்சிகரமான கருத்துக்களையும் முன் வைக்கிறார். நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பெண்கள் கல்வி கற்பதற்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை. ஆனால் வ.உ.சி. பெண்களும் ஆண்களைப் போலவே கல்வி கற்பதற்கு சம உரிமை உள்ளவர்கள் என்று வலியுறுத்துகிறார். இந்நூலில் இரண்டாவது வரி அவரது இக்கருத்தை விளக்குகிறது. "ஆணும் பெண்ணும் அதுசெய வுரியர்". ஏழாவது அதிகாரத்தில் ஆசிரியர்களின் நற்குணங்களைப் பற்றி விளக்குகிறார். இந்த அதிகாரத்தில் இரண்டாவது வரியில் ஆண், பெண் இருவருமே ஆசிரியராகத் தகுதி உடையவர்கள் என்று கூறுகிறார். அந்தக் காலகட்டத்தில் பெண்கள் கல்வி கற்பதே சாத்தியக் குறைவான விஷயம். ஆனால் வ.உ.சி. பெண்கள் கல்வி கற்பது மட்டுமல்லாமல் ஆசிரியர்களாகவும் ஆகலாம் என்று சிந்திக்கிறார்.      

முப்பத்து மூன்றாவது அதிகாரத்தில் அவர் மறுமணம் குறித்துப் பேசுகிறார். அது உண்மையில் மிகவும் புரட்சிகரமான கருத்துதான். ஒரு விதவைப் பெண் எவ்வளவு இளம் வயதினளாக இருந்த போதும் தனிமையில்தான் வாழ வேண்டும் என்று சமூகம் எண்ணியிருந்த காலகட்டத்தில் துணையிழந்தாரை மணப்பது புண்ணியம் என்று எழுதியுள்ளார். முப்பத்து நான்காவது அதிகாரத்தில் முதல் வரி: "இருவரு ளறிவிற் பொ¢யவ ராள்க". இரண்டாவது வரி: "ஆண்பா லுயர்வெனல் வீண்பேச் சென்க". வ.உ.சி. அவர் கருத்துகளில் மிகவும் தெளிவாக இருக்கிறார். ஆண்களைப் போலவே பெண்களும் அறிவுடையவர்களாக இருக்க முடியும் என்று அவர் கருதுகிறார். அதனால் ஒரு குடும்பத்தில் ஆணும் பெண்ணும் கலந்தாலோசித்து எல்லா விஷயங்களையும் செய்து மகிழ்ச்சியுடன் வாழ்வது விரும்பத் தகுந்தது என்று கூறுகிறார்.

வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்வதற்கு செல்வம் மட்டும் போதுமானதல்ல, மன நிம்மதியும் அவசியம் என்று வ.உ.சி. எண்ணுகிறார். அதை அவர் ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குகிறார். செல்வத்தால் கட்டிலை வாங்க இயலும். ஆனால் மன நிம்மதியே நல்ல உறக்கத்தைத் தரும் என்று  புரிய வைக்கிறார். நிம்மதியாக வாழ்வதற்கு நாம் எவற்றைச் செய்ய வேண்டும் எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று வழிகாட்டுகிறார். நம் உடல் நலத்தை நாம் பேண வேண்டும். ஏனெனில் உடல் நாம் நினைத்ததைச் செய்யும் ஓர் ஒப்பற்ற கருவி ஆகும். நாம் நம் மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில் நம் மனம் ஆக்க, காக்க, அழிக்க வல்லது ஆகும். நம் பெற்றோரையும் குழந்தைச் செல்வங்களையும் பேணிக் காக்க வேண்டும். இவ்வாறு நமக்கு அவர் வாழும் வழிகளைக் கற்றுக் கொடுக்கிறார். நாம் அவற்றைப் பின்பற்றினால் மன நிம்மதியுடன் வாழ இயலும்.

முதல் பதிப்பு சென்னையில் ப்ரோக்ரஸிவ் அச்சகத்தில் 1914- ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. இரண்டாவது பதிப்பு சென்னையில் உள்ள கலாரத்நாகரா அச்சியந்தரசாலையில் 1917- ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. முதல் பக்கத்தில் "இதன் காகிதம் முதலிய யாவும் சுதேசியம்" என்று அச்சிட்டுள்ளார்.மூன்றாவது பதிப்பு அம்பாசமுத்திரத்தில் சண்முகவிலாஸ் அச்சகத்தில் 1930- ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது.

வ.உ.சி. இந்த நூலை தஞ்சாவூரைச் சேர்ந்த இராவ் பகதூர் திரு. சீனிவாச பிள்ளை என்பவருக்கு சமர்ப்பித்துள்ளார். திரு. சீனிவாச பிள்ளை தமிழ் இலக்கிய வரலாற்றை முதன் முதலில் எழுதியவர் ஆவார்.

மெய்யறம் குறித்து தமிழறிஞர்களின் பாராட்டுரைகள்

சுப்ரமண்ய சிவம் அவர்கள் ஞானபாநு இதழில் மெய்யறத்தைக் கீழ்க்கண்டவாறு பாராட்டிக் கூறியுள்ளார்:

 மெய்யறத்தின் முதல் பகுதி “மாணவரியல்”. முதல் அதிகாரம் ‘மாணவர் கடமை'. அதில் மாணவர்களது கடமைகளுள் ஒன்றாக "ஒழுக்கமுங் கல்வியும் ஒருங்கு கைக்கொள்ளல்" (எண்:9) என்று வ. உ. சி. குறிப்பிட்டுள்ளார். இது பற்றி சுப்ரமண்ய சிவம் அவர்கள் பல அரிய செய்திகளைக் கொண்ட தம்முடைய கருத்தை விரிவாக எழுதியுள்ளார்.

இந்த சூத்திரத்தை மாணவர்களது கடமைகளுள் ஒன்றாக கூறாது இதுவே மாணவர் கடமை என்று கூறினும் மிக நன்றாக இருக்கும். கல்வி, கல்வி என்று தற்காலத்தில் கதறப்படுகிற தெல்லாம் எழுதப் படிக்கக் கற்றலேயாகும். இத்தகைய கல்வியால் மனிதன் நிர்மலனாகின்றதில்லை. தீய சிந்தனைகளையும் செயல்களையும் விடுவதில்லை. வீழ்ந்த பள்ளத்திலேயே வீழ்ந்து கிடக்கிறான். மேலேற வழி அறிகின்றானில்லை. ஏதோ சில காலத்திற்கு இக்கல்வியால் சுகமடைகின்றதாகப் பாவித்துக் கொண்டிருந்த போதிலும் இக்கல்வி மாத்திரத்தால் பயனில்லையென்று ஒவ்வொருவரும் ஒப்புக் கொள்ளும் காலம் கூடிய சீக்கிரம் வந்துவிடும். கல்வி மூளையைப் பலப்படுத்திக் கூர்மைப்படுத்துவது; ஒழுக்கம் ஹிருதயத்தைச் சுத்தம் செய்வது. பரமேஸ்வரனாகிய யோகீஸ்வரன் ஹிருதய குகையில் வாசம் செய்கிறாரே யொழிய, மூளையின் முரட்டுக் குதர்க்கங்களிலும் யுக்திகளிலும் வாசம் செய்வதில்லை. நாம் ஈஸ்வரனை அடைய வேண்டுமானால், ஈஸ்வரன் நம்மிடத்திலெப்பொழுதும் குடியிருக்க வேண்டுமென்று விரும்புவோமானால் ஹிருதய வாசலை அடைத்துக் கொண்டிருக்கும் குப்பைக் குவியல்களை யெல்லாம் நன்றாய் அகற்றிவிட்டு நிஷ்களங்கமாக்கிக் கண்ணாடி போல் சுத்தமாய் வைத்திருந்தால் போதும். ஈஸ்வரனை வருந்தியழைக்க வேண்டியதில்லை. தனக்கு உகந்த இடம் ஏற்பட்டு விட்டவுடன் அவர்தானே அந்த ஹிருதயத்திற்குள் புகுந்து கொள்வார். கல்வி துச்சமாகிய இகலோக சுகத்தைக் கொடுக்கும். ஒழுக்கம் என்றென்றும் அழியா இன்ப நிலையை அளிக்கும்; கல்வியும் ஒழுக்கமும் ஒருவனிடத்தில் ஒன்று சேருமாயின், அவன் இகத்திலும் பரத்திலும் சுகமுறுவானென்பதற்குச் சந்தேகம் என்ன?

வ. உ. சி.யின் ஒற்றை அடிக்குச் சிவம் தரும் நெடிய விளக்கம் இன்றும் பொருந்துவதாக உள்ளது. வ. உ. சி.யின் மனித நல மேம்பாட்டு சிந்தனையை இதன் மூலம் நாம் அறியலாம்.

இல்வாழ்வியல் பகுதியில் "உயிர்த்துணை கொள்ளல்" என்னும் அதிகாரத்தில் (எண்:32) "துணையிழந் தாரை மணப்பது புண்ணியம்"(எண்:326) என்று குறிப்பிடுகின்றார் வ.உ.சி. 'உடன்கட்டை ஏறுதல், குழந்தை மணம்' ஆகிய கருத்துக்கள் பரவலாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த அக்காலகட்டத்தில் வ.உ.சி. கூறும் விதவைத் திருமணம் என்பது வெகு சிலரே ஏற்கத் தக்கதாகும். வ.உ.சி. யின் இச்சீர்திருத்த நோக்கு எதிர்ப்பையும் எதிர் கொள்ள வேண்டியிருந்தது.

வ.உ.சி. யின் இக்கருத்துக்கு சுப்ரமண்ய சிவம் அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இல்வாழ்வியலில் "உயிர்த்துணை கொள்ளல்"  என்னும் அதிகாரத்தில் "துணையிழந் தாரை மணப்பது புண்ணியம்" என்று பிள்ளையவர்கள் எழுதியிருக்கின்றனர். இதனால் இவர் 'விதவா விவாகம்' செய்யலாம் என்ற கொள்கையைப் பின்பற்றுபவர் என்று தொ¢கிற்து. 'விதவா விவாகம்' செய்யலாம் என்று மாத்திரம் அன்று. புண்ணியமென்றும்  கூறியிருக்கின்றனர். ஆதலால் நமது தேச நன்மைக்கு விதவா விவாகம் அவசியம் என்பது இவர் கருத்துப் போலும். நாம் இவ்வபிப்பிராயத்திற்கு முற்றிலும் மாறுபடுகின்றோம்.

"அரசியல்" என்னும் பகுதி குறித்து சுப்ரமண்ய சிவம் அவர்கள் கூறும் கருத்து பின்வருமாறு உள்ளது:
அரசியல் ராஜாங்க விவகாரங்களில் மனத்தைச் செலுத்துகின்ற ஒவ்வொருவரும் பார்த்து மனனம் பண்ணத் தக்கது. நாம் பிள்ளையவர்களுடன் நெடுநாளாக நெருங்கிப் பழகியிருக்கின்றோமாயினும் அவருக்கு ராஜதருமத்தில் இவ்வளவு அறிவிருக்குமென்று நாம் நினைக்கவில்லை. அரசியல் படிக்கப் படிக்க ஆனந்தத்தை தருகின்றது. அறிவைப் பெருக்குகின்றது.

மொத்தமாக இப்புத்தகம் குறித்து சுப்ரமண்ய சிவம் அவர்களின் கருத்து:
சுருங்கச் சொல்லின் இப்புத்தகம் மிகச் சிறந்தது என்பதிலும் அனைவரும் படிக்க வேண்டியது என்பதிலும் சந்தேகம் இல்லை. பள்ளிக்கூடங்களில் மாணவர்கட்கு இந்நூல் பாடப் புத்தகமாக வைக்கப்படுதல் நன்று.  

இந்நூலின் தனித்தன்மை பற்றிய செல்வ கேசவராயர் அவர்களின் கருத்து:

முதுமொழிக்காஞ்சி போன்று திட்பமும் நுட்பமுஞ் சிறந்த மென்மொழியால் விழுமிய பொருள் உரைத்தலால் இந்நூல் "தோல்" என்னும் வனப்பு வாய்ந்தது. தமிழ்ப் புலவரேயன்றி இங்கிலீஷ் படித்த புலவரிற் பலரும் இந்நூலின் திறத்தை மெச்சுவர் என்பது துணிவு. ஒரு முறை கண்ணுறுவோர்க்கு இந்நூலின் அருமை தானே புலப்படுமாதலால், அதனை இங்கு விரிப்பது மிகையாம். இந்நூல் நின்று நிலவுக. என்பது என் வேண்டுகோள்.  

இராஜாஜி அவர்கள் மெய்யறத்தக் கீழ்க்கண்டவாறு பாராட்டிக் கூறியுள்ளார்:

இந்நூலிற் கூறியுள்ள பொருட்களை யான் இனிதுணர்ந்தேன். இந்நூலை யான் பொ¢தும் மதிக்கின்றேன். முற்காலத்திய திருவள்ளுவர் குறளை, இக்காலத்திய கருத்துக்களால் மணப்படுத்தி அற்பக் கல்வியுடையாரும் உணரத் தக்கவாறு செய்யலாம் என்பதை இந்நூல் காட்டுகின்றது.      

டாக்டர்.அரங்க.இராமலிங்கம் அவர்கள் "வ. உ. சி. கண்ட மெய்ப்பொருள்" என்ற நூலில் மெய்யறம் குறித்துக் கூறுவது:

இந்நூலைத் திருக்குறள் பாடல்களின் பிழிவு என்று கூடக் கூறலாம். வள்ளுவர் ஏழு சீர்களில் ஒண்ணே முக்கால் அடியில் குறளை இயற்றினார். ஆனால் வ.உ.சி. யோ ஒரே அடியில் பாடலைப் பாடியுள்ளார். மெய்யறத்தின் கருத்துக்களைப் பார்க்கும்போது ஆத்திசூடி, கொன்றை வேந்தன், திரிகடுகம், கலித்தொகை, தொல்காப்பியம், நன்னூல், புறப்பொருள், வெண்பாமாலை, தண்டலையார் சதகம் ஆகிய நூல்களின் கருத்துக்ளோடு ஒன்றிப்போவதைக் காண முடிகிறது. இந்நூலின் சிறப்பம்சம் என்பது இதன்கண் காணும் 'இல்லமைத்தல்' என்ற அதிகாரமே      ஆகும். வ. உ. சி. தம் மனையடி சாத்திரக் கலையறிவினை இதன் மூலம் புலப்படுத்துகிறார் என்றே கூறலாம்.

ஆங்கில அரசின் ஐயம்
இந்த அறநூலிலும் அரசாங்க விரோதச் செய்திகள் இருக்குமோ என்று ஐயுற்றது ஆங்கில அரசு. அதனால் தெளிவு பெறுதற்கு அரசாங்கத் தமிழ் மொழி பெயர்ப்பாளர்களிடம் இந்நூலை அனுப்பியது.  முதல் பகுதியான மாணவரியலில் "தொழில் அறிதல்"  என்ற 22-ஆம் அதிகாரத்தில் வரும் பின்வரும் அடிகள் கோடிடப்பெற்று விளக்கம் கேட்கப் பெற்றது.
215. அரியநற் றொழில்சில வறிதல்யார்க் குங்கடன்.
216. படைக்கல மனைத்தும் பண்பொடு பயில்க.
217. படைவகுத் தமர்செயு நடையெலா மறிக.
218. புவிகடல் விண்மிசை போவவூர்ந் தறிக.
219. எவ்வகை யுருவு மெடுத்திடப் பழகுக.
220. உழவுவா ணிகங்கைத் தொழில்சில வறிக.

இந்த அடிகளிலும் பிறவற்றிலும் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகள் இல்லையென்றும் அதனால் மேல் நடவடிக்கைகளுக்கு அவசியம் இல்லை என்றும் அரசின்  தமிழ் மொழி பெயர்ப்பாளர் தம் கருத்துரையில் தொ¢வித்துள்ளார்.

தமிழக அரசு வ.உ.சி. யின் நூல்களின் உரிமையை விலை கொடுத்து வாங்கியுள்ளது. அதனால் பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் வ.உ.சி.யின் நூல்களைப்  பதிப்பித்துக் கொள்ளலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com