இயல்விருது விழா

தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 17-வது  இயல்விருது விழா ஸ்காபரோ விருந்து மண்டபத்தில்
இயல்விருது விழா
Published on
Updated on
1 min read

தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 17-வது  இயல்விருது விழா ஸ்காபரோ விருந்து மண்டபத்தில் ஜூன் மாதம் 17-ம் தேதி  சிறப்பாக  நடைபெற்றது.  இந்த வருட தமிழ் இலக்கிய வாழ்நாள் சாதனைக்கான இயல் விருது கவிஞர் சுகுமாரனுக்கு வழங்கப்பட்டது. புனைவு, கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு எனப் பல துறைகளில் தொடர்ந்து சேவை செய்து வரும் சுகுமாரனுக்கு இவ்விருது அளிக்கப்பட்டது.

சுந்தர ராமசாமி நினைவாக நிறுவப்பட்ட காலச்சுவடு அறக்கட்டளை 'கணிமை விருது’ த. சீனிவாசனுக்கு அளிக்கப்பட்டது. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தகவல் தொழில்நுட்பத்தில் தமிழில் உருவாக்கப்பட்ட படைப்புகளை சகலருக்கும் இலவசமாக கிடைக்கச்செய்யும் இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றதுதான் இவருடைய முக்கிய சேவையாகும். புனைவு இலக்கியப் பிரிவில் ‘ஆதிரை’ நாவலுக்காக சயந்தனுக்கும் அபுனைவு இலக்கியப் பிரிவில் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ நூலுக்காக திரைப்பட இயக்குநரான மிஷ்கினுக்கும் கவிதைப் பிரிவில் ‘ஆயிரம் சந்தோஷ இலைகள்’ என்ற தொகுப்புக்காக சங்கர ராமசுப்ரமணியனுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. மொழிபெயர்ப்பு பிரிவில் 'இறுதி மணித்தியாலம்' என்ற தலைப்பில் சிங்களக் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்த ரிஷான் ஷெரீஃப்புக்கு வழங்கப்பட்டது.

தமிழிலிருந்து ஜெர்மன் மொழியில் ’வாழை இலையும் வீதிப் புழுதியும்’ என்ற தலைப்பில் 14 சிறுகதைகளை மொழிபெயர்த்து புத்தக மாக வெளியிட்ட ஈவ்லின் மாசிலாமணிக்கும், மாணவர் புலமைப் பரிசுப் போட்டியில் சிறந்த சிறுகதை எழுதி வென்ற சோபிகா சத்திய சீலனுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ் இலக்கியச் சிறப்பு சாதனை விருதுகளை இவ்வருடம் டேவிட் ஷுல்மன், இரா. இளங்குமரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த முனைவர் ரவி குகதாசன், மருத்துவர் சுந்தரேசன் சம்பந்தம், கவிஞர் சேரன் ஆகியோர் சிறப்புரை வழங்கினர். இவர்களை அ.முத்துலிங்கமும் சிவன் இளங்கோவும் மேடையில் அறிமுகம் செய்து வைத்தனர். பேராசிரியர் சந்திரகாந்தன் தொடக்கவுரையையும் சட்டவாளர் மனுவல் ஜேசுதாசன் வரவேற்புரையையும் நிகழ்த்தினர். மருத்துவர் துஷ்யந்தி ஸ்ரீகரனின் வாழ்த்துரையைத் தொடர்ந்து உஷா மதிவாணன் நன்றியுரை வழங்கினார். விழா நிகழ்ச்சிகளை அழகாகத் தொகுத்து வழங்கினார் கந்தசாமி கங்காதரன். தகுதியுரை வாசித்த ஆறு இளம் பெண்களும் தங்கள் கடமையைத் திறம்பட செய்தனர். இரவு விருந்துடன் விழா முடிவுக்கு வந்தது. இந்த விழாவுக்குப் பல நாடுகளில் இருந்து எழுத்தாளர்களும் கல்வியாளர்களும் ஆர்வலர்களும் வருகை தந்து சிறப்பித்தார்கள்.

நன்றி - காலச்சுவடு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com