உஷாபதி டு துணை ராஷ்டிரபதி வரை: தென்னக அரசியலில் வெங்கய்ய நாயுடுவின் சுவாரஸ்யப் பயணம்!

நீங்கள் நீளவாக்கில் நாமம் வைத்துக் கொண்டாலும் சரி... குறுக்குவாட்டில் நாமம் வைத்துக் கொண்டாலும் சரி இந்த தேசத்துக்கு மட்டும் பட்டை நாமம் போட நினைக்காதீர்கள்
உஷாபதி டு துணை ராஷ்டிரபதி வரை: தென்னக அரசியலில் வெங்கய்ய நாயுடுவின் சுவாரஸ்யப் பயணம்!

மத்தியில் ஆளும் பாஜக சார்பில் துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட நேற்று வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ள வெங்கய்ய நாயுடு பற்றி தமிழர்களான நமக்கு எந்தளவுக்கு தெரியும்? ஒரு தேசியக் கட்சியின் தலைவராக மத்தியில் பாஜக ஆட்சி நடக்கும் சமயங்களில், தினந்தோறும் அவரை தொலைக்காட்சிப் பேட்டிகளிலோ, அல்லது கருத்துக் கேட்பு நேரலைகளிலோ கண்டிருப்போம். அதைத் தாண்டி அவர் பேசும் ஆங்கிலம்போல் இல்லாது, பிராந்திய மொழிச் சாயலடிக்கும் ஆங்கிலத்தை ரசிப்பவர்களும், தூஷிப்பவர்களும் கூட இங்கே பலருண்டு. இதைத் தாண்டி ஜெயலலிதா இறந்த அன்று, நாள் முழுதும் சசிகலாவுக்குப் போட்டியாக வெங்கய்யாவும் பிரதமர் மோடி வரும் வரை ஜெயலலிதா தலைமாட்டில் உட்கார்ந்திருந்தார். தமிழகத்தில் அதிமுக இரு அணிகளாகப் பிளவுபட்டதும், ஓபிஎஸ் அணியை மறைந்திருந்து இயக்கி மத்திய அரசின் கைப்பொம்மை ஆக்குவதில் அயராது உழைத்தவர்களில் வெங்கய்யாவும் ஒருவர் என்றொரு குற்றச்சாட்டு தமிழக மக்களிடையே, குறிப்பாக அதிமுகவின் பாரம்பரிய தொண்டர்களிடையே உண்டு. தன்னைப் பற்றி இப்படி ஒரு குற்றச்சாட்டு இருப்பது வெங்கய்யாவுக்கே தெரிந்திருப்பினும், அவர் அதைக் குறித்தெல்லாம் அலட்டிக் கொள்பராகத் தெரியவில்லை. 

99% வெற்றி வாய்ப்புள்ளதாமே?

68 வயதான வெங்கய்ய நாயுடு, ஆந்திராவின் நெல்லூரில், சவட்டுப்பள்ளம் எனும் கிராமத்தில் பிறந்து வளர்ந்து, பள்ளிக்கல்வியை அதே கிராமத்துப் பள்ளியிலேயே முடித்து, விசாகப்பட்டினத்தில் இருக்கும் ஆந்திரப் பல்கலைக் கழகத்தில் சட்டப்படிப்பை முடித்தார். பள்ளிக்காலத்திலேயே ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராகி, கல்லூரிக் காலத்தில் மாணவர் தலைவராகி, பாஜகவின் தெலுங்கு முகங்களில் மிகப் பிரபலமானவராகி பின்னாட்களில் தேசிய அளவில் நாடு முழுதும் அறியப்பட்ட ஒரு மாபெரும் அரசியல்வாதி ஆனதெல்லாம் வெங்கய்யாவின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள். இவையெல்லாம் ஊரறிந்த விஷயங்கள். அவரைப் பற்றி நாம் இதுவரை அறிந்திராத சில விஷயங்களும்கூட உண்டு, நாளை நடைபெறவிருக்கும் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் 99% வெல்வதற்கான வாய்ப்புகள் உள்ள நபர் இவர் என்பதால் அவரைப் பற்றி மேலும் சில சுவாரஸ்யமான விஷயங்களை நாம் அறிந்துகொள்வதில் தவறில்லை.

பிறந்ததும், வளர்ந்ததும்...

வெங்கய்யா பிறந்து 2, 3 வருடங்களில் அவரது அம்மா, ரமணம்மா உடல்நலக் குறைவால் இறந்துபோகிறார். மனைவி இறந்த துக்கத்தில் அப்பா ரங்கய்ய நாயுடுவும் சித்தப்பிரமை பிடித்தவரைப்போல நடமாடிவிட்டு சில காலங்களில் அவரும் எங்கோ காணாமல் போக, பால்யத்தில் வெங்கய்யாவை வளர்த்தது அவரது (அம்மம்மாவும், தாத்தைய்யாவும்) அம்மாவைப் பெற்ற பாட்டியும், தாத்தாவும்தான். அம்மா என்ற உறவின் அணுக்கம் தனக்கு கிடைக்காமல் போனதால், தனக்கு மகள் பிறந்ததும் அவரை அம்மா என்று அழைக்கவே தான் விரும்பியதாக வெங்கய்யா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். மகளை மட்டுமல்ல, கல்லூரிக் காலத்தில் தன்னுடன் படித்த பெண்களையும், இன்று தனது பேத்தியையும்கூட அம்மாவென வாஞ்சையாக அழைப்பதில் தனக்கெப்போதும் இஷ்டம் அதிகம் என்கிறார் வெங்கய்யா! கிராமத்தில் பாட்டி வீட்டில் வளர்ந்த வெங்கய்யாவுக்கு, இயல்பில் அவரது பாட்டியின் குணநலன்களும் சில உண்டாம்.

ஆர் எஸ் எஸ் தொடர்பு...

இளமையில் பெற்றோர் இருவரது அரவணைப்பும் கிடைக்காமல் போனதால் தன்னை ஸ்திரப்படுத்திக்கொள்ள, தனது குணநலன்களில் ஒரு ஸ்திரத்தன்மை கிடைக்கவேண்டி இளைஞரான வெங்கய்யா ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்குகொள்ளத் தொடங்குகிறார். அதில் மிக முக்கியமானது 1972-ம் ஆண்டுவாக்கில் நடைபெற்ற ஜெய்ஆந்திரா’ இயக்கப் போராட்டங்கள். அன்றைக்கு ஆந்திராவில் ஆர்.எஸ்.எஸ். பிரபலஸ்தராக இருந்த ககனி வெங்கடரத்னம், விஜயவாடாவில் ‘ஜெய்ஆந்திர’ இயக்கப் போராட்டங்களுக்கு தலைமை ஏற்று நடத்தினார் எனில், அதே போராட்டங்களை நெல்லூரிலிருந்து தலைமையேற்று நடத்தி வெற்றி கண்டவர் வெங்கய்ய நாயுடு. இப்படித்தான் வெங்கய்யாவும் ஆர்.எஸ்.எஸ். மூலமாக பாஜக வின் பிரபலமான முகங்களில் ஒருவரானார்.

மாணவப் பருவத்தில் முன்னெடுத்து நடத்திய அரசியல் போராட்டங்கள்...

1974-ம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ் அரசின் எதிர்த்த ஜெயபிரகாஷ் நாராயணின் பெயரில் அமைந்த ‘ஜெயபிரகாஷ் சத்ர சக்ர்ஷ் சமிதி’ எனும் அமைப்பை உருவாக்கி அதன் மூலமாக மாணவர்களைத் திரட்டி தெருவுக்கு கொண்டுவந்து போராடி மாணவ அமைப்புகள் மத்திய அரசின் ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் எழுப்ப முக்கியக் காரணமாக இருந்தவர் வெங்கய்யா. இந்திரா காந்தியின் எமெர்ஜென்சி காலத்தில் கைதாகி சிறை சென்ற மாணவர் தலைவர்களில் அன்று வெங்கய்யாவும் ஒருவர். தான் சார்ந்துள்ள கட்சியின் பணிகளுக்காக அயராது உலகம் முழுக்க சுற்ற எப்போதும் தயாராய் நிற்பவர்களில் ஒருவர் வெங்கய்யா. வெங்கய்யாவின் மனைவியே சில நேரங்களில், தனது கணவர் இன்று ஹைதராபாத் வந்துவிட்டார். இரவு மீண்டும் டெல்லிக்குச் சென்றுவிட்டார் என்பதை தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்துத்தான் தெரிந்துகொள்வாராம். அத்தனை பிஸியான அரசியல்வாதியாக ஹைதராபாத், டெல்லி, தேவைப்பட்டால் தமிழகம் மற்றுமுள்ள இந்திய மாநிலங்கள் அனைத்திலும் கட்சி சார்பாக எந்த நேரத்திலும் பயணிக்கத் தயாராக இருக்கும் அரசியல்வாதிகளில் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார் வெங்கய்யா. இப்படி ஒருவரை மணந்துகொண்ட வெங்கய்யாவின் மனைவியும் தன் கணவரைவிட பொதுச்சேவைகளில் சளைத்தவரல்லவாம்.

மனைவி மற்றும் குழந்தைகள்...

வெங்கய்ய நாயுடு மனைவி உஷா, இந்த தம்பதிகளுக்கு தீபா வெங்கட் என்ற மகளும், ஹர்ஷவர்தன் நாயுடு என்ற மகனும் உள்ளனர். இருவருமே அவரவருக்கு தெரிந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். தனது வாரிசுகள் அரசியலுக்கு வருவதில் அவருக்கு விருப்பமுண்டா என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில் வெங்கய்ய அடித்த கமெண்ட் -

‘Dynasty in democracy is nasty, but tasty to some people

‘தாத்தா, தாத்தாவுக்குப் பிறகு அப்பா, அப்பாவுக்குப் பிறகு மகன், மகள் இந்த மாதிரியான வாரிசுத்துவத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. பாஜக ஒரு ஐடியலான கட்சி. கொள்கை ரீதியாகப் பலம் வாய்ந்த கட்சி. இதில் உங்களுக்கு ஆர்வமிருந்தால் சிறு வயதிலிருந்தே கட்சியில் இணைந்து அதன் போராட்டங்களில் எல்லாம் கலந்துகொண்டு மக்களுக்கான நன்மைகளைப் பெற்றுத்தருவதில் போராடி மக்கள் செல்வாக்கைப் பெற்று அரசியல்வாதி ஆகிறீர்கள் என்றால் அதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. அப்படி ஆர்வம் இல்லையென்றால், பேசாமல் உங்களது குடும்ப வியாபாரங்களைப் பார்த்துக்கொண்டு இருந்துவிடலாம். வியாபாரங்களிலும்கூட பிரபுத்துவம் சார்ந்த வியாபாரங்களில் ஈடுபட்டு அதற்கான சகாயங்களைத் தேடி என்னிடம் வந்துவிட வேண்டாம். என்னை அத்தகைய நிர்பந்தங்களில் கொண்டு நிறுத்த வேண்டாம்’ என்று தனது வாரிசுகளுக்குச் சொன்னதாக ஒரு பேட்டியில் வெங்கய்யா தெரிவித்துள்ளார். 

தாய்மொழிப் பற்று...

வெங்கய்ய நாயுடு சரளமாக தெலுங்கு, ஆங்கிலம், இந்தி மூன்று மொழிகளிலும் பேசக்கூடிய வல்லமை கொண்டவர். தமிழ், மலையாளம், கன்னடம் மூன்றும் பேசினால் புரிந்துகொள்ளக்கூடிய அளவுக்கு அந்த மொழிகளிலும் அவருக்குப் பரிச்சயமுண்டு. எனினும் அசெம்பிளியிலும் சரி, தொலைக்காட்சிப் பேட்டிகளிலும் சரி தனது தாய்மொழி தெரிந்த சக மனிதர்களுடன் உரையாடும்போது பொதுவாகத் தான் தெலுங்கிலேயே உரையாட விரும்புவதாகக் கூறுகிறார். அதற்காக பிற மொழிகளைக் கற்றுக்கொள்ளக் கூடாது என்று அர்த்தமில்லை. ஆங்கிலம், இந்தி என எல்லா மொழிகளையும் கற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் உரையாடுவது மட்டும் அவரவர் தாய்மொழியில் மட்டுமே அமைய வேண்டும். உரையாடும் இருவருக்கும் தாய்மொழி தெரியுமெனில் எதற்கு அந்நிய மொழியில் உரையாடுவது? என்கிறார் வெங்கய்ய நாயுடு.

வெங்கய்ய நாயுடு சந்தித்த ஹெலிகாப்டர் விபத்துகள்...

கயாவில் ஒரு முறை, நாகலாந்தில் ஒரு முறை, ராஞ்சியில் ஒரு முறை, ஹைதராபாத்தில் பலமுறை என எத்தனையோ முறைகள் நான் பயணித்திருக்க வேண்டிய ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளாகி, அதில் எனக்குப் பதிலாக பயணித்தவர்கள், என்னோடு பயணித்திருக்க வேண்டிய பலர் உயிரிழந்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு செளந்தர்யா தேர்தல் பிரசாரத்துக்காக பயணிக்கையில் உயிரிழந்த சம்பவம் மற்றும் டெக்கான் ஏர்வேஸ் துவக்க ஓட்ட விழா இரண்டையும் கூறலாம். நான் மட்டும் ஒவ்வொரு முறையும் அந்த விபத்துகளிலிருந்து ஏதோ ஒருவகையில் தப்பும்போது எனக்கு கடவுள் நம்பிக்கை மேலும் வலுக்கிறது. எனக்கு நாள்தோறும் பூஜை, புனஸ்காரங்கள் செய்வதில் நம்பிக்கை இல்லை. அப்படிச் செய்யக்கூடியவனும் அல்ல நான். ஆனால் ஆண்டுக்கு ஒருமுறை திருப்பதி வெங்கடேஸ்வர ஸ்வாமியைப் போய் தரிசித்துவிட்டு வருவேன். எனக்கு நேர்ந்திருக்க வேண்டிய விபத்துகளை எல்லாம் தடுத்தாட்கொண்டது அந்த வெங்கடேஸ்வர மூர்த்தியே என நம்புகிறேன். தெய்வ சங்கல்பத்தைத் தாண்டி அடுத்தொரு விஷயம் எனக்கு கவசமானது என்றால் அது மக்கள் என் மீது கொண்ட அபிமானம் என்று சொல்லலாம். ஏனெனில், கட்சியில் பிறரைக் காட்டிலும் நான் அதிகமாகப் பிரயாணங்களில் ஈடுபடக்கூடியவன். ஒவ்வொரு முறையும் எனது பயணங்களில் பல திட்டமிடாமல் திடீரென முடிவாகக்கூடியவை. அப்படி இருக்கும்போது, எனக்கு எதுவும் நேரமலிருப்பது அந்தக் கடவுள் கருணையாலும், மக்களது அபிமானத்தாலும் மட்டுமே என்கிறார் வெங்கய்யா.

தமிழக அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் குறித்து வெங்கய்ய நாயுடு அடித்த ஜோக்...

ஒருமுறை வெங்கய்ய நாயுடு, நடிகர்கள் சிரஞ்சீவி மற்றும் மோகன்பாபுவுடன் இணைந்து திருப்பதிக்கு விமானத்தில் சென்றிருக்கிறார். அப்போது சிரஞ்சீவியும், மோகன்பாபுவும் தங்களுக்குள் ஜோக் அடித்துச் சிரித்துக் ண்டிருக்க, அதைக் கேட்டுக் கொண்டிருந்த வெங்கய்யா, இதைவிட பெரிய ஜோக் ஒன்று உண்டு, அதைக் கேளுங்கள் எனக் கூறி ஒரு விஷயத்தைச் சொல்லி இருக்கிறார். அது என்னவென்றால் - 

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலில் அதிமுக ஜெயித்தால் திமுக தலைவர் கருணாநிதி 5 ஆண்டுகள் சட்டசபைப் பக்கமே வரமாட்டார். திமுக ஜெயித்து ஆட்சி அமைத்தால் கருணாநிதியின் முகம் காணப் பிடிக்காமல் ஜெயலலிதா அம்மையார் 5 ஆண்டுகள் சட்டசபைக்கே செல்லமாட்டார். இப்படி அவர்கள் இருவருக்குமிடையே ஒரு அழுத்தமான எதிரி மனோபாவம் இருந்தது. இது அவர்களோடு போகவில்லை, அவர்களது கட்சியினருக்குள்ளும் மிக மிக அழுத்தமாகப் பதிந்துவிட்டது. அது எந்த அளவுக்கு என்றால் - 

ஒரு திமுககாரர் இறந்துவிட்டார். அவர் நல்லவர் என்பதால் எமதர்மராஜன் அவரை சொர்க்கத்துக்கு அனுப்பிவிட்டார். சில காலம் கழித்து ஒரு அதிமுககாரரும் இறந்து விடவே, அவரும் நல்லவர்தான் என்பதால் அவரையும் எமதர்மராஜன் சொரக்கத்துக்கே அனுப்புகிறார். சொர்க்கத்தில் ஏற்கனவே இருக்கும் திமுககாரரைக் கண்டுவிடும் அதிமுககாரர், உடனடியாக ஐயய்யோ இவர் இங்கிருக்கிறாரா? வேண்டாம் நான் இங்கே இருக்க விரும்பவில்லை. என்னை நரகத்துக்கேகூட அனுப்பிவிடுங்கள். ஆனால் ஒரு திமுககாரர் இருக்கும் இடத்தில் என்னால் இருக்க முடியாது என்று கூறிவிட்டு வெளியேறினாராம். அப்படி ஒரு எதிரி மனப்பான்மை இவ்விரு கட்சிகாரர்களுக்கும் இருக்கிறது. சாவிலும், சுபகாரியங்களிலும், நன்மை செய்வதிலும் நாம் குரோதத்தைக் காண்பிக்கக் கூடாது என்ற மனப்பக்குவம் அவர்களுக்கு இல்லை. அதைத் தாண்டி தனக்கு லாபமில்லாவிட்டாலும் பரவாயில்லை, அடுத்தவருக்கு நஷ்டமானால் பரவாயில்லை என்ற மனோபாவம் அங்கே பெருகிவிட்டது, அது நல்லதில்லை என்று குறிப்பிடுகிறார் வெங்கய்ய நாயுடு.

பாஜகவினர் மட்டுமல்ல எதிர்கட்சியினரும்கூட வெங்கய்யா ஜெயிக்க வேண்டுமென ஆசைப்படுவார்கள்....

நாடு முழுதும் பாஜகவின் தென்னக அடையாளங்களில் ஒருவராக இனம் காணப்படும் வெங்கய்யா எம்எல்ஏவாக இருந்தபோது, அவரது சட்டைப்பையில் 100 ரூபாய் வைத்துக்கொண்டு பயணித்தால் அவர் பல பயணங்களை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும்போதும்கூட சட்டைப்பையில் வைத்த அந்த 100 ரூபாய் நோட்டு அப்படியே இருக்குமாம். எப்போதுமே பயணங்களில் அவருடைய நண்பர்கள் அவரைச் செலவு செய்ய விட்டதே இல்லை. எங்கே செல்வதாக இருந்தாலும், அங்கே என்ன தேவையாக இருந்தாலும் அதைச் செய்து தருவதற்கு தனது நண்பர்கள் தயங்கியதே இல்லை என்பதால், தனக்கு பணத்தைப் பற்றிய கவலைகள் ஆரம்பம் முதலே இருந்ததில்லை என்கிறார். சொந்தக் கட்சியில் மட்டுமல்ல எதிர்கட்சியினரும் இவருக்கு நண்பர்கள்தான். வெங்கய்யா வருகிறார் என்றால் எதிர்க்கட்சி நண்பர்கள்கூட இவர் ஜெயிக்க வேண்டும் என நினைக்கக்கூடிய அளவுக்கு தன்னைச் சுற்றியுள்ள அனைத்துக் கட்சியினருடனும் மிக நல்லதொரு நட்பினை ஆரம்பகாலம் தொட்டே வளர்த்து வந்திருக்கிறார் இவர்.

மனிதர்கள் தனக்குத்தானே குறைத்துக்கொள்ள வேண்டிய 6 குணங்களாக வெங்கய்ய சொன்னது...

  • எதிலும் நம்பிக்கையற்றவர்கள்
  • எப்போதும் சந்தோஷப்படவே தெரியாதவர்கள்
  • கற்பனை உலகில் சஞ்சரிப்பவர்கள்
  • எப்போதும் குரோத மனப்பான்மையுடன் இருப்பவர்கள்
  • சக மனிதர்கள் மேல் கருணையற்றவர்கள்
  • சதா பொறாமைக்குணம் நிரம்பியவர்கள்

இந்த ஆறு குணங்களுமே மனிதர்களைப் பொறுத்தவரை கெட்ட குணங்களென அனுமானிக்கப்பட்டவை. ஆனால், இவை ஆறும் இல்லாத மனிதர்களைக் காண்பது அரிது. இந்தக் குணங்களில் கொஞ்சம், கொஞ்சம் நம் எல்லோருக்குள்ளும் இருக்கும். ஆனால் அதை மிஞ்ச விடாது அடக்கியாள்வதில்தான் நமது மனிதத்தன்மையும், மனிதாபிமானமும் மேம்படுகிறது என்கிறார் வெங்கய்ய நாயுடு.

ராமஜென்ம பூமி எனும் பெயரில் 400 வருடப் பழமையான மசூதியை இடித்தது ஏன் எனும் கேள்விக்கான பதில்....

அயோத்தியில் 400 வருடப் பழமை வாய்ந்த பாபர் மசூதியை இடித்தது ஏன்? அங்கே மசூதியை இடிப்பதில் அத்தனை அக்கறை காட்டிய ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் ராமேஸ்வரத்தில் இருக்கும் ராமர்சேது பாலத்தை மட்டும் இடிக்கக் கூடாதென நிர்பந்திப்பதும், எதிர்ப்புக் காட்டுவதும் ஏன்? இது இதிகாச நம்பிக்கையாக இருந்தாலும்கூட பாஜகவினருக்கு முஸ்லிம் ஓட்டுகள் குறித்த எதிர்பார்ப்புகள் இல்லையா? ஏன் இப்படி முரண்பட்டு நிற்கிறீர்கள் இந்த விஷயத்தில் என்ற கேள்வியை பேட்டியாளர் மஞ்சு லஷ்மி, வெங்கய்ய நாயுடுவிடம் கேட்கிறார். அதற்கு வெங்கய்ய நாயுடு சொன்ன பதில் -

அம்மா, நீங்கள் நினைப்பதுபோல பாபர் மசூதி என்பது தொழுகைக்கான இடமல்ல. இங்கிருப்பவர்கள், குறிப்பாக முஸ்லிம்கள் யாராவது நாங்கள் அங்கே சென்று நமாஸ் செய்து தொழுவது வழக்கம் என்று சொன்னதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கிடையாது. இந்திய முஸ்லிம்கள் கஷ்மீர் தர்காவுக்குச் சென்று தொழுவார்கள், கடப்பா தர்காவுக்குச் சென்று தொழுவார்கள். ஏனென்றால், அவையெல்லாம் அந்தக்காலம் முதலே மிகவும் பிரபலமான தர்காக்கள். கடப்பா தர்காவுக்கு ஏ.ஆர்.ரெஹ்மான் வந்து தொழுகை நடத்தியதை நீங்களும் ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள். அந்த தர்காக்களில் நமாஸ் செய்கிறார்கள். ஆனால் பாபர் மசூதி என்கிறார்களே, அது தொழுகை செய்யும் இடமில்லை. சொல்லப்போனால், இஸ்லாமியர்கள் விக்ரகங்கள் இருக்கும் இடத்தில் தொழுகை நடத்தவே மாட்டார்கள். ராமஜென்ம பூமியான அயோத்தியின் அந்தக் குறிப்பிட்ட இடத்தில் முஸ்லிம்களின் இறை நம்பிக்கையை அவமதிக்கும்படி நாங்கள் எதுவும் செய்யவில்லை. பாபர் என்ற முகமதிய மன்னன் இந்தியாவை வெற்றிகொண்டதற்கு அடையாளமாக அங்கே ஒரு வெற்றிச் சின்னம் எழுப்பினார். எப்படி எழுப்பினார், அந்த இடத்தில் முன்பிருந்த ராமர் ஆலயத்தை இடித்துச் சிதைத்துவிட்டு அங்கே மசூதி கட்டினார். அதையே நாங்கள் இடித்தோம். அந்த மசூதியைத் தவிர அயோத்தியில் மேலும் 25 மசூதிகள் உள்ளன. அவற்றையெல்லாம் யாரும் எதுவும் செய்யவில்லையே. 

இந்தியாவில் ராமஜென்ம பூமி குறித்தே பல விமர்சனங்கள் உள்ளன. ராமர் அங்கேதான் பிறந்தாரா? என்பதிலிருந்து ராமர் நிஜமாகவே பிறந்தாரா? என்பது வரை பலவிதமான விமர்சனங்கள் இந்த விஷயத்தில் முன் வைக்கப்பட்டு மக்களை குழப்பி, தானும் குழம்பி பலர் ஆதாயமடைந்தனர். அவை எல்லாம் தாண்டி இந்தியாவில் பெரும்பான்மை இந்துக்களைப் பொறுத்தவரை ராமஜென்ம பூமி என்பது மக்களின் நம்பிக்கையின் மீது கட்டமைக்கப்பட்டது. ராம ராஜ்ஜியம் என்பது இன்று ஏதோ நாங்கள் முன்வைத்த விஷயம் போலப் பேசுகிறார்கள். இல்லை நமது முன்னோர்கள் முதற்கொண்டு எதிர்க்கட்சியினரான காங்கிரஸ்காரர்கள் வரை கொண்டுவர விரும்புவது ராம ராஜ்ஜியத்தைத்தான். ராமர், மக்களைக் காக்கும் கடவுள். இன்று அயோத்தியில் ராமர் ஆலயத்தில் விக்ரகம் உண்டு. அங்கே அபிஷேகம் நடைபெறுகிறது. இதெல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் நடந்ததுதானே! பிறகெதற்கு பாஜகவை இந்துத்வக் கட்சி என்று விமர்சிக்க வேண்டும்? என்னைப் பொறுத்தவரை இந்த தேசம் விடுதலை அடைந்துவிட்டது. அவர்கள் பாகிஸ்தான் என்று தனி நாடு கேட்டு வாங்கிப் பிரிந்து சென்றுவிட்டார்கள். அது பாகிஸ்தான். இது இந்துஸ்தான். இந்துஸ்தான் என்ற பெயரைக்கூட நாங்கள் வைக்கவில்லை.

இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்துஸ்தான் ஏரோனாட்டிகல் லிமிடெட், இந்துஸ்தான் ஷிப்யார்ட் எனும் பெயர்களில் ஏராளமான அரசுத் துறை நிறுவனங்கள் உள்ளன. அவையெல்லாம் வாஜ்பாயும், வெங்கய்ய நாயுடுவும் வைத்த பெயர்கள் அல்லவே! ஆக, இது இந்துஸ்தான் என்றால் இங்கிருக்கும் மக்கள் அனைவருக்கும் சில அடிப்படை விஷயங்களில் ஒரே பொதுவான சிவில் கோட் இருக்க வேண்டும்.  திருமணம், விவாகரத்து, வாரிசுத்துவம், இந்த மூன்று விஷயங்களிலும் இந்தியாவிலிருக்கும் மக்கள் அனைவருக்கும் ஒரேவிதமான சட்டங்கள் இருக்க வேண்டும் என்கிறேன் நான். திருமணம் செய்துகொள்வதென்றால் எல்லோரும் ஒருமுறை மட்டுமே திருமணம் செய்துகொள்ள வேண்டும். விவாகரத்தென்றால் மனைவிக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என்கிறோம் நாங்கள். ஆனால் அவர்களோ, இல்லை நாங்கள் முஸ்லிம்கள்; எங்களுக்கென தனிச்சட்டம் இருக்கிறது என்கிறார்கள். இருக்கட்டும், நான் வேடிக்கையாகச் சொல்ல விரும்புவது இதுதான். நீங்கள் நீளவாக்கில் நாமம் வைத்துக்கொண்டாலும் சரி, குறுக்குவாட்டில் நாமம் வைத்துக்கொண்டாலும் சரி. இந்த தேசத்துக்கு மட்டும் பட்டை நாமம் போட நினைக்காதீர்கள் என்கிறேன். சரிதானே! நீங்கள் முஸ்லிமாக இருந்தாலும் சரி, இந்துவாக இருந்தாலும் சரி, இந்த தேசத்தின் மீது பற்றுடையவர்களாக இருக்க வேண்டும் அதுதான் முக்கியம்.

ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் 'Religion is a way of worship. Culture is the way of life. BJP stands for Culture' அதன் பெயர் இந்துத்வம், பாரதியம் என எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.

இந்தோனேசியாவுக்குச் சென்றீர்கள் என்றால் அந்நாட்டு கரன்ஸியில் ஹனுமன் படம், பிள்ளையார் படம் வைத்திருக்கிறார்கள். அந்நாட்டு விமான சேவையின் பெயர் கருடா ஏர்லைன்ஸ். அங்கே ஆண்டுக்கு ஒருமுறை ராமாயணப் பெருவிழா நடைபெறுகிறது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஒருநாட்டில் இந்தியக் கலாசாரம் மதிக்கப்படுகிறது; கெளரவிக்கப்படுகிறது. ஆனால் இங்கே நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? இங்கே தேசாபிமானத்தை, கலாசாரத்தை மக்கள் தங்களது ஓட்டுளோடு இணைத்துப் பார்க்கிற அளவுக்கு எப்போது பார்த்தாலும் துஷ்பிரசாரம் நடந்துகொண்டிருக்கிறது. அதனால்தான் இங்கே இப்படி! நமது தேசத்தில் இருப்பவர்கள் இங்கிருக்கும் கலாசாரத்தை, சம்பிரதாயத்தை பின்பற்ற வேண்டும் என்று நினைக்கிறோம் அவ்வளவுதான். இதைத் தவறு என்பவர்களை என்ன சொல்வது?

ஊரக வளர்ச்சித் துறை மந்திரியானதன் பின்னுள்ள சுவாரஸ்யக் கதை...

நான் பாஜகவின் பொதுச்செயலாளராக இருந்தபோது, வாஜ்பாய் என்னை தொலைபேசியில் அழைத்து தென்னக பாஜக மந்திரிகளில் ஒருவரான ரங்கராஜன் குமாரமங்கலம் இறந்துவிட்டார். அவரது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு தென்னகத்தில் இருந்து மந்திரியாக சீனியர்களில் எவரையேனும் நான் நியமிக்க வேண்டும். நீங்கள் அந்தப் பொறுப்பை எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். எனக்கு உடனே முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ஏனெனில் ஜெனரல் செக்ரட்டரி (பொதுச் செயலாளர்) எனும் பதவிக்கு இந்தியில் மகாமந்திரி என்ற அழகான பதமுண்டு. ஆகவே, என்னை எதற்கு மகாமந்திரி பதவியில் இருந்து மந்திரி பதவிக்கு பதவியிறக்கம் செய்ய நினைக்கிறீர்கள் என்றேன். வாஜ்பாய் என்ன இப்படிச் சொல்லிவிட்டாய்? என்று கேட்டுவிட்டு, ‘நீ அவரது துறையான ஆற்றல் துறை அமைச்சக நிர்வாகப் பொறுப்பை எடுத்துக்கொள்’ என்றார். நான் வேண்டாம் என்றேன். பிறகு நெடுஞ்சாலைத் துறை, கப்பல் போக்குவரத்துத் துறை, இவற்றுள் ஒரு துறையை எடுத்துக்கொள்ளச் சொன்னார். ஆனால் அந்தத் துறைகளைப் பற்றியும் எனக்கெதுவும் தெரியாது என்பதால் அதையும் மறுத்தேன். இப்படி எதைச் சொன்னாலும் மறுத்தால் உன் மனதில் எந்தத் துறை இருக்கிறதோ, அதையாவது சொல் என்றார். அப்போதுதான் நான் வேண்டி விரும்பி ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பொறுப்பை பெற்றேன். ஏனெனில், நான் கிராமத்தில் பிறந்தவன். சரியான சாலை வசதிகள் இல்லாது நடந்தே பள்ளிக்குச் சென்றவன். சரியான தெரு விளக்கு வசதிகள் இன்றி வாழ்ந்தவன். எனக்குத் தெரியும் ஒரு கிராமத்துக்கு என்னென்ன வளர்ச்சிகள் எல்லாம் தேவை என்பது. எனவே, நான் அந்தத் துறைக்கு அப்போது மதிப்பில்லாதபோதும் அதையே கேட்டு வாங்கிக்கொண்டேன். மக்களுக்கு நன்மை செய்யத்தானே அரசியலுக்கு வந்தேன் அதையே செய்துகொண்டிருக்கிறேன் என்கிறார்.

உஷாபதி துணை ராஷ்டிரபதி ஆவாரா?

எது எப்படியோ, கட்சி பேதங்களின்றி அரசியலில் பலமட்டத் தலைவர்களுடனும் நெருங்கிய நட்பு பாராட்டக்கூடியவர் வெங்கய்ய நாயுடு. அவர் ஒருமுறை ஆந்திராவில் தேர்தல் பிரசாரக் காலத்தில் பேசிக்கொண்டிருக்கையில்,  நான் ராஷ்டிரபதி ஆக விரும்பவில்லை. பிரஜாபதி ஆக விரும்பவில்லை. உஷாபதியாக நீடித்தாலே போதும் என்றார், நகைச்சுவையாக. அவர் விரும்பினாரோ, இல்லையோ இப்போது துணை ராஷ்டிரபதியாகும் வாய்ப்பு அவரைத் தேடி வந்திருக்கிறது. ஜெயித்து துணை ராஷ்டிரபதி ஆவாரா? அல்லது உஷாபதியாகவே நீடிப்பாரா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com