புத்தகங்களைக் கொண்டாடுவோம்!

அரசியல், சாதி, சமயம், மொழி, இனம் எனப் பிரிந்து கிடக்கும் சமுதாயத்தில் விழாக்களுக்குக் குறைவில்லை.

அரசியல், சாதி, சமயம், மொழி, இனம் எனப் பிரிந்து கிடக்கும் சமுதாயத்தில் விழாக்களுக்குக் குறைவில்லை. சமய வழியான விழாக்கள் தொன்று தொட்டு தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவை தவிர, பிறந்தநாள் விழாக்களும், அரசியல் சார்ந்த விழாக்களும் இல்லாத நாளே இல்லை என்று கூறலாம்.
அறிவுலகின் அடையாளமான புத்தகங்களுக்கென "புத்தகத் திருவிழா' நடத்துவது நாகரிக சமுதாயத்திற்கான நல்ல அறிகுறியாகும். தமிழ்நாட்டில் இத்தகைய விழாக்கள் மாவட்டம் தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்போது தமிழகத் தலைநகர் சென்னையில் நடைபெறுவது இன்னும் பாராட்டுக்குரியது; வரவேற்புக்குரியது.
"தோழர்களே! இது ஒரு புத்தகம் மட்டுமே என்று நினையாதீர். இதைத் தொடுகிறவன் எழுதிய ஆசிரியரையே தொடுகிறான்' என்று கூறியவர் அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன்.
இந்த எதிர்பாராத உறவு எதிலிருந்தும் கிடைக்காது; எங்கிருந்தும் கிடைக்காது. புத்தகங்கள் என்பவை வெறும் காகிதங்கள் அல்ல, கருத்துக் கருவூலங்கள். நாம் கையில் எடுக்கின்ற கருத்து ஆயுதங்கள்.
மனிதர்களுக்குக் கால எல்லைகள் உண்டு. ஆனால் இலக்கியங்களுக்குக் கால எல்லைகள் இல்லை; தேச எல்லைகளும் இல்லை. எல்லாவற்றையும் கடந்து நிற்கும் ஆற்றல் பெற்றவை புத்தகங்களே!
சிந்தனையாளர்களுக்கு பிறப்பும் இறப்பும் உண்டு. ஆனால் அவர்கள் படைத்த இலக்கியங்களுக்கு மரணம் என்பது எப்போதும் இல்லை. காலத்தை வென்று நிற்கும் ஆற்றல் மட்டுமே அதற்கு உண்டு.
"நான் நிரந்தரமானவன் அழிவ தில்லை - எந்த
நிலையிலும் எனக்கு மரண மில்லை'
என்று கவியரசு கண்ணதாசன் பாடியதும் அதனால்தான்.
எல்லா இலக்கியங்களும் நிலையாமையைப் பற்றிப் பாடுகின்றன. ஆனால் நிலையாமையைப் பற்றிப் பாடிய இலக்கியங்களே நிலையாமையை எதிர்த்து நிலைபெற்று நிற்று விடுகின்றன.
எத்தனையோ மாபெரும் சாம்ராஜ்யங்கலெல்லாம் இப்போது இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய் விட்டன. வீரத்தை மட்டுமே நம்பி ஆட்சி புரிந்த வேந்தர்கள் இப்போது இல்லை. அவர்கள் அரசாண்ட நெடிதுயர்ந்த கோட்டை, கொத்தளங்கள் எல்லாம் இப்போது தரைமட்டம் ஆகிவிட்டன. அவர்கள் நம்பியிருந்த நால்வகைப் படைகளும் போன இடம் தெரியவில்லை.
ஆனால் அவர்களால் ஆதரிக்கப்பட்ட புலவர்களும், புறக்கணிக்கப்பட்ட புலவர்களும் படைத்த இலக்கியங்கள் இப்போதுவரை நின்று நிலவுகின்றன; போற்றிக் காக்கப்படுகின்றன. அன்றைய நாகரிகத்தின் உச்சத்தை எடுத்துக் காட்டுகின்றன.
மிகச்சிறந்த நாகரிகம் நிலவிய சுமேரியாவில் கி.மு. 2700-ஆம் ஆண்டில் நூலகங்கள் இருந்ததற்கான சான்றுகள் கிட்டியுள்ளன. ஒரு நூலகத்தில் 30 ஆயிரம் மண் பலகைகள் இருந்ததாகத் தெரியவந்திருக்கிறது. அவற்றில் கவிதைகள், நாட்டுப்புறப் பாடல்கள், புராணங்கள் ஆகியவை எழுதப்பட்டுள்ளன.
கிரேக்கத் தலைநகர் ஏதென்ஸ் அழிந்த பிறகு டாலமி மன்னர்களால் அலெக்சாந்திரியா நகரம் உருவாக்கப்பட்டது. அந்த அலெக்சாந்திரியா நகருக்குப் பெருமை அங்கு ஆயிரக்கணக்கான நூல்களுடன் ஒரு பெரிய நூலகம் சிறந்து விளங்கியது என்பதுதான்.
நூல் என்பது நமது அறிவை மட்டுமல்ல, ஆற்றலையும் வளர்க்கிறது. தன்னம்பிக்கையைத் தருகிறது. தடைகளை எதிர்க்கிறது. தோல்வியை வெல்லும் துணிச்சலைக் கொடுக்கிறது. வறுமை வந்த போதும் வளைந்து போகாத வலிமையைத் தருகிறது.
"மன்னவனும் நீயோ வளநாடும்
உன்னதோ
உன்னையறிந்தோ தமிழை ஓதினேன் - என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்தும் உண்டோ - உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?
என்று சோழ மன்னனையே எதிர்த்து கம்பனால் பாட முடிகிறது என்றால் அதற்குக் காரணம் அவனது புலமைச் செருக்கில்லாமல் வேறு என்ன?
"துறவிக்கு வேந்தன் துரும்பு' என்று கூறப்படுவதும் அதனால்தான். சாணக்கியனால் ஒரு பேரரசன் முன்னால் வஞ்சினம் மொழிய முடிகிறது. சாதித்துக் காட்டவும் முடிகிறது. இதனையே "ஞானச் செருக்கு' என்று அறிவுலகம் ஏற்றுக் கொள்கிறது.
அதனால்தான் "எழுதுகோல் தெய்வம், இந்த எழுத்தும் தெய்வம்' என்று பாட்டுக்கொரு புலவன் பாரதியால் பாட முடிகிறது. "நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற் குழைத்தல் இமைப் பொழுதுஞ் சோராதிருத்தல்' என்று செருக்கோடு சொல்ல முடிகிறது.
"புவியனைத்தும் போற்றிடவான்
புகழ்படைத்துத்
தமிழ்மொழியைப் புகழில் ஏற்றும்
கவியரசர் தமிழ்நாட்டுக்கு
இல்லையெனும்
வசையென்னால் கழிந்த தன்றே....'
என்று எட்டையபுரம் மன்னனுக்குச் சீட்டுக்கவி எழுதும் ஆற்றல் சுப்ரமணிய பாரதிக்கு மட்டுமே யிருந்தது.
புலவர்களின் செல்வாக்கும், புத்தகங்களின் செல்வாக்கும் எல்லாக் காலங்களிலும் ஒரே மாதிரியாகவே இருந்து வந்திருக்கிறது. வாள் முனையை விட பேனா முனையே சிறந்தது என்று உலகம் ஒப்புக் கொண்டுள்ளது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சிறந்த சான்றோர்களுடன் உறவு கொள்வதற்கும் நூல் உதவி செய்கிறது. திருவள்ளுவர் காலம் வேறு; இன்றைய காலம் வேறு. ஆயினும் காலத்தின் இந்த இடைவெளியைக் கடந்து ஆசிரியருடன் உறவு கொள்ள வைக்கிறது.
"அறிவியலால் பெற முடியாத அரிய பெரிய பயன்களையெல்லாம் நூலால் பெற்று மகிழ்கிறோம்...' என்று டாக்டர் மு.வ. கூறுவார்.
மனித உறவுகளை வளர்ப்பதற்கும் புத்தகங்கள் புதிய தடங்களைப் பதிக்கின்றன. தேச எல்லைகளைக் கடந்து பறவைகள் சரணாலயங்களைத் தேடி வருவதைப் போல, புத்தகங்களைத் தேடி வருகிறவர்களையும் பார்க்கிறோம். இப்படி அறிவுலகத்தை இணைத்து வைக்கும் பாலமாகவே புத்தகங்கள் இருக்கின்றன.
மாமனிதர் நெல்சன் மண்டேலா அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டதாக 1962-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 27 ஆண்டுகள் ராபன் தீவில் உள்ள தனியறையில் வைக்கப்பட்டார். 1990 - இல் விடுதலைக்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவில் அமைதியான முறையில் மக்களாட்சி மலர்ந்தது.
1994 முதல் 1999 வரை அவர் அந்நாட்டின் அதிபராகத் திகழ்ந்தார். அமைதிக்கான நோபல் பரிசுயும் பெற்றார். 2008 - இல் பொது வாழ்விலிருந்து விலகுவதாக அறிவித்தார். 95 வயது வரை நாடும், நானிலமும் புகழ வாழ்ந்தார். இது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
இவர் சிறையில் இருந்தபோது தமக்கு வேண்டுமெனக் கேட்ட சலுகை என்ன தெரியுமா? "எனக்கு எந்தச் சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும்' என்பதுதான்.
சிறையில் இருக்கும் தலைவர்களின் தனிமைத் துயரை போக்கவும், சிந்திக்கவும் புத்தகங்களே பெருந்துணை செய்கின்றன. அத்துடன் பல சிறைச்சாலைகளே புதிய இலக்கியங்கள் பிறக்கும் தவச்சாலைகளாகவும் மாறியிருக்கின்றன.
ஜவாஹர்லால் நேரு தாம் சிறையிலிருந்தபோது புத்தகம் படிப்பதையும், எழுதுவதையுமே முக்கியக் கடமையாகவே கொண்டிருந்ததாகக் கூறியுள்ளார்.
"ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்' என்று ஒளவை கூறியது பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் என்றுதான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். உண்மையான கல்வி என்பது பள்ளிக்கு வெளியில் படிப்பதுதான்.
காந்தியடிகளின் "சத்திய சோதனை' நூலைப் படித்து புதிய வாழ்வு பெற்றவர்களும் உண்டு. வால்டேர், ரூசோ நூல்களைக் கற்று புரட்சி செய்தவர்களும் உண்டு. வள்ளலாரின் பாடல்களைப் பாடி கசிந்துருகி கண்ணீர் வடித்தவர்களும் உண்டு.
டால்ஸ்டாய் படைப்புகள் காந்தியை மகாத்மாவாக மாற்றின. மாக்கியவல்லியின் "இளவரசன்' என்னும் நூல் ஹிட்லரைப் போன்ற சர்வாதிகாரிகளை உருவாக்கியது. கார்ல் மார்க்சின் "மூலதனம்' புதிய உலகத்துக்குப் பாதை அமைத்தது.
நல்ல புத்தகங்கள் நல்ல மனிதர்களையும், தீய புத்தகங்கள் தீய மனிதர்களையும் உருவாக்கும் வல்லமை படைத்தவை. எனவே நாம் எப்போதும் நல்ல நூல்களையே தேர்வு செய்து படிக்க வேண்டும்.
"நூல் நிலையத்திற்குள் பாம்பை நுழைய விட்டாலும் பரவாயில்லை, நமது பண்பாட்டையும் ஒழுக்கத்தையும் கெடுக்கிற நூல்களை நுழைய விடக்கூடாது' என்று அடிக்கடி குன்றக்குடி அடிகளார் கூறும் கூற்றை எண்ணிப் பார்த்து தேவையற்ற நூல்களைத் தவிர்க்க வேண்டும்.
நூல்களின் இல்லமான நூலகங்களை நம்பியே பதிப்பகங்கள் இயங்குகின்றன. அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் நூலகங்களும் வளர்ச்சி பெற இயலாது. இந்தக் கூட்டு முயற்சியே புதிய புத்தகங்கள் வெளிவர உதவிகரமாக அமையும். புத்தக ஆர்வலர்களின் வேண்டுகோளும் இதுவே.
ஒருவரிடமுள்ள சிறந்தத் திறமையை வெளிப்படுத்துவதே உண்மையான கல்வி. "மனித குலம் என்கிற புத்தகத்தை விடச் சிறந்த புத்தகம் வேறு ஒன்று இருக்க முடியுமா' என்று கேட்கிறார் காந்தியடிகள்.
உலகில் மிக உயர்ந்த பிறவியாக மதிக்கப்படுபவது மனிதப்பிறவியே. அம்மனிதர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக் கொணர்வது புத்தகங்கள் என்பதில் ஐயமில்லை. புத்தாண்டைக் கொண்டாடுவது போல, பொங்கலைக் கொண்டாடுவதுபோல நாம் புத்தகங்களையும் கொண்டாடுவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com