தமிழக அரசின் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறையின் புதிய அறிவிப்புகள் என்னென்ன?

காவேரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ரூ.10 கோடி மதிப்பீட்டில் 25 நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்.
தமிழக அரசின் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறையின் புதிய அறிவிப்புகள் என்னென்ன?

1. காவேரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ரூ.10 கோடி மதிப்பீட்டில் 25 நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மிக முக்கிய பங்கு வகிப்பதால் இவற்றிற்கு நிரந்தர கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்  கொடுப்பதற்கு அரசு உறுதி பூண்டுள்ளது. அதன்படி நடப்பு நிதியாண்டில் டெல்டா மாவட்டங்களில் 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தலா 40 இலட்சம் ரூபாய் வீதம் மொத்தம் ரூபாய் பத்து கோடி மதிப்பீட்டில் நபார்டு நிதியுதவியுடன் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின் படி கட்டப்படும்.

2. காவேரி டெல்டா மாவட்டங்களில் உள்ள 50 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ரூ.5.5 கோடி மதிப்பீட்டில் நெல் உலர்த்தும் களம் அமைத்தல்

காவிரி பாசன மாவட்டங்களில் அறுவடை செய்யப்படும் நெல் அதிகபட்ச மழை மற்றும் பனிப்பொழிவிற்கு இலக்காகிறது. இதனால் நெல்லின் ஈரப்பதம், கொள்முதல் செய்வதற்கேற்ற அளவை விடக் கூடுதலாக இருக்கிறது. எனவே, அறுவடையாகும் நெல்லை உலர்த்த ஏதுவாக ஏற்கனவே சொந்தக்  கட்டிடங்களில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் காலி இடத்தில் 2017-18 ஆம் நிதியாண்டில் மொத்தம் ரூபாய் ஐந்து கோடியே ஐம்பது இலட்சம் மதிப்பீட்டில் 50 நெல் உலர்த்தும் களங்கள் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி அமைக்கப்படும்.

3. பொதுமக்களின் பயன்பாட்டு தேவையை கருத்தில் கொண்டு இந்திய எண்ணெய் நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான 10 இடங்களில் அம்மா பெட்ரோல் பங்க் நிறுவுதல்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் 33 மண்டலங்களில் மொத்தம் 221 எண்ணிக்கையிலான சொந்த கிடங்கு வளாகங்கள் அமையவுள்ளன. அவற்றில் பிரதான சாலை அருகில் அமையதுள்ள 10 இடங்களான சேலம் மாவட்டம் எடப்பாடி, சென்னை மாவட்டம் நந்தனம், தஞ்சாவூர் மாவட்டம் இரும்புத்தலை,  திருச்சி மாவட்டம் மணப்பாறை,  திருவாரூர் மாவட்டம் சுந்தரக்கோட்டை, வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, நாகப்பட்டினம் மாவட்டம் கோயில்பத்து, மதுரை மாவட்டம் கப்பலூர், விழுப்புரம் மாவட்டம் வானூர் மற்றும் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஆகிய இடங்களில் பொதுமக்களின் பயன்பாட்டுத் தேவையினை கருத்தில் கொண்டு இந்திய எண்ணெய் நிறுவனங்களுடன் இணைந்து “அம்மா பெட்ரோல் பங்க்” மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி தொடங்கப்படும்.

4. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் 4,460 பருவகால பணியாளர்களுக்கு வருடாந்திர அகவிலைப்படி உயர்த்தி வழங்குதல்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பருவகால பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் நிலையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 1948ஆம் ஆண்டு குறைந்த பட்சக் கூலி சட்டத்தின்படி வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி ரூபாய் 2,450/-லிருந்து ரூபாய் 2,995/- ஆக 01.04.2014 முதல் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி உயர்த்தி  வழங்க உள்ளது. இதன் மூலம் 4,460 பருவகால பணியாளர்கள் பயன் பெறுவார்கள். இதனால் அரசிற்கு இரண்டு கோடியே எழுபத்தி  இரண்டு இலட்சம் கூடுதல் செலவாகும்.

5. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பல்பொருள் அங்காடிகளில் விநியோகம் செய்யப்படும் பொருள்களுக்கு பட்டை குறியீடு முறை (BAR CODING)) செயல்படுத்துதல்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 235 சேமிப்பு கிடங்குகள், 1,450 சில்லரை அங்காடிகள், 23 அமுதம் பல்பொருள் அங்காடிகள் மற்றும் 54 அம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள் உள்ளன. சேமிப்பு கிடங்குகளில் இருயது வெளியே அனுப்பி வைக்கப்படும் பொருட்கள் தரமானதாகவும் உரிய எடையுடன் கூடியதாக உள்ளதா என்பதை உறுதி  செய்யும் வகையில் பட்டை குறியீடு முறை (BAR CODING) அறிமுகப்படுத்தப்படும் பொருட்டு தனித்தன்மை வாய்ந்த அடையாள எண் வழங்கும் இயந்திரங்கள், ஸ்கேன் செய்யும் இயந்திரங்கள் மற்றும் அதற்கு உண்டான மென்பொருள் உள்ளிட்ட மொத்தம் 1762 பட்டை குறியீடு இயந்திரங்கள் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி கொள்முதல் செய்ய உள்ளது.

6.  திறந்தவெளி சேமிப்பு மையங்கள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், கிடங்குகள் ஆகியவற்றில் சேமிக்கப்படும் உணவு தானியங்களின் ஈரப்பதத்தினை ஆய்வு செய்வதற்கு கூடுதலாக 200 ஈரப்பதமானிகள் கொள்முதல் செய்தல்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில்  திறந்தவெளி சேமிப்பு மையங்கள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், கிடங்குகள் ஆகியவற்றில் சேமிக்கப்படும் உணவு தானிய பொருட்களின் தரம் குறையாமல் இருப்பதற்கும், உணவு தானிய பொருட்களின் ஈரப்பதத்தினை ஆய்வு செய்வதற்கும் 200 ஈரப்பதமானிகள் ரூபாய் ஐம்பது இலட்சம் செலவில் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி கொள்முதல் செய்ய உள்ளது.

7. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் நெல்லை தூற்றி சுத்தம் செய்து தரமாகக் கொள்முதல் செய்வதற்கு கூடுதலாக 200 நெல் தூற்றும் இயந்திரங்கள் கொள்முதல் செய்தல்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் இயங்கிவரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகள் கொண்டுவரும் நெல்லினை தூற்றி சுத்தம் செய்து தரமான நெல் கொள்முதல் செய்வதற்கு கூடுதலாக 200 நெல் தூற்றும் இயந்திரங்கள் ரூபாய் ஐம்பது இலட்சம் செலவில் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி கொள்முதல் செய்யப்பட உள்ளது.

8. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களைத் துல்லியமாக எடையிடுவதற்காக 60 கிலோ  திறன் கொண்ட 625 மின்னணு எடை மேஜை தராசுகள் கொள்முதல் செய்தல்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் அமுதம் நியாயவிலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொது விநியோக திட்ட பொருட்களை சரியான அளவில் எடையிட்டு வழங்குவதற்காக 60 கிலோ  திறன் கொண்ட மின்னணு எடை மேஜை தராசுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் அமுதம் நியாய விலைக் கடைகளில் தொடர்ச்சியான பயன்பாட்டினால் பழுதடைந்த நிலையில் உள்ள தராசுகளுக்கு மாற்றாகவும், குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் சரியான எடை அளவில் விநியோகம் செய்வதற்காகவும் கூடுதலாக 60 கிலோ  திறன் கொண்ட 625  மின்னணு எடைமேஜை தராசுகள் ரூபாய் ஐம்பது இலட்சம் செலவில் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி கொள்முதல் செய்ய உள்ளது.

9. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் முதுநிலை மண்டல மேலாளர்கள் / மண்டல மேலாளர்கள் மற்றும் அலகு அலுவலர்கள் ஆகிய 51 அலுவலர்களுக்கு மடிக்கணினி வழங்குதல்.

தமிழ்நாட்டில் பொது விநியோகத்  திட்டத்தில் முழு கணினிமயமாக்கல் (End to End Computerisation)) பணி நடைபெற்று வருகிறது. முழு கணினிமயமாக்கல் தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள் / மண்டல மேலாளர்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் அலகு அலுவலர்கள் ஆகியோருக்கு 51 மடிக்கணினிகள் ரூபாய் ஐம்பது இலட்சம் செலவில் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசு மாண்புமிகு முதலமைச்சர்  அவர்களின் ஆணையின்படி வழங்க உள்ளது.

10. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களின் செயல்  திறனை மேம்படுத்த 500 பணியாளர்களுக்கு நவீன முறையில் தொடர் விநியோகப் பயிற்சி, தரக் கட்டுப்பாடு பணிகள், அறிவியல் தொழில் நுட்ப பயிற்சி, நவீன அரிசி ஆலை, சேமிப்புகளம், கிடங்குகள் ஆகியவற்றுக்கான சிறப்பு மேலாண்மைப் பயிற்சி ரூ.50 இலட்சம் செலவில் வழங்கப்படும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களின் செயல் திறனை மேம்படுத்தும் பொருட்டு தர மேலாண்மை, கட்டுமான பொறியியல், தானியங்கள் பராமரிப்பு முறை, அலுவலக மேலாண்மை, நவீன அரிசி ஆலை பராமரிப்பு மற்றும் நெல்கொள்கலன் போன்ற பிரிவுகளில் பணிபுரியும் சுமார் 500 பணியாளர்களுக்கு ரூபாய் ஐம்பது இலட்சம் செலவில் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி மேலாண்மை பயிற்சி வழங்கும்.

11. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் கிடங்குகள் மற்றும் நவீன அரிசி ஆலைகளில், ஒருங்கிணைந்த கணக்கியல் முறை மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் கூடிய நிதி  மேலாண்மை  திட்டத்தினை ரூ.9.50 இலட்சம் செலவில் செயல்படுத்துதல்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் தற்பொழுது இயங்கிவரும் கிடங்குகள் மற்றும் நவீன அரிசி ஆலைகளில், தென்னிந்திய பட்டய கணக்காளர் சங்க நிறுவனத்தினை (SIRC-ICAI)) ஆலோசனையாளராக (Consultancy) நியமித்து, ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை தகவல்  திட்டத்துடன் கூடிய கணக்கியல் முறையினை ரூ.9.50 இலட்சம் செலவில் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி செயல்படுத்துவதன் மூலம் நிதி  தொடர்பான தகவல் தொகுப்பு,  பரிவர்த்தனைகளை ஆராய்தல் மற்றும் மேற்பார்வையிடுதலை உடனுக்குடன் செயல்படுத்தி , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகமானது சிறந்த நிதி  மேலாண்மை நிறுவனமாக மாற்றியமைக்கப்படும்.

12. தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன கிடங்குகளில் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு லாரி மின்னணு எடைமேடைகள் நிறுவுதல்.

தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில் மானாமதுரை மற்றும் இராஜபாளையம் ஆகிய சேமிப்புக் கிடங் குகளில் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி முப்பத்தெட்டு இலட்சம் ரூபாய் செலவில் 60 மெ.டன்  திறன் கொண்ட இரண்டு, முற்றிலும் மிண்ணனுமயமாக்கப்பட்ட லாரி எடைமேடைகள் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் நிதியினைக் கொண்டு நிறுவப்படும்.

13. தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் 26 சேமிப்புக் கிடங்கு ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 239 புற ஊதா ஒளிப் பொறிகள் அமைத்தல்.

தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள உணவுத் தானியங்களை பூச்சிகளின்றிப் பராமரிக்க, ரூபாய் பதினைந்து இலட்சம் மதிப்பீட்டில், 26 சேமிப்புக் கிடங்குகளில், 239 நவீன புறஊதா ஒளிப் பொறிகள் (ULTRA VIOLET LIGHT TRAPS) (பூச்சித் தடுப்புக் கருவி) மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் நிதியிலிருந்து அமைத்துத் தரும்.

14. விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன ஊழியர்களிடையே விளை பொருட்களை பாதுகாப்பது மற்றும் சேமிப்பது குறித்த விழிப்புணர்வு பயிற்சியினை ரூ.50 லட்சம் செலவில் அளித்தல்

தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் 7 மண்டலங்களிலும், விவசாயிகள் / வணிகர்கள் மற்றும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன ஊழியர்களிடையே, விளைவித்த விளைபொருட்களை நவீன முறையில் பாதுகாப்பது மற்றும் சேமிப்பது குறித்த விழிப்புணர்வு பயிற்சி ஐம்பது இலட்சம் ரூபாய் செலவில் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசால் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் நிதியிலிருந்து நடத்தப்படும். இப்பயிற்சியின்போது, ஒவ்வொரு விவசாயிக்கும் விவசாய உபகரணங்களும் வழங்கப்படும்.

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

Source:

உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவிப்புகள் - 2017 - 2018.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com