பாகம்-18: பெண்களுக்கு சொத்துரிமை உண்டா? சட்டம் சொல்வது என்ன?

பெண்களுக்கு சொத்துரிமை கொடுக்கப்பட்டதில் சாதிய அமைப்பு எனும் மிகப்பெரிய தடைகள் உடைக்கப்பட்டிருக்கிறது.
பாகம்-18: பெண்களுக்கு சொத்துரிமை உண்டா? சட்டம் சொல்வது என்ன?
Updated on
7 min read

பெண்களுக்கு சொத்துரிமை கொடுக்கப்பட்டதில் சாதிய அமைப்பு எனும் மிகப்பெரிய தடைகள் உடைக்கப்பட்டிருக்கிறது.

பெண்ணுக்கு சொத்துரிமை என்பது குறித்து சட்டம் என்ன சொல்கிறது என்று விரிவாகப் பார்க்க...

சொத்துரிமை

சொத்து, அந்தச் சாதிக்குள்ளேயே இருக்கவேண்டும் என்ற சமூக விதியே, சாதியமைப்புக்குள்ளேயே திருமணம் நிச்சயித்தல் என்பதைப் பெரியவர்களின் விருப்பமாக வலியுறுத்தியது. ஒரு விதத்தில் சொல்லப்போனால் திருமணம் என்பதே சொத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் முறையாகும். சாதிக்குட்பட்ட மணத்தின் மூலம் பிறக்கும் குழந்தைகளே சொத்துக்கு வாரிசாக முடியும். பல பெண்களோடு தொடர்பு வைத்துக் கொள்ள ஆணுக்கு அனுமதி கொடுத்தாலும் தனது சொத்துக்கு உரிய வாரிசை மட்டும் தன் சாதிக்குள் ஒரு பெண்ணை மணந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது நிலவுடைமைச் சமூகத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட மரபாகும். ஆயின் நிலவுடைமைச் சிதறல் இயக்கப் போக்கின் தொடக்க காலத்தில் இந்த மரபை ஏற்றுக் கொள்ள மறுத்து, தான் நேசித்த வேற்றுச் சாதிப் பெண்ணையே மனைவியாக நினைத்துக் கொண்ட சின்னநாடான் தன் சொந்தக்காரர்களாலேயே கொல்லப்படுகிறான். இக்கதைப்பாடலில் ஒரே சாதிக்குள்ளே அதன் சொத்து பிரிந்து போக வேண்டும் என்ற சமூக மரபு சிதைகின்றது. இந்தச் சிதைவு எண்ணமே சின்னநாடானின் சோக முடிவுக்கு ஆரம்பப் புள்ளியாகும். 

சொத்துரிமை தன் சாதிக்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் மட்டுமின்றி, பெண்ணுக்குச் சொத்துரிமை இருக்கக் கூடாது என்பதிலும் நிலவுடைமைச் சிந்தனை அக்கறை கொண்டு இருந்தது. சொத்துரிமை வேண்டி, இழிநிலைக்குள்ளாகி, தன் குழந்தைகளுடன் தன்னை மாய்த்துக் கொண்டவளின் கதையே நல்லதங்காள் கதை ஆகும். பெண்ணே ஆடவனின் சொத்து எனக் கருதப்பட்டாள்.

பண்டைய தமிழ்ப் பெண்களின் சொத்துரிமையும் கொடையும் 

பெண்கள் “சீதனம்” பெற்றுள்ளனர். திருமணத்தின்போது பெற்றோர் மணமகளுக்குக் கொடுப்பது சீதனம் எனப்படும். ஒரு கல்வெட்டில் “என் தமக்கைக்குச் சீதனம் வாத்த நிலம்” என்ற குறிப்புக் காணப்படுகிறது. அது கணவன் உரிமையாகிறது. ஆனால் கணவன் இறந்தபின் அவன் சொத்துக்கள் மனைவியையே சேர்கிறது. 

பெண்களுக்குச் சொத்துரிமை ஓரளவு இருந்துள்ளது. குந்தவையார், செம்பியன்மாதேவி போன்ற அரச குடும்பத்துப் பெண்கள் மட்டுமல்ல சில வணிகர், வேட்டுவர், வேளாளர் குலப் பெண்களும் கோயிலுக்குக் கொடுத்த கொடை பற்றிக் கல்வெட்டுகள் கூறுகின்றன. காவலன் குறும்பிள்ளரில் சொக்கன் மனைக்கிழத்தி, வேளாளரில் கண்ணன் மூவேந்தவேளான் மணவாட்டி பெருந்தேவி ஆகியோர் கோயிலுக்குக் கொடை கொடுத்தமை பற்றிய செய்திகள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இராசராசன் கூட “நம் அக்கன் குடுத்தனவும் நம் பெண்டுகள் குடுத்தனவும்” ஆகிய பெண்கள் கொடைகளைத் தன் கல்வெட்டில் குறிக்கின்றான்.
 
சில இடங்களில் பெண்கள் கொடை கொடுக்கும்போது அப்பெண்ணின் தந்தை அல்லது கணவன் அல்லது சகோதரன் ஆகியோர் அப்பெண்ணிற்காகக் கொடை கொடுத்ததாகக் கூறிக் கொள்கின்றனர். “திருச்சிற்றம்பல தேவனை முதுகண்ணாக உடைய இவன் பிராமணி சாத்தி’' என்பது ஒரு கல்வெட்டுத் தொடராகும். முதுகண் என்பது பாதுகாவலரைக் குறிக்கும் கல்வெட்டுச் சொல்லாகும். மனைவிக்குக் கணவரும், மக்களுக்குப் பெற்றோரும் பாதுகாவலராகக் (முதுகண்ணாகக்) குறிக்கப் பெற்றுள்ளனர். 


     
சோழர் காலத்தில் பெண்கள் ஆண்களுக்குச் சமமாகக் கருதப்பட்டனர். அவர்களுக்குச் சொத்துரிமை இருந்தது. தங்களது சீதனச் சொத்தின் மீது பெண்கள் ஏகபோக உரிமையைப் பெற்றிருந்தனர்.

பிரிட்டீஷ் கால சட்டங்கள்

திருமணமான பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டம், 187 (Married Women's Property Act, 1874)

இச்சட்டம் பிப்ரவரி, 24, 1874 அன்று இயற்றப்பட்டது. இதில் 1866, ஜனவரி 1 ம் தேதிக்கு முன் திருமணமான பெண்களின், திருமணத்திற்கு முன்னான கடன்களுக்கு அவர்கள் வைத்திருந்த சொத்தின் மேல் பற்று வைக்கவும், அக்கடன்களில் கணவனுக்கு பங்கில்லை எனவும் சொல்லப்பட்டது. (பிரிவு.8)

இந்து பெண்கள் சொத்துரிமைச் சட்டம், 1937 (Women's Property Act 1937)

14, ஏப்ரல்,1937 இல் நடைமுறைக்கு வந்தது இச்சட்டம். ஆரம்பத்தில் முன்மேவுதிறன் (retrospective Effect) கொடுக்கப்படவில்லை. 1938 சட்ட திருத்தத்திற்குப்பின் 14, ஏப்ரல் முதல் முன்மேவுதிறன் கொடுக்கப்பட்டது. இச்சட்டப்படி, இறந்த கணவனின் சுயசம்பாத்திய சொத்திலும், பங்குரிமைச் சொத்திலும்(coparcenary)  கைம்பெண்ணுக்கு உரிமை வழங்கப்பட்டது.

இந்த சட்டம் கிறிஸ்துவர், இஸ்லாமியர், பார்சி வகுப்பினருக்கு பொருந்தாது. அதே சமயத்தில் இந்து மதத்துடன் ஒத்து போகும் வீரசைவ, லிங்காயத்து, ஆர்ய சமூகம், பிராமணர் ஆகியவற்றுடன் பவுத்த, சமண, சீக்கிய வகுப்பினருக்கு பொருந்தும். இந்த சட்டம் அமலுக்கு வருவதற்கு முன் பிரிவினையாகாத இந்து கூட்டு குடும்பத்தில் சொத்து பாகம் பிரிப்பதற்கு முன் குடும்ப உறுப்பினர் ஒருவர் இறந்துவிட்டால், அவருக்கு சேர வேண்டிய பங்கு சொத்து அவரின் விதவை மனைவிக்கு சேரும்.

இந்த உரிமை அடிப்படையில் பெறும் சொத்தை விற்பனை செய்யவோ அல்லது வேறு விதத்தில் மாற்றம் செய்து கொடுக்கவோ அதிகாரம் வழங்கப்பட வில்லை. மேலும் விதவை பெண் இறந்து விட்டால், அந்த சொத்து அவரது கணவரின் சகோதரருக்கு வாபஸ் கொடுக்கும் வகையில் இருந்தது.

இந்து வாரிசுச் சட்டம், 1956 (Indian succession Act 1865)

1956, ஜூலை 4-ம் தேதி நிறைவேற்றப்பட்ட ‘இந்து வாரிசுச் சட்டம் 1956’ பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என்று சொன்னது. உதாரணமாக ஒரு இந்து ஆணுக்கு மனைவி, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் இருக்கிறார்கள் எனில் அந்த ஆண் இறக்கும் பட்சத்தில் அவரது சொத்துக்கள் மனைவி, மகன்கள் மற்றும் மகள்களுக்கு சம பங்குகளாக கிடைக்கும். இதில் அனைவருக்கும் சம உரிமை உண்டு.

கணவர் மரணமடையும்போது அவருக்கு சேர வேண்டிய சொத்து பங்கு அவரின் மனைவி, தாய், பிள்ளைகள், மகள் அல்லது மருமகள், பேரப்பிள்ளைகள் என ரத்தசம்பந்தமான உறவினர்களுக்கு சேர்வதுடன், அந்த சொத்தை அவர்கள் சுதந்திரமாக பயன்படுத்துவது, விற்பனை செய்வது அல்லது விரும்பியவருக்கு எழுதிகொடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது.

இந்து வாரிசு திருத்த சட்டம், 2005  (Indian succession amendment Act 2005)

25.3.1989 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட ஒரு இந்து பெண் பூர்வீகச் சொத்தில் பாகப் பிரிவினை கோர முடியாது. அதற்குபிறகு திருமணம் செய்து கொண்ட பெண்கள் தனது தந்தையின் பூர்வீகச் சொத்தில் பாகப் பிரிவினை கோரலாம். ஆனால், 25.3.1989 தேதிக்கு முன்பு சொத்து பாகப்பிரிவினை செய்யப்பட்டிருந்தால் பாகப் பிரிவினை கோர முடியாது. ஒருவேளை சொத்து விற்கப்படாமலோ அல்லது பாகப் பிரிவினை செய்யப்படாமல் இருந்தாலோ உரிமை கோரலாம்.  

ஒரு ஆண் இறந்துவிட்டால் உயில் இல்லாத பட்சத்தில் அவரது தனிப்பட்ட சொத்திற்கு அவரது மனைவி, ஆண்/பெண் பிள்ளைகளுக்கு அந்த சொத்தில் தனி உரிமை உண்டு.

பெண்களின் சொத்துரிமை பற்றி சில டிப்ஸ்

ஒரு பெண் இறக்கும்போது அவள் பெயரில் இருக்கும் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துகளில் அவளின் கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு சமபங்கு உண்டு. ஒருவேளை அவளது கணவனும் இறந்துவிட்டால் அந்த பெண்ணுக்கு எத்தனை மகனும் மகளும் இருக்கிறார்களோ, அத்தனை பேருக்கும் சொத்தில் சமபங்கு உண்டு.

ஒரு பெண்ணுக்கு கணவனும் இல்லை, குழந்தைகளும் இல்லை எனில் அவளின் சொத்துக்கள் அனைத்தும் அவளின் பெற்றோருக்குச் செல்லும். ஒருவேளை அவளுக்கு பெற்றோரும் இல்லையெனில் அவளின் அப்பாவின் வாரிசுகளுக்கு அந்த சொத்துகள் போகும். அவர்களும் இல்லையெனில் அம்மாவின் வாரிசுகளுக்கு சொத்து செல்லும்.

கணவரோ, குழந்தையோ இல்லாத பெண்ணுக்கு அவளின் தாய் மற்றும் தந்தை மூலம் (அவர்கள் உயில் எழுதாதபட்சத்தில்) பரம்பரை சொத்து கிடைத்தால் அவளின் தந்தையின் வாரிசுகளுக்கு அந்த சொத்து கிடைக்கும்.

அதேபோல் கணவரோ அல்லது குழந்தையோ இல்லாத பெண்ணுக்கு, கணவர் மற்றும் மாமனார் மூலமாக சொத்து கிடைத்தால் (உயில் எழுதாதபட்சத்தில்) அது அவளின் காலத்திற்குப் பிறகு கணவரின் வாரிசுகளுக்குச் செல்லும்.

பெண்ணுக்கு சீதனமாக வரும் எந்த சொத்தும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே பார்க்கப்படும். சீதனமாக நகைகளோ, பாத்திரங்களோ, நிலமோ, வீடோ என அசையும் மற்றும் அசையா சொத்து எதுவாக இருந்தாலும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். சீதனமாக கொண்டு வந்த சொத்து அந்த பெண் கூட்டுக்குடும்பத்தில் இருந்தால்கூட அது அவளது தனிப்பட்ட சொத்துதான். அந்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கும் உரிமை அந்த பெண்ணுக்கு உண்டு.

பெண்களுக்கு உயில் மூலமாக கிடைக்கும் சொத்தும் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். அதனை அவள் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

2005 இந்து வாரிசு திருத்த சட்டத்தின்படி, 25.3.1989 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட ஒரு இந்து பெண் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கோர முடியாது. அதற்குபிறகு திருமணம் செய்துகொண்ட பெண்கள் தனது தந்தையின் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கோரலாம். ஆனால், 25.3.1989 தேதிக்கு முன்பு சொத்து பாகப்பிரிவினை செய்யப்பட்டிருந்தால் பாகப்பிரிவினை கோரமுடியாது. ஒருவேளை சொத்து விற்கப்படாமலோ அல்லது பாகப் பிரிவினை செய்யப்படாமல் இருந்தாலோ உரிமை கோரலாம்.

ஒரு ஆண் இறந்துவிட்டால் உயில் இல்லாத பட்சத்தில் அவரது தனிப்பட்ட சொத்திற்கு அவரது மனைவி, ஆண்/பெண் பிள்ளைகளுக்கு அந்த சொத்தில் தனி உரிமை உண்டு.

இந்து திருமணச் சட்டத்தின்படி முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது ஒரு இந்து ஆண் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால், அந்த திருமணம் சட்டப்படி செல்லாது. ஆனால், அதே சட்டத்தின் பிரிவு 16-ன்படி இரண்டாவது திருமணத்தின் மூலம் குழந்தை பிறந்திருந்தால் அந்த குழந்தைக்கு அதன் தந்தையின் தனிப்பட்ட சொத்தில் பங்கு உண்டு. ஆனால், பூர்வீகச் சொத்தில் எந்த பங்கையும் உரிமை கோர முடியாது. எனினும், இந்த விஷயம் உச்சநீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது.

இரண்டாவது மனைவியின் குழந்தைகளுக்கு பூர்வீகச் சொத்தில் பங்கு கிடையாது என உச்சநீதிமன்றத்தில் ஒரு பெஞ்ச் சொல்லியுள்ளது. ஆனால், இன்னொரு பெஞ்ச் இதற்கு மறுக்கவே, தற்போது லார்ஜ் பெஞ்சிற்கு அனுப்பப்பட்டு பரிசீலனையில் உள்ளது.

இந்து கூட்டு குடும்பத்தில் எப்படி ஒரு ஆண் பிறந்ததும் அவனுக்கு அந்த குடும்பத்தின் சொத்தில் உரிமை உள்ளதோ, அதேபோல் அந்த வீட்டுப் பெண்ணுக்கும் பிறக்கும்போதே சொத்தில் உரிமை உள்ளது.

பெண்களுக்கான சொத்துரிமை, பெண்ணின் சொத்தில் அவருக்கு உள்ள உரிமைகள் என இரண்டு வகையாக இந்த விஷயத்தை அணுகலாம். இதைத் தெளிவாக தெரிந்துகொண்டால் குழப்பங்கள் இருக்காது.

''முதலில், பெண்களுக்கான சொத்துரிமை குறித்து பார்ப்போம். இந்த உரிமை அவர்களுக்குத் தானாக வந்துவிடவில்லை. 1937 வரை இந்து பொதுக் குடும்ப சொத்தில் பெண்களுக்கு எந்தவிதமான பங்கும் இல்லாமலே இருந்தது. அதாவது, பங்குரிமையானவர்களாக ஆண்கள் மட்டுமே இருக்க முடியும். கணவர் இறந்துவிட்டால் அவருடைய பங்கு, அந்த கூட்டுக் குடும்பத்திலுள்ள மற்ற ஆண்களுக்குச் சேர்ந்துவிடும். ஆனால், ஆண்களைப்போல, மனைவிக்கோ, மகளுக்கோ எந்தப் பங்கும் கிடைக்காது.

இந்த நடைமுறை மாற்றி அமைக்கப்பட்டு, சொத்தில் பெண்களுக்கான உரிமைச் சட்டம் 1937-ல் கொண்டுவரப்பட்டது. அதன்படி, கூட்டுக் குடும்ப அமைப்பில் கணவரின் சொத்து மனைவிக்கு வந்தடைய வழி செய்தது. ஆனால், முழுமையான உரிமை வந்தடையவில்லை. அதன்பிறகு, 1956-ல் இந்து வாரிசு உரிமைச் சட்டம் இயற்றப்பட்டபோதுதான் பெண்களுக்கு சொத்துரிமை மேலும் பலப்படுத்தப்பட்டது. அதன்படி, ஓர் ஆணின் சொத்து, அவரது காலத்திற்குப் பிறகு, பொதுக் குடும்ப சொத்து என்றும், தனிப்பட்ட சொத்து என்றும் இரண்டு வகையாகப் பிரிக்க வழி செய்தது. இதில், தனிப்பட்ட சொத்தில் வாரிசு அடிப்படையில் மனைவிக்கும், மகள்களுக்கும் சமபங்கு வழங்க வகை செய்யப்பட்டது. ஆனால், பொதுக் குடும்பச் சொத்து, பரம்பரை சொத்தில் உரிமை எதுவும் வழங்கப்படவில்லை.

1989-ல் தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இந்த சட்ட நடைமுறையில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, பொதுக் குடும்பச் சொத்திலும் பெண்கள் உரிமை கோரலாம் என்கிற நிலை உருவாக்கப்பட்டது. ஆனால், அதற்கு இரண்டு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதன்படி, 25.03.1989-க்கு முன்பாக திருமணம் ஆன பெண்களுக்கு இந்தச் சட்ட திருத்தம் பொருந்தாது. மேலும், அன்றைய தேதி வரை பொதுக் குடும்பச் சொத்து பாகம் பிரிக்கப்பட்டிருக்கக் கூடாது என்று இந்தச் சட்ட திருத்தம் சொன்னது.

2005-ம் ஆண்டு நமது நாடாளுமன்றத்தில் ஒரு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, பெண் என்பவர் குடும்பத்தின் பங்குரிமையானவராக கருதப்படுவார் என்றது. அதன் விளைவாக, பொதுக் குடும்பச் சொத்து என்றாலும், ஆணின் தனிப்பட்ட சொத்து என்றாலும், ஓர் ஆணுக்கு என்ன உரிமை உள்ளதோ, அந்த உரிமை பெண்ணுக்கும் உள்ளது.

ஆண்கள் பெயரில் உள்ள சொத்து அவர்களுக்கு எப்படி கிடைத்தது என்பதைப் பொறுத்து அவர்களின் உரிமை தீர்மானிக்கப்படும். அதாவது, மூதாதையர் வழியாக ஓர் ஆணுக்குக் கிடைக்கும் சொத்தில் அவருடைய மகனுக்கும், பேரனுக்கும் பங்குரிமை உண்டு. அதேபோல, ஒரு பொதுக் குடும்பத்தில், ஓர் ஆண் பெயரில் சொத்து இருந்தாலும் அதே குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்கள் பொதுக் குடும்ப உறுப்பினர்கள் என்கிற அடிப்படையில் பாகம் கேட்க உரிமை உண்டு. அதே ஆண் அவருடைய சுயசம்பாத்தியத்தில் அல்லது அவருடைய தனிப்பட்ட பாகமாகக் கிடைக்கும் சொத்துகள் அவருக்கு மட்டுமே உரிய தனிப்பட்ட சொத்தாகும். இப்படி சொத்து வந்த முறையைப் பொறுத்து சொத்தின் உரிமை தீர்மானிக்கப்படுகிறது.

ஆனால், பெண்கள் பெயரில் உள்ள சொத்துகளை பொறுத்து இவ்விதமான நிபந்தனைகள் எதுவும் இல்லை. இந்து வாரிசு உரிமைச் சட்டம் பிரிவு 14-ன்படி ஒரு பெண்ணுக்கு எந்த வகையில் சொத்துகள் இருந்தாலும் அது அவருடைய தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். திருமணமான ஒரு பெண்ணுக்கு அவரது பெற்றோர் மூலமாகச் சொத்துகள் கிடைத்தால்,  எனவே, அந்தச் சொத்தில் அவர் உயிருடன் இருக்கும் வரை அவருக்கு எதிராக பாகமோ, உரிமையோ வேறு யாரும் கோர முடியாது.

கணவன் தன்னுடைய வருமானத்தைக் கொண்டு மனைவி பெயரில் ஒரு சொத்தை வாங்குகிறார். இருவருக்கும் பிரச்னை ஏற்படுகிறது. இந்த நிலையில் கணவன் அந்தச் சொத்தை திரும்ப எடுத்துக்கொள்ள முடியுமா என்று கேட்டால், முடியாது எப்படியென்றால், ஒருவர் தன்னுடைய பணத்தைக்கொண்டு வேறொருவர் பெயரில் சொத்துகளை கிரயம் செய்வது, பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்படி தடை செய்யப்பட்ட ஒன்றாகும். எனவே, யார் பெயரில் சொத்து இருக்கிறதோ, அவரே அந்தச் சொத்தின் உரிமையாளராகக் கருதப்படுவார். சட்டப்படி, வேறு யாரும் அந்தச் சொத்தின் உரிமையாளராகக் கோர முடியாது. அப்படிக் கோருவது குற்றம்.

மேற்படி, இந்த நடைமுறையிலும் விதிவிலக்கு உள்ளது. அதாவது, ஒருவர் தன் மனைவி பெயரிலோ அல்லது திருமணமாகாத மகள் பெயரிலோ சொத்துகளை வாங்கியிருந்தால், அந்தச் சொத்து வாங்குவதற்கான பணம் தன்னால் மட்டுமே செலுத்தப்பட்டது என்பதையும், மனைவி / மகளுக்கு வருமானம் ஏதுமில்லை அல்லது கிரயத்தொகை அவரால் செலுத்தப்படவில்லை என்பதை நிரூபித்தால் மட்டுமே அந்தச் சொத்தை அவருக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிடும்.

ஒரு பெண்ணின் சொத்திற்கு யார், யார் வாரிசுகளாக இருக்க முடியும் என்பது முக்கியமான கேள்வி. இந்து வாரிசு உரிமைச் சட்டம் பிரிவு 15-ன்படி, ஒரு பெண் இறந்தபிறகு அவருடைய கணவன் மற்றும் மகன், மகள்கள் வாரிசுகளாகின்றனர். அவர்கள் இல்லாதபோது கணவனுடைய வாரிசுகளுக்கு அந்தச் சொத்து போய் சேரும்.

கணவனோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழும் மனைவி, விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இறந்துவிட்டால், விவாகரத்து வழங்கப்படும்வரை கணவன் - மனைவி என்கிற பந்தம்தான் கணக்கிலெடுக்கப்படும். ஆகவே, வாரிசு உரிமைச் சட்டப்படி, பிரிந்து வாழும் மனைவியின் சொத்து கணவனுக்குச் சென்றடையும்.

திருமணம் ஆகாத பெண் இறந்தால், அவரது பெற்றோரே வாரிசாக இருப்பார்கள். அவர்கள் இல்லாதபட்சத்தில் தந்தையின் வாரிசுகள் இறந்துபோன பெண்ணின் வாரிசுகளாகக் கருதப்படுவார்கள்.

ஒரு குறிப்பிட்ட சொத்திற்கு ஒரு பெண் தனிப்பட்ட முழுமையான உரிமையாளர் என்கிறபோது, அவர் அந்தச் சொத்தை தன் விருப்பப்படி அனுபவிக்க முடியும். அதாவது, அவர் அந்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் மாற்றித் தரலாம். அது தானமாகவோ / உயிலாகவோ அல்லது விற்கவோ எந்த வகையிலும் பாராதீனம் செய்யலாம். இதற்கு எந்தத் தடையும் இல்லை.

 இந்து வாரிசு உரிமைச் சட்டம் பிரிவு 26-ன்படி, இந்து மதத்திலிருந்து விலகி மதம் மாறிய ஒருவர் மற்றும் அவரின் வாரிசுகள், வாரிசு உரிமையின் அடிப்படையில் இந்துக் கூட்டுக் குடும்பச் சொத்தில் பங்கு கேட்க முடியாது. இருந்தாலும், ஜாதிக் குறைபாடுகள் அகற்றுதல் சட்டத்தின்படி ஒருவர் சாதி இழப்பதாலோ அல்லது மதம் மாறுவதாலோ சொத்தில் உள்ள உரிமையை அவர் இழப்பதில்லை. இதையே உயர்நீதிமன்ற சமீபத்திய தீர்ப்புகூட உறுதி செய்துள்ளது.

இந்துப் பெண்களுக்கான இந்த சொத்துரிமை சட்டங்கள் முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தில் உள்ள பெண்களுக்குப் பொருந்துமா? .

பரம்பரைச் சொத்து, தனிக் குடும்பச் சொத்து போன்ற தத்துவங்கள் முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தாது.

இந்து பெண்களுக்கு சொத்தில் இருக்கும் உரிமைகள் மட்டுமே இது. கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இந்த சட்டங்கள் பொருந்தாது.

ஆகவே, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை, ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவரது பெயரில் உள்ள சொத்துகள் அவரது தனிப்பட்ட சொத்தாகவே இருக்கும்''

மேலும், விவரங்களுக்கு சட்ட வல்லுனர்களை கலந்தாலோசிக்கலாம்.

தொடரும்…

Lr. C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

•••

உதவிய நூல்கள்
1. கலைக்களஞ்சியம், தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை.
2. தமிழர் திருமணம், ஞா.தேவநேயப் பாவாணர்
3. Bare Acts-Law Publishers (india) Pvt Ltd, Allahabad

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com