

காலையில் வேலைக்குச் சென்று மாலை வீடு திரும்பி, 8 மணி நேரம் வேலை செய்து வரும் மாதச் சம்பளம் அடிப்படைத் தேவைக்கே போதவில்லை என்று புலம்புவோர் ஏராளம்.
அதே சமயம், பெரும் பணக்காரர்கள் யாருமே இப்படி 8 மணி நேரம் வேலை செய்து சம்பாதித்தவர்களாகவும் இருப்பதில்லை. 8 மணி நேர வேலை செய்வதன் மூலம் பெரிய அளவில் சம்பாதிக்கவோ, சாதிக்கவோ முடிவதில்லை.
சரி, அந்த 8 மணி நேரமோ 10 மணி நேரமோ கூட வேலையே செய்யாமல், மாதந்தோறும் கணிசமானத் தொகையை பெறுவதற்கு என்ன செய்யலாம்? ஏதாவது வழி இருக்கிறதா? என்று நீங்கள் கேட்டால் நிச்சயம் அதற்கு வழிகள் இருக்கின்றன. ஒன்றல்ல.. இரண்டு!
இது ஏதோ கண் கட்டி வித்தையோ, சட்ட விரோத செயலோ அல்ல. ஏற்கனவே பலரும் இந்த முறையைப் பயன்படுத்தி மாதந்தோறும் பணம் சம்பாதித்து வருகிறார்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
பணம் என்பது என்ன?
வெறும் காகிதத் தாள். இப்படி சொன்னால் கோபம் வருகிறதா? ஆம், கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி, 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் அறிவித்தபோது, நம் கையில் இருந்த ரூபாய் நோட்டுகள் அப்படித்தானே பார்க்கப்பட்டன.
பானைக்குள்ளேயும், அஞ்சறைப் பெட்டிகளிலும் பெண்கள் போட்டு வைத்த மக்கிப் போன பண நோட்டுகள் கூட அப்போது வங்கிக்கு வந்து சேர்ந்தது.
வெறும் பானையில் பணத்தைப் போட்டு வைப்பதால் அது என்னவாகும். 100 ரூபாய் போட்டால் 100 ரூபாயாகவே இருக்கும். இரண்டாயிரத்துக்கும் அதே நிலைதான்.
ஆனால், இங்கே கூறும் இரு வழிகளைப் பயன்படுத்தினால் பணமே பணம் செய்யும்.
முதலீடுகள் மீது வட்டி
கையில் கணிசமான தொகை இருந்து, வேலைக்குச் செல்லாமல் மாதந்தோறும் பணம் சம்பாதிக்க விருப்பமும் இருக்கும்பட்சத்தில் உங்கள் முதல் தேர்வு முதலீடுகள். வங்கிகள் அல்லது நிதி அமைப்புகளில் இருக்கும் பகுதிகால அல்லது நிரந்தர முதலீடு திட்டம் சிறந்த தேர்வாக இருக்கலாம். உலகில் பொருளாதார ரீதியாக வளர்ந்த நாடுகளை விட இந்தியாவில் நிரந்தர வைப்புத் திட்டத்துக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது.
அதாவது, நீங்கள் ரூ.50 லட்சத்தை வங்கியில் முதலீடு செய்தால், உங்களுக்கு ஆண்டுக்கு 8% வட்டி கிடைக்கும். இதனால் ஆண்டுக்கு ரூ.4 லட்சம் அளவுக்கு வட்டி கிடைக்கும். ஆண்டுக்கு ரூ.4 லட்சம் என்றால் மாதந்தோறும் வட்டி எப்படி பெறுவது என்று கேட்கலாம்.. அதற்கும் வழி இருக்கிறது. பணத்தை முதலீடு செய்யும் போதே வட்டி தொகை மாதந்தோறும் அல்லது காலாண்டுக்கு ஒரு முறை கிடைக்கும் வகையில் வசதி செய்து கொள்ளலாம். அப்படியானால் உங்களுக்கு மாதந்தோறும் ரூ.33 ஆயிரம் வட்டியாகக் கிடைக்கும். அதே சமயம், ரூ.50 லட்சம் பாதுகாப்பாக வங்கியில் இருக்கும்.
இரண்டாவது வழி
வங்கியில் முதலீடு செய்துவிட்டு ஒரே நிலையாக வட்டியைப் பெற விருப்பமில்லையா? பங்குச் சந்தையில் அதிக விருப்பம் உள்ளவரா? அதில் அனைத்து நுணுக்கங்களும் தெரிந்தவரின் ஆலோசனை இருக்கிறதா? அப்படியானால் உங்கள் தேர்வு பங்குச் சந்தை முதலீடாக இருக்கலாம்.
பங்குச் சந்தை என்றால் ஏதோ கண் கட்டு வித்தை என்று அஞ்ச வேண்டாம். சரியான வழிகாட்டுதல் இருந்தால் பணம் செய்யும் சந்தையாகவே இந்த பங்குச் சந்தை பார்க்கப்படுகிறது. வங்கிகளில் நிரந்தர வைப்புத் தொகை மூலம் கிடைக்கும் வட்டியை விட மிக அதிகத் தொகையையும் நீங்கள் லாபமாக பெறலாம்.
பங்குச் சந்தையில் பணம் போட்டால் அது அப்படியே போய்விடும் என்று பலரும் நினைத்திருந்த காலத்தில், தற்போது பங்குச் சந்தைகள் மூலம் அதிக லாபம் ஈட்டியிருப்பவர்களையும் நாம் பார்க்கத்தான் செய்கிறோம். ஒரு சில சமயங்களில் ஆபத்தும் இருக்கத்தான் செய்யும்.
அதே போல, எந்த ஆபத்தும் இல்லாத பத்திரங்களையும் தற்போது மத்திய, மாநில அரசுகள் வெளியிடுகின்றன. அவற்றின் மூலமும் நல்ல வட்டியைப் பெற்று லாபம் ஈட்ட வாய்ப்புகள் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.