“வாணியம்பாடி வானம்பாடி மறையலாம்; ஆனால் அது விட்டுச் சென்ற கவிதைகள் என்றென்றும் நம்மோடு!”

நாடு சுதந்திரம் பெற்ற நாள் முதல் காலம் காலமாக மைய அரசு, மாநில அரசின் சுயேட்சைத் தன்மையை விழுங்க முனையும் போதெல்லாம் முன் வைக்கும் ‘தேசிய நீரோட்டம்’  எனும் சித்தாந்தத்தை சுக்கு நூறாக உடைத்தெறிகிறது...
“வாணியம்பாடி வானம்பாடி மறையலாம்; ஆனால் அது விட்டுச் சென்ற கவிதைகள் என்றென்றும் நம்மோடு!”

1960-களில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழ் மொழியின் சிறப்புக்களை எடுத்துக்கூறி நடைபெற்றதோடு மட்டுமல்லாமல், உலகின் பழம்பெருமை வாய்ந்த மொழிகளில் ஒன்றான தமிழில் புதியவகை இலக்கியங்களையும் படைத்துக் காட்ட முயற்சித்தது. திராவிட இயக்கமும் அதனோடு இணைந்து மொழி மற்றும் இனம் சார்ந்த பண்பாட்டை வலியுறுத்தி முக்கியத்துவம் பெறத்தொடங்கியது; மொழி மற்றும் இனம் சார்ந்த விழிப்புணர்வைத் தூண்டி மக்களிடம் தனது எல்லையற்ற செல்வாக்கை வளர்த்துக் கொண்டது. இப்படித்தான் 1967-ல் திராவிட இயக்கமான தி.மு.க முதல் முறையாக தமிழகத்தில் பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமர்ந்தது.

திராவிட இயக்கத்தின் வளர்ச்சியையும், அந்த வளர்ச்சியை அப்போது சாத்தியப்படுத்த உதவிய வானம்பாடிகளையும் தனியே பிரித்துப் பார்க்க முடியாது.

மேலைக் கவிஞர்களின் படைப்புகளை வாசித்து அதன் தாக்கத்திற்கு உள்ளான புதுமை விரும்பிகள், செய்யுள் வடிவில் இருந்த மரபுக் கவிதை நடையிலிருந்து தமிழ்க் கவிதைகளை மீட்டு எளியோருக்கும் புரியும் விதமாக இயல்பான தமிழ்கவிதைகளைப் படைக்கும் விதமாக இலக்கிய உலகில் ஒரு புரட்சிப் போராட்டத்தை நடத்தினர். படைப்பாளிகளில் சிலர் தாம் பணியிலிருந்த பத்திரிகைகளின் வழியாகவும், தன்னந்தனியாகச் சிலரும், குழுமமாக இணைந்து சிலரும் என பலவிதங்களில் இளம் கவிஞர்களும், படைப்பாளிகளும் இந்த மாபெரும் புரட்சிக்கு வித்திட்டனர். முதலில் தனித் தனியாகப் போராடிக் கொண்டிருந்தவர்கள் பின்னர் உணர்வு வேகத்தில் ஒருங்கிணைந்து இயக்கமாகவும் உருவெடுத்தனர். அப்படித் தோன்றிய படைப்பியக்கங்களில் வலிமை வாய்ந்ததாகக் கருதப் பட்டது ‘வானம்பாடி’ கவிஞர்கள் இயக்கம்.

வானம்பாடிகளது கவிதைகள் தனித்தமிழ் என்பதாய் இல்லாமல் ஆங்கிலம், வடமொழி மற்றும் கன்னடம், தெலுங்கு, மலையாளம் எனக் கலந்து மணிபிரவாள நடையில் எழுதப்பட்டது. அதற்கு காரணம் சமூக பிரச்சினைகளை முன் வைத்து யாப்புக்கு இசையாது இலக்கண கட்டுப்பாடுகளின்றி கட்டற்ற தன்மையில் எழுத முயன்ற பெருவிருப்பமே காரணமென்று கருதப் படுகிறது. மேலும் அம்மொழி நடையையே தம்முடைய தனித்த நடையாய்ப் பயன்படுத்தி எழுதிய வானம்பாடிகள் பலர் மேடையில் முழங்கும் தன்மையை தமது கவிதைகளின் ஆக்கத்திலும், வெளிப்பாட்டிலும் பயன்படுத்தினர். இப்படி 70 களில் தமது கவிதைகளின் மூலம் இளையோர் நெஞ்சில் புரட்சிகரமான சித்தாந்தங்களை விதைத்து புதுக்கவிதை உலகில் மாற்றத்தை ஏற்படுத்த வந்தவர்களில் ஒருவர் தான் ‘கவிக்கோ’ அப்துல் ரஹ்மான்.

கலைஞரின் அரசியல் எழுச்சியும் அப்துல் ரஹ்மானின் கவிதை புத்துணர்ச்சியும் ‘ஒரு கொடியில் பூத்த இருமலர்கள்’ என்று சொன்னால் உடன்பிறப்புகள் கோபித்துக் கொள்ள மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். கலைஞரைப் புகழ்ந்து அவரெழுதிய கவிதைகளில் தெறிக்கும் நட்புணர்வு இருவருக்குமான இணக்கத்தைச் சுட்டுகிறது.

“என் கவிதை உனக்கு பூச்சொரியும்:
… ஏனெனில் நீ எனக்கு ஆச்சரியம்
ஒரு நாள்
தமிழிடம் முகவரி கேட்டேன் -
அது மே/பா மு.கருணாநிதி என்றது.”

எனும் கவிதை வரிகள் கலைஞருக்கும், கவிக்கோவுக்குமான புரிதலுடனான அத்யந்த நட்பை உணர்த்துபவை.

ஆனால் அதே கலைஞரின் பிறந்த தினமான ஜூன் 3 ஆம் நாள் அன்னாரது இறுதிச் சடங்குகள் நடைபெறுவது மிகுந்த துக்கமான விசயமே! முன்பு அண்ணல் காந்திக்கும், காமராஜருக்கும் தான் இப்படியான ஒற்றுமை இருந்தது. இன்று முதல்; நட்பிற்கு இலக்கணமாகத் திகழ்ந்த கலைஞருக்கும், கவிக்கோவுக்குமான ஒற்றுமையாகவும் கூட இதைக் குறிப்பிடலாம்.

வானம்பாடிகளின் கோஷ உணர்வெழுப்பக் கூடிய படைப்பாளுமைக்கு திமுக பாதை வகுத்துக் கொடுத்தது. அந்தப் பாதையின் இருமருங்கிலும் வளர்ந்து விருட்சமாகி திராவிட கழகத்தின் ‘ஓங்குக தமிழ்’ முழக்கத்துக்கு சாமரம் வீசியவர்கள் வானம்பாடி கவிஞர்கள். இவர்களின் முழக்கங்களை எல்லாம் மக்களிடம் கொண்டு சேர்க்க திமுக மேடைகளில் அன்று எப்போதும் இடமிருந்தது. அப்படி வந்த கவிஞர்களில் பலர் ஆசிரியர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அப்துல் ரஹ்மானும் வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் பேராசிரியராகவும், தமிழ்துறை தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவரே.

அவரது கவிதைகளில் நுட்பமான சிலவற்றையேனும்  இந்நாளில் வாசகர்களுக்கு வாசிக்கத் தருவதை, அவருக்கும் அவரது கவிதைகளுக்கும் செய்யும் மரியாதையாக தினமணி கருதுகிறது.

‘குழந்தைகள் தினம்’ எனும் தலைப்பில் கவிக்கோவின் கவிதை வரிகள்;

“வருடம் தவறாமல் குழந்தைகள் தினம் கொண்டாடுபவர்களே! 
இனிமேல் தினங்களை விட்டு விட்டுக் 
குழந்தைகளை எப்போது கொண்டாடப் போகிறீர்கள்?”

எனும் வரிகள் இந்தக் கவிதையை உணர்ந்து படிப்பவர்களின் மனதில் கூரிய முள்ளாகத் தைக்கக் கூடியவை. குழந்தைகளைக் கொண்டாடத் தெரியாதவர்கள் குழந்தைகளுக்கான தினங்களை கொண்டாடி மட்டும் என்ன பயன்? எல்லாம் வெற்று ஜோடனைகள் எனும் உண்மை இந்த வரிகளில் வாழ்கிறது.

“ஆன்மாவின் விபச்சாரம்” எனும் தலைப்பில் அமைந்த மற்றொரு கவிதை, மத நம்பிக்கைகள், குரு வழிபாடு எனும் பெயரில் கட்டமைக்கப் பட்ட நம் மக்களின் மூட நம்பிக்கையை வலுவாகச் சாடுகிறது. 

‘அரும்பிய துருவமீன்
அதனை நோக்கியே
திரும்ப வேண்டிய
திசைகாட்டியின் முள்
மின்மினிக் கெல்லாம்
மேனி திருப்பினால்
கப்பல் எப்படிக்
கரைபோய்ச் சேரும்? ’
- வழ வழ கொழ கொழ வார்த்தை ஜாலங்கள் தேவையில்லை; சொல்ல வந்த விசயத்தை  ‘சுருக்’ கென மனதில் பதியும் வண்ணம் சொல்லி முடிப்பதில் கவிக்கோவுக்கு இணை அவரே!

கலைஞரைப் புகழ்ந்து அவரெழுதிய அதே கவிதையில் வெள்ளித்திரை நடிகர்கள் நாட்டை ஆள ஆசைப்படுவதை தம் கவிதை வரிகளில் சாடி இருப்பார். 70 களின் இறுதி முதல் இன்று வரையிலும் அந்த வரிகள் மிகப் பொருத்தமானவையாகவே திகழ்கின்றன. நடப்பில் எந்த மாற்றங்களும் இல்லை. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வெள்ளித் திரையிலிருந்து வந்து நாட்டை ஆண்டார்கள். அவர்களைப் பின்பற்றி மக்கள் செல்வாக்கு எனும் ஒற்றைப் புள்ளியை மட்டுமே இறுகப் பற்றிக்  கொண்டு அன்றைய ராமராஜன், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், விஜயகாந்த் முதல் இன்றைய தளபதி விஜய் வரை அரசியல் ஆசை தன்னை மீறிச் செல்ல யாரை விட்டிருக்கிறது?! இதோ இப்போது சூப்பர் ஸ்டார் தனிக்கட்சி என முழங்குவதில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது மக்கள் செல்வாக்கு. 

நடிகர்களுக்கு மக்கள் செல்வாக்கு என்பது அவர்களது முக தரிசனத்துக்காகத் தானே தவிர அவர்களின் கொள்கை மீதான பற்றுதல்களினால் அல்ல! என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் பல முறை மெய்பிக்க நினைத்திருக்கிறது. அதன் ஒரு பகுதியாக எழுதப்பட்டதாகவே இந்தக் கவிதையை கருத நேரிடுகிறது. மக்களைத் திரட்ட நடிகர், நடிகைகள் வேண்டும், ஆனால் மக்கள் தொண்டாற்ற, மக்களது பிரச்னைகளைப் பற்றிப் புரிந்து கொள்ள... அவர்களுக்கு என்ன தெரியும்? என்ற ஆணித்தரமான சித்தாந்தத்தின் வெளிப்பாடு தான் “வெள்ளித்திரை ஆட்சிக்காக உன் வேட்டியும் உருவப்படலாம்”  எனும் வரிகளாக மிளிர்ந்ததுவோ!

“நட்சத்திர ஆட்சியை
இனி இந்த நாடு தாங்காது.
சில நட்சத்திரங்கள்
நாட்டை ஆள ஆசைப்படுகிறது…
தமிழா விழித்துக் கொள்…
வெள்ளித் திரை ஆட்சிக்காக
உன் வேட்டியும் உருவப்படாலாம்….”

‘தொலைந்து போனவர்கள்’ எனும் தலைப்பில் எழுதப்பட்ட கவிதையிலிருந்து சில வரிகள்!

“கற்றேன் என்பாய் கற்றாயா? – வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை
பெற்றேன் என்பாய் எதைப்பெற்றாய்? – வெறும்
பிள்ளைகள் பெறுவது பெறுவதல்ல
குளித்தேன் என்பாய் யுகயுகமாய் – நீ
கொண்ட அழுக்கோ போகவில்லை
அளித்தேன் என்பாய் உண்மையிலே – நீ
அளித்த தெதுவும் உனதல்ல”

பூமியில் மனிதர்கள் வாழ்கிறார்கள்... தாம் முறையாக, ஒழுக்கமாக வாழ்வதாக நினைத்துக்கொண்டு சில சட்ட திட்டங்களை தமக்குள் விதித்துக் கொண்டு வாழ்கிறார்கள். அப்படி வாழ்பவர்கள் எல்லாம் நிறைவாழ்வு வாழ்கிறார்கள் என்று அர்த்தமில்லை. அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் இழப்பதும், அறிய மறுப்பதும் இங்கே நிறைய உண்டு. வாழ்தலின் பொருளறிந்து வாழ்தலே சாலச் சிறந்தது. அப்படியொரு வாழ்க்கை இல்லையெனில் அவர்களை வாழ்தலில் தொலைந்தவர்கள் என்றே கருத வேண்டும் என்கிறது இந்தக் கவிதை வரிகள்.

கவிக்கோ ‘வானம்பாடி’ கவிஞர் மட்டுமல்ல ஜப்பானிய ’ஹைக்கூ’ கவிதைகள் முதல் பாரசீகத்தின் ’கஸல்’ கவிதைகள் வரை பலவற்றைத் தமிழுக்கு அறிமுகப் படுத்தியவரும் அவரே;

வாசித்ததும் அதிலுள்ள நிதர்சனம் உணர்ந்து வாயடைத்துப் போகச் செய்யும் அவரது கஸல் கவிதைகளில் ஒன்று!

‘உன் முகவரி
தேடி அலைந்தேன்
கிடைத்துவிட்டது
இப்போது
என் முகவரி
தேடிஅலைகிறேன்.’

- காதலின் நியதியை ‘கஸல்’ வடிவில் ரத்தினச் சுருக்கமாக இப்படியும் வலுவுடன் சொல்லலாம்.

கவிக்கோவின் கவிதைச் சிறப்புகளை வாசித்துணர ஒரு நாள் காணாது... அவை வாசிக்க வாசிக்க யோசனை பெருக்கி இன்பம் தரக்கூடியவை;

“பாருக்குள்ளே நல்ல நாடு”-  எனும் தலைப்பிலமைந்த இந்தக் கவிதையை வாசித்துப் பாருங்கள்;

“நான் கரி மூட்டை தூக்கும் கூலி”
கூலியாக கிடைத்த ரூபாய் நோட்டில்
கரி பட்டுக் கறுப்பாகிவிட்டது.
கறுப்பு பணம் வைத்திருந்ததாகக்
கைது செய்து விட்டார்கள்.
“என் வயலுக்கு வரப்பு எடுத்துக் கொண்டிருந்தேன்
பிரிவினைவாதி என்று பிடித்துக் கொண்டு
வந்து விட்டார்கள்”
“அதிகாரி லஞ்சம் வாங்கினார், தடுத்தேன்.
அரசுப் பணியாளரை அவருடைய கடமையைச்
செய்ய விடாமல் தடுத்ததாகத் தண்டித்து விட்டார்கள்.”
“அலிபாபாவும் நாற்பது திருடர்களும்” படச்
சுவரொட்டியை ஒட்டிக் கொண்டிருந்தேன்.

மக்களுக்காக மக்களால் மக்களே தேர்ந்தெடுத்த சட்டமன்ற உறுப்பினர்களையும் அதன் தலைமையையும் அலிபாபாவுக்கும், 40 திருடர்களுக்கும் ஒப்புமையாகக் கூறவும் ஒரு நெஞ்சுரம் வேண்டுமே! அது கவிக்கோவுக்கு இருந்தது.

இதே போலவே திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதலாமே? என்ற கேள்வியை முன் வைத்த போதும்; “அம்மி கொத்த சிற்பி எதற்கு? என்று  இவரளித்த பதிலும்  துணிச்சலானது மட்டுமல்ல மிக நேர்மையானதும் கூட! 

நாடு சுதந்திரம் பெற்ற நாள் முதல் காலம் காலமாக மைய அரசு, மாநில அரசின் சுயேட்சைத் தன்மையை விழுங்க முனையும் போதெல்லாம் முன் வைக்கும் ‘தேசிய நீரோட்டம்’  எனும் சித்தாந்தத்தை சுக்கு நூறாக உடைத்தெறிகிறது இந்தக் கவிதை.

“உங்கள் ரத்தத்தை
வெளியே கொட்டி விட்டு
இதை நிரப்பிக் கொள்ளுங்கள்
இனி
நீர்களுக்கு
தனி விலாசங்கள் தேவையில்லை
நதிகள் குளங்கள் கிணறுகள்
எல்லாம் மூழ்கிவிட்டன.
கண்ணீரும் மூழ்கிவிட்டது
நீங்களும் மூழ்கிவிடுங்கள்”

கடைசியாக ஒரே ஒரு கவிதையோடு முடித்துக் கொள்ளலாம். 

கவிக்கோவுக்கு சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றுத் தந்த “ஆலாபனை” கவிதைத் தொகுப்பில் இடம் பெறும் “கொடுக்கிறேன்” எனும் தலைப்பிலான ஒரு கவிதை!

“கொடுக்கிறேன் என்று நினைப்பவனே
கொடுப்பதற்கு நீ யார்?
நீ கொடுப்பதாக நினைப்பதெல்லாம் 
உனக்குக் கொடுக்கப் பட்டதல்லவா?
ஒரு பூவைப் போல சத்தமில்லாமல் கொடு
ஒரு விளக்கைப் போல பேதமில்லாமல் கொடு
உன்னிடம் உள்ளது நதியில் உள்ள 
நீர் போலிருக்கட்டும்
தாகமுடையவன் குடிக்கத் 
தண்ணீரிடம் சம்மதம் கேட்பதில்லை
கொடு 
நீ சுத்தமாவாய்
கொடு 
நீ சுகப்படுவாய்
கொடு 
அது உன் இருத்தலை நியாயப் படுத்தும்!”

எப்போதும் கொடுக்கும் நிலையிலுள்ள மனிதர்களின் அகம்பாவத்தை, தலைக்கனத்தை தவிடு பொடியாக்கும் கவிதை இது! ஒரு வகையில் இடது சாரி சித்தாந்தோடு ஒத்துப் போகும் கொள்கைகளுடன் கூடிய கவிதை இது, மத நம்பிக்கை வலுவுற்றிருப்பவர்கள் இதை கீதையின் சாராம்சமாக எடுத்துக் கொண்டு மனம் மாறினாலும் அது இந்தக் கவிதைக்கு கிடைத்த வெற்றியே!

அரசியல், சமூகம், காதல், குடும்ப வாழ்வு, சமூக ஏற்றத் தாழ்வுகள், குழந்தைகளைப் புரிந்து கொள்வதில் காட்டப்பட வேண்டிய அணுகுமுறை என எந்தத் தலைப்பில் தேடினாலும் கவிக்கோவின் கவிதைகள் அதிலொன்றாய் தலை நீட்டும். தமிழகம் கண்ட வானம்பாடிகள் பலர். அவர்களில் நேற்றோடு ஒரு வானம்பாடி தன் குரலை நிறுத்திக் கொண்டது தமிழின் துரதிருஷ்டமே தவிர வேறில்லை!

“வாணியம்பாடி வானம்பாடி மறையலாம்; ஆனால் அது விட்டுச் சென்ற கவிதைகள் என்றென்றும் நம்மோடு!”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com