

விஜய் சேதுபதி நடித்த ‘ஆண்டவன் கட்டளை’ திரைப்படத்தில் மேற்கண்ட வசனம் வரும். வாடகைக்கு வீடு பார்க்கப் போகும் இடத்தில் வயதான பெண்மணியைப் பார்த்து யோகி பாபு, பாட்டி என்று விளித்து விட, அந்தம்மாள் கோபித்துக் கொண்டு அவர்களுக்கு வீடு இல்லை என்று கூறி விடுவார். தான் பாட்டி என்று அழைத்ததால் தான் அவர் வீடு தர மறுக்கிறாரா? என்று யோகி கேட்க அதற்கு படத்தில் வீட்டு புரோக்கராக வரும் சிங்கம்புலி, “ சென்னையில் பாட்டிகளே கிடையாது ஒன்லி ஆன்ட்டீஸ் தான்” என்பார்.
ஊர்ப்புறங்களில் இருந்து பிழைப்பிற்காக சென்னை வந்தவர்களுக்குத் தான், இது எத்தனை நிஜமான எள்ளல் என்று புரியும்! நீங்களே யோசித்துப் பாருங்கள், தற்போது முப்பது வயதைக் கடந்தவர்கள் உங்களது பதின்ம வயதுகளில் எத்தனை பேர் உங்களது பக்கத்து வீட்டுக்கார அம்மாளையும், அல்லது நடுத்தர வயதுள்ள பிற பெண்களையும் ஆன்ட்டி என்று அழைத்திருந்தீர்கள்? என்று நினைவுகளில் ஓட்டிப் பாருங்கள்... கிட்டத்தட்ட பலரும் அம்மா என்றோ அக்கா என்றோ, அத்தை, பாட்டி என்றோ தான் அழைத்திருக்கக் கூடும். ஆன்ட்டி என்ற வார்த்தை தென்னக கிராமப்புறங்களில், பள்ளி மாணவர்களுக்குக் கூட அப்போது அரிதான சொற்பிரயோகமே!
பலர் தன்னுடன் பயிலும் மாணவ, மாணவிகளின் அம்மாக்களையும் கூட அக்கா என்றோ, அத்தை என்றோ அழைத்தது உண்டு. ஆனால் ஆன்ட்டி அப்போது புழக்கத்தில் இல்லை. 80 களில் அன்றைய தலைமுறைக்கு ‘ஆன்ட்டி’ என்ற வார்த்தை ‘அங்கிள்’ என்ற வார்த்தையின் எதிர்ப்பதம் என்ற அளவிலோ அல்லது நகரத்துப் பள்ளிகளில் பயின்று விட்டு விடுமுறைகளுக்கு பாட்டி வீட்டுக்கும், மாமாக்கள் வீட்டுக்கும் படையெடுக்கும் ஒரு தலைமுறைக்காலத்தின் மாமன் மனைவிகளைக் குறிப்பதாகவோ தான் பயனில் இருந்தது.
இன்று அப்படியல்ல, 50 வயதுக்கு மேல் எத்தனை வயதானாலும் நம் மக்கள் தங்களது வயது மூப்பை குறிக்கும் வகையிலான சொற்பிரயோகங்களை பிறர் பயன்படுத்த அனுமதிப்பதே இல்லை. குறிப்பாக பெண்கள் என்று தமிழ் சினிமாக்களில் சற்று மிகைப்படுத்துகிறார்கள். பெண்கள் மட்டுமல்ல இதில் ஆண்களும் விதிவிலக்குகள் இல்லை. 50 வயதைக் கடந்த ஆண் தன் நிஜப் பேத்தி தவிர பிற பெண்கள் அவர்கள் பள்ளிச் சிறுமிகளாக இருந்தாலும் கூட தாத்தா என்று அழைப்பதை விரும்புவதே இல்லை. அங்கிள் என்றழைத்தால் இனிக்குமாயிருக்கும் அவர்களுக்கு!
இந்த அங்கிள், ஆன்ட்டி உறவுமுறை பிரயோகங்கள் சகஜமாகப் புழக்கத்தில் வந்த பின்பு ஏதோ ஒரு ஒட்டாத தன்மை இருந்தாலும் இன்று வெகுவாகப் பலராலும் பயன்படுத்தப் பட்டு ஆங்கில அழைப்புகளே கூட அந்தந்த மாநில வட்டார மொழிகளைக் காட்டிலும் சர்வ சகஜமாகி தென் மாநிலங்கள் அனைத்திலுமே நிலைத்து விட்டது.
கடந்த வாரம் குல தெய்வ வழிபாட்டுக்காக தெற்கத்திப் பக்கமுள்ள சொந்த கிராமத்திற்குப் போயிருந்தோம். இப்போதிருக்கும் குழந்தைகள் சொந்த அத்தையைக் கூட ஆன்ட்டி என்று தான் அழைப்பார்கள் போல! மருந்துக்குக் கூட காது குளிரக் குளிர அத்தை என்ற அழைப்பைக் கேட்கவே முடியவில்லை. கோயிலில் பிரசாதம் வாங்கலாம் என்று போனால் கியூவிலும் கூட தலை நரைத்த ஆன்ட்டிகள் தான் நிறைய இருந்தார்களே தவிர பாட்டிகளையும், அத்தைகளையும் பூதக் கண்ணாடி வைத்து தான் தேட வேண்டியதாகி விட்டது.
இவை எல்லாவற்றையும் விட உச்சகட்டமாக சங்கட ஹர சதுர்த்தியும் அதுவுமாய் பிள்ளையார் கோயிலில் பொங்கல் பிரசாதம் வாங்க வரிசையில் நிற்கையில் என் அம்மா வேறு தன்னை விட ஐந்தாறு வயதே மூத்தவராக இருந்த பெண்மணி ஒருவரை அடிக்கொரு தரம் ஆன்ட்டி என்று அழைத்து பீதியைக் கூட்டினார்.
தாள மாட்டாமல், அம்மா இதென்ன கொடுமை? என்றால்;
பின்னே, அவர்களை எப்படிக் கூப்பிட? இந்த ஊருக்கே அவர் ஆன்ட்டி தான். எல்லாரும் அப்படித் தான் கூப்பிடறாங்க! நான் மட்டும் அக்கான்னா கூப்பிட முடியும்... அது அந்தம்மாவுக்குப் பிடிக்குமோ? என்னவோ? அதனால் நானும் ஆன்ட்டி என்றே அழைக்கத் தொடங்கி, அது அப்படியே தொடர்கிறது என்றார். ஆக மொத்தம் ஒருவர் எதை செளகரியமாக உணர்கிறாரோ, அவ்வாறே அவர் அழைக்கப்படுகிறார், அழைக்கப் படுவார் என்பதே உலக நியதி!
சிலருக்கு பாட்டி என்றழைத்தால் பிடிக்காது... பிறகென்ன செய்ய அவர்களும் ஆன்ட்டிகள் ஆனது இப்படித்தான்.
இந்த நிலை இப்படியே நீடித்தால் இனி சென்னையில் மட்டுமல்ல, எல்லா தமிழகக் கிராமங்களிலும் அத்தைகள் அரிதான ஜீவராசிகளாகி ஆன்ட்டிகள் மட்டுமே நாக்குகள் தோறும் ஜீவித்திருப்பர் என்று நம்புவோமாக!
இதையெல்லாம் விட இன்னொரு அனர்த்தம் தென் மாவட்டங்களில் இருந்து பிழைப்புக்காக சென்னை வருபவர்கள் சந்திக்கும் மேலுமொரு நெருக்கடி வயதான பெண்மணிகளை ‘ஆயா’ என்றழைக்கும் வழக்கம். இங்கே பாட்டிகளை ஆயா என்றழைக்கும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது போலும். பழ வண்டிக்காரர், காய்கறிக் கடைக்காரர், மளிகைக் கடை அண்ணாச்சி தொட்டு குப்பை வண்டிக்காரர்கள் வரை அனைவருக்குமே பாட்டிகள் ‘ஆயாக்கள்’ ஆகி விடுகிறார்கள்.
ஊர்நாட்டில் ஆயா என்றால் அது பால்வாடி ஆயா மட்டும் தான் என்றொரு நியதி இருந்தது. அதைக் கொண்டு ஊரிலிருந்து சென்னைக்கு அலுவலின் பொருட்டு பிழைக்க வந்த பேத்திகளுக்கும், பேரன்களுக்கும் சோறாக்கிப் போட வந்து கடமையாற்றும் தென்னகத்துப் பாட்டிகளுக்கு சென்னைக்காரர்களின் இந்த ஆயா என்ற அழைப்பு கெளரவ பங்கமாகி விடுகிறது. பால்வாடி ஆயாக்கள் என்றால் இளப்பம் இல்லை... ஆனால் ஊரில் தோட்டம், துரவு என்றூ காடு பெருக்கி வாழ்ந்து கெளரவ சுகம் கண்ட பாட்டிகளுக்கு இந்த ஆயா என்ற விளிப்பு பெரும் கெளரவ பங்கமாகி விடுகிறது. ஓரிரு முறை ஆயா’ என்று அழைக்காதே பாட்டு என்று கூப்பிடு என்று கட்டளை இட்டுப் பார்க்கிறார்கள். ஆனால் அவர்களது கட்டளைகளை சென்னையின் நிழல் கூட மதிக்கவில்லை என்றானதும் ஆயாவை விட ஆன்ட்டியே தேவலாம் என்று யோசிக்கத் தலைப்பட்டு விடுகின்றனர்.
இப்படித்தான் சென்னையில் பாட்டிகளே இல்லாதொழிந்தார்களோ என்னவோ! இப்போதெலாம் எங்கேயும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் ஆன்ட்டிகள் மட்டுமே!
Image courtsy: Google
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.