அக்னி நட்சத்திரமென்றால் கொடூர வெயில் மட்டும் தானா! அதைத் தாண்டி வேறென்ன?

இந்த ஆண்டில் மே 4, காலை 5.55 மணிக்குத் துவங்கி உள்ள அக்னி நட்சத்திர காலம் இந்த மாத இறுதியில் அதாவது மே 28 அன்று முடிவடைகிறது.
அக்னி நட்சத்திரமென்றால் கொடூர வெயில் மட்டும் தானா! அதைத் தாண்டி வேறென்ன?
Updated on
3 min read

அக்னி நட்சத்திரம் என்றால் தமிழ்நாட்டில் வெப்பம் உச்சம் தொடும் மே மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான சில நாட்கள் என்பது மட்டுமே நாமறிந்த செய்தி. அதைத் தாண்டி அக்னி நட்சத்திரம் குறித்து நமக்கு வேறெதுவும் தெரியுமா என்று யோசித்துப் பார்த்தால் பெரிதாக எதுவும் நினைவிலிருப்பதில்லை. ஆனால் சித்திரை துவக்கம் முதலே அம்மாக்களும், பாட்டிகளும் எப்போது அக்னி நட்சத்திரம் துவங்கு எனத் தெரிந்து கொள்வதற்காக காலண்டரைத் தேட ஆரம்பித்து விடுவார்கள். எப்போதுமிருக்கும் வெயில் தான் ஆனால் அது விஸ்வரூபமெடுத்து தனது கொடூர வில்லத்தனத்தை பழுதின்றி காட்டி வதைக்கும் நாட்கள் இவை என்பதால் இவற்றுக்கு கூடுதல் கவனம் அளிக்கப்படுகிறது. குறிப்பிட்ட இந்த நாட்களில் மக்கள் பெரும்பாலும் வெயிலில் அலைய வேண்டிய வேலைகள் இருந்தால் அவற்றைக் குறைத்துக் கொள்வதற்கான சமிக்ஞைகள் தான் அக்னி நட்சத்திரம் பற்றிய முன் அறிவிப்புகளுக்கான காரணங்கள். சரி இப்போது அக்னி நட்சத்திரம் பற்றி மேலும் சில விசயங்களை அறிந்து கொள்வோம்.

கூகுளில் அக்னி நட்சத்திரம் என்று டைப் செய்து பார்த்தால் சித்திரை மாத அக்னி நட்சத்திரத்துக்குப் பதிலாக மணிரத்னம் இயக்கிய அக்னி நட்சத்திரத்தைப் பற்றிய தகவல்கள் தான் ஆயிரக்கணக்கில் வந்து கொட்டுகின்றன. இந்தத் தலைப்பை தனது படத்துக்கு தேர்வு செய்த அளவில் மணிரத்னத்தை எத்தனை பாராட்டினாலும் தகும். இரண்டு பெண்டாட்டிக் கதையான அந்தப் படத்திலும் நிஜ அக்னி நட்சத்திரத்துக்கு சற்றும் குறையாத அத்தனை அனல் இருக்கத்தான் செய்தது. இனி அக்னி நட்சத்திரத்துக்கு வருவோம்.

  • வானிலை ஆய்வுகளின் அடிப்படையிலான முடிவுகளின் படி, வடகிழக்குப் பருவ காலத்துக்கும், தென் மேற்குப் பருவ காலத்துக்கும் இடைப்பட்ட இடைவெளியே அக்னி நட்சத்திரம் எனப்படுகிறது. 
  • மகாபாரதக் கதையின் படி; அக்னி தேவனின் பசியைப் போக்க பகவான் கிருஷ்ணரும், அர்ஜூனனும் யமுனை ஆற்றங்கரையில் இருந்த காண்டவ வனத்தை எரித்துண்ண உதவிய நாட்களே அக்னி நட்சத்திர காலம் எனக்கூறப்படுகிறது. பசுமை மாற பல மூலிகைகளைத் தன்னகத்தே கொண்ட காண்டவ வனத்தை அக்னி அளித்துண்ண அர்ஜூனன் உதவியதால் அவனுக்கு பரிசாகக் கிடைத்ததே எப்போதும் அம்புகள் தீராத அம்பறாத் துணி என்றொரு கதையும் உண்டு. 
  • ஒரு சாரரோ சித்திரை மாதம் பரணி மூன்றாம் காலில் சூரியன் பிரவேசிக்கும் நாட்களே அக்னி நட்சத்திர நாட்கள் என பஞ்சாங்கத்தின் அடிப்படையில் நம்புகிறர்கள்.
  • ஆனால் அக்னி நட்சத்திரம் குறித்த வேறொரு நம்பிக்கையின் அடிப்படையில், சித்திரை மாத கொடும் வெயிலில் வயலில் வெடிப்புகள் தோன்றிப் பெருகும் எனவும் அடுத்து வரும் காற்று மாதங்களில் அந்த வெடிப்புகளின் வழியாக பூமியின் மேற்பரப்பில் உள்ள இலைகள், சருகுகள் இன்ன பிற குப்பைகள் அனைத்தும் உள் நுழைந்து தங்கி விட அதற்கடுத்த மழைக் காலங்களில் வெடிப்புகள் மூடப்பட்டு உள்நுழைந்த கசடுகள் அனைத்தும் உரமாகி மண் வளம் பெறும் என்றும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இதனடிப்படையில் பார்த்தால் இதை ‘கர்ப்ப ஓட்டம்’ என்கிறார்கள். மண் வளம் பெற அக்னி நட்சத்திர காலம் பேருதவி செய்கிறது என்கிறார்கள் பரம்பரை விவசாயிகள்.
  • இந்து மத நம்பிக்கைகளின் அடிப்படையில் அக்னி நட்சத்திர நாட்கள் முருகனுக்கு உகந்தவையாகக் கருதப்படுகின்றன. அனல் வடிவான சிவனது அம்சமாகக் கொண்டாடப் படும் கார்த்திகேயன் 6 அனல் துளிகள் ஒன்றென உருக்கொண்டு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டு வாலிபனாகி சூரனை வதம் செய்தார் என்பது ஐதீகக்கதைகளில் ஒன்று. அதன்படி இந்துக்கள் அக்னி நட்சத்திர நாட்களை சுப்ரமண்ய வழிபாட்டுக்கு என ஒதுக்கிக் கொண்டனர். இந்த நாட்களில் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள முருகர் ஆலயங்களில் வழிபாடுகள், அபிஷேக ஆராதனைகள் என பக்தர் கூட்டம் களை கட்டும். குறிப்பிட்ட இந்த நாட்களில் பழமுதிர் சோலை, பழனி மலை, திருத்தணி உள்ளிட்ட முருகன் கோயில்களில் கிரிவலம் வருவது மிகச் சிறப்பான பலனைத் தரும் என நம்பப் படுகிறது. அது மட்டுமல்ல, இந்த நாட்களில் பெண்கள் முருகனுக்கு உகந்த கடம்ப மலர்களைச் சூடிக் கொண்டு கிரிவலம் வருவதும் நற்பலன்களை உண்டாக்குவதாக நம்பப்படுகிறது.
  • மக்களில் ஒரு சாரரிடையே அக்னி நட்சத்திர நாட்களில் சுபகாரியங்கள் தொடங்கப் படக்கூடாது, கடன் கொடுக்கல், வாங்கல் கூடாது, முக்கியமான பண்டிகைகள் கொண்டாடப் படக் கூடாது எனும் நம்பிக்கைகளும் நிலவுகின்றன. பண்டைக்காலம் முதல் இந்த நம்பிக்கை தொன்று தொட்டுத் தொடருவதாக வரலாற்று பதிவுகள் காட்டுகின்றன. ஏனெனில் இவற்றின் மூலமாக இத்தனை உச்சமான வெயிலில் சரும நோய்கள் பரவ வாய்ப்புள்ளதால் அலைச்சல் தரும் மேற்கூறிய நடவடிக்கைகள் எல்லாம் தேவையில்லை என அந்நாளிலேயே மக்கள் தீர்மானித்திருந்தனர் என நம்பலாம்.

இந்தியாவில் 2003 ஆண்டில் ராஜஸ்தான் மாநிலத்தின் பலோடியில் அக்னி நட்சத்திர காலத்தில் 58 டிகிரி வெயில் பதிவானது. இந்தியாவில் இதுவரையிலான உச்ச பச்சமான வெயிலுக்கு இதுவே உதாரணமாகத் திகழ்கிறது. 

இந்த ஆண்டில் மே 4, காலை 5.55 மணிக்குத் துவங்கி உள்ள அக்னி நட்சத்திர காலம் இந்த மாத இறுதியில் அதாவது மே 28 அன்று முடிவடைகிறது. ஒவ்வொரு வருடமும் சூரியனின் நேரடியான ஆளுகைக்குள் பூமி வந்தமையக் கூடிய இந்த அக்னி நட்சத்திர நாட்களில் மக்கள் பின்பற்ற வேண்டிய முக்கியமான சில விதிமுறைகள் முன்னரே வகுக்கப் பட்டு பல்லாண்டுகளாக உபயோகத்தில் இருக்கின்றன. அதன்படி இந்த நாட்களில் கூடுமான வரையில் சூரியக் கதிர்கள் நேரடியாக உடலில் படும்படி நடமாடுதல் கூடாது.  அவரவர் உடல் எடைக்குத் தக்க தண்ணீர் அருந்த மறக்கக் கூடாது. காலை, இரவு என இரு வேளைக் குளியல் அவசியம், குழந்தைகளை, சிறுவர், சிறுமிகளை மத்தியான கத்தரி வெயிலில் விளையாட அனுமதிக்கக் கூடாது. கார, சாரமான உணவு வகைகளைத் தவிர்த்து விட்டு நார்சத்தும், நீர்ச்சத்தும் அதிகமுள்ள காய்கறிகள், பழங்கள் கலந்த உணவுமுறையைப் பின்பற்றுவது நல்லது.

25 நாட்கள் மட்டுமே அக்னி நட்சத்திரம். விரைவில் அதைக் கடந்து விடலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com